தமிழியக்கம்/அரசியல்
௬. அரசியல் சீர் வாய்ந்தார் ! (1)
கல்லூரித்தலைவரை நான்
கேட்கின்றேன் கனிதமிழின்
பேரைச் சொன்னால்
சொல்லூறிப் போகாதோ?
வாயூறிப் போகாதோ!
தூய தமிழ்க்கு
வல்லூறாய் வாய்த்தீரோ?
வளம்செய்யும் எண்ணமெனில்,
நீர் பிறந்த
நல்லூரின் நன்மொழியால்
அல்லாது நடந்திடுமோ
நவில்வீர் இன்றே. 26
வரிப்பணத்தை வழங்கிடுவோர்
வாய்ப்பளிக்க முந்திடுவோர்
தமிழர் அன்றோ?
இருப்புறுநும் அலுவலுக்கும்
யாரையா வேர்? தமிழை
மறப்ப துண்டோ ?
நரிப்பிணத்தை நரியுந்தின்
னாதென்ப தறியீரோ?
நம்மா னத்தை
எரிப்பதற்குத் திருவுளமோ?
எழிற்பள்ளிக் கணக்காயர்
தலைமையோரே. 27
தமிழ்நாட்டின் உப்பைத்தின்
றீரன்றோ கணக்காயர்
தந்தை மாரே!
தமிழ்நாட்டில் தமிழர்களின்
தன்னுணர்வு நாட்டுவதைத்
தவிர்ப்பீ ராயின்
உமிழாதோ, வருத்தாதோ
உம்மையே உம்மருமை
உள்ளத் சான்றே?
அமுதூட்ட நஞ்சூட்டி
அகமகிழும் தாயுண்டோ
அருமைச் சேய்க்கே? 28
படிப்பாரின் தமிழ்ச்சுவடி
பரிந்தாயும் அரசியலார்
குழுவி னோரே,
தடிப்பாகிப் போவதுண்டோ
உம்முள்ளம்? தமிழென்றும்
வடசொல் என்றும்
வடிப்பாக்கி நோக்கிடவும்
மாட்டீரோ? செந்தமிழின்
பகைவரின் வால்
பிடிப்பாரின் துணையில்இனும்
பிழைப்பீரோ, மறவர்தமிழ்ப்
பெரிய நாட்டில்? 29
தமிழ்நடையில் நயம்வேண்டின்
தமிழ்நாட்டின் நடைமுறையைத்
தமிழ்நாட்டாரை
அமையவரை தல்வேண்டும்!
அவ்வாற்றல் அமைவுற்ற
சுவடி தன்னை
உமைமறந்து மறுக்காதீர்
உமியைப்போய் ஒப்பாதீர்
இன்னும் கேளீர்
தமிழ்தழுவாச் சுவடிதனைத்
தணல்தழுவா திராதினிமேல்
தமிழ்நா டெங்கும். 30