தமிழ்ப் பழமொழிகள் 2/கே

விக்கிமூலம் இலிருந்து

கேசம் உள்ள பெண் எப்படியும் கொண்டை கட்டுவாள்.

கேட்காமல் கொடுப்பது உத்தமம்; கேட்டுக் கொடுப்பது மத்திமம்; கேட்டும் கொடாமல் இருப்பது அதமம்.

கேட்டதை எல்லாம் நம்பாதே; நம்பினதை எல்லாம் சொல்லாதே. 9425


கேட்ட நாயைச் செருப்பால் அடி; சொன்ன நாயைச் சோட்டால் அடி.

கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.

கேட்டு ஊற்றுகிற கஞ்சியும் எடுத்து வைக்கிற பேனும் உரைக்கு வராது.

கேட்டுக்கு மூட்டை, கேடு காலத்துக்குச் சீலைப் பேன்.

கேட்டை நட்சத்திரம் ஏட்டனுக்கு ஆகாது. 9480

(ஏட்டன்-மூத்தவன்.)


கேட்டை நாலும் ஈட்டி போல.

கேட்டை, மூட்டை, செவ்வாய்க் கிழமை.

கேட்டையிலே பிறந்தால் கோட்டை கட்டி ஆள்வான்.

கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.

கேட்பார் பேச்சைக் கேட்டு நாட்டான் வாய்க்கால் சாலையோடு போனானாம். 9435

(கும்பகோணத்துக்கும் காரைக்காலுக்கும் இடையில் உள்ள வாய்க்கால் வளைந்து வளைந்து செல்கிறது. )


கேட்பாரும் இல்லை; மேய்ப்பாரும் இல்லை.

கேடகத்தையும் பெருமாளையும் கீழாறு கொண்டு போகச்சே கூட வந்த அநுமாருக்குத் தெப்பத் திருநாளாம்.

கேடது இல்லான் பாடது இல்லான்.

(கேடு, பாடு.)

கேடு காலத்தில் ஓடு கப்பரை.

கேடு கெட்ட நாயே, வீடு விட்டுப் போயேன். 9440

கேடு வரும் பின்னே; மதி கெட்டு வரும் முன்னே.

கேடு வரும்போது மதி கெட்டு வரும்.

கேதம் கேட்க வந்தவள் தாலி அறுப்பாளா?

(செட்டி நாட்டு வழக்கு.)

கேதுவைப் போல் கெடுத்தவனும் இல்லை; ராகுவைப் போல் கொடுத்தவனும் இல்லை.

கேரளம் வானராசாரம்; கூகூ சப்தம் நிரந்தரம். 9445


கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்போருக்கு மதி எங்கே போச்சு?

(நெய் ஓடுகிறது என்றால்.)

கேழ்வரகு மாவில் நெய் ஒழுகுகிறது என்று சொல்கிறவர் சொன்னாலும் கேட்கிறவர்களுக்கு மதி இல்லையா?

கேள் அற்றவருக்கு வேள்.

கேள்வி உடைமை, கீர்த்தியே கல்வி.

கேள்வி கேளாமல் தலையை வெட்டுகிறதா? 9450


கேள்விச் செவியன் ஊரைக் கெடுப்பான்.

கேள்விப் பேச்சில் பாதிதான் நிற்கும்.

கேள்விப் பேச்சு ஊரைச் சுடும்.

கேள்வி முயல்.

கேளாச் செவிக்கு மூளா நெருப்பு. 9455


கேளாத கடன் பாழ்.

கேளாமல் கெட்டது கடன்; நடவாமல் கெட்டது உறவு.

கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_2/கே&oldid=1160284" இலிருந்து மீள்விக்கப்பட்டது