தமிழின்பம்/நல்ல மரமும் நச்சு மரமும்

விக்கிமூலம் இலிருந்து

18. நல்ல மரமும் நச்சு மரமும்

ஒரு நாள் ஒர் அரசிளங் குமரன் தன் தோழனைத் துணைக்கொண்டு கானகத்தில் வேட்டையாடச் சென்றான். அங்கு, அவன் விரும்பியவாறு வேட்டையாட வேங்கையும் வேழமும் அகப்படாமையால் எங்கும் அலைத்து திரிந்து அலக்கணுற்றான். பசியால் மெலிந்து, வெயிலால் உலர்ந்து, இருவரும் தளர்ந்து சோர்த்தார்கள்; அப்போது, நெடுத் தூரத்தில் ஒரு சிற்றூர் தோன்றக் கண்டு, அவ்வூரை நோக்கி மெல்ல நடந்து செல்வாராயினர். கதிரவன் வெம்மையால் அரசிளங் குமரன் தலைநோயுற்றுத் தன் தோழனது தோளைப் பற்றிக்கொண்டு வழி நடந்தான். அவ்வூரின் அருகே வந்தபோது, இருவரும் மெய் சோர்ந்து, நாவறண்டு, அடிவைத்து நடப்பதற்கும் வலியற்றவராயினர். அந் நிலையில், இருவரையும் இன்முகங்கொண்டு எதிர் சென்று அழைப்பதுபோல் இளந்தென்றல் எழுத்து வந்தது. அம் மெல்லிய பூங்காற்றின் இனிமையால் புத்துயிர் பெற்ற நண்பர்கள், அகமும் முகமும் மலர்ந்து தென்றல் எழுந்து வந்த திசை நோக்கிச் சென்றார்கள். அவ்வழியில், இளந்திரைகளோடு இலங்கிய நன்னீர்ப் பொய்கையொன்று அமைந்திருந்தது. அப்பொய்கையில் விளங்கிய செந்தாமரையில் அன்னங்கள் அமர்ந்து துயின்ற அழகு கண்ணைக் கவர்ந்தது. நற்றாமரைக்கயத்தில் துயின்ற நல்லன்னத்தைக் கண்ட இளவரசன் துணைவனை நோக்கி,

"தோயும் திரைகள் அலைப்பத்
தோடார் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சும்
வெள்ளை யன்னம் காணாய்”

என்று தான் பெற்ற இன்பத்தை இனிது எடுத்துரைத்தான். அப்பொய்கையில் இலங்கிய அழகிய மலர்கள் முகமலர்ந்து இருவரையும் அருகே அழைப்பனபோல் அசைந்தன. அவ்வாவியின் தன்மையும் செம்மையும் கண்ட இருவரும், தாய் முகம் கண்ட சேய் போல் மனம் களித்து அந் நன்னிரைப் பருகி மகிழ்ந்தார்கள். அருந்தாகத்தால் வருந்திய இருவருக்கும் தண்ணிரை எடுத்து வழங்கும் தன்மை போல் அடுக்கடுக்காக அலைகள் கரையருகே வந்து சேர்ந்தன. தாகம் தணிந்து, மனமும் மெய்யும் குளிர்ந்த பின்னர், இருவரும் அக்குளத்தின் ஈரக் கரையில் இனிதமர்ந்து, அங்கு வீசிய இளங்காற்றை நுகர்ந்து இன்புற்றார்கள்; அப்போது அவ் வாவியின் அருகே கொத்துக் கொத்தாகப் பொன்நிறக் கணிகளைத் தாங்கி, குளிர் நிழல் விரித்து நின்ற மரமொன்றைக் கண்டார்கள். அதன் நிழலிலே தங்கி இளைப்பாற எண்ணி, இருவரும் அங்குச் சென்றார்கள்.

கதிரவன் வெம்மையைத் தடுப்பதற்கு ஓங்கிய பாசிலைப் பந்தர் வேய்ந்தாற் போன்று விளங்கிய மரத்தின் நிழலில் இருவரும் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்கள். சில நாழிகை சென்ற பின்னர், தோழன் துயிலொழிந்து எழுந்தான்; எங்கும் பசுமை நிறமும், பறவையின் ஒலியும், பழத்தின் மணமும் நிறைந்திருப்பினும், பசியின் கொடுமையைப் பொறுக்கலாற்றாது வருந்தினான். கற்பகத் தருவெனக் கவின்பெற விளங்கிய மரக் கொம்புகளை நயந்து நோக்கினான்; அவற்றில் பொன்னிறமான பழங்கள் கொத்துக் கொத்தாய் எம்மருங்கும் இலங்கக் கண்டான்; அப்பொழுதே அம்மரக் கிளைகளின் வழியாக மேலே சென்று, இருவரது அரும் பசியையும் தீர்ப்பதற்குப் போதிய கனிகளைக் கொய்து வந்து, துணைவனைத் துயிலினின்றும் எழுப்பினான். கனிகளின் நிறத்தைக் கண்டும் நன் மனத்தை நுகர்ந்தும், தீஞ்சுவையைத் துய்த்தும் இருவரும் இன்புற்றார்கள். பின்னும் சிறிதுபொழுது அம் மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கையில், அரசகுமாரனது தலை நோய் மிகுந்தது. அதனைத் தீர்க்கும் வகையறியாது தோழன் திகைத்து, 'எவரேனும் இவ்வழி வாராரோ' என்று எதிர் நோக்கி இருந்தான்.

இவ்வாறு இருக்கையில் அவ்விடத்தை நோக்கி ஒரு முதியவன் வந்து சேர்ந்தான். "தலைக் குத்துத் தீர்க்கும் மருந்து தங்களிடம் உண்டோ?” என்று தோழன் அவனை வினவினான். அப்பொழுது முதியோன் புன்னகை பூத்து, “கையில் வெண்ணெயிருக்க நெய் தேடி அலையும் வெள்ளியரும் உண்டென்பதை இன்று நேராக அறிந்தேன்: இம்மரத்தின் பட்டையில் சிறிது செதுக்கி, அதன் சாற்றைத் தலையிற் பிழிந்தால் எவ்வகைத் தலைக்குத்தும் தீர்ந்து விடுமே” என்று சொல்லி அப்பாற் சென்றான். அதை அறிந்த தோழன் அளவிலா மகிழ்வடைந்து, அம் மரப் பட்டையின் சாற்றை மன்னன் மைந்தனது தலையிற் பிழிந்தான்; சிறிது நேரத்தில் அரசிளங்குமரனது தலைக்குத்து அறவே ஒழிந்தது. அந் நிலையில், தோழன் தலைநோய் தீர்ந்த இளவரசனை நோக்கி, "ஐயனே! நாம் இருவரும் கானகம் சென்றது முதல் இதுவரையும் நிகழ்ந்த செயல்களைப் பார்த்தாயா? நாம் பசியாலும் வெயிலாலும் நலிந்து, மெய் தளர்ந்து, வருந்தும் நிலையில் இப்பொய்கை நம்மை அன்புடன் அழைத்து இன்முகம் காட்டித் தாகம் தணித்துத் தளர்வை மாற்றியது. அப்பால், இம்மரம் நாம் தங்கியிருக்கக் குளிர்நிழல் தந்து, பசியாறப் பழங்கள் அளித்துத் தலைநோய் தீர்க்கவும் தனி மருந்தாய் அமைந்தது. இத்தன்மையை நோக்குங்கால், நல்லார் கைப்பட்ட செல்வத்தின் தன்மை நன்கு விளங்குமன்றோ? வறுமையால் வருந்தி வந்தவரை இனிய முகத்தோடு ஏற்று, அவரது குறையை நிறை செய்வதே அறிவுடைய செல்வர் செயலாகும். ஆற்று வழியாகவும் ஊற்று வழியாகவும் நன்னரைத் தன் அகத்தே நிரப்பிக்கொள்ளும் இப் பொய்கைபோல், அறிவுடையார், நல்வழிகளால் ஈட்டிய பெரும் பொருள் நிறைந்த பண்ணைகளாய் விளங்குவார்கள். நீர் நிறைந்த பொய்கை எப்பொழுதும் தண்மை வாய்ந்து விளங்குதல்போல, அறிவுடைய செல்வரும் ஈரம் வாய்ந்த நெஞ்சினராய் இலங்குவார்கள். தாகத்தால் வருந்தி வருவோர்க்குத் தடையின்றி நீர் வழங்கும் தடாகம் போல், கல்வியும் செல்வமும் பூத்த மேலோர் வறிஞர்க்கு வரையாது பொருள் வழங்கும் வள்ளல்களாய் விளங்குவார்கள். இன்னும், தமக்கென வாழாது பிறர்க்குரியாளராய் வாழும் பெரியார்பால் அமைந்த செல்வம், ஊருணியின் நீர்போல ஊரார்க்கே முழு வதும் பயன்படுவதாகும். இதனாலேயே

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"

என்று திருவள்ளுவர் அருளிப்போந்தார். இன்னும் பழுதறு பழங்களைத் தாங்கி நிற்கும் இப் பயன்மரம் தன் இனிய பழங்களால் பசிநோய் அகற்றி, குளிர் நிழலால் களைப்பை மாற்றி, பட்டையால் பிணியைப் போக்கி, பல வகையாகப் பயன்படுதல்போல, அறிஞரிடம் அமைந்த செல்வம் வறியார்க்குப் பலவகையிற் பயன்படுதலாலேயே,

"பயன்மரம் உள்ளுர்ப் பழுத்த்ற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்"

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்"

என்னும் நாயனார் பொருளுரை எழுந்தது. ஆகவே, "தண்மை வாய்ந்த தடாகம் போலவும், பழங்கள் நிறைந்த பயன்மரம் போலவும் வாழ்வதே பண்புடைமையாகும்” என்று இனிதாக எடுத்துரைத்தான். அரசிளங் குமரனும் அதன் உண்மையை அறிந்து தோழன் கூறிய பொருளுரையைப் பொன்போற் போற்றினான்.

அப்பால், இருவரும் தமது ஊரை நோக்கிச் சென்றனர்; செல்லும் வழியில் ஒரு சிற்றறூர் குறுக்கிட்டது. அதன் நடுவே போகும்போது இருவரும் முன் கண்டறியாத ஒரு மரத்தினைக் கண்டு வியந்து நின்றார்கள். அம்மரம் கவையாகிக் கொம்பாகிக் காட்டு மரம்போல் ஒங்கி வளர்ந்திருந்தது. அதன் கொம்புகளிலும் கிளைகளிலும் கூரிய முள் நிறைந்திருந்தது. இலைகளும், தழைகளும் இல்லாமல் பட்ட மரம்போல் நின்ற அதன் கிளைகளில் செவ்வையாய்ப் பழுத்த பழங்கள் கொத்துக் கொத்தாய் அமைந்து கண்களைக் கவர்ந்தன. அம்மரத்தைக் கண்டு இருவரும் வியந்து நிற்கையில் அவ் வழியாக ஒர் இளைஞன் வந்து சேர்ந்தான்.

அவன், மரத்தருகே நின்ற இருவரையும் இனிது நோக்கி, "ஐயா! நீங்கள் இருவரும் அயலூரார் என்பதை அறிந்தேன். ஏனெனில், இவ்வூரார் எவரும் இப் பாழான பழுமரத்தைக் கண்ணெடுத்தும் பாரார்கள். இம்மரத்தில் எந்நாளும் இலைகளும் தழைகளும் இல்லாமையால் விலங்குகளும் இதனடியில் நில்லாமல் விலகிப் போகும்; கண்களைக் கவரும் வனப்பு வாய்ந்த இக்கனிகளும் நச்சுக் கனிகளாய் இருத்தலின், உண்டாரைக் கொன்றுவிடும். இம்மரத்தின் கொம்புகளை விறகாய் வெட்டி எரிப்பதற்கும் இதனிடம் அமைந்த முள் இடையூறாயிருக்கின்றது. இப்பாழ் மரம் கடுங் காற்றில் அகப்பட்டு முரிந்து வேரற்று விழவேண்டு மென்று இவ்வூரார் இறைவனை நாளும் வழிபடுகின்றார்கள். இம் மரம் என்று விழுமோ, அன்றே இவ்வூரார்க்கு நன்றாகும்" என்று அதன் தன்மையை விரிவாகக் கூறி முடித்தான்.

அதைக் கேட்ட அரசிளங்குமரன் முன்னே தங்கி இளைப்பாறிய மரத்தின் நலத்தையும், பின்னே கண்ட மரத்தின் கொடுமையையும் ஒப்புநோக்கி, நச்சு மரத்தில் அமைந்த நன்னிறக் கனிகள், பேதையர் கைப்பட்ட செல்வம்போல் பிறர்க்கு இடர் விளைப்பனவாகும் என்று எண்ணி வருந்தினான்.

"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று”

என்னும் பொய்யா மொழியின் பொருளைத் தெளிந்தான். இத் தகைய செல்வம் நிறைந்த பேதையர் நிலத்துக்குச் சுமையாகவும். உலகத்திற்கு உற்ற வசையாகவும் அமைந்திருத்தலால், அன்னார் அழிந்து ஒழிவதே நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். அறிவுடைய செல்வரை உலகம் போற்றும்; அறிவற்ற செல்வரை உலகம் தூற்றும் அறிவுடைய செல்வனது ஆக்கம், கண்டு உலகம் களிக்கும்; அறிவிலாச் செல்வனது அழிவைக் கண்டு உலகம் மகிழும். அறிவுடைய செல்வன் தன் பொருளைத் தக்கவாறு பயன்படுத்தி, இம்மையிற் புகழும், மறுமையில் இன்பமும் எய்துவான். அறிவிலாச் செல்வன் பயன்பட வாழும் பண்பறியாப் பேதையனாய் இம்மையிற் பழியும் மறுமையில் துன்பமும் எய்துவான்.

"நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்ட திரு”

என்பது என்றும் பொய்யா மொழியேயாகும்.