தமிழின்பம்/முருகனும் முழுமதியும்

விக்கிமூலம் இலிருந்து

IV. கற்பனை இன்பம்

16. முருகனும் முழுமதியும்

அந்தி மாலையில் விண்ணிலே எழுந்த முழுமதி எங்கும் வெண்ணிலா விரித்தது. பொய்கையிலமைந்த பூங்குமுதம்முகை நெகிழ்ந்து, தேன் துளித்து மலர்ந்தது. மலையத் தெழுந்த இளங்காற்று மெல்லெனத் தவழ்ந்து நறுமணம் கமழ்ந்தது. இத்தகைய அழகு வாய்ந்த அந்திப் பொழுதில், தென்மலைச் சாரலில் மகிழ்ந்து விளையாடிய முருகனென்னும் குமரன், விண்ணிலே ஊர்ந்த வெண் மதியின் அழகினைக் கண்டு குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, முகம் மலர்ந்து அளவிலா இன்பமுற்றான். குறுநடை பயிலும் முருகனைக் கூர்ந்து நோக்கி, வெண்ணிலாவும் நகை முகம் காட்டுவதாயிற்று. தன்னை நோக்கி, முகம் மலர்ந்த தண்மதியை, அருகே போந்து விளையாட அழைத்தான் முருகன். மழலை மொழிகளால் நெடும்பொழுது வருத்தியழைத்தும் வான்மதி வாராதிருக்கக் கண்டு முருகன் கண் பிசைந்து அழுது கரைந்தான். {{gap}இள நலம் வாய்ந்த முருகன் விம்மித் தேம்பி அழுவதைக் கண்டு ஆற்றாத முனிவர் ஒருவர் அவ்விடம் விரைந்து போந்து, வெள்ளை மதியில் ஊன்றிய பிள்ளையின் கருத்தை மாற்றப் பலவாறு முயன்றார்; ஆயினும், அப்பிள்ளையின் கண்ணும் கருத்தும் பிற பொருளிற் செல்லாப் பெற்றி கண்டு விண்மதிக்கு நன்மதி புகட்டலுற்றார். "வெண்ணிலா வீசும் விண்மதியே! முருகனைப் போலவே நீயும் அமுதமயமாய் விளங்குகின்றாய்; கண்டோர் கண்ணையும் மனத்தையும் குளிர்விக்கின்றாய்; குமுதவாய் திறந்து குளிரொளி விரிக்கின்றாய்; உயிராகிய பயிர் தழைக்க உயரிய அருள் சுரக்கின்றாய். இவ்வாறு பல கூறுகளில் முருகனை நிகர்க்கும் நீ அவனோடு விளையாட வா” என்று முனிவர் நயந்து அழைத்தார்.

இங்ஙனம் ஒப்புமை காட்டி உவந்தழைத்தும் இரங்காத மதியின் நிலை கண்டு வருந்தினான் குமரன். அது கண்ட முனிவர், மதியின் சிறுமை காட்டி இடித்துரைக்கத் தொடங்கினார்; "மாலை மதியே! சில கூறுகளில் நீ முருகனை ஒப்பாயாயினும் பல கூறுகளில் அவனுக்கு நீ நிகராகாய்; முக்கட் பெருமானாகிய முதல்வனுக்கு நீ ஒரு கண்ணாய் அமைந்தாய்! முருகனோ கண்மணியாயமைந்தான்; கலைகள் குறைந்தும் நிறைந்தும், நீ வேறுபடுகின்றாய். முருகனோ எஞ்ஞான்றும் கலை நிறைந்த இன்னொளியாய் இலங்குகின்றான். நீ புற இருளையே போக்க வல்லாய், முருகன் அக விருளையும் அகற்ற வல்லான். உலகில் நீ ஒருபால் ஒளிருங்கால் மற்றொருபால் ஒழிகின்றாய்; முருகனோ அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து விளங்குகின்றான். நீரிற் பூக்கும் குமுத மலர்களை நீ மலர்விக்கின்றாய்; முருகனோ அன்பருடைய மனமலர்களைத் திறக்கின்றான். எனவே, உன்னினும் அவன் உயர்ந்தவனல்லனோ! அன்னான் 'வருக' என்றழைத்தால் நீ வாராதிருக்க வழக்குண்டோ?" என்று முனிவர் இடித்துரைத்தார்.

இவ்வாறு வேற்றுமை காட்டிக் கட்டுரை கூறியும், முருகன் பெருமையை உணராது இறுமாந்திருந்த தண்மதியைப் பிறிதோர் உபாயத்தால் முனிவர் தெருட்டக் கருதினார்; "மறுவுற்ற குளிர் மதியே! உன்னை வருந்தி அழைக்கும் குமரன் திறத்தினை அறிந்தா யில்லையே! கருநோயை வேரறுக்கும் முருகன் அருள் பெற்றால், உன்னைப் பற்றியுள்ள கரு நோய் கடுகி ஓடுமே இருள்சேர் இருவினையுந் துடைத்து, அந்தமில் இன்பத்து அழியா வீடும் தரவல்ல முருகனுக்கு உன்பால் அமைந்த மறுவினை அகற்றுதல் அரிதாமோ! கரவாது தொழும் அன்பர் கண்ணெதிரே தோன்றித் தண்ணளி சுரந்து, வரங்கொடுக்கும் கண்கண்ட தெய்வம் முருகனல்லால் உலகில் வேறுண்டோ?” என்று செம்பொருளாய குமரன் பெருமையைச் செவ்வனம் அவர் உணர்த்தினார். எனினும், முனிவர் பரிந்துரைத்த மொழிகளை வெண்மதி மனத்திற் கொள்ளவில்லை.

சாம, பேத தானங்களால் தண்மதியை வெல்ல இயலாத முனிவர் தண்டத்தைக் கையாளத் தலைப்பட்டார்; 'குறையாகிப் பிறையாகி மிளிரும் குளிர்மதியே! இக்குமரன் ஆற்றலை நீ அறியாய் போலும்! இப்பிள்ளைப் பெருமான் குன்றமெறிந்தான்; குறை கடலிற் சூர் தடிந்தான்; குலிசனைச் சிறையிவிட்டான். இவ் வேலனைப் பாலன் என்றெண்ணி இகழ்ந்த சூரன் பட்ட பாட்டை நீ அறியாயோ? இன்னும், தக்கன் வேள்வி கட்டழிந்த நாளில் நீ மானங் குலைந்ததை மறந்தனையோ? வலிமை சான்ற வேலன் மேலும் பொருமி அழுது அரற்றுவானாயின், இளையவனாகிய வீராவகு பொங்கி எழுவான். அவன் சீற்றத்தை மாற்ற எவராலும் இயலாது. ஆதலால், முருகன் வருந்தி அழைக்குங்கால் அவனுடன் வந்து விளையாடுதலே உனக்கு அழகாகும்” என்று முனிவர் அறிவுறுத்தினார்.

தாம் உரைத்த மொழிகளைச் சிறிதும் நெஞ்சிற் கொள்ளாது செருக்குற்று விண்ணிலே தவழ்ந்து சென்ற விண்மதியையும், அம்மதியை மறந்து மற்றொன்றைக் கருத மனமற்றிருந்த முருகனையும், கண்ட முனிவர் செய்வதொன்று மறியாது சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

அந் நிலையில் முருகனை வீட்டிற் காணாத அவன் தந்தை; 'முருகா, முருகா' என அழைத்துக் குன்றின் சாரலை வந்தடைந்தார்; ஆங்குக் கரும் பாறையின்மீது முனிவரும் குமரனும் அமர்ந்திருக்கக் கண்டார்; அருமந்த முருகனை விரைந்தெடுத்து ஆர்வமுற அனைத்துக் கண்ணீர் துடைத்து, அழகொழுகும் அவன் திருமுகத்தை அமர்ந்து நோக்கி, 'என் கண்னே! கண்மணியே! நீ ஏன் அழுதாய்? தேனும் தினையும் வேண்டுமா? பாலும் பழமும் வேண்டுமா? என்று விருப்புடன் வினவி முத்தமிட்டார். முத்தமிட்டு நிமிர்ந்த அத்தனது சடையி லமைந்த பிறை மதியை முருகன் கண்டு கொண்டான்; தன்

விருப்பத்திற்கிணங்கி வந்தடைந்த தண்மதியைக் கண்டு உள்ளம் தழைத்தான்; தந்தையின் தோளில் ஏறியமர்ந்து கற்றைச் சடையின்மீது இலங்கிய குழவித் திங்களைத் தன் இளங்கரத்தால் வளைத்திழுத்தான். தண்மதியைச் சார்ந்த முருகனது இளநலம் முன்னரிலும் சிறந்து இலங்கிற்று. விண்மதியின் தண்மையையும் வெண்மையையுங்கண்டு, முருகன் மனங்களித்தான்; மதியின் வட்ட வடிவத்தைத் தன் முகத்தோடு ஒட்டிப் பார்த்தான்; அதன் மேனியிலமைந்த மறுவைத் தன் மலர்க் கரத்தால் துடைத்தான். மதியுடன் விளையாடிய மைந்தனைக் கண்டு தந்தையார் மனங் குளிர்ந்தார். இறையனார் செயல் கண்டு இன்பக் கண்ணிர் சொரிந்த முனிவர், 'யாவர்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ?' என்று பாடிப் பரவினார்.