உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழியக்கம்/கணக்காயர்

விக்கிமூலம் இலிருந்து


௧௫, கணக்காயர்

கழகத்தின் கணக்காயர்,
    தனிமுறையிற் கல்வி தரும்
        கணக்கா யர்கள்,
எழுதவல்ல பேசவல்ல
    கல்லூரிக் கணக்காயர்,
        எவரும், நாட்டின்
முழுநலத்தில் பொறுப்புடனும்
    முன்னேற்றக் கருத்துடனும்
        உழைப்பா ராயின்
அழுதிருக்கும் தமிழன்னை
    சிரித்தெழுவாள் ; அவள்மக்கள்
        அடிமை தீர்வார்! 71

நற்றமிழில், தமிழகத்தில்
    நல்லெண்ணம் இல்லாத
        நரிக்கூட்டத்தைக்
கற்றுவைக்க அமைப்பதினும்
    கடிநாயை அமைத்திடலாம்!
        அருமை யாகப்
பெற்றெடுத்த மக்கள் தமைப்
    பெரும்பகைவர் பார்ப்பனர்பால்
        அனுப்போம் என்று
கொற்றவர்க்குக் கூறிடவும்
    அவர் ஒப்புக் கொண்டிடவும்
        செய்தல் வேண்டும். 72

இகழ்ச்சியுரும் பார்ப்பனனாம்
     கணக்காயர், நந்தமிழர்
         இனத்துச் சேயை
இகழ்கின்றான்! நம்மவர் முன்
     னேறுவரோ! தமிழ்மொழியை
         வடசொல்லுக்கு
மிகத்தாழ்ந்த தென்கின்றான்!
     வடசொற்கு மகிழ்கின்றான்!
         கொடியவன், தன்
வகுப்பானை வியக்கின்றான்!
     விட்டுவைத்தல் மாக்கொடிதே!
         எழுச்சி வேண்டும்! 73

வடசொல் இது தமிழ்ச்சொல் இது
    எனப்பிரித்துக் காட்டிடவும்
        மாட்டான்! நம்சேய்
கெடஎதுசெய் திடவேண்டும்,
    அதைச்செய்வான் கீழ்க்கண்ணான்!
        கொடிய பார்ப்பான்!
நொடிதோறும் வளர்ந்திடும் இந்
    நோய்தன்னை நீக்காது
        தமிழர் வாளா
விடுவதுதான் மிகக்கொடிது!
    கிளர்ந்தெழுதல் வேண்டுமின்றே
        மேன்மை நாட்டார்! 74

தமிழ்ப்புதுநூல் ஆதரிப்பீர்!
    தமிழ்ப்பாட்டை ஆதரிப்பீர்,
        தமிழர்க் கென்றே
அமைந்துள்ள கருத்தினையே
    ஆதரிப்பீர்! “தமிழ்தான் எம்
        ஆவி” என்று
நமைப் பகைப்பார் நடுங்கும் வகை
    நன்றுரைப்பீர் வென்றி முர
        செங்கும் நீவிர்
உமக்குரியார் பிறர்க்கடிமை
    இல்லையென உரைத்திடுவீர்
        மாணவர்க்கே. 75

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழியக்கம்/கணக்காயர்&oldid=1535786" இலிருந்து மீள்விக்கப்பட்டது