தமிழின்பம்/தமிழ் இசை விழா

விக்கிமூலம் இலிருந்து

5. தமிழ் இசை விழா[1]

தலைமையுரை

பெரியோர்களே ! அன்பர்களே!!

இந்நாள் தமிழ் மக்களுக்கு ஒரு நன்னாள் ஆகும். சென்னை மாநகரில் பத்தாண்டுகளாகச் சிறந்த பணி யாற்றி வரும் தமிழிசைச் சங்கம், இன்று 'அண்ணாமலை மன்றம்' என்னும் அழகிய காலைக்கோவிலில் அமர்ந்து காட்சியளிக்கின்றது. மன்றம் என்ற தமிழ்ச்சொல்லைக் கேட்டது செவிக் கின்பம்; அதன் பொருளை அறிவது சிந்தைக்கு இன்பம். பழந்தமிழ் மொழியில் மன்றம் என்பது ஊர் நடுவேயுள்ள பொதுவிடமாகும். இன்று தமிழகத்தின் தலைநகராகிய சென்னையம்பதியின் நடுவே, தமிழரின் சீர்மைக்கு ஒரு சான்றாக நிற்கும் இம் மாளிகை, தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவுடைமையாதலால் இதனை மன்றம் என்று அழைப்பது சாலவும் நன்றே. தமிழ் நாட்டில் எல்லையற்ற பெருமை வாய்ந்த தில்லையம்பதியின் அருகே பல்கலைக் கழகமொன்று நிறுவி, பாரத நாட்டுக்கலை வரலாற்றில் நிலையான ஒர் இடம் பெற்றுப் புகழுடம்பில் வாழும் ராஜாசர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் தமிழார்வமும் தலையாய வள்ளன்மையும் இக்கலை மாளிகையாக உருவெடுத்துக் காட்சிதருகின்றன. அண்ணாமலையரசருடன் இசைவளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டுக் கண்ணினைக் காக்கும் இமைபோல் தமிழிசைச் சங்கத்தைக் காத்து வரும் பேரறிஞர் டாக்டர் ஆர்.கே சண்முகஞ் செட்டியார் அவர்களுடைய கலை வண்ணமும் இம்மாளிகையிலே காட்சி தருகின்றது. இப்பெருந்தலைவர் இருவரும் முன்னின்று நடத்திய திருப்பணி சிறக்கும் வண்ணம் பொருளுடையார் ஆதரவு புரிந்தனர்; அருளுடையார் ஆசி கூறினர். இவ்வாறு ஒல்லும் வகையால் உதவி செய்து தமிழிசைக் கோயிலை உருவாக்கிய நல்லார் அனைவருக்கும் தமிழ் மக்களின் நன்றி என்றும் உரியதாகும்.

தமிழ்நாடு இப்பொழுது புத்துயிர் பெற்று வருகின்றது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் பொது மக்களின் ஆதரவைப் பெற்று முன்னேறுகின்றன. இவ்வாண்டில், சென்னை மாநகரிலே தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவில் இயற்றமிழ் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாடகத் தமிழாசிரியர் முதுபெரும்புலவர் திரு. சம்பந்த முதலியார் அவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்நகரில் நிகழ்ந்த நாடகத்தமிழ் விழா என்றுமில்லாதே தார் இன்பக் காட்சியா யிருந்தது. இசைத் தமிழ் விழா இன்று இம்மன்றத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இம்மூன்று தமிழ் விழாக்களையும் தொடங்கி வைத்து ஆசி கூறிய அண்ணல், கைராசியுள்ள ராஜாஜி என்றால், முத்தமிழின் முன்னேற்றத்திற்கு இனித் தடையும் உண்டோ? 
இசைத் தமிழ் என்பது முத்தமிழின் நடுநாயகமாக விளங்குவது. இசைத் தமிழ் என்றாலும் தமிழிசை என்றாலும் பொருள் ஒன்றே. இயல், இசை, நாடகம்  என்னும் மூவகைத் தமிழையும் முன்னாளில் முனிவரும் மன்னரும் முன்னின்று வளர்த்தார்க்ள். முத்தமிழையும் துறையோகக் கற்ற வித்தகராகிய முனிவர் ஒருவர், பொதிய மலையில் அமர்ந்து தமிழ்ப் பணி புரிந்தார். அவரைத் திரு முனிவர் என்றும், குறு முனிவர் என்றும், முத்தமிழ் முனிவர் என்றும் கவிஞர்கள் புகழ்ந்துரைத்தார்கள். 

              "முத்தமிழ் மாமுனி நீள்வரை யேநின்று
               மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு”

என்று பாடினார் பாரதியார்.

இத்தகைய பெருமை வாய்ந்த முனிவர், தமிழ் நாட்டிற்கு மலைபோல் வந்த இடரை மஞ்சுபோல் இசைத் தமிழால் அகற்றிப் பாதுகாத்தார் என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. 'ஆசைக்கோர் அளவில்லை’ என்னும் ஆன்றோர் மொழியை மெய்ப்பித்த இலங்கை வேந்தனாகிய இராவணன் தமிழ் நாட்டிலும் ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டான். தமிழ் மலையாகிய பொதிய மலையைக் கைப்பற்றிக் கொண்டால் தமிழ் நாட்டை வளைத்து ஆட்சி புரிதல் எளிது என்று எண்ணினான் அம் மன்னன். அந்நோக்கத்தோடு பொதிய மலைக்குப் போந்தான்; அங்கே முத்தமிழ் முனிவராகிய அகத்தியர் அமர்ந்திருக்கக் கண்டான்; இராவணன் வல்லரசனாயினும் இன்னிசையில் ஈடுபட்டான். நாரத முனிவனும் நயக்கும் வண்ணம் நல்லிசை பாட வல்லவன்; பன்னருஞ் சாமகீதம் பாடி ஈசனது இன்னருளைப் பெற்றவன்; இசைக்கலையில் இத்துணை ஏற்றம் வாய்ந்த இராவணன் தமிழிசையிற் புகழ் பெற்ற முனிவரிடம் தன் கைவரிசையைக் காட்ட ஆசைப்பட்டான். அவன் கருத்தறிந்த தமிழ் முனிவர் தம் இசைக் கருவியாகிய யாழை மீட்டினார். 

மன்னனுக்கும் முனிவருக்கும் இசைப்போட்டி நிகழ்ந்தது. முதலில் அரக்கர்கோன் அருமையாகப் பாடினான். அதன்பின் அகத்தியர் தமிழிசையை யாழில் அமைத்துப் பாடினார். அவர் பாட்டொலி கேட்ட பறவைகளும் விலங்குகளும் பரவசமுற்றன. எதிரே நின்ற கரும்பாறை இளகிற்று. அரக்கர் கோன் உள்ளம் உருகிற்று. அந்நிலையில் அகத்தியரை நோக்கி, 'என் உயிரினும் இனிய இசை ஞானியே! உமக்கு என்ன வேண்டும்?' என்றான் இராவணன். தமிழ் நாட்டைப் பாதுகாப்பதற்கு ஏற்ற சமயம் வந்துற்றது என்று அறிந்த முனிவர், 'ஐயனே! இந்நாட்டிலுள்ளார் எவரையும் நீ துன்புறத்தாமல் இருக்க வேண்டும்' என்றார். அதற்கிசைந்த இராவணனும் பொதியமலையை விட்டகன்றான். அன்று முதல் தமிழகத்தில் ஆட்சி செலுத்தும் கருத்தை அடியோடு விட்டொழித்தான் அரக்கர் கோமான். 'தமிழிசையின் வெற்றியால் அரக்கர் அச்சம் அகன்றது' என்று தமிழ் மக்கள் அகங்களித்தார்கள். இச்செய்தியைத்[2] தொல்காப்பியப் பாயிர வுரையாலும் மதுரைக் காஞ்சியுரையாலும் அறியலாம். இவ்வரலாற்றால் தமிழ் நாட்டை முன்னாளில் அபயமளித்துக் காத்தது இசைத் தமிழே என்பது இனிது விளங்கும்.

இவ்வாறு தமிழ்நாட்டைப்பாதுகாத்த இசைத் தமிழ், கடல் கடந்து இலங்கைக்குச் சென்று வெற்றி பெற்ற

செய்தியும் அறியத் தக்கதாகும். இன்று இலங்கையில் தமிழர் வாழும் நாடும் நகரமும் யாழ்ப்பாணம் என்னும் அழகிய பெயரைப் பெற்றுள்ளன. யாழ்ப்பாணர் என்பவர் இன்னிசைக் கருவியாகிய யாழைக் கையி வேந்தித் தமிழ்ப் பாட்டிசைக்கும் இசைவாணர். யாழ்ப் பாணர் என்ற குலத்தார் இப்பொழுது தமிழ்நாட்டில் இல்லையென்றாலும், முன்னாளில் அவர் சிறந்து வாழ்ந்தனர் என்பதற்கு ஒரு சான்றாக நிற்பது யாழ்ப் பாணம் என்னும் நன்னகரம்.

பழந்தமிழ்க் குடிகளாகிய பாணரைத் தமிழ் நாட்டுப் பெருநில மன்னரும் குறுநில மன்னரும் ஆதரித்தார்கள்; வரிசை அறிந்து அவர்க்குப் பரிசளித்தார்கள். சோழ நாட்டு மன்னனாகிய கரிகால் வளவனும் தொண்டை நாட்டில் ஆட்சி புரிந்த இளந்திரையனும் குறுநில மன்னனாகிய நல்வியக்கோடனும் இசைவாணர் குலத்தை ஆதரித்த செய்தி பத்துப்பாட்டிலே கூறப்படுகின்றது. சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் பெரும் பாணர் குலம் சிறப்புற்று வாழ்ந்ததென்பது சிலப்பதிகாரத்தால் நன்கு அறியப்படுகின்றது. எனவே, முற்காலத்தில் தமிழிசையை இசைத் தொழிலுக்காகப் பயின்றவர் பாணர் குலத்தவரே என்பதும், அவர்களை ஆதரித்த பெருமை தமிழ்நாட்டு மன்னர்க்கு உண்டு என்பதும் பண்டைத் தமிழ் நூல்களால் விளங்குவனவாகும்.

சங்க காலம் என்று சொல்லப்படுகின்ற பழங்கால நூல்களில் வரும் இசைப் பாடல்கள் இயற்கை நலங்களையும் இறைவன் பெருமையையும் அழகுற எடுத்துரைக்கின்றன. பரிபாடல் என்னும் பழைய இலக்கிய நூலில் வைகை ஆற்றைப் புகழ்ந்து பா'

பாடல்கள் பல உண்டு. தமிழ்நாட்டின் நல்லணியாகத் திகழும் காவேரி ஆற்றை இளங்கோவடிகள் இசைப் பாட்டால் புகழ்ந்து வாழ்த்தியுள்ளார்.

"பூவார் சோலை மயிலாகப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி "

என்ற இசைப் பாட்டைக் கேட்கும் பொழுது தமிழ்ச் செவிகளில் இன்பத் தேன் வந்து பாய்கின்றதன்றோ?

இவ்வாறு பாணர்களும் புலவர்களும் வளர்த்து வந்த தமிழிசையைச் சைவ சமய நாயன்மார்களும் வைணவ சமய ஆழ்வார்களும் பக்தி நெறியைப் பரப்புவதற்குப் பயன்படுத்தினார்கள். ஈசனைப் பாடிய தேவாரத் திருப்பாசுரங்கள், இறைவன் திருவருளை இன்னிசையால் எளிதிற் பெறலாம் என்னும் உண்மையை எடுத்துரைக்கின்றன. இன்னிசை பாடுவார் பெறும் பயனைத் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார்.

"பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்"

என்பது அவர் திருவாக்கு. 'இசைத் தமிழால் வழிபடும் அடியார்க்கு ஈசன் மண்ணுலக வாழ்வும் தருவான்; விண்ணுலக வாழ்வும் தருவான்' என்பது இப்பாட்டின் கருத்து. திருநாவுக்கரசர் என்னும் பெரியார் கடுமை யான சூலை நோயுற்றுத் துடிக்கும்பொழுது இறைவனை நினைந்து, "ஐயனே!"

"தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்”

என்று மனம் உருகிப் பாடினார். எனவே, இறைவன் அருளைப் பெறுவதற்குத் தமிழிசையே சிறந்த சாதனம் என்னும் கொள்கை தமிழ் நாட்டில் பரவிற்று. சிவனடியார்களும் திருமாலடியார்களும் அருளிய அருட்பாடல்கள் நாடெங்கும் பரவிய பான்மையால் பக்தி வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நின்றது. இறைவனுக்குத் திருக்கோவில் கட்டும் பணியிலே ஈடுபட்டனர் தமிழ் மன்னர். தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களும் ஆழ்வார்களின் மங்களா சாசனம் பெற்ற திருப்பதிகளும் பொதுமக்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. ‘கோவில் இல்லா ஊரில் குடி இருத்தல் ஆகாது’ என்னும் கொள்கையும் எழுந்தது. இங்ஙனம் ஊர்தோறும் எழுந்த கோவில்களில் தெய்வத் தமிழ்ப் பாடல்களை நாள்தோறும் பாடுதற்குரிய முறை வகுக்கப்பட்டது. சிவாலயங்களில் தேவாரம் முதலிய திருமுறைகளை விண்ணப்பம் செய்யும் இசைவாணர் ஓதுவார் என்று பெயர் பெற்றனர்.

“காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி
ஒது வார்தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே”

என்று திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் ‘ஓதுவார்’ என்னும் சொல் ஈசன் புகழைப் பாடுவார் என்று பொருள் படுகின்றது. வழிபாட்டுக் காலங்களில் ஒதுவார் என்னும் தமிழிசைவாணர்கள் பக்திச் சுவை நிரம்பிய பாடல்களைப் பண்ணோடு பாடிய பொழுது அவற்றை அன்பர்கள் செவியாரப் பருகினர்; உள்ளம் உருகினர். எனவே, ஆதியில் அரசரால் ஆதரிக்கப் பெற்ற இசைத் தமிழ், இடைக் காலத்தில் ஆலயங்களின் ஆதரவு பெற்று வளர்ந்தது.

இயற்கையோடு இசைந்து இன்புறும் தன்மை யினராகிய தமிழ் மக்களது வாழ்க்கையின் பல துறைகளிலும் கலந்து இசைப் பாட்டு வளமுற்றது. வேளாண்மை என்னும் பயிர்த் தொழில் இந்நாட்டிலே தொன்று தொட்டு நிகழும் பழுதற்ற தொழிலாகும். அத்தொழிலை மேற்கொண்ட பணியாளர் நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபடும்போதும் நல்ல பாட்டிசைத்தார்கள். கிணற்றிலிருந்து தண்ணtர் இறைத்து நிலத்திலே பாய்ச்சும் பொழுது ஏற்றப் பாட்டு; நாற்று நடும்பொழுது நடுகைப் பாட்டு: அறுப்புக் களத்தில் ஏர்க்களப் பாட்டு; ஆக, பயிர்த் தொழிலாளரது பாட்டு பலவாகும்; இன்னும் குறிஞ்சி நிலத்திலே குறுத்திப் பாட்டு ஒலிக்கும். மருதநிலத்திலே பள்ளுப் பாட்டு முழங்கும். பெண்கள் பந்து விளையாடும் பொழுது பாட்டு; அம்மானை ஆடும் பொழுது பாட்டு; தாலாட்டும் பொழுது பாட்டு. சுருங்கச் சொல்லின் தமிழ்நாட்டில் பாட்டில்லாத பணியே இல்லை என்பது மிகையாகாது.

போர்க்களததைப் பற்றிய இசைப் பாட்டும் இந் நாட்டில் உண்டு. அவற்றுள் தலைசிறந்தது "கலிங்கத்துப் பரணி என்னும் தாழிசைப் பாட்டாகும். தமிழ்நாட்டுப் பெருவேந்தனாகிய குலோத்துங்க சோழன் கவிங்க நாட்டின்மேல் படையெடுத்து வாகைமாலை சூடிய வரலாற்றைப் புனைந்துரைப்பது கலிங்கத்துப்பரணி. பரணி பாடிய செயங்கொண் டான் என்னும் கவிஞனைக் குலோத்துங்க சோழன் பரிசளித்துப் பாராட்டினான். அம்மன்னன் தமிழிசையில் மிகவும் ஈடுபட்டவன்; போர் ஒழிந்த காலங்களில் தமிழ் இசைவாணரொடும் கலைவாணரொடும் பழகி இன்புற்றவன். அவனுடைய தேவியர்களில் ஒருவர் ஏழிசை வல்லபி என்னும் சிறப்புப் பெயர் பெற்று விளங்கினார். இன்னிசையின் சுவையறிந்த மன்னவன் இசைக் கலையின் நயந்தெரிந்த ஒரு நங்கையை மணந்து, ஏழிசை வல்லபி என்னும் சிறப்புப் பெயரையும் அவளுக்கு அளித்தான் என்று தோன்றுகிறது இவ்வாறு பல துறைகளிலும் புகுந்து தமிழ் மக்களின் வாழ்க்கையை இன்புறுத்திய இசைத் தமிழ், இக்காலத்திலே நாட்டுப் பற்றை வளர்ப்பதற்கும், அரசியல் அறிவைப் பரப்புவதற்கும் பயன்படுகின்றது. இந்த வகையில் வழி காட்டியவர் 'பாட்டுக்கொரு புலவன்’ என்று பாராட்டப்படுகின்ற பாரதியாரே ஆவார். இந்நாட்டில் வழங்கிய பழைய இசைப்பாட்டு வகை பாரதியார் கவிதையிலே மிளிர்கின்றது. இந்நாடு சுதந்திரம் அடைந்த பொழுது மக்கள் எல்லோ ரும் பாடிய பாட்டு, "ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே, ஆனந்த சுதந்தரம்அடைந்து விட்டோமென்று ஆடுவோமே” என்பது. இந்தப் பாட்டு பழங்காலப் பள்ளுப் பாட்டைத் தழுவி எழுந்தது என்பது சொல்லா மலே விளங்கும். இன்னும், பண்டாரப் பாட்டு” என்று பாரதியார் பாடியுள்ள "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்ற வீரப்பாட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே திருநாவுக்கரசர் பாடிய 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவது மில்லை” என்று வீரப்பாட்டை அடியொற்றிச் செல்வதாகும். இங்ஙனம் பழைய இசை மரபுகளைப் பின்பற்றிப் பாடிய பாரதியார், இனி வருங்காலத்தில் இசைத் தமிழ் வளர்ந்தோங்குதற்குரிய வழிகளையும் காட்டியுள்ளார். தமிழ் நாட்டில் தமிழ் மொழி தழைத்து ஓங்க வேண்டுமாயின் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஒர் மகிமை இல்லை. என்பது பாரதியார் கருத்து. தமிழ் நாட்டின் பெருமையைப் புத்தம் புதிய முறையில் பாடிய பாரதியார் பாட்டு இந்நாளில் தமிழ் நாடெங்கும் பரவி இன்பம் பயக்கின்றது

"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு”

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு”

என்ற பாரதியார் பாட்டைக் கேட்கும் மக்களின் உள்ளத்தில் தமிழ் ஆர்வம் வளராது ஒழியுமோ? தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாரதியார் பாட்டுத் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பும் தகைமை வாய்ந்ததன்றோ? இத்தகைய இசைப்பாட்டு ஆயிரம் ஆயிரமாக எழுந்து தமிழ்நாடு எங்கும் பரவுதல் வேண்டும். சிலப்பதிகாரக் கவிஞர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்துத் தமிழ் நாட்டின் இயற்கைச் செல்வங்களாகிய ஆறுகள், அருவிகள், மலைகள், கடல்கள் முதலியவற்றின் அருமை பெருமைகளை இசைப்பாட்டின் வாயிலாகப் பொது மக்களுக்கு வழங்குதல் வேண்டும். சென்னை மாநகரம் இப்பொழுது தமிழ் மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து நிற்கின்றது. தமிழ் நாட்டின் தலைநகரமாகிய சென்னையம்பதி விரிநகர் என்று புலவர் பாடும் புகழுடையதாகும். இந் நகரில் அமைந்த கடற்கரைச் சாலை இவ்வுலகிலுள்ள அருமையான காட்சிகளுள் ஒன்றென்று நாடறிந்தவர் கூறுவர். இத்தகைய சீர்மை வாய்ந்த சாலையைக் குறித்து அருமையான இசைப்பாட்டுகள் தோன்றுதல் வேண்டும். சென்னை அருகேயுள்ள மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்தில் நெய்தலும் குறிஞ்சியும் கொஞ்சி விளையாடும் காட்சி இந்நாட்டார்க்கு மட்டுமன்றி எந்நாட்டார்க்கும் இன்பமளிக்கின்றது. இன்னும் தமிழ்முனிவர் வாழும் பொதிய மலையும், மந்த மாருதம் மகிழ்ந்துலாவும் திருக்குற்றால மலையும் மாந்தர் கருத்தையும் கண்ணை யும் கவரும் அழகு வாய்ந்தனவாகும். இவ்வியற்கைப் பொருள்கள் எல்லாம் இசைப்பாட்டின் வழியாகத் தமிழ் நாட்டிற்கு இன்பம் அளித்தல் வேண்டும்

பழமையான பண்களின் வரலாற்றை ஆராய்வதும் புத்தம் புதிய இசைப்பாடல்களை இயற்றுவதும் இத்தமிழிசைச் சங்கத்தின் அடிப்படையான நோக்கமாகும். இத்தகைய பெரும்பணியை மேற்கொண்ட இச் சங்கம் பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துகின்றேன். இசை நலம் இல்லாத என்னையும் இவ்வரும்பணியில் இசைவித்த செட்டி நாட்டரசர், ராஜா சர், முத்தையா செட்டியார் அவர்களுக்கும் தமிழிசைச் சங்கத்தார்க்கும் என் பணிவார்ந்த வணக்கம் உரியதாகும்


  1. தமிழ் இசைச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா சென்னை அண்ணாமலை மன்றத்தில் 15-1-53-இல் நடைபெற்றது.
  2. பொதியின்கண் இருந்து இராவணனைக் காந்தரு வத்தால் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கினார் தமிழ் முனிவர் என்பது தொல்காப்பியப்பாயிர உரை.