தமிழின்பம்/சிவனடியார் முழக்கம்

விக்கிமூலம் இலிருந்து

19. சிவனடியார் முழக்கம்[1]

காலைப் பொழுது; தேர் ஒடும் திருவீதியில் பெருமுழக்கம்: "திருத்தொண்டர் சங்கம்-வாழ்க! வாழ்க! "சிவனடியார் திருக்கூட்டம்-வெல்க! வெல்க!" "பசியின் கொடுமை-வீழ்க! வீழ்க!” என்று இரைந்து கொண்டு சென்றது ஒரு திருக்கூட்டம். இடையிடையே 'பம் பம்' என்று ஆயிரம் சங்குகள் சேர்ந்து ஒலித்தன.

அத்திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் பல்லாயிரவர், அவர்கள் கையிலே திருவோடு; மெய்யிலே திருநீறு, கழுத்திலே தாழ்வடம், இடுப்பிலே கந்தைத் துணி, அப்பண்டாரப் படையைப் பார்ப்பதற்கு ஊரெல்லாம் திரண்டு எழுந்தது.

ஊருக்கு மேற்கே ஒரு பூந்தோட்டம்; அங்கே போய்ச் சேர்ந்தது திருக்கூட்டம். தலைவர் கந்தரமூர்த்தி எழுந்து நின்றார். தொண்டர்கள் கைதட்டி ஆரவாரித்தனர். தலைவர் தலைவணங்கிப் பேசலுற்றார்:

"தோழர்களே! திருத்தொண்டர்களே! நெடுங்காலமாக தமது சங்கம் உறங்கிக் கிடந்தது. ஆயினும் இன்று விழித்துக்கொண்டோம்; ஒற்றுமைப் பட்டோம். திருத்தொண்டர் படை திரண்டு எழுந்துவிட்டது. இதைத் தடுக்க வல்லவர் இவ்வுலகில் உண்டோ? (ஒரு குரல்: 'இல்லை; இல்லை'. பலத்த ஆரவாரம்). 'தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே' என்று பாடிய காலம் பழங்காலம். இன்று திருத்தொண்டர்களாகிய நாம் சோற்றுக்குத் தாளம் போடுகின்றோம். தம் திருவோடுகள் எல்லாம் வெறு ஒடுகளாய்விட்டன. அன்னத்துக்கு அலந்து போய்விட்டோம். கட்டிக் கொள்ளக் கந்தைத்துணியும் கிடைக்கவில்லை. நம் தலைவன் - பரமசிவன், நாம் படும் துயரத்தையெல்லாம் அறிவார். அறிந்தும் ஏனோ பாராமுகமாக இருக்கின்றார்! அவர் இருக்கும் இடம் தேடி, நாம் இப்பொழுதே செல்வோம். அவரிடம் என்ன கேட்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும். நம் திருவோடுகள் ஒவ்வொன்றும் அமுத சுரபியாக வேண்டும். பருத்திச் செடிகள் நாம் தொடும்போதெல்லாம் நாலு முழத்தில் நல்ல ஆடை தரவேண்டும். இவ்விரண்டும் - அன்னமும் ஆடையும் - இப்பொழுதே கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் தீபாவளிக்குத் தலைநாள் வேலை நிறுத்தம் செய்வோம். இது உங்கள் அனைவருக்கும் சம்மதமாயிருக்கும் என்று நம்புகின்றேன்" என்று பேசி நின்றார். அப்போது அடியார் எல்லாம் கைகொட்டி எழுப்பிய பேரோசை கைலாசத்தை எட்டியது.

திருவோடு எழுதிய கொடியைக் கையில் எடுத்து முன்னே சென்றார், சுந்தரமூர்த்தி. பரமசிவனுடைய இருப்பிடத்தை நோக்கிப் பண்டாரப் படை நடந்தது. ஒரு பழங்காட்டினுள்ளே இருந்தார், பரமசிவன். அக்காட்டைக் காத்து நின்றான் நந்தி என்ற சேவகன்.

அவனைக் கண்டு வணங்கினார். சுந்தரம்: திருத்தொண்டர் சங்கத்தின் தீர்மானங்களை அவனிடம் தெரிவித்தார். அது கேட்ட நந்தி, "அப்பா சுந்தரம்! திட்டமெல்லாம் சரியாய்ப் போட்டுவிட்டாய்! ஆனால், இப்போது பரமசிவன் படும் பாடு உனக்குத் தெரியுமா? பட்டாடை என்ற பேச்சே அவர் குடும்பத்தில் இல்லை. பார்வதியும், கங்கையும் பருத்தி நூலாடைகள்தாம் கட்டிக்கொள்கிறார்கள். பரமசிவனோ, அதுவுமின்றிப் புலித்தோலை எடுத்து உடுத்திருக்கிறார்; குளிர் தாங்கமாட்டாமல் கரித்தோலைப் போர்த்துக்கொண்டிருக்கிறார். உலகத்துக் கெல்லாம் அவர் படியளக்கிறார் என்று பெயர். இப்போது அவர் குடும்பத்திற்கே அரிசி பங்கிட்டுக் கொடுக்கப்படுகின்றது. அவரிடம் வேலை பார்க்கும் நான் வயிறாரச் சோறுண்டு அறுபது நாளாயிற்று. மூத்த பிள்ளைக்குச் சாதம் போதாது; தம்பியாகிய முருகனை ஏய்த்து அவன் பங்கையும் சேர்த்துச் சாப்பிடுகிறான். முருகன் ஒரு விளையாட்டுப் பிள்ளை. சாப்பாட்டு வேளையில் ஒரு மயில் ஆடினால் அதையே பார்த்துக்கொண்டிருப்பான்; ஒரு கோழி கூவினால் அதைக் கொண்டுவர ஒடுவான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருப்பாள் பார்வதியம்மை. பிள்ளைகளைத் தட்டி வளர்க்கத் தெரியாத தாய் அவள். அவளுக்கும் கங்கைக்கும் எப்பொழுதும் சண்டை. இருவரும் பிரிந்து தனித்தனியே குடியிருக்க வேண்டுமென்று பரமசிவனிடம் விண்ணப்பம் செய்தார்கள். இப்பொழுது வீட்டுக்கும் பஞ்சமல்லவா? தனித்தனி வீடு தருவதற்கு வழியில்லை என்று உணர்ந்த தியாக மூர்த்தியாகிய தலைவர். தம் உடம்பில் ஒரு பாகத்தைப் பார்வதிக்குக் கொடுத்தார்; காடு போன்ற தம் சடையில் கங்கையை வைத்துக் கொண்டார். இப்படி இருக்கிறது. பரமசிவன் நிலைமை. உள்ளதைச் சொல்லிவிட்டேன்; இனி உன் சித்தம்" என்று கூறினான். நந்தியரின் பேச்சால் சுந்தரத்தின் மன உறுதி உலைய வில்லை; பரமசிவனைப் பார்த்தே தீர வேண்டும் என்று வற்புறுத்தினார். "அப்படியானால் அதோ தெரிகிறதே, அந்த மயானத்தில் இருக்கிறார் தலைவர். போய்ப் பார்” என்று விடை கொடுத்தான் நந்தி.

சுந்தரம் சென்றார்; பரமசிவனைக் கண்டார். கை தொழுதார்; திருத்தொண்டர் படும் பாட்டை உருக்கமாக எடுத்துரைத்தார். பரமசிவன் ஒன்றும் பேச வில்லை. அவர் முகத்தில் எவ்வித அசைவும் இல்லை. அந்நிலை கண்டு வருத்தமுற்ற கந்தரம், "ஆண்டவனே! பெரிய இடத்திற்குப் பிச்சைக்குப் போனால், உண்டு என்பது மில்லை, இல்லை யென்பது மில்லை என்ற பழமொழி உண்மையாயிற்றே! வல்லதெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினேன். குறைகளையெல்லாம் சொல்லி முறையிட்டேன். வாய்திறந்து ஒரு வார்த்தை சொல்லாகாதா?

"வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தி னாலும் வாய்திறந்து
இல்லை என்னிர் ! உண்டு மென்னிர்
எம்மை ஆள்வான் இருப்ப தென்னே!"

என்று கேட்டார்; அப்பொழுதும் பேச்சில்லை.

சுற்று முற்றும் பார்த்தார், சுந்தரம்: சடையின்மேல் இருந்த கங்கையை நோக்கினார்; அவள் வாய் திறக்கவில்லை. கணபதியை நோக்கினார்; அவன் இருந்த இடம் விட்டு அசையவில்லை. குழந்தை முருகன் கோழியைப் பார்த்துக் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். பார்வதி ஒர் அப்பாவியாகத் தோன்ற அதைக் கண்ட திருத்தொண்டர் தலைவருக்கு ஆத்திரம் பொங்கிற்று. மீண்டும் பரமசிவனைப் பார்த்து, "ஐயனே! அடியார் படும் துயரத்தை நீர் அறிந்தும் அறியாதவர் போல் இருக்கின்றீர்! உமது திருவுள்ளத்தில் இரக்கம் பிறக்கும் என்றெண்ணி இது வரையும் பொறுத்திருந்தோம். ஈசனே! இனிப் பொறுக்க முடியாது!" தீபாவளிக்குத் தலை நாளில் உம் அடியார் அனைவரும் வேலை நிறுத்தம் செய்வதாக உறுதி செய்துள்ளார்கள். இது திருத்தொண்டர் சங்கத்தின் தீர்மானம்.

"திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோல் தட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஒண காந்தன் தளியு ளிரே”[2]

என்று பாடி நின்றார் சுந்தரம்.

அப்போது பரமசிவன் குடும்பத்தில் ஒரு பரபரப்பு உண்டாயிற்று. கணபதி எழுந்து வந்து தந்தையின் முகத்தைத் தளர்ந்து நோக்கினான். கங்கை சடையினரின்றும் இழிந்து, தீபாவளியன்று கங்கா ஸ்நானம் நடை பெறவேண்டுமே! அதற்கு வழி என்ன? என்று கேட்பவள் போலத் தலைவனை வணங்கி நின்றாள். இவற்றை யெல்லாம் கண்டார் பரமசிவன், இன்னும் பேசாதிருந்தால் பெருமோசம் வந்துவிடும் என்றுணர்ந்தார்; சுந்தரத்தையும், அவருக்குப் பின்னே ஐந்தைந்து பேராக அணிவகுத்து நின்ற அடியாரையும் நோக்கி, தோழர்களே என்றார். அச்சொல்லைக் கேட்ட தொண்டர் குழாம் ஆனந்தவாரியில் மூழ்கிற்று. தொண்டர் நாதனே போற்றி! அடியார்க்கு எளியனே போற்றி! என்ற வாழ்த்துரை எழுந்தது. ஆரவாரம் அமர்ந்தவுடன் பரமசிவன் பேசலுற்றார்:

"உங்கள் தலைவனாகிய சுந்தரன் என் தலைசிறந்த தோழன். அவன் அடியார்க்கு அடியவன். தொண்டர் படும் துயரங்கண்டு ஆற்றாது வேகமாய்ப் பேசினான். நாடெல்லாம் பஞ்சத்தால் நலியும் பொழுது நாம் மட்டும் வாட்டமின்றி வாழ முடியுமா? எடுத்ததற்கெல்லாம் வேலைநிறுத்தம் செய்வது ஏளனமாகும். கோடிக்கணக்கான மக்கள் குடிக்கக் கஞ்சியின்றி வருந்துகின்றனரே! ஒருசிலர் பிறரை வஞ்சித்து, இருட்டுக் கடையில் திருட்டு வேலை செய்வதை நாம் அறிவோம். அக்கீழ்மக்களை உரிய காலத்தில் ஒறுப்போம். இன்னும் சில நாளில் நல்ல மழை பெய்து, நாடு செழிக்கும் அறம் வளரும்; மறம் தளரும். அப்போது உமது மனக்கவலை ஒழியும்" என்று திருவாய் மலர்ந்தார்.

அடியார் முகம் மலர்ந்தது. "ஆண்டவன் கருணை வாழ்க, வாழ்க! " என்று வாழ்த்தினர்.

“ஆழ்க தீயதெல்லாம் ; அரன் நாமமே
சூழ்க: வையகமும் துயர் தீர்கவே"

என்று பாடிக்கொண்டு திரும்பினர் அடியாரெல்லாம். பரமசிவன் வீட்டில் பஞ்சத் தீபாவளி அமைதியாக நடந்தது.


  1. ஆனந்த விகடன், 1945 தீபாவளி மலரில் எழுதியது.
  2. சுந்தர மூர்த்தி சுவாமிகள் தேவாரம்.