தமிழின்பம்/பொங்கலோ பொங்கல்

விக்கிமூலம் இலிருந்து
II. இயற்கை இன்பம்

6. பொங்கலோ பொங்கல்[1]

தமிழ் நாட்டிலே பல சாதிகள் உண்டு; பல சமயங்கள் உண்டு. ஆயினும், தமிழர் அனைவருக்கும் பொங்கல் நாள் ஒரு புனித நாள். அந்த நாளில், வீடு' தோறும் சுதையின் விளக்கம்; வீதிதோறும் மங்கல முழக்கம்; 'பொங்கலோ பொங்கல் என்பதே எங்கும் பேச்சு.

பொங்கல் விழா நடைபெறும் காலமும் இனியகாலம்; கார் உலாவும் வானமும், நீர் உலாவும் ஏரியும் கருணை காட்டும் காலம்; இயற்கை அன்னை பசுமையான புடைவை உடுத்து, பன்னிறப் பூக்களைச் சூடி, இனிய காயும், கனியும் கரும்பும் அணிந்து இன்பக் காட்சி தருங்காலம்.

பொங்கலுக்குத் தலைநாள் போகி பண்டிகை. அதைக் கொண்டாடும் கருத்தென்ன? போகி என்பவன் இந்திரன். அவன் மேகங்களை இயக்கும் இறைவன். தமிழ் நாட்டார் பழங்காலத்தில் இந்திரனை விளை நிலங்களின் இறைவனாக வைத்து வணங்கினார்கள். சோழவள நாட்டில் இந்திர விழா இருபத்தெட்டு நாள் கோலாகலமாக நடைபெற்றது.

"பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க”

வேண்டும் என்று அவ்வானவரைத் தமிழ்நாட்டார். வழிபட்டார்கள். பண்டைத் தமிழரசர் காலத்தில் சிறப்பாக நடந்த அத்திருநாள், இப்பொழுது குன்றிக் குறுகி ஒருநாளில் பண்டிகையாக நடைபெறுகின்றது.

போகி பண்டிகையை அடுத்து வருவது பொங்கற் புதுநாள்; அந் நாளில் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' நிகழும்; வீட்டிலுள்ள பழம்பானைகள் விடைபெறும்; புதுப்பானைகளில் பொங்கல் நடைபெறும். பால்பொங்கும் பொழுது, 'பொங்கலோ பொங்கல்” என்னும் மங்கல ஒலி எங்கும் கிளம்பும். அப்பொழுது, பெண்கள் குரவையாடுவர்; பிறகு “பூவும் புகையும் பொங்கலும்” கொண்டு இல்லுறை தெய்வத்தை வணங்குவர். அனைவரும் வயிறார உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் நிகழ்வது மாட்டுப் பொங்கல். நாட்டுப் புறங்களில் அது மிக்க ஊக்கமாக நடக்கும். முற்காலத்தில் மாடே செல்வமாக மதிக்கப்பட்டது. மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்னும் பொருள் உண்டு. மன்பதைக்காக உழைக்கும் வாயில்லா உயிர்களில், மாட்டுக்கு ஒப்பாகச் சொல்லத்தக்கது மற்றொன்று இல்லை. விளை நிலத்தில் ஏர் இழுப்பது மாடு சம்பு அடிப்பது மாடு; அறுவடைக் காலத்தில் சூடடிப்பது மாடு; களத்து நெல்லைக் களஞ்சியத்தில் சேர்ப்பது மாடு. ஆகவே, மாடு இல்லை யென்றால் பண்ணையும் இல்லை; பயிர்த் தொழிலும் இல்லை. இன்னும், பாலும் நெய்யும் தந்து மாந்தர் உடலைப் பாதுகாப்பதும் மாடல்லவா? பாலில் உயர்ந்தது பசுவின்பால் அமைதியும், அன்பும், பொறுமையும் உடையது பசு. தன் கன்றுக்கு உரிய பாலைக் கவர்ந்துகொள்ளும் கல்நெஞ்சருக்கும் கரவாது பால் கொடுக்கும் கருணை வாய்ந்தது பசு, "அறந்தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்” பசுக்களை ஆதரித்தல் வேண்டும் என்பது தமிழர் கொள்கை. கழனியிற் பணி செய்யும் காளை மாடுகளும், காலையும் மாலையும் இனிய பாலளிக்கும் கறவை. மாடுகளும் நோயின்றிச் செழித்து வளர்வதற்காக நிகழ்வது மாட்டுப் பொங்கல்.

அந்த நாளில் கன்று காலிகளுக்குக் கொண்டாட்டம். அவற்றை ஆற்றிலும் குளத்திலும் நீராட்டுவர்; கொம்பிலே பூவும் தழையும் சூட்டுவர்; மணிகளைக் கழுத்திலே மாட்டுவர்; நல்ல தீனியை ஊட்டுவர்; பொங்கல் முடிந்தவுடன் அந்தி மாலையில் வீதியிலே விரட்டுவர். அவை குதித்துப் பாய்ந்து கும்மாளம் போடுவது கண்ணுக்கு இனிய காட்சியாகும்.

சென்ற சில ஆண்டுகளில் தமிழ் நாட்டில் பொங்கல் மங்கலாக நடைபெற்றது; இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை. அரிசிப் பஞ்சமும், ஆடைப் பஞ்சமும், அகவிலைக் கொடுமையும் நாட்டை அரித்துக்கொண்டிருக்கும்பொழுது, பொங்கல் எப்படி இன்பப் பொங்கலாகும்?

"இனி வரும் பொங்கல் பெரும் பொங்கலாக வேண்டும்; தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடம் எல்லாம் விளை நிலமாக மாறவேண்டும்; உண்ண உணவும் உடுக்க உடையும் எல்லார்க்கும் கிடைக்கவேண்டும்; சென்னை மாநகரில் 'கன்றாவி' யாகவுள்ள தோற்கன்றுகள் ஒழிந்து பாற் கன்றுகள் பெருகவேண்டும்; தமிழ்நாடு தன்னரசு பெறுதல் வேண்டும்; தமிழ்த் தாய் அரியாசனத்தில் அமர்ந்திருத்தல்வேண்டும்” என்று எல்லாம் வல்ல ஆண்டவனை இந்நன்னாளில் வேண்டுவோமாக!


  1. சென்னை, பாரததேவரியின் பொங்கல் மலரில் எழுதியது.