உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழின்பம்/பயிர் வண்டும் படர்கொடியும்

விக்கிமூலம் இலிருந்து


17. பயிர் வண்டும் படர் கொடியும்

திருக்குற்றால மலையின் ஒருசார் ஓங்கி வளர்ந்த வேங்கைமரம் விண்ணளாவி நின்றது. அதன் கிளைகளில் ஒரு மெல்லிய பூங்கொடி பின்னிப் படர்த்திருத்தது. மஞ்சு தோய நின்ற வேங்கையின்மீது அவ்வினங்கொடி வரிவரியாய்ச் சுற்றி விளங்கிய கோலம், கண்டோர் கண்ணையும் கருத்தையும் கவர்வவதாயிற்று. பொன்மலர் பூத்த அவ்வேங்கையின் கொம்புகளில், குயில்கள் மணந்து மகிழ்ந்தன; வண்டினங்கள் இசைபாடி நறுமலர்களின் தேனை மாந்தித் திளைத்தன.

"தீங்கு யில்ம ணந்துதேன் துஞ்ச வண்டு பாண்செய
வேங்கை நின்று பொன்உ குக்கும்”

என்று சிந்தாமணிக் கவிஞர் வியந்துரைத்த இயற்கையழகு அங்கே காட்சியளித்தது.

அவ் வேங்கை மரத்தின் அடிப்புறத்தில் ஆழ்ந்து அகன்ற ஓர் ஆறு அணிபெறச் சென்றது. இளங்காற்றில் வேங்கையின் பூங்கொம்புகள் அசைந்து ஆற்றிலே பொன்மலர் சொரிந்தன. சிறு திரைகள் ஆற்றில் அலைந்து இனிய காட்சியளித்தன.

அப்போது சேய்மையில் ஒல்லென ஓர் ஒலி கிளம்பியது. அதன் தன்மையை மனத்தாற் கருது முன்னமே கடுங்காற்று வேகமாய்ச் சுழன்று வீசத் தலைப்பட்டது. விண்ணுக் கடங்காமல், வெற்புக் கடங்காமல் வீசிய காற்றின் வேகத்தால் மரங்கள் எல்லாம் மயங்கிச் சுழன்றன. அக்காற்றின் கொடுமைக்கு ஆற்றாது மலையே நிலை குலைந்தது. வெறி கொண்ட சூறையில் அகப்பட்ட வேங்கை மரம் வேரோடு சாய்ந்து அருகே சென்ற ஆற்றில் விழுந்தது. வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்து, செழுமையுற்று விளங்கிய வேங்கை நிலை குலைத்து வீழக் கண்ட எமதுள்ளம் வெதும்பியது; உலகப் பொருள்களின் நிலையாமையை நினைத்து நெஞ்சம் உலைந்தது.

இவ்வாறு வேங்கை சாய்ந்து ஆற்றில் விழுத்த போது, அதனைச் சுற்றிப் படிர்ந்திருந்த மெல்லிய கொடியும் வேரோடு பெயர்ந்து அம்மரத்துடன் மயங்கி விழுந்தது. அவ்வேங்கையில் இனிய தேனுண்டு திளைத்த வண்டுகள் மரத்தொடு பூவும் மாளக் கண்டு ஆர்த்தெழுந்து அயல் நின்ற மற்றொரு மரத்தில் சென்று சேர்ந்தன. இதனை நோக்கிய போது மதுவுண்டு மயங்கும் வண்டின் இழிகுணம் எம்மனத்தை வாட்டி வருத்தியது,

"காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவர்_ஏலா
இடர்ஒருவர் உற்றக்கால், ஈரங்குன்ற நாட!
தொடர்புடையோம் என்பார் சிலர்"

என்ற பாட்டின் பொருள் தெளிவாக விளங்கிற்று. கெடுமிடத்துக் கைவிடும் கருவண்டு போலாது, பெருந்துயர் நேர்ந்தபோதும் பிரியாத இயலமைந்த பூங்கொடி, நல்ல குடிப்பிறந்த நங்கைபோல் இலங்கிற்று. வேரூன்றி முளைத்த இடத்தினின்றும் படர்ந்து போந்து, வேங்கையைப்பற்றித் தளிர்த்துப் படர்ந்த கொடியின் தன்மை, மணப்பருவம் வாய்ந்த ஒரு மங்கை, பிறந்த மனையின்றும் போந்து, தலைமகனைச் சேர்ந்து வாழும் தன்மையில் அமைந்திருந்தது. அக் கொடி படர்வதற்கு ஏற்ற கொழுகொம்பாய் அமைந்த வேங்கையின் தோற்றம், ஆண்மையும் பெருமையும் பொருந்தித் திகழும் தலைமகனது விழுமிய நிலைபோல் விளங்கிற்று. அவ் வேங்கையிலே பின்னிப் படர்ந்து அதன் கிளைகளுக்குப் புதியதோர் அழகளித்த கொடியின் கோலம், தலைமகனுடன் ஒன்றி வாழ்ந்து இல்வாழ்க்கைக்கு அழகளிக்கும் குலமங்கையின் தன்மையை நிகர்த்தது. இன்னும், வேங்கை துயர் உற்று ஆற்றில் விழும்போது அதனோடு தானும் துயருறும் நிறையமைந்த மங்கையின் மனப் பான்மையை விளக்கி நின்றது. அந்நிலையில் இளங்கோவடிகள் எழுதிக் காட்டிய கண்ணகியின் வடிவம் எம்மனக் கண்ணெதிரே காட்சியளித்தது.

பெற்றோர் சேர்த்து வைத்த பெருஞ்செல்வம் எல்லாம் பொதுமாதிடம் இழந்து வறியனாய், மாட மதுரையில் மனையாளது மணிச்சிலம்பை விற்று வாணிகம் செய்யுமாறு புகார் நகரினின்றும் புறப்பட்டான் கோவலன். அப்போது மெல்லியல் வாய்ந்த கண்ணகியும் அவனுடன் சென்றாள். கதிரவன் வெம்மையால் உடல்சோர, கரடு முரடான பாதையில் வண்ணச் சீறடிகள் வருந்தக் கானகத்தில் நடந்து போந்த கண்ணகியின் பெருமையைக் கண்டு கோவலன் மனங்குழைந்தான்:

"குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்துஈங்(கு) என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்”

என்று கற்பின் செல்வியைப் புகழ்ந்து போற்றினான்.

இவ்வாறு கணவனைப் பிரியாது வாழ்தலே நிறையமைந்த மாதர் நெறியாகும். கற்புடைய மாதர் கணவரோடு இன்பமும் துன்பமும் ஒருங்கே நுகர்வர்; அவர் ஆவி துறப்பின் அந்நிலையே உயிர் நீப்பர். நீரில் அமைந்து வாழும் நீலமலர் அந்நீர் வற்றும்போது அவ்விடத்தே ஒட்டி உறைந்து உலரும் தன்மைபோல், கற்பமைந்த மங்கையர் கணவன் வாழுங்காலத்து அவனுடன் இனிது வாழ்ந்து, அவன் அழியும் காலத்துத் தாமும் அகமகிழ்ந்து அழிவர். இத்தன்மை வாய்ந்த குலமாதர் நெறியைக் கொடியின் தன்மையோடு ஒப்பு நோக்கிக் கம்பர் அமைத்துள்ள கற்பனை; அழகு வாய்ந்ததாகும்.

"நிலம ரங்கிய வேரொடு நேர்பறித்து
அலம ரும்துயர் எய்திய ஆயினும்
வலம ரங்களை வீட்டில மாசிலாக்
குலம டந்தையர் என்னக் கொடிகளே”

என்னும் கவியில் அமைந்துள்ள சொல் நயமும் பொருள் நயமும் ஆயுந்தோறும் அளவிறந்த இன்பம் பயப்பதாகும். குலமாதர் போன்ற கொடிகளின் தன்மை இவ்வாறாக, விலைமாதர் போன்ற வண்டுகளின் தன்மையையும் கவிதையிலே காணலாம். பொருளையே விரும்பும் பொது மாதர் உள்ளத்தில், அன்பெனும் பசை அணுவளவும் இராது என்று அறிஞர் கண்டு உணர்த்தியுள்ளார்கள். அத்தன்மை வாய்ந்த பெண்டிரை,

"நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவர்”

என்று மணிமேகலை ஆசிரியர் குறித்துப் போந்தார். ஆகவே, இடருற்றபோது நீங்கும் இயல்புடையாரோடு உறவு கொள்ளாது, கொடுந்துயர் உற்ற போதும் விட்டு கொடியன்னாரைத் துணைக் கோடலே இருமையும் இன்பம் தருவதாகும்.