உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ப் பழமொழிகள் 2/கொ

விக்கிமூலம் இலிருந்து

கொக்கரித்த பேர் எல்லாம் கூடத் தீப் பாய்வார்களா?

கொக்கரிப்பார்க்குச் சொர்க்கமோ? நெருப்பில் குதிப்பார்க்குச் சொர்க்கமோ?

(தீயில்.)

கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து அது உருகிக் கண்ணில் வழியும் போது பிடித்துக் கொள்வேன் என்றானாம்.

கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பது போல.

(பிடித்தல்.)

கொக்கு இளங்குஞ்சும் கோணாத தெங்கும் கண்டது இல்லை. 9590


கொக்கு என்கிறது அத்தை, குத்த வருகிறது அத்தை, அத்தைத் துரத்திப் பார்த்தேன் அத்தை, பறந்து போச்சு அத்தை.

கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?

(இருந்தீரோ? எண்ணினையோ? கொங்கணரே.)

கொக்குக்கு உண்டா வீரசைவம்?

கொக்குக்கு ஒன்றே மதி.

கொக்குக்கு ஒன்றே மதி; கொழுக்கட்டைக்கு ஒன்றே குறி. 9595


கொக்குக்குத் தெரியுமா கோழிக் குஞ்சைக் கொண்டு போக?

கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற் போல.

கொக்கு குருவிபோலக் கொத்திக் கொத்திச் சேர்க்கிறது.

கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற் போல்.

கொக்குப் பிக்கலாட்டம். 9600


கொக்கு மேடை ஏறினால் மழை பெய்யும்.

கொக்கோகம் பார்த்தவன் அக்காளை ஏறுவான்.

கொக்கோடு இளங்குஞ்சு தெரிந்தார் இல்லை.

கொங்கனுக்குக் குலம் இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை.

கொங்கிலே குறுணி விற்கிறது; இங்கு என்ன லாபம்? 9605

கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்.

கொங்கு வெறுத்தால் எங்கும் வெறுக்கும்.

கொச்சிக்குப் போனவன் செய்தியைப் பார், தன் குருவை விற்றவன் செய்தியைப் பார்.

கொச்சி மஞ்சளும் கூறை நாட்டுப் புடைவையும்.

கொச்சியிலே குறுணி மிளகு என்றால் இங்கு என்ன? 9610


கொசு இழந்த இறக்கைக்கும் ஆனை இழந்த காலுக்கும் சமம்.

கொசுக் கண்ணியைக் கூடக் குமரியிலே பார்க்க வேண்டும்.

கொசு கருடன் கூடப் பறந்தாற் போல்.

கொசு முதுகிலே பிளவை வந்தது போல.

கொசு மூத்திரம் குறுணி. 9615


கொசு மொய்த்த கண்ணியைக் குமரியில் பார்.

(கண்ணை.)

கொசு வனத்தில் கொள்ளி வைத்துக் கொண்டது போல்.

கொசுவிலே குறுணிப் பால் கறக்கலாமா?

கொசுவிலே பிளவை; அதிலே நீரிழிவு; அறுக்கிறது எங்கே?

(அண்டை விடுகிறது எங்கே?)

கொசுவின் முதுகிலே பிளவை வந்தாற் போல. 9620


கொசுவின் மேல் கருடன் நிற்குமா?

கொசுவுக்கு அஞ்சிக் குடிபெயர்ந்து போகிறதா?

(பயந்து போகிறானாம்.)

கொசுவுக்குப் பயந்து கோட்டையை விட்டு ஓடியது போல.

கொசுவுக்குப் பிளவை; அதிலே நீரிழிவு; அட்டை விடுவது எங்கே? அறுப்பது எங்கே?

கொசுவுக்குப் பிளவை புறப்பட்டால் அறுப்பது எங்கே? தீய்ப்பது எங்கே? 9625


கொசுவே, கொசுவே தலை முழுகு, நான் மாட்டேன், சனிக்கிழமை.

கொசுவை அடிக்கக் குண்டாந்தடியா?

கொசுவை அடித்தால் கொசுவும் கிடையாது.

கொசுவைப் பொருட்டாய் எண்ணிக் கருடன் எதிர்த்தாற் போல்.

கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறதா? 9630


கொசுவை வடிப்பார் அசிகைப் படுவார்.

கொஞ்சத்தில் இருக்கிறதா. குரங்கு மிளகு நீர் குடிக்கிறது?

கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான்.

கொஞ்ச நஞ்சம் இருந்தது குருக்களை அடைந்தது; கோவிலை வெளவால் அடைந்தது.

கொஞ்சப் பொருளை மந்திரம் பண்ணுகிறது போல் கை காட்டுகிறான். 9635


கொஞ்சம் இடம் கொடுத்தால் மிஞ்ச இடம் தேடிக் கொள்வான்.

கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்றால் பனையையும் தின்று விடலாம்.

கொஞ்சம் தழை போட்டுச் சேடை உழுதால் கெட்டிச் சம்பா நெல் விளையும்.

கொஞ்சம் பட்டால் துக்கம்; அதிகம் பட்டால் புன்சிரிப்பு.

கொஞ்சிக் கூத்தாடி நடந்தாலும் குதிரை ஆகுமா கழுதை? 9640


கொட்டகை சுருட்டும் நாய்க்குப் பட்டா மணியம் ஏன்?

கொட்டை பெருக்குகிற கட்டைத் துடைப்பத்துக்குப் பட்டா மணியம் பகலிலே வந்தாற் போல.

கொட்டடா, கொட்டடா என்றால், பறையன் கொட்ட மாட்டானாம்; கொட்டாதே. கொட்டாதே என்றால் டிவிண் டிவிண் என்று கொட்டுவானாம்.

கொட்டாங்கச்சித் தண்ணீரிலே குபுக்கென்று பாய்ந்தாற் போல.

கொட்டினால் விதைக்கும் கம்பு கடகத்தில் வாரிக் கொட்டுகிறது. 9645

(கொட்டானால்,)


கொட்டிக் கிழங்கு பறிக்கப் போனால் கோபித்துக் கொள்வார் பண்டாரம்; அவித்து அவித்து முன்னே வைத்தால் அமுது கொள்வார் பண்டாரம்.

(அவித்து உரித்து.)

கொட்டிக் கிழங்கும் ஒரு முட்டுக்கு உதவும்.

கொட்டிக் கிழங்கும் வெட்டைக்கு உதவும்.

கொட்டிக் கிழங்கு வெட்டுகிறவளுக்குக் கோவிலே வந்து ஆடத் தெரியுமா?

கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காகுமா? 9650

கொட்டிக் கொட்டிக் குளவி புழுவைத் தன் நிறத்துக்கு ஆக்கி விடும்.

கொட்டிய பாலின் முன் கூவி அழுது ஆவதுண்டா?

கொட்டினால் தேள்; கொட்டா விட்டால் பிள்ளைப்பூச்சி.

கொட்டும் பறை தட்டம் அறியாது.

கொட்டை நூற்கிற அம்மாளுக்குப் பட்டணம் விசாரிப்பது ஏன்? 9655

(பட்டணத்து விசாரணை.)


கொட்டை நூற்கும் கூனற் கிழவி.

கொட்டை நூற்றுச் சம்பாதித்துக் கெட்டுப் போயிற்றா?

கொட்டோடே முழக்கோடே வந்தவன் எட்டோடே இழவோடே அல்லவா போவான்?

(எட்டாம் நாள் படைக்கும் நாள். சோழநாட்டு வேளாளரிடையே வழங்குவது. }

கொடாக் கண்டன், விடாக் கண்டன்.

கொடாக் கண்டனும் விடா கண்டனும் கூடினாற் போலே. 9660


கொடாத இடையன் சினை ஆட்டைக் காட்டினது போல.

கொடாதவன் எருமைப் பாலும் கொடான்.

கொடாதவனுக்குக் கூத்துப் பறி; இடமாட்டாதவனுக்கு எச்சில்.

கொடிக் கம்பத்தைப் பயற்றங்காயாய்த் திண்பவருக்குக் கோபுரம் கொழுக்கட்டை.

கொடிக் காலில் மின்னினால் விடிகாலை மழை. 9665


கொடிக்குக் காய் கனமா?

(பாரமா?)

கொடிக்குக் கும்மட்டிக் காய் கனத்திருக்குமா?

கொடிக்குச் சுரைக்காய் கனமா?

(கனக்காது.)

கொடிகள் அருகான மரத்திலே படரும்.

(அருகிலுள்ள மரத்திலே தாவும்.)

கொடி சுற்றிப் பிறந்த பிள்ளை குலத்திற்கு ஆகாது. 9670

(பெண் பிறந்தால்.)

கொடிசுற்றிப் பிறந்தால் கோத்திரத்துக்கு ஆகாது.

கொடியும் பெண்டிரும் கொண்டதை விடார்.

கொடிறும் பேதையும் கொண்டது விடா.

கொடுக்க மாட்டாத இடையன் சினையாட்டைக் காண்பித்தாற் போல.

கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்; இடமாட்டாதவன், எச்சில் என்று சொன்னான். 9675

கொடுக்கிற கைக்கு என்றும் குறைவு இருக்காது.

கொடுக்கிற சாமி என்றால் குண்டியைக் கிழித்துக்கொண்டு கொடுக்கும்.

கொடுக்கிறது உழக்குப் பால்; உதைக்கிறது பல்லுப் போக.

கொடுக்கிறதும் கொடுத்துக் குஷ்ட ரோகி காலில் விழுகிறதா?

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்துக் கொண்டு வந்து கொடுக்கும். 9680

(பிய்த்துக் கொண்டு. கிளப்பிக் கொடுக்கும்.)


கொடுக்கிற தெய்வம் மூஞ்சியிலே அடித்துக் கொடுக்கும்.

(முகத்திலே அறைந்து.)

கொடுக்கிற தெய்வம் ஆனால் கூரையைப் பிரித்துப் போட்டுக் கொடுக்காதோ?

கொடுக்கிறவன் எப்போதும் கொடுப்பான்.

கொடுக்கிறவன் கை என்றும் மேல்தான்; வாங்குகிறவன் கை என்றும் கீழ்தான்.

கொடுக்கிறவன் வாழைத் தாறாகிலும் கொடுப்பான். 9685


கொடுக்கிறதைக் கொடுத்தால் குடம் கொண்டு தண்ணீருக்குப் போவாள்.

கொடுக்கிறதையும் கொடுத்துக் குருட்டுத் தேவடியாளிடம் போனானாம்.

கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகியின் காலில் விழுவானேன்?

கொடுக்கிறவன் கன்னத்தில் அடித்துக் கொடுப்பான்.

கொடுக்கிறவன் கை என்றும் மேலேதான்; வாங்குகிறவன் கை என்றும் கீழேதான். 9690


கொடுக்கிறவனைக் கண்டால் பேய் குளைத்துக் குளைத்து ஆடும்.

(குழைந்து குழைந்து.)

கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.

கொடுக்கிறேன் என்றால் ஆசை, அடிக்கிறேன் என்றால் பயம்.

கொடுக்கினும் கல்வி கேடு படாது.

கொடுங்கோல் அரசு நெடுநாள் நில்லாது. 9695


கொடுங்கோல் கீழ்க் குடியிருத்தல் ஆகாது.

கொடுங்கோல் மன்னன் நாட்டிலும் கடும்புலி வாழும் காடு நன்று.

கொடுத்த கடன் கேட்டால் குமரகன்ட வலிப்பு வலிக்கிறதாம்.

கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை.

கொடுத்ததுபோல வாங்கிக் கொள்ளும். 9700


கொடுத்ததைக் கொடுக்கும் குறளிப் பிசாசு.

(குட்டிச்சாத்தான்.)

கொடுத்த பணம் செல்லா விட்டால் கூத்தரிசிக்காரி என்ன செய்வாள்?

கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு; கொடாதவருக்கு ஒன்றும் இல்லை.

கொடுத்தவரைப் புகழ்வார்; கொடாதவரை இகழ்வார்.

கொடுத்தவன் அப்பன்; கொடாதவன் சுப்பன். 9705


கொடுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.

கொடுத்தால் ஒரு பேச்சு; கொடாமற் போனால் ஒரு பேச்சு.

கொடுத்தால் ஒன்று; கொடுக்கா விட்டால் ஒன்று.

கொடுத்தால் குறை வராது.

(வருமா?)

கொடுத்தால்தான் சாமி, கொண்டு வந்தால்தான் மாமி. 9710


கொடுத்தாலும் ஒன்று; கொடா விட்டாலும் ஒன்று.

கொடுத்தாற் போல் கொடுத்து வாங்கிக் கொள்ளுகிறது.

கொடுத்து உறவு கொள்; கோளன் என்று இரேல்.

கொடுத்து ஏழை ஆயினார் இல்லை.

(பழமொழி நானூறு.)

கொடுத்துக் கெட்டார் ஆரும் இல்லை. 9715


கொடுத்துக் கொடுத்து இரு கையும் கூழையாய்ப் போயின.

(கூழாய்.)

கொடுத்துக் கொடுத்துக் கையும் காய்ப்பு ஏறிப் போயிற்று.

கொடுத்து நிஷ்டூரப் படுவதைவிடக் கொடுக்காமல் நிஷ்டூரப்படுவதே மேல்.

கொடுத்துப் பொல்லாப்பு ஆகிறதை விடக் கொடுக்காமல் இருக்கிறது நலம்.

கொடுத்தும் அறியான்; கொடுப்பவர்களைக் கண்டும் அறியான். 9720


கொடுத்தும் கொல்லை வழியாய்ப் போகிறதா?

கொடுத்து வாங்கினாயோ? கொன்று வாங்கினாயோ?

கொடுத்து வைத்தது போலக் கிடைக்கும்.

கொடுப்பது உழக்குப் பால்; உதைப்பது பல்லுப் போக.

கொடுப்பதைக் கெடுப்பாரைத் தெய்வமே கெடுக்கும். 9725


கொடுப்பதைத் தடுப்பவன் உடுப்பதும் இழப்பான்.

கொடுப்பதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுந்தானாம்.

கொடுப்பார் பிச்சையைக் கெடுப்பார் கெடுக்கிறது.

(கெடுவார் கெடுப்பார்.)

கொடுப்பாரைத் தடுக்காதே.

கொடும்பாவி ஆனாலும் கொண்ட மாமியார் வேண்டும். 9730


கொடும்பாவி சாகாளா? கோடை மழை பெய்யாதா?

கொடுமை அற்றவன் கடுமை அற்றவன்.

கொடுமை, கொடுமை என்று கோயிலுக்குப் போனேன்; அங்கே இரண்டு கொடுமை ஆடிக்கொண்டு வந்தது.

கொடுமை சுடப்பட்ட செல்வம் பசுங்கலத்தில் பால் கவிழ்ந்தது.

(கலந்தது.)

கொடுமையான அரசன்கீழ் இருப்பதைக் காட்டிலும் கடுமையான புலியின் கீழ் இருப்பது நன்று. 9735


கொடைக்குக் கர்ணன்; படைக்குத் துரியோதனன்.

கொடைக்குக் குமணன்; சத்தியத்துக்கு அரிச்சந்திரன்.

கொடையிலும் ஒருத்தன்; படையிலும் ஒருத்தன்.

(கொடைக்கும். படைக்கும்.)

கொண்ட இடத்திலே கொடுத்தாலும் கண்ட இடத்திலே கொடுக்காதே.

கொண்ட கடையிலா விற்கிறது? 9740


கொண்ட கணவனிடத்திலே இரண்டகமா?

கொண்ட கொண்ட கோலம் எல்லாம் குந்தி பெற்ற மக்களுக்கு.

கொண்டதா, கொடுத்ததா, கோமுட்டி வீட்டுப் பெருச்சாளி?

கொண்டதுக்கு இரட்டி கண்டது வாணிகம்.

கொண்டது கொள்முதல் ஆனால் கோணி விலையும் காணாது. 9745


கொண்டதைக் கொண்டபடி விற்றால் கோணி லாபம்.

கொண்டபடி விற்றால் கோடி லாபம்.

கொண்ட பிறகு குலம் பேசுவது போல.

கொண்ட பெண்சாதியே கூரரிவாளாய் இருந்தாள்.

கொண்ட பெண்சாதியை விட்டாலும் கொள்ளுக் கடகாலை விடாதே. 9750

(கொள்ளுக் கடலையை.)


கொண்டவள் குறிப்பு அறிவாள்; குதிரை இருப்பு அறியும்.

கொண்டவள் அடிக்கக் கொழுந்தன்மேல் விழுந்தாளாம்.

கொண்டவன் இருக்கக் கண்டவனோடு போவதா?

கொண்டவன் உறவு உண்டானால் மண்டலம் எல்லாம் ஆளலாம்.

கொண்டவன் உறுதியாக இருந்தால் கோபுரம் ஏறிச் சண்டை போடலாம். 9755


கொண்டவன் காய்ந்தால் கூரை ஒலையும் காயும்.

கொண்டவன் குட்டிச்சாத்தான் என்பது போல.

கொண்டவன் குரங்கு: கண்டவன் கரும்பு.

கொண்டவன் கோபி ஆனால் கண்டவனுக்கு இளக்காரம்.

கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம். 9760


கொண்டவன் செத்த பிறகா கொண்டையும் வெண்டயமும்?

கொண்டவன் தூற்றினால் கூரையும் தூற்றும்.

கொண்டவன் நாயே என்றால் கண்டவனும் கழுதை என்பான்.

கொண்டவன் பலம் இருந்தால் கூரை ஏறிச் சண்டை போடுவாள்.

(அறிந்தால்.)

கொண்டவன் பலம் இருந்தால் குப்பைமேடு ஏறிச் சண்டை செய்யலாம். 9765


கொண்டவன் வலுவாளி; கொடுத்தவன் ஏழை.

கொண்டவனுக்கு இல்லாத வெட்கம் கண்டவனுக்கு உண்டா?

கொண்டவனுக்கு இல்லை; கண்டவனுக்கு என்ன கேடு?

கொண்டவனும் கொடுத்தவனும் ஒன்றாய்ப் போய்விடுவார்கள்; கொட்டு மேளக்காரனுக்குத்தான் கோணக் கோண இழுக்கும்.

கொண்டவனும் கொடுத்தவனும் ஒன்று; கொட்ட வந்த பறையன் தூரத் தூர. 9770


கொண்டவனே தொண்டையைப் பிடித்தால் பெண்டு என்ன செய்வாள்?

கொண்டவனை அடித்துக் கோமுட்டிக்குக் கொடுப்பாய்.

கொண்டவனை விட்டுக் கண்டவனிடம் போய்க் கொண்டவனும் இல்லை; கண்டவனும் இல்லை.

கொண்டவனை விட்டுக் கண்டவனிடம் போனால் கண்டவன் பெண்டாட்டிக்குக் கால்பிடிக்க வேண்டும்.

கொண்டா குட்டிச்சாத்தா என்பது போல். 9775


கொண்டாட்டம் போய்த் திண்டாட்டம் ஆச்சுது.

கொண்டாடுவார் இல்லாவிட்டால் திண்டாடி நிற்கும்.

கொண்டார் முனியில் கண்டார் கடிவர்.

(கொண்டார் கடிந்தால் கண்டார் முனிவர்.)

கொண்டாலும் பெண்; கொடுத்தாலும் பெண்.

கொண்டான் காயின் கண்டான் காயும். 9780

(குறள் 1196, மணக்குடவர் உரை.)


கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி.

கொண்டானும் கொடுத்தானும் ஒன்று; கல்யாணம் கட்டி வைத்தோன் வாயில் மண்.

கொண்டானும் கொடுத்தானும் கூடக் கூட; பெற்றாரும் பிறந்தாரும் வேறு வேறு.

(யாழ்ப்பான வழக்கு கொண்டாகும்.)

கொண்டானும் கொண்டானும் ஒன்றாய்ப் போனால் கொட்ட வந்த பறையன் ஒத்திப் போக வேணுமாம்.

கொண்டானும் கொண்டானும் சம்பந்தி; கொட்ட வந்தவன் அம்பலம். 9785


கொண்டிருந்து குலம் பேசி, மொண்டிருந்து முகம் கழுவி. கொண்டு குலம் பேசுறதா?

(பேசாதே.)

கொண்டு கொடுத்துக் குலம் பேசுவதுபோல.

கொண்டும் கொடுத்தும் உண்டு வாழ்.

கொண்டு வந்த அகமுடையான் குளித்து வருவதற்குள்ளே நடுக்கிழித்து மூட்டினாளாம் முழுச்சமர்த்தி. 9790


கொண்டு வந்த அகமுடையான் குனிந்து வருவதற்கு முன் கண்டு வந்த மாப்பிள்ளை கொண்டோடிப் போனான்.

கொண்டு வாரம் கொடுத்தவனும் உழுது வாரம் கொடுத்தவனும் கடைத்தேற மாட்டார்கள்.

கொண்டை அழகி போனால் பின்னல் அழகி வருவாள்.

கொண்ட அழகே அன்றிக் குடித்தனத்துக்கு லாயக்கு அல்ல.

கொண்டைக்காரி ஒழிந்தாள்; பின்னற்காரி வரப்போகிறாள்.

(போனால் வருவாள்.)

கொண்டைக்குத் தக்க பூ 9795


கொண்டைக்குப் பூச் சூடிச் சண்டைக்கு நிற்கிறது.

கொண்டைக்குப் பூச் சூடுகிறதா? தாடிக்குப் பூச்சூடுகிறதா?

கொண்டை கட்டி மச்சானுக்குக் கொண்டாடி பூமாலை என்றாளாம்.

கொண்டையம் பேட்டை, குரங்குப் பேட்டை.

கொண்டையிலே காற்று அடித்தாற் போல. 9800


கொண்டோர் எல்லாம் பெண்டிர் அல்ல.

கொத்தடிமைக்குக் குடியடிமையா?

கொத்தன் ஆனாலும் பெற்றவள் பிள்ளை.

கொத்திக் கண்ட கோழியும் நக்கிக் கண்ட நாயும் நில்லா.

கொத்தித் தின்கிற கோழியை மூக்கு அறுந்தது போல. 9805


கொத்துதடி கோழி; வித்தையடி மாமி.

கொத்துமல்லிச் சட்டினியும் கத்தரிக்காய்க் கொத்ஸும் இட்டலி தோசைக்கு உபசாதகம்.

கொத்து வாழ்வுக்கு ஒரு பலகை பிடிக்கிறது.

கொதிக்கிற எண்ணெயில் தண்ணிர் தெறித்தது போல்,

(தெளித்தது.)

கொதிக்கிற கூழுக்கு இருக்கிற சிற்றப்பா. 9810


கொப்பத்தில் வீழ்ந்த ஆனையும் வலையிற் சிக்கிய மானும் போல.

கொம்பனோ?

(கொம்பு முளைத்தவனோ?)

கொம்பால் உழுது கொண்டியால் பரம்படி.

கொம்பில் ஒரு நெல் விளைந்தாலும் சம்பாவுக்கு இணை ஆகாது.

(ஈடு.)

கொம்பு முளைக்காத ஆனைக்குத் தும்புக் கயிறு தொண்ணுாறு. 9815


கொய்யா வனத்துக்குக் குரங்கைக் காவல் வைத்தானாம்.

கொய்யாது குவியாது பசியாது.

கொல்லத்தில் குறுணி விற்றாலும் இல்லத்துக்குச் சுகம் வருமோ?

கொல்லத்துக்காரன் மேற்கே பார்ப்பான்; கூத்துக்காரன் கிழக்கே பார்ப்பான்.

கொல்லத் தெருவில் ஊசி விற்றாற் போல. 9820

(விற்பதா?)


கொல்ல வரும் ஆனை முன்னே கல்லை விட்டெறியாதே.

(யானையை..}

கொல்லன் உலையில் கொசுவுக்கு என்ன வேலை?

(அலுவல். )

கொல்லன் எளிமை கண்டு குரங்கு தன் காலுக்குப் பூண் கட்டச் சொன்னதாம்.

கொல்லன் களத்திலே ஈக்கு என்ன வேலை?

கொல்லன் கைக் குறடுபோல. 9825


கொல்லன் பிணம் விறைத்தாற் போல.

கொல்லனைக் கண்ட குரங்கும் பணி செய்யும்.

கொல்லனைக் கண்டால் குரங்கும் மல்லுக் கட்டச் சொல்லும்.

கொல்லுக் கொலைக்கு அஞ்சாத கொடும்பாவி.

(அஞ்சாத நெஞ்சு.)

கொல்லுவதும் சோறு; பிழைப்பிக்கிறதும் சோறு. 9830


கொல்லைக் காட்டில் நரியைக் குடிவைத்துக் கொண்டது போல.

கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது போல.

கொல்லைக் கீரை மருந்துக்கு ஆகாது.

கொல்லைக்குப் பல்லி, குடிக்குச் சனி. 9835

கொல்லை காய்ந்தாலும் குருவிக்கு மேய்ச்சல் உண்டு.

கொல்லை குறுணியாகிலும் சொன்ன குறுணி போமா?

கொல்லைத் தலைமாட்டில் இருப்பது போல.

கொல்லைப் பச்சிலை மருந்துக்கு உதவுமா?

கொல்லை பாழாய்ப் போனாலும் குருவிக்கு மேய்ச்சல் போச்சா? 9840

(இரை பஞ்சமா? பாழானாலும்.)


கொல்லையில் குற்றியை அடைந்த புல் உழவன் உழுபடைக்குக் கெடுமா?

கொல்லொணாப் படை எவர்க்கும் வெல்லொணாது.

(திருவாலவாய்ப் புராணம், 86:20)

கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா?

கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பாதே.

(மலேயா வழக்கு.)

கொழுக்கட்டைக்குத் தலை பார்த்துக் கடிப்பார்களா? 9845


கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை; குடியனுக்கு முறையும் இல்லை.

(குறவனுக்கு.).

கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குருதட்சிணை வேறா?

கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குருதட்சினை.

(தின்ற பிள்யைாருக்கு.)

கொழுக்கட்டை தின்ற பூனைக்குக் குடுவை மோர் வரதட்சினை.

கொழுக் கட்டையை எடுத்து நாயை எறிந்தது போல. 9850


கொழுக் குத்தக் கூட இடம் கொடுக்க மாட்டான்.

கொழு கொம்பு இல்லாத கொடிபோல.

( + ஆனேன்.)

கொழுத்த ஆடு குட்டி போட்டாலும் உழுக்கட்டை வழுக்கட்டைதான்.

கொழுத்த ஆடு பார்த்துப் பிடிக்கிறதா?

(கொழுத்தாடை.)

கொழுத்த பிணத்தை இழுத்து எறி. 9855


கொழுத்த மீன் தின்கிறவன் குருவிக் கறிக்கு அசிங்கப்படுவானா?

கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.

கொழுத்தவனுக்குக் கொள்ளும் இளைத்தவனுக்கு எள்ளும்.

கொழுத்துச் செத்தால் இழுத்து எறி.

கொழுநன் நட்பு இல்லாத பெண்ணும் உழவு நட்பு இல்லாத பயிரும் பிரயோசனம் இல்லை. 9860


கொழுமீதிற் குடிகொண்ட குடிச் செல்வம் செல்வம்.

கொள் என்றால் வாயைத் திறக்கும்; கடிவாளம் என்றால் வாயை மூடும்.

(குதிரை.)

கொள்வார் அற்ற குயக்கலம் போல.

கொள்வாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை.

கொள்ளப் போய்க் குருடியைக் கொண்டானாம். 9865


கொள்ளி இல்லாத சொத்து, பிள்ளை இல்லாத சம்பாத்தியம்.

(கொள்ள. )

கொள்ளிக் கட்டையால் சுட்டால் கொப்பளிக்குமென்று வாழைப்பழம் கொண்டு வடுவடுவாய்ச் சுடுகிறான்.

(வைக்கிறான்.)

கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்தது போல.

(கொள்ளிக் கட்டை கொண்டு சொறிவதா?)

கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகலாகாது.

கொள்ளித் தேளுக்கு மணியம் கொடுத்தது போல. 9870


கொள்ளித் தேளை மடியில் வைத்துக் கட்டிக் கொண்டது போல.

கொள்ளி பட்ட குதிரை லாயம் பாழ்.

கொள்ளியால் தலை சொறிகிறதா?

கொள்ளியும் தீயும் உனக்கு; பிள்ளையும் தள்ளையும் எனக்கு.

(நாஞ்சில் நாட்டில் கண்ணேறு கழித்தல். தள்ளை-தாய்.)

கொள்ளியை ஆனைக்குத் தானம் செய்த மாதிரி. 9875


கொள்ளியை எடுத்துப் போட்டால் கொதிக்கிறது அடங்கி விடும்.

(கொள்ளியை வாங்கினால், இழுத்து விட்டால்.)

கொள்ளி வைத்த இடத்தில் அள்ளி எடுக்கிறதா?

கொள்ளுக் குத்தின உலக்கை போல.

கொள்ளுக்கு வாயைத் திறந்து கடிவாளத்துக்கு வாயை மூடுவது.

கொள்ளுக் கொடி பந்தல் ஏறாது. 9880


கொள்ளுத் தின்று கொள்ளையிலே போவான்.

கொள்ளும் வரையில் கொண்டாட்டம்; கொண்ட பிறகு திண்டாட்டம்.

கொள்ளு வாசனை கண்ட குதிரை போல.

கொள்ளு வெள்ளாமை கொள்ளை வெள்ளாமை.

கொள்ளை அடித்துத் தின்கிறவனுக்குக் கொண்டு தின்னத் தாங்குமா? 9885


கொள்ளை இடப் போகிறவனுக்குக் குருடன் துணை ஆகுமா?

கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.

கொள்ளைக்கும் ஊழிக்கும் தப்பு.

கொள்ளைக்கு முந்து; கோபத்துக்குப் பிந்து.

கொள்ளைக் கூட்டத்துக்குத் தலை இல்லை; கூத்தாடிக்கு முறை இல்லை. 9890


கொள்ளைப் பறிக்கிறது; கொடுக்கப் பறக்கிறது; கொண்டவனைக் கண்டால் குடலைப் புரட்டுகிறது.

கொளிஞ்சி மிதித்தால் களஞ்சியம் நிறையும்.

கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி.

(அறியான்.)

கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

(சிறந்தவன்.)

கொன்றவனை விடக் கற்றவள் பெரியவன். 9895


கொன்ற பாவம் தின்றதில் போச்சு.

கொன்றாரைக் கொல்லும் அல்லால் கொலை விடாது.

கொன்றால் பாவம் தின்றால் போச்சு.

(தீரும்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_2/கொ&oldid=1684197" இலிருந்து மீள்விக்கப்பட்டது