தமிழின்பம்/மாதரும் மலர்ப் பொய்கையும்

விக்கிமூலம் இலிருந்து

15. மாதரும் மலர்ப் பொய்கையும்

மலர் நிறைந்த பொய்கையும் மீன் நிறைந்த வானமும் எஞ்ஞான்றும் கவிஞர் மனத்தைக் கவரும் இயற்கைக் காட்சிகளாகும். காலையிலே தோன்றும் கதிரவனொளியால் களித்து விரியும் கமல மலரைக் காணும்பொழுது கவிஞரின் உள்ளமும் மலர்வதாகும். இத்தகைய இயற்கை அழகினை மாந்தி இன்புற்ற கவிஞர் தரும் காட்சிகளைப் பார்ப்போம்.

நீலத்திரை விரித்த வானத்திலே, கதிரவன் ஒளி வீசி எழுந்தான். கண்களைக் கவரும் அழகு வாய்ந்த கமல மலர்களில் கள்ளுண்டு களிக்கப் போந்த கரு வண்டுகள் பொய்கையின்மீது சுற்றிச் சுழன்று இன்னிசை பாடின. பகலவன் ஒளியால் இதழ் விரிந்து இலங்கிய செங்கமல மலரில் வெள்ளை அன்னம் ஒன்று இனிதமர்ந்திருந்தது. காலைப் பொழுதில் வீசிய இளங்காற்றின் இனிமையை நுகர்ந்து அன்னம் தெள்ளிய திரைகள் தாலாட்டக் கமலப் பள்ளியில் இனிது துயின்றது. இவ்வாறு பூஞ்சேக்கையில் கண்வளர்ந்த அன்னத்தின் அழகினை,

"தாய்தன் கையின் மெல்லத்
தண்ணென் குறங்கி னெறிய
வாய்பொன் அமளித் துஞ்சும்

மணியார் குழவி போலத்
தோயும் திரைகள் அலைப்பத்
தோடார் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சும்
வெள்ளை அன்னம் காண்மின்"

என்று பாடினார் சிந்தாமணி ஆசிரியர்.

அன்பார்ந்த குழவியை அழகிய மஞ்சத்திலமைத்து அதன் மேனியைக் கைகளால் தடவித் துயில்விக்கும் அன்னைபோல் ஈரம் வாய்ந்த பொய்கை, கமலப்பள்ளியில் அமர்ந்த அன்னத்தைத் தன் அலைக்கைகளால் தட்டித் துயில்வித்ததென்று கவி. அமைத்துள்ள உவமை சால அழகியதாகும். தண்மை வர்ய்ந்த பொய்கை. தலையாய அன்பு வாய்ந்த அன்னையை ஒத்தது. மெல்லிய திரைகள் அன்னையின் மெல்விய கரங்களை ஒத்தன. அத்திரைகள் தோய்தலால் அன்னம் அடைந்த இன்பம். அன்னையின் கை தோய்தலால் அருங்குழவியடையும் இன்பத்தை நிகர்த்தது. அன்னம் துயிலுதற்கமைந்த நறுமணங்கமழும் கமலப்பள்ளி மெல்லிய வெண்பட்டு விரித்த விழுமிய மஞ்சம் போன்றது என்று கவிஞர் எழுதியமைத்த ஒவியம் கற்போர் மனத்தைக் கவர்வதாகும்.

இத்தகைய பொய்கையில் நீலத் துகிலுடுத்த ஒரு மங்கை நீராடச் சென்றாள். அவ் வழகிய ஆடையில் குயிற்றிய செம்மை சான்ற மணிகளிலே கதிரவன் ஒளி வீசிய பொழுது அம் மணிகளினின்று எழுந்த நிழற் சுடர்கள் பொய்கையின்மீது விழுந்து நெருங்கிப் பூத்த செந்தாமரையை நிகர்த்தன. அச்சுடர்களைச்

சேய்மையிலிருந்து கண்ட மட அன்னம் ஒன்று விரைந்தோடிச் சென்று ஆர்வத்தாற் கவ்விற்று. மணிகளின் நிழலாய சுடர்கள் வாயில் அகப்படாமையால் தன் மடமையை நினைந்து நாணிய அன்னம், வந்த வழியே வெட்கமுற்று விரைந்து சென்றது. இத்தகைய இனிய இயற்கைக் காட்சியை,

நீலத் துகிலிற் கிடந்த
நிழலார் தழலம் மணிகள்
கோலச் சுடர்விட் டுமிழக்
குமரி அன்னம் குறுகிச்
"சால நெருங்கிப் பூத்த
தடந்தா மரைப்பூ வென்ன
வாலிச் சுடர்கள் கவ்வி
அழுங்கும் வண்ணம் காண்மின்"

என்று கவிஞர் நயம்படப் பாடினார்.

நீலத் துகிலின் இடையே இலங்கிய செம்மணிகள் பசுமையான தாமரை இலைகளின் நடுவே விளங்கிய செங்கமல மலர்போல் திகழ்ந்தன. நீராடப் போந்த மங்கையின் நீலப்புடைவையில் செம்மணிகள் நெருக்கமாகப் பதிந்திருந்தமையால், கதிரவன் ஒளியில் அவற்றின் நிழல்கள், நீர்ப்பரப்பில் நெருங்கி விழுந்து சால நெருங்கிப் பூத்த செந்தாமரையை நிகர்த்தன. நாள் தோறும் நற்றாமரைக் குளத்தில் வாழ்ந்து, செங்கமல மலர்களைச் செவ்வையாக அறிந்திருந்த அன்னமே, செம்மணியின் சுடர்களைச் செந்தாமரை என்று மயங்கற்றென்றால், அம்மணிகளின் செம்மை சான்ற ஒளி, சொல்லாமலே விளங்குமன்றோ? அச்சுடர்களைத் தாமரை என்று கருதி அன்னம் விரைந்து சென்று கவ்விய ஆர்வமும், அச்சுடர்கள் வாயிலகப்படாமையால் அழுங்கிய தோற்றமும் நகைச்சுவை பயப்பனவாகும். ஆகவே, மங்கை புனைந்திருந்த மணியாடையின் சிறப்பையும், அம் மணிகள் கதிரவன் ஒளியால் சுடர் உமிழ்ந்த செம்மையையும் சிந்தாமணிக் கவிஞர் அழகுற உணர்த்திப் போந்தார்.

மலர்ப் பொய்கையின் அழகையும் மெல்விய, பூங்காற்றின் இனிமையையும் நுகர்ந்து, நெடுநேரம், மங்கை நீராடுவாளாயினாள்; பொய்கையிலே இயற்கை இன்பம் நுகர்ந்த நிலையில் வீட்டையும் மறந்தாள்; தன்னோடு போந்த பஞ்சரக் கிளியின் பசியையும் மறந்தாள். இவ்வாறு தன்னையும் மறந்து தாமரைத் தடாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த மங்கையைக் கரையேற்றுதற்கு ஒரு சூழ்ச்சி செய்தது அவ் விளங்கிளி. தன்னைக் காதலித்து வளர்த்த தலைவியை நோக்கி, 'பாம்பு, பாம்பு' என்று பதறிக் குளறிக் கூறிற்று. பாம்பு என்ற சொற்கேட்ட மங்கை மனம் பதைத்துக் காதில் அணிந்த தோடு கழல, விரைந்தோடிக் கரை சேர்ந்தாள். இந்நிகழ்ச்சியை ஒரு சொல்லோவியமாக எழுதி அமைத்தார் சிந்தாமணிக் கவிஞர்.

"தீம்பாற் பசியி னிருந்த
செவ்வாய்ச் சிறுபைங் கிளிதன்
ஒம்பு தாய்நீர் குடைய
ஒழிக்கும் வண்ணம் நாடிப்
பாம்பா மென்ன வெருவிப்
பைம்பொன் தோடு கழலக்
காம்பேர் தோளி நடுங்கிக்
கரைசேர் பவளைக் காண்மின்"

என்பது அவர் பாட்டு, பால் நினைந்தூட்டி வளர்த்த பசுங்கிளியின் பசியையும் மறந்து, தலைவி நீராடத் தலைப்பட்டாள் என்று கவிஞர் கூறுமாற்றால், மாண்பமைந்த மலர்ப் பொய்கையின் பெருமை இனிது விளங்குவதாகும். அத் தலைவி, தண்ணளியோடு பாலூட்டும் தாய் ஆதலால், மதி நலம் வாய்ந்த கிளி அவள் மனத்தைத் துன்புறுத்தாது தன் பசியைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழியை நாடிற்று. மலர் நிறைந்த பொய்கையில் மீன் முதலாய உயிர்களும், அன்னம் முதலாய பறவைகளும் நிறைந்திருப்பினும், மங்கைக்குப் பாம்பினிடத்துள்ள பயம் மிகப் பெரிதெனக் கருதிய கிளியின் மதி நலம் அறிந்து மகிழத்தக்கதாகும். இவ்வாறு செவ்வியறிந்து பேசுதற்குரிய முறையில் அக் கிளியைப் பயிற்றியிருந்த மங்கையின் மதி நலமும் நன்கு விளங்குகின்றது. ஆகவே, குளிர்ந்த நீர் நிறைந்த பொய்கையின் பெருமையும் அந் நீரில் மகிழ்ந்து விளையாடிய மங்கையின் மதிநலமும் சிந்தாமணிக் கவிஞரால் சிறப்பாக உணர்த்தப்பட்டன.

மங்கை, அஞ்சி ஒடிக் கரையேறியபொழுது அவள் காதிலணிந்திருந்த தோடுகளில் ஒன்று கழன்று தண்ணிரில் விழுந்துவிட்டது. தோடிழந்த பாவை துடித்தாள்; கண்ணிர் வடித்தாள். 'ஐயோ! நான் என்ன செய்வேன்? 'பொய்கைக்குப் போக வேண்டா' என்று அன்னை தடுத்தாளே! அவள் தடையை மீறி வந்தேனே! வெறுங்காதுடன் வீட்டிற்குச் சென்றால் அன்னை சீறுவாளே! திட்டிக் கொட்டுவாளே! இப்பொய்கையில் இறங்கித் தேடித் தருவார் யாரையும் காணேனே! என் கண்ணனைய தோழியரும் கைவிட்டுச் சென்றார்களே! அதோ ஒரு மெல்லியல் அன்னம் கரையருகே நீந்தி வருகின்றது. இன்னல் உற்ற என் நிலையைக் கண்டு இரக்க முற்றுத்தான் வருகின்றது போலும்!' என்றெண்ணிப் பேசலுற்றாள் மெல்லியல்; அன்னமே உன்னை வணங்குகின்றேன். எனக்கு நீ ஒரு நன்மை செய்ய வேண்டும். நீ வாழும் பொய்கையில் என் காதணி கழன்று விழுந்துவிட்டது. அதை நினைத்தால் என் நெஞ்சம் நடுங்குகின்றது. என் தாய் பொல்வாதவள்! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்; போக்கடித்த நகையை எடுத்துத் தரவேண்டும் என்று கை கூப்பித் தொழுதாள்.

"

மின்னொப் புடைய பைம்பூண்
நீருள் வீழக் கானாள்
அன்னப் படையே தொழுதேன்
அன்னை கொடியள் கண்டார்
என்னை அடிமை வேண்டின்
நாடித் தாஎன் றிறைஞ்சிப்
பொன்னங் கொம்பின் நின்றாள்
பொலிவின் வண்ணம் காண்மின்

என்பது சிந்தாமணி.

பொய்கையிலே காதணியைப் போக்கடித்த மங்கை. ஒரு பெண் அன்னத்தை நோக்கித் தன் குறையை முறையிட்டாள் என்று பொருத்தமாகக் கூறினார் கவிஞர். 'பெண்ணுக்குப் பெண்மைதான் இரங்கும் என்று எண்ணி, அன்னப் பெடையே!'என்று அழைத்தாள்; அதன் கருணையைப் பெறுவதற்காகக் கைகூப்பித் தொழுதாள்; மேலும், அதன் உள்ளத்தி லெழுந்த இரக்கத்தைப் பெருக்கும் பொருட்டு, 'அன்னை கொடியவள்' என்று அறிவித்தாள்; காலத்திற் செய்யும் உதவிக்கு என்றென்றும் கடமைப்பட்டவள் என்று தன் நன்றியறிதலைப் புலப்படுத்தினாள் என்பது கவிஞர் கருத்து. இத்தகைய நயங்களெல்லாம் சிந்தாமணிச் சொல்லோவியங்களிற் சிறந்து விளங்கக் காணலாம்.