உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ப் பழமொழிகள் 2/4

விக்கிமூலம் இலிருந்து
கா

காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தாயோ புன்னை?

கண்ணாளன் வரும் வரையில் பொறுக்கவில்லையே புன்னை? 7685


காக்கனும் பூக்கனும் சேர்ந்து ராக்கன் வீட்டு நெல்லுக்கு வினை வைத்தார்கள்.

காக்கை இருந்த கொம்பு அசையாது.

காக்கை ஏறப் பனம்பழம் விழுந்தது போல.

(காகதாளிக நியாயம்.)

காக்கை ஏறின கொம்பு அசையாதா?

காக்கைக் கழுத்தில் சீட்டுக் கட்டினது போல. 7690


காக்கைக்கு இருட்டில் கண் தெரியாது.

காக்கைக்கு ஐந்து குணம்.

காக்கைக்கு ஒரு கீர்த்தி, நரிக்கு ஒர் அபகீர்த்தி.

காக்கைக்குக் கொண்டாட்டம்; எருதுக்குத் திண்டாட்டம்.

காக்கைக் குஞ்சையும் கணக்கன் குஞ்சையும் கண்ட இடத்தில் குத்தவேண்டும். 7695


காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.

காக்கைக்குப் பயந்திருப்பாள்; கழுகுக்குத் துணிந்திருப்பாள்.

காக்கைக்குப் பயந்து அழுவாள்; கழுகுக்குத் துணிந்து எழுவாள்.

காக்கைக்கு புடுக்கு உண்டானால் பறக்கிற போது தெரியாதா?

காக்கைக்குப் போடு என்றால் நாய்க்குப் போட்டாற் போல. 7700


காக்கைக்கும் காக்கையிலும் கன சிறப்பு.

காக்கைக் கூட்டம் போலக் கட்டுக் கோப்பு.

 காக்கைக் கூட்டில் குயிற் குஞ்சு வளர்வது போல.

காக்கை கண்ணுக்குப் பீர்க்கம் பூப்பொன் நிறம்.

காக்கை கதறப் பயந்து கணவனைக் கட்டிக் கொண்டாளாம். 7705


காக்கை கர் என்றதாம்; அகமுடையானை இறுகக் கட்டிக்கொண்டாளாம்.

(அப்பா என்று போய்க் கட்டிக் கொண்டாளாம்.)

காக்கை கரிச் சட்டியைப் பழித்ததாம்.

காக்கை கரைந்தால் ஆரோ வருவார்.

காக்கை கரைந்து உண்ணும்.

காக்கை குசுவினாற் போல் இருக்கிறது. 7710


காக்கை குருவி மூக்காலே கொரிக்கிறது போல,

காக்கை குளிக்கிறது போல.

காக்கை நோக்கு அறியும்; கொக்கு உப்பு அறியும்.

காக்கை பிடிக்கி போல் இருக்கிறான்.

காக்கை பிடிக்கிறவருக்குக் காலம். 7715

(கால் கை பிடிக்கிறவருக்கு.)


காக்கை பிடிக்கிறவனை நம்பாதே, காக்கை பிடித்தல்.

(கால் கை பிடித்தல்.)

காக்கை மிளகாய்ப்பழம் கொத்தினாற் போல்.

காக்கை மூக்கு நிழலிலே கண்டாலும் கம்மாளன் கண்ணிலே எழுபது கோடி பசும் பொன் படும்.

காக்கையிற் கரிது களம் பழம். 7720


காக்கையின் கண்ணுக்குப் பீர்க்கம்பூப் பொன் நிறம்.

காக்கையின் கழுத்தில் பனம்பழம் கட்டினது போல.

(பனங்காயை)

காக்கையினும் கன சிவப்பு.

காக்கையும் கத்திப் போகிறது; கருவாடும் உலர்ந்து போகிறது.

 காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும். 7725


காக்கையும் குயிற்குஞ்சைத் தன் குஞ்சு போல் வளர்க்கும்.

(காக்கும்.)

காக்கையைக் கண்டு அஞ்சுவான்; கரடியைப் பிடித்துக் கட்டுவான்.

(அஞ்சுவான்.)

காக்கையைக் கண்டு அஞ்சுவான்; காவேரி ஆற்றை நீந்துவான்.

காக்கையைக் கண்டு பயப்படுவான்; கள்ளன் கூடப் புறப்படுவான்.

காக்கையை விடக் கரியது களாப்பழம். 7730


காக்கை விரும்பும் கனி வேம்பு.

காகத்திலே வெள்ளை உண்டா?

காகத்தின் கழுத்துக் கறுத்தென்ன? வெளுத்தென்ன?

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல.

காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர். 7735

(சோனகன்-முகம்மதியன்.)


காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்.

(பாவம் இல்லாத ஊர்.)

காகம் உட்கார்ந்த கிளை ஆடாமல் இருக்குமா?

(ஆடாமலா?)

காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?

(பனம்பழம் விழுமா?)

காசா லேசா?

காசி இரண்டு எழுத்துத்தான்;காண எத்தனை நாள் செல்லும்? 7740


காசிக்குத் திருவையாறு அதிகம்.

காசிக்குப் போய்த் தயிர் கொண்டு வந்ததைப் போல்.

காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை.

காசிக்குப் போயும் மூடத் தவசி காலில் விழுகிறதா?

காசிக்குப் போன கடா மாடு போல. 7745

(அங்கும் உழுவான்.)


காசிக்குப் போனால் கால் ஆட்டலாம்; கால் ஆட்டக் கால் ஆட்டத் தோள் ஆட்டலாம்.

 காசிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு.

காசிக்குப் போனாலும் கட்கத்தில் மூட்டையா?

(கம்பளி மூட்டையா?)

காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.

காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது. 7750


காசிக்குப் போனாலும் தன் பாவம் தன்னோடே.

காசிக்குப் போனான்; கங்கை கொணர்ந்தான்.

காசிக்குப் போனான்; காவடி கொண்டு வந்தான்.

காசிக்கு வீசம் அதிகம் திருப்பூவணம்.

காசி முதல் ராமேசுவரம் வரையில். 7755

(தெரிந்தவன்.)


காசியில் இருக்கிறவன் கண்ணைக் குத்தக் காஞ்சீபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போகிறதா?

(போனானாம்.)

காசியில் இறக்க முக்தி; கமலையில் பிறக்க முக்தி.

(கமலை-திருவாரூர்.)

காசியில் தண்டம்; பிரயாகையில் முண்டம்; கயையில் பிண்டம்.

காசியில் பாதி கல்பாத்தி.

காசியில் வாசி அவிநாசி. 7760


காசியிலே கலமானால் நமக்கு என்ன?

காசி வாசி கண்ணைக் குத்தக் காஞ்சியிலிருந்து கை நீட்டிப்போனானாம்.

காசி விசாலாட்சி, கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி.

காசு இருந்தால் பெட்டியிலே, பவிசு இருந்தால் மூஞ்சியிலே; எனக்கு என்ன ஆச்சு?

காசு இல்லாதவன் முழுவதும் போட்டது போல. 7765


காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன?

காசு இல்லாதவனை வேசியும் துப்பமாட்டாள்.

காசுக்கு இரண்டு ஆனை வேணும், காற்றைப் போல் பறக்கவும் வேணும்.

காசுக்கு இரண்டு: பீசுக்கு நான்கு.

(பிசுக்கு இரண்டு.)

காசுக்கு இரண்டும் பீசுக்கு ஒன்றும். 7770

 காசுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுக் காசுக்கு விற்றாலும் வட்டிக்குக் கட்டாது.

காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கன் குஞ்சு ஆகாது.

காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கம்மாளன் குஞ்சு ஆகாது.

காசுக்கு ஒரு குட்டி ஆனாலும் கருர்க் குட்டி ஆகாது.

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; அது காற்றைப் போல் பறக்கவும் வேண்டும். 7775


காசுக்கு ஒரு தம்பி ஆனாலும் கள்ளத் தம்பி ஆகாது.

காசுக்கு ஒரு படி என்றால் பணத்துக்குப் பத்துப் படி என்கிறாயே!

காசுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய்க்கு லாபம் என்ன?

காசுக்கு ஒரு முழம் விற்றாலும் நாய் அம்மணந்தான்,

(ஒரு புடைவை.)

காசுக்குக் கம்பன். 7780

(காசுக்குப் பாடுவான் கம்பன்.)


காசுக்குப் பத்துப் பெண்டாட்டி; கொசுவுக்கு ஒரு குத்து.

காசுக்குப் போன மானம் கோடி கொடுத்தாலும் வராது.

காசுக் கூடு கரிக் கூடாய்ப் போயிற்று.

காசுக்கு லோபி கழுதையினிடத்தில் போனாற் போல.

காசு கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம். 7785


காசு கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது.

காசு கொடுத்தவனே கணவன்.

காக கொடுத்தால் வேசி வருவாள்; கலம் நெல் கொடுத்தால் அவள் ஆத்தாளும் வருவாள்.

காசுப் பையோடே களவு போனால் கடையிலே செட்டிக்குக் காரியம் என்ன?

காசைக் கரி ஆக்காமல் சீனி வெடி வாங்கிச் சுடு. 7790

(வாணம் வாங்கி.)


காசைக் கொடுத்தால் தாசி வருவாள்;கலம் நெல்லைக் கொடுத்தால் அவள் தாயும் வருவாள்.

காசைக் கொடுத்து நோயை விலைக்கு வாங்காதே.

காசைக் கொடுத்துக் குத்து மாடு தேடுகிறதா?

 காசைப் பார்த்தால் ஆசையாய் இருக்கிறது; கண்ணைப் பார்த்தால் போதையாய் இருக்கிறது.

காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக் கொண்டதுபோல். 7795


காஞ்சிக்குப் போனாலும் மஞ்சத்தின் கால் நான்கு.

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி. காசி விசாலாட்சி.

காஞ்சிரங் கனி கடுஞ்சிவப்பாய் இருந்தால் கடிதாக உயிர் மாய்க்கும்.

(மாய்க்க.)

காஞ்சீபுரத்து உபசாரம்.

காஞ்சீபுரத்துக்குப் போனால் காலை ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம். 7800

(நெசவு செய்து. தின்னலாம், பிழைக்கலாம்.)


காஞ்சீபுரம் குடை அழகு.

காஞ்சீபுரம் குடை, திருப்பதி வடை, சீரங்கத்து நடை.

காட்சிகள் காணக் கண்ணுக்கு அலுப்பா?

காட்டக் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு குமர கண்ட வலிப்பு வருகிறது.

காட்ட முடியுமே தவிர ஊட்ட முடியுமா? 7805

காட்டாளுக்கு ஒரு நீட்டாள்; நீட்டாளுக்கு ஒரு முடக்கான்; முடக்காளுக்கு ஒரு நொண்டிக் குதிரை.

(செங்கற்பட்டு வழக்கு.)


காட்டாளுக்கு ஒரு மோட்டாள்; மோட்டாளுக்கு ஒரு மொண்டி ஆள்.

(ஒரு துடைப்பைக் கட்டை)

காட்டாற்றுச் சரசாப்புக் காட்டானைக்குப் பரபரப்பா?

காட்டாற்று வெள்ளம் போல.

காட்டான் மோட்டான் சண்டைக்கு இளைச்சான். 7810


காட்டானை உண்ட கனி போல் இருக்கும், தேட்டாளன் திரவியம்.

காட்டானை தின்ற கனிபோலே.

காட்டானைக்கு வீட்டு ஆனையைக் கண்டால் இளப்பம்.

காட்டானை கனவில் நாட்டுச் சிங்கம் வந்தது போல.

காட்டானையைக் காட்டி வீட்டுப் பெண்ணைத் தள்ளுகிறது. 7815

காட்டானையைப் பிடிக்க வீட்டானை வேண்டும்.

காட்டானை ராஜாவுக்கு எலிக்குஞ்சு மந்திரியாம்.

காட்டானை விட்டாலும் கவியானை விடாது.

காட்டிக் கொடுத்தாலும் கூட்டிக் கொடுக்காதே.

காட்டிக் கொடுத்துக் கடக்கப்போய் நிற்கலாமா? 7820


காட்டில் அழுத குரல்.

காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறது போல.

காட்டில் உள்ள ஆனையைக் காட்டி வீட்டில் உள்ள பெண்ணைக் கடத்து.

காட்டில் எரித்த நிலாவும் கசட்டுக்குச் செய்த நன்றியும் வீண்.

காட்டில் எரித்த நிலாவும் கானலில் பெய்த மழையும். 7825


காட்டில் கடுவாய்; கடலில் கொடுவாய்.

காட்டில் செத்தாலும் வீட்டில்தான் தீட்டு.

காட்டில் செய்த சபதம் வீட்டில் மறந்தது போல.

காட்டில் புதைத்த கன தனமும் பாட்டில் புதைத்த பழம் பொருளும் வீட்டில் மனையாள் மனமும் நாட்டில் அறிவது அரிது.

காட்டில் புலி கொல்லும்; நாட்டில் புளி கொல்லும். 7830


காட்டில் யானையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுப்பது போல.

காட்டிலே மேயுதடி காடை, அவன் காட்டுகிறானடி பெண்ணை ஜாடை.

காட்டு எரு முட்டை பொறுக்கி மட்கலம் சுட்ட புகை போய் மேற்கே மேகம் கிளம்ப, மின்னிக் குமுறி மழை பொழிய, ஆற்றில் வெள்ளம் பெருகி அடித்துப் போன பலசரக்கை ஊரார் இழுப்பது வழக்கு; குயவன் இழுப்பது கணக்கு.

காட்டுக் கட்டைக்கு ஏற்ற முரட்டுக் கோடாலி.

காட்டுக் களாக்காயும் கண்கெட்ட தயவு இல்லாத ஒணானும் கோத்துக் குலாவுவது போல. 7835

(சேர்ந்து குலாவுவது.)

 காட்டுக் காடையைப் பிடிக்க வீட்டுக் காடை வேணும்.

காட்டுக்காரன் சும்மா இருந்தாலும் பூட்டைப் பிடுங்கி சும்மா இருக்க மாட்டானாம்.

காட்டுக்கு எறித்த நிலாவும் கசட்டுக்குச் செய்த நன்றியும் வீண்,

(கசத்துக்கு.)

காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

(கானல்-கடற்கரை.)

காட்டுக்கு ஒரு தெய்வம்; வீட்டுக்கு ஒரு தெய்வமா? 7840


காட்டுக்குப் புலி ஆதரவு; புலிக்குக் காடு ஆதரவு.

காட்டுக்குப் பெய்த மழை, கானலுக்கு எறித்த நிலா.

காட்டேரி உடைமை இராத் தங்காது.

காட்டேரிக்கும் கணக்கனுக்கும் அடிக்கடி கொடுக்க வேணும்.

காட்டைக் காத்த நரியும் வீட்டைக் காத்த நாயும் வீண் போகா. 7845


காட்டைக் காத்தவனும் கடையைக் காத்தவனும் வீண் போவது இல்லை.

காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

காட்டை வைத்துக் கொண்டு அல்லவோ வேட்டை ஆட வேணும்?

காடிக் கஞ்சி ஆனாலும் மூடிக் குடி.

காடிக்குப்போய்த் தயிர் கொண்டு வந்தது போல. 7850


காடு அழிந்தால் நாடு அழியும். காடு அறியாதவன் கல்லாங் காட்டை உழுவான்.

(உழ வேண்டும்.)

காடு ஆறு மாசம்; நாடு ஆறு மாசம்.

காடு எரியும் பொழுது வீடு எரியக் கூடாது.

காடுகள் இருப்பின் நாடுகள் செழிக்கும். 7855


காடு காத்த நாயும் வீடு காத்த நாயும் வீண் போகுமா?

காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

காடு கெட ஆட்டை விடு.

காடு கெட வீடு கெடு.

காடு திருத்திப் பருத்தி விதைக்கப் போகிறேன் என்றானாம் அப்பன்; அதற்குள் மகன் அந்த நூலில் தனக்குத் துப்பட்டி நெய்து தர வேணும் என்றானாம். 7860


காடும் செடியும் அவளாகத் தோன்றுகின்றன என் கண்களுக்கே.

காடும் செடியும் இல்லாத ஊருக்குக் கழுதை முள்ளி கற்பக விருட்சம்.

(ஊரில்)

காடு வளம் குண்டை வளம், குண்டை வளம் குடி வளம், குடி வளம், கோல் வளம், கோல் வளம் கோன் வளம்.

(குடிவளம் கோயில் வளம்.)

காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது.

காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்துவிடும். 7865


காடு விளைந்து என்ன மச்சானே, நம் கையும் காலுந்தானே மிச்சம்?

காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?

காடு வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு வெட்டப் பயமா?

காடு வெட்டி நஞ்சை பண்ணு: மாடு கட்டி வைக்கோல் போடு.

காடு வெந்தால் சந்தன மரமும் வேகாதோ? 7870


காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம்.

காடை கத்தினால் பாடை கட்டும்.

(காடை கட்டினால்.)

காண்பாரைக் கண்டு கழுதையும் பரதேசம் போயிற்றாம்.

காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?

காணக் கிடைக்காத தங்கம். 7875


காணக் கிடைக்குமோ? காண என்றால் கிட்டுமோ?

காணக் கிடைத்தது. கார்த்திகைப் பிறை போல.

காணப் பட்டன எல்லாம் அழியப் பட்டன.

(அழியத் தக்கன.)

காணம் என்றால் வாயைத் திறக்கிறது; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்கிறது.

காணம் விற்று ஒணம் கொண்டாட வேண்டும். 7880

காணலாம், கேட்கக் கூடாது; கேட்கலாம். காணக்கூடாது; காணவும் காணலாம், கேட்கவும் கேட்கலாம்.

(சகுன வகை. )

காண வேண்டி இருப்பாரைக் கிள்ள வேண்டி இருக்குமாம்.

காணாத கனவு கண்டால் ஒருவரோடும் சொல்லாதே.

காணாததை எல்லாம் காணலாம் கந்த புராணத்திலே.

(பொருளெல்லாம், புளுகெல்லாம்.)

காணாத நாயைக் கண்ட மனிதன் போல. 7885


காணாத மூளி கஞ்சியைக் கண்டால் ஓயாமல் கூட்டரைப்பாளாம்.

காணாதவன் கஞ்சியைக் கண்டானாம்; ஓயாமே ஓயாமே ஊதிக் குடித்தானாம்.

காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம்.

காணாது கண்ட கம்பங் கூழைச் சிந்தாது குடியடா சில்லி மூக்கா,

(குடியடி சில்லி மூக்கி.)

காணாது கண்டாற் போல. 7890

(கண்டார்.)


காணாப் பால் கலப் பால்,

(காணாப் பால் மாடு அடக்கும் பால்,)

காணாப் பீ கழுவாமல் போம்.

காணாமல் கண்டேனே கம்பங்கதிரை.

காணாமல் கோணாமல் கண்டு கொடு.

(சந்தியா வந்தன அர்க்கியம்.)

காணாமல் போன முயல் பெரிய முயல். 7895


காணார் என மாணாவினை செய்யார்.

(பழமொழி நானூறு.)

காணி அறுத்தாலும் கோணி கொள்ளவில்லை.

காணி ஆசை கோடி கேடு, காணி ஏறக் கோடி அழியும்.

காணிக்கு ஒத்தது கோடிக்கு. 7900

(ஏற்றது.)

காணிக்குச் சோம்பல், கோடிக்கு வருத்தம்.

காணி கவிழ்ந்து போகிறதா? காணி காணியாய்ச் சம்பாதித்துக் கோடி கோடியாய்ச் செலவழிக்கிறது.

(கோணி கோணியாய்.)

காணிச் சோம்பல் கோடி கேடு.

(கோடி வருத்தம். காணி. 1/84.)

காணி தேடிக் கோடி அழிப்பதா? 7905

(அழிக்கிறது.)


காணி தேடினும் கரிசல் தேடு.

காணி நாணம், ஊண் நாணம் உயிர்க்கே சேதம்.

காணி மந்தம். கோடி துக்கம்.

காணியாளன் வீடு வேகும் போது காலைப் பிடித்து இழுத்த கதை:

காணியில் இல்லாததா கோடியில் வரப் போகிறது? 7910


காணியை நட்டபின் களத்தில் நிற்பதே நன்மை.

காணி லாபம், கோடி நஷ்டம்.

காத்திருந்த நாய்க்குக் கல்லெறிதான் மிச்சம்.

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்.

காதம் ஓடினும் முயலுக்குக் கைத்துாக்கு. 7915


காதம் கொடுத்து இரு காதம் வாங்குகிறது போல.

காதம் போனாலும் கண்ணுக்கு உரியவர் வேண்டும்.

காதம் விட்டு இரு காதம் சுற்றுவது போல.

காதலரோடு ஆடார் கவறு.

காத வழிதான் குத்தும் வெட்டும்; அப்புறம் ராமராஜ்யம் 7920


காத வழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமானம்.

(தண்டலையார் சதகம்.)

காத வழி போய் அறியாதவன் மாதம் எல்லாம் நடந்தானாம்.

காத வழி போய் அறியான் கழுதைப் பிறப்பு.

காதில் கடுக்கன் இட்டால் முகத்தினுக்கு அழகு.

காதில் கேட்டதும் பொய்; கண்ணில் கண்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய். 7925

காதில் சிலந்தி, ஓதடி ஆனந்தி.

காதில் நாராசம் காய்ச்சி விட்டது போல.

காது அற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே.

(கூட வராது, பட்டினத்தார் பாடல்.)

காது அறுத்த கூலி கை மேலே.

காது அறுத்தாலும் அறுக்கும், பேன் எடுத்தாலும் எடுக்கும் குரங்கு. 7990


காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு.

காதுக்குக் கடுக்கன் இட்டு ஆட்டிக் கொண்டு திரிகிறான்.

காதுக்குக் கடுக்கன் முகத்துக்கு அழகு.

காதுக்குக் கம்மல் அழகு.

காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான். 7935


காது காது என்றால் நாதி நாதி என்கிறான்.

(நாதி-என்னுடையது. தெலுங்கு.)

காது காது என்றால் வேது வேது என்கிறான்.

(வேது வேது.)

காது குத்த மனம் பொறுக்காதா?

காது குத்துகிறான்.

காதும் காதும் வைத்தாற் போல. 7940

(காதோடு காதோடு.)


காதுரா காதுரா என்றால் நாதிரா நாதிரா என்கிறான்.

(இரு பொருள்.)

காதை அறுத்தவன் கண்ணைக் குத்தாமல் விட்டானே!

காதை அறுத்தவன் கண்ணைக் குத்தினாலும் குத்துவான்.

காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா?

காதை அறுத்தாலும் அறுக்கும்; பேனை எடுத்தாலும் எடுக்கும் குரங்கு. 7945


காதை அறுத்தாலும் அறுத்தது; பேனைப் பார்.

காதைக் கடிக்கிறான்.

காதோடு காது வைத்தாற்போல் இருக்க வேண்டும்.

காந்தத்தின்முன் ஊசி கம்பித்தாற் போல.

காந்தம் இழுத்த ஊசியைப் போல. 7950


காந்தமும் இரும்பும் போல.

காந்தமும் ஊசியும் போல.

காந்தலே ருசி; கறுப்பே அழகு.

காந்தாரி கண் பட்டால் கல்லும் கரிந்து விடும்.

காந்துார் நாயும் களத்துார்ப் பேயும். 7955

(மிகுதி. செங்கற்பட்டுப் பகுதி.)


காப்பானுக்குக் கள்ளம் இல்லை.

காப்புச் சொல்லும் கை மெலிவை.

காப்பு இட அத்தை இல்லை; கலகமிட அத்தை உண்டு; தண்டை இட அத்தை இல்லை; சண்டை இட அத்தை உண்டு.

காப் பொன்னிலும் மாப் பொன் திருடுவான்.

காமத்துக்குக் கண் இல்லை. 7960

(கண் தெரியாது.)


காமனுக்குக் கண் இல்லை.

(திருவாலவாய்ப் புராணம், 45:7)

காமாட்டிப் பையனுக்கு ஒரு சீமாட்டி கிடைத்தது போல.

காமாலைக் கண்ணனுக்குக் கண்டது எல்லாம் மஞ்சள்.

கா மாறிக் கட்டினால் கனம் குறையுமா?

(யாழ்ப்பான வழக்கு.)

காமிக்கு முறை இல்லை, 7965


காமுகனுக்குக் கண்ட இடத்தில் கண்.

காய்க்கு அலைந்தவன் பீர்க்குப் போடு.

காய்க்குக் கொடி இளைக்குமா?

காய் கொடிக்குக் கனமா? காய்ச்சல் இல்லா நிலம் கடுகளவும் பயன் கொடாது. 7970


காய்ச்சலும் கழிச்சலும் சேர்ந்து விட்டால் நம்பப் படாது.

காய்ச்சிக் காய்ச்சித்தானே நீட்ட வேண்டும்?

காய்ச்சிக் குடிக்கிறதையும் கெடுத்தான், கன்னாரப் பட்டு விழுவான்.

(கன்னாரச் சொட்டன்.)

காய்ச்சித் தோய்த்த தயிரைக் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டாயே!

காய்ச்சி வார்த்த பெண்ணுக்குப் பேச்சு மூச்சு அற்றது. 7975


காய்ச்சின கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும், கச்சை கட்ட ஆள் இருக்கிறது.

காய்ச்சினவள் காய்ச்சினால் கழுதை மூத்திரமும் ருசியாய் இருக்கும்

காய்த்த கொம்பு பணியும்.

காய்த்த மரத்தில் கல் எறிபடும்; காயாத மரத்தில் எறிபடுமா?

காய்த்த மரத்திலே கல் எறியும் சில் எறியும். 7980

(கல்லடியும் சில்லடியும்.)


காய்த்த மரம் கல் அடிபடும்.

காய்த்த மரம் வளைந்து நிற்கும்; நற்குணமுடையவர் தணிந்து நிற்பார்.

(பணிந்து.)

காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ?

(அருட்பா.)

காய்த்த மரம் வளையும்.

காய்ந்த இரும்பு குடித்த நீரை விடாது. 7985


காய்ந்த ஒட்டிலே தண்ணீரை ஊட்டினாற் போல.

காய்ந்த ஓட்டுக்குச் சேதம் இல்லை.

காய்ந்த கொம்பு பணியும்.

காய்ந்த சுண்ணாம்பையும் வதங்கின வெற்றிலையையும் இளைத்த ராஜாவையும் விடக் கூடாது.

காய்ந்த புலி ஆட்டு மந்தையில் விழுந்தது போல. 7990


காய்ந்த புலி ஆவிலே விழுகிறது.

காய்ந்த மரம் தளிர்க்குமா?

காய்ந்த மாடு கம்பில் புகுந்தாற் போல.

(கம்பங் கதிரில்.)

 காய்ந்த வானம் பெய்தால் விடாது,

காய்ந்த வித்துக்குப் பழுது இல்லை. 7995


காய்ந்த வெள்ளத்தில் விழுந்த பூனை பச்சை வெள்ளத்தைக் கண்டாலும் பேடிக்கும்,

(வெள்ளம்-நீர், பேடிக்கும்-அஞ்சும்.)

காய்ந்த வெற்றிலையையும் மெலிந்த ராஜாவையும் கைவிடாதே.

காய்ந்தால் காயும் கார்த்திகை.

காய்ந்தாலும் கவலை; பேய்ந்தாலும் கவலை.

காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ? 8000


காய்ந்து கெட்டது பிசானம்; காயாமல் கெட்டது கார்.

காய்ந்து போன கார்த்திகை வந்தால் என்ன? தீய்ந்து போன தீபாவளி வந்தால் என்ன? மகாராஜன் பொங்கல் வந்தால் மார்பு முட்டும் சோறு.

காய்ந்தும் கெடுத்தது வெயில்; பேய்ந்தும் கெடுத்தது மழை.

காய்ப் பாரத்தைக் கொடி தாங்காதா?

(தாங்கும்.)

காய் பறிக்கக் கத்தரி நடு. 8005


காய் மகாரன் நெஞ்சிலே கொள்ளிக் கட்டையால் சுடவேண்டும்.

காய சித்தி பெற்றோர் சட்டை கழற்றுவது போல.

காயத்திரி ஜபத்துக்குச் சமர்த்தியும் சமைக்க மாட்டாள்.

காயம் என்ன கற்கண்டா? உயிர் என்ன தித்திப்பா?

(உயிர் என்ன வெல்லமா?)

காயாகக் காய்த்துப் பூவாகப் பூத்ததாம். 8010


காயா? பழமா?

காயிலே கெட்டது கத்தரிக்காய்.

காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம்.

(காயும் கறியும்.)

காயும் பயிருக்குப் பெய்யும் மழை போல.

காயும் பழமும் கலந்தது போல். 8015

காயும் புழுவுக்குச் சாயும் நிழல் போல

காயேனவாசா-கறி என்ன சமைச்சாள்?

கார் அரிசிச் சாதம், கருணைக் கிழங்குத் துவையல். அத்தையைச் சமைக்கச் சொன்னாளாம்: அகப்பையை எடுத்துக் காட்டினாளாம்.

கார் அறுக்கட்டும்; கத்தரி பூக்கட்டும்.

கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய்-வழியும். 8020


கார்த்திகை அகத்தி காம்பு எல்லாம் ருசி.

கார்த்திகை எண்ணெயும் கனுவுப் பழையதும் ஆர் இடுவார் அம்மா என்று அழுதாளாம்.

கார்த்திகைக் கார் கடை விலை; தைச் சம்பா தலை விலை.

கார்த்திகைக் கீரை கணவனுக்குக் கொடாதே.

கார்த்திகைக்குப் பின் மழை இல்லை: கர்ணனுக்குப் பின் கொடை இல்லை. 8025


கார்த்திகை கண்டு களம் இடு.

கார்த்திகை கன மழை.

கார்த்திகை கார்த்திகை என்று கழுத்தறுத்த பிராமணா, கார்த்திகைக்குப் பின் இந்த அகமுடையாள்தானா?

(நீ தானா அகமுடையாள்?)

கார்த்திகை கால் கோடை.

கார்த்திகை நண்டுக்குக் கரண்டி நெய். 8030


கார்த்திகைப் பனியைப் பாராதே; கட்டி ஓட்டடா ஏர் மாட்டை.

கார்த்திகைப் பிறை போல.

(பிறை கண்டவன் போல. )

கார்த்திகைப் பிறையைக் கண்ட கண்ணால் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.

(பிறகு மழை இல்லை என்றபடி.)

கார்த்திகைப் பொரியும் கணுவுப் பழஞ் சோறும்.

கார்த்திகை மழை கல்லை உடைக்கும். 8035


கார்த்திகை மாசத்தில் உழுதால் கடுகு மிளகு காணாது.

கார்த்திகை மாசத்தில் கடு மழை பெய்தால் கல்லின் கீழ் இருக்கிற புல்லும் கதிர் விடும்.

கார்த்திகை மாசத்தில் கால் கொள்ளு விதைத்தால் மேல் கொள்ளு முதலாகாது.

கார்த்திகை மாசத்தில் தண்ணீர்ப் பந்தல் வைத்தது போல.

கார்த்திகை மாசத்துக் கர்க்கட சந்திர யோகம் கல்லைத் துளைக்கும். 8040


கார்த்திகை மாசத்து நாய் படும் பாடு போல.

கார்த்திகை மாசத்துப் பூமா தேவியைப் போல.

கார்த்திகை மாசத்து மழை கலம் கழுவுகிறதற்கு முன்னே வந்து போகும்.

கார்த்திகை மாசம் கல்லுக்குள் இருக்கும் நெல்லும் கதிராகும்.

கார்த்திகை மாசம் கலம் கழுவப் போது இல்லை. 8045


கார்த்திகை மாசம் கலம் கழுவ மழை விடாது.

கார்த்திகை மாசம் கையிலே; மார்கழி மாசம் மடியிலே.

(அவரைக் காய்.)

கார்த்திகையில் கருக்கல் கண்ட இடத்தில் மழை.

கார் நடவைக் கலக்க நட்டது போல. கார்ப் பயிர் கலந்து கெட்டது; பிசானப் பயிர் நெருங்கிக் கெட்டது. 8050


கார்ப் பயிரைக் கண்ணைக் கட்டி அறு.

கார் மின்னிக் கெட்டது; பருவம் மின்னாமல் கெட்டது.

கார் மேக மழையில் காற்றடித்தால் போச்சு.

காரண குருவே காரிய குரு.

காரணம் அடா கல்லுக் கொத்தா; சாகிற கிழவி பிள்ளை பெற்றாள். 8055


காரணம் இல்வாமல் நாய் குரைக்காதே,

காரணம் இன்றிக் காரியம் இல்லை.

காராம் பசுவுக்குப் புல் ஆனால் நந்தவனத்துக்குக் களையும் ஆம்.

(நந்தவனுத்துக்குக் காளையும் ஆம்! மழையும் ஆம்.)

காரிகை கற்றுக் கவி பாடுவதிலும் பேரிகை அடித்துப் பிழைப்பது நன்று.

(பேரிகை கொட்டி.)

 காரியக்காரன் கொல்லையிலே கழுதை வந்து மேய்கிறது. 8060


காரியத்தில் வருகிற போதுதான் மாடு படுத்துக் கொள்கிறது.

காரியத்திலே கண் அல்லாமல் வீரியத்திலே இல்லை.

காரியத்திலே கப்பல்.

காரியத்துக்குக் கழுதையின் காலைப் பிடி.

காரியத்துக்குச் சோம்பினவர்களுக்குக் கைக் குழந்தை ஒரு சாக்கு. 8065


காரியத்துக்கு வாசுதேவர் கழுதையின் காலைப் பிடித்தார்.

காரியத்தைப் பற்றிக் கழுதையையும் காலைப் பிடி.

(காரியத்தை வேண்டிக் கழுதையின்.)

காரியப் பைத்தியம்.

காரியம் ஆகிற வரையில் கழுதையையும் காலைப் பிடி.

(கழுதைக் காலையும் பிடி, கும்பிடு.)

காரியம் ஆகிறவரையில் காலைப் பிடி; பின்னே கழுத்தைப் பிடி. 8070

(மென்னியை,)


காரியம் ஆகுமட்டும் காலைப் பிடி, காரியம் ஆன பிறகு குடுமியைப்பிடி.

(கழுத்தைப் பிடி.)

காரியம் ஆகுமானால் தலையைப் பிடி, காரியம் ஆகாவிட்டால் காலைப் பிடி.

காரியம் இல்லாத மாமியாருக்குக் கல்லும் நெல்லும் கலந்து வைத்தாள்.

(மாமியார் வைத்தானாம்.)

காரியம் உண்டானால் கழுதையையும் காலைப் பிடி.

காரியம் உள்ளவரை காலைப் பிடி; இல்லாவிட்டால் பல்லைப் பிடி. 8075


காரியம் செய்துவிட்டுக் கழுநீர்ப் பானையில் கைவிட்டாளாம்.

காரியம் பெரிதா? வீரியம் பெரிதா?

(பிரதானமா?)

காரியம் முடிந்தால் கம்மாளன் புறத்தே.

காரியும் வெள்ளையும் கருதிப் பயிரிடு.

(காரி - எள். வெள்ளை-பருத்தி.)

காருக்கு ஒன்று; சம்பாவுக்கு ஒன்று. 8080


காருக்குக் களை எடுத்தாற் போல்.

காருக்குப் பட்டம் இல்லை.

காருக்குப் பின் பட்டம் இல்லை; கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை.

காருக்கும் கத்தரிக்கும் காலம் இல்லை.

காருக்கு வயலும் மோருக்குச் சாதமும் அதிகமாக வைக்கக்கூடாது. 8085


காரும் கம்பும் கதிரிலே.

காரைக்காட்டானோ? ஊரைச் சுட்டானோ?

காரைக் கிள்ளி நடு; சம்பாவை அள்ளி நடு.

காரையும் எள்ளையும் கருதிப் பயிர் இடு.

காரையை வெட்டிக் கரணை போட்டால் எடையும் பணமும் காணும். 8090


கால் அடிபட்ட நாயும் காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவுமா?

கால் அடி வைக்கச்சே நீச்சானால் கரை ஏறுகிறது எப்படி?

(வைக்கச்சே நீரானால்,)

கால் அணாக் கொடுக்கிறேன் என்றால் காத வழி நடப்பான்.

(கால் அரை கொடுக்கிறேன்.)

கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம்; நூல் அளவே ஆகுமாம் நுண் சீலை.

(நூற் சீலை.)

கால் ஆட்டக் கால் ஆட்டத் தூணாட்டம் வீங்கிப் போயிற்று 8095


கால் ஆட்டி வீட்டில் வாலாட்டி இருக்காது.

கால் ஆட்டுகிறவர் வீட்டில் வாலாட்டி நாய் தங்காது.

கால் ஆடக் கோல் ஆடும்; கோல் ஆடக் குரங்கு ஆடும்.

(கால் ஆடப் பாம்பு ஆடும்.)

கால் இல்லா முடவன் கடலைத் தாண்டுவானா?

 கால் எட்டினால் காகுழியில் போடு. 8100

(நெசவாளர் வழக்கு.)

கால் ஒடிந்த கோழிக்கு உரற்குழியே கைலாசம்.

கால் காசுக்குக் குதிரை வாங்க வேணும்; அது காற்றாகவும் பறக்க வேணும்.

(கால் துட்டுக்கு.)

கால் காசு தாலி கட்டாதவனும் காலில் விழாத பிள்ளையும் பிரயோசனம் இல்லை.

கால் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது.

கால் காசு பெறாது. 8105


கால் சிறிது ஆகில் கண் ஊரும்; கன்னியர்மேல் மால் சிறிது ஆகில் மனம் ஊரும்.

(ஊறும்.)

கால் துட்டுக்குப் பசு வாங்க வேணும்; அது கால்படி பால் கறக்க வேணும்.

கால் தூக்குகிற கணக்கப் பிள்ளைக்கு மாசம் பத்து ரூபாய்.

கால் தூசு பெற மாட்டார்கள்.

கால் நடைக்கு இரண்டு காசு, கைவீச்சுக்கு ஐந்து காசு. 8110


கால் படி அரிசி இருந்தால் கஞ்சி, அரைப் படி அரிசி இருந்தால் அன்னம்.

கால் படி அரிசிக்காரன் உள்ள மட்டுந்தான்.

கால் பணத்துக் குரங்கு முக்கால் பணத்து வாழைப்பழம் தின்றதாம்.

கால் பாடகம் கழன்று விடுமோ?

கால் போகா இடத்தில் தலையிட்டுக் கொள்ளாதே. 8115

(கொள்ளுகிறதா?)


கால்மாடு, தலைமாடு தெரியாதவன்.

கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா?

கால் வந்து சூழக் கரி வந்து சூழ்ந்தது.

கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?

கால கதியை ஆரும் கடக்க மாட்டார்கள். 8120


கால சக்கரம் சுழல்கிறது.

காலத்தில் ஒட்டை அடைக்கப்படாவிட்டால் கப்பலும் முழுகிவிடும்.

காலத்தில் பயிர் செய்தால் கடன் வாங்க வேண்டாம்.

காலத்தில் பிறந்த பிள்ளை கைக்கு உதவும்.

காலத்தில் பெய்த மழை போல. 8125


காலத்தில் போனாலும் சூலத்தில் போகாதே,

காலத்தினால் செய்த நன்றி.

(குறள்.)

காலத்துக்கு ஏற்ற கோலம்.

(தக்க கோலம்.)

காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்.

காலத்துப் பயிர் கரம்பிலே. 8130


காலத்து விதை கரம்பிலே.

காலத்தே பயிர் செய்.

கால தாமதம் காரியம் நஷ்டம்.

காலப் பயிர் கடக்க நிற்கும்.

காலப் புழுதி இல்லாதவன் கைம்முதல் இழப்பான். 8135


காலம் அல்லாத காலத்தில் கடல் ஏறிக் கதிர்காமா, கதிர்காமா என்றால் கைகொடுக்குமா?

காலம் அல்லாத காலத்தில் கப்பல் ஒட்டி.

காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் பேய்ச் சுரைக்காய்.

காலம் அறிந்து ஞாலம் ஒழுகு.

காலம் அறிந்து பிழையாதவன் வாலறுந்த குரங்கு ஆவான். 8140


காலம் அறிந்து பெய்யாத மழையும், நேரம் அறிந்து உண்ணாத உணவும் வீண்.

காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை.

காலம் கண்ட கூனி.

காலம் கலி காலம் அல்லவா?

காலம் கலி காலம்; கறுப்புக் கோழி வெள்ளை முட்டை இடும். 8145

(இடுகிறதாம்.)


காலம் கெட்ட கேட்டிற்குக் கருத்தான் என்ன செய்வான்?

காலம் கெட்டுக் கிடக்கிறது; ஜாக்கிரதையாய் இரு.

காலம் கெட்டுக் கைப்பிச்சை எடுத்தாற் போல.

காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.

(செய்வதைக் கோலம் செய்யாது.)

காலம் செய்த கோலத்துக்கு ஆரை வெறுப்பது? 8150

காலம் செய்வதைக் காலன் செய்வான்.

காலம் செய்வதைக் கோலம் செய்யாது.

(செய்யுமா?)

காலம் துக்கத்தை மாற்றும்.

காலம் போம்; வார்த்தை நிற்கும், கப்பல் போம்; துறை நிற்கும்.

காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டது போல. 8155


காலம் வரும் வரைக்கும் யமன் காத்திருப்பான்.

(பழமொழி நானூறு.)

காலமே எழுந்திருந்து காக்கை பார்க்கிறது ஆகாது.

காலமே எழுந்திருந்து காக்கை முகத்தில் விழித்தல் ஆகாது.

காலனுக்கு விளைச்சல் கூடுதல்.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

கால க்ஷேபத்துக்குக் கூலிக்குக் குத்தினாலும் கமுக்கட்டு மயிர் வெளியே தெரியக்கூடாதாம். 8160


காலா காலத்தில் செபம் பண்ணினால் மேல் ஒரு பாவமும் இல்லை.

காலால் இடுவதைத் தலையால் செய்கிறான்.

(இட்ட வேலையை.)

காலால் காட்டினதைக் கையால் செய்கிறது.

(காலால் ஏவியதை.)

காலால் நடக்காமல் காற்றாய்ப் பறக்கிறது.

காலால் நடந்தால் காத வழி? தலையால் நடந்தால் எவ்வளவு தூரம்? 8165


காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக் கூடாது.

(தள்ள முடியாது. அவிழ்க்கப்படாது.)

காலில் அழுக்கு இருந்தால் தலையில் அமேத்தியம் என்பார்.

காலில் கட்டினால் விருது; குப்பையில் கிடந்தால் துணி.

காலில் தைத்தது கண்ணிலே தைத்தது போல.

காலில் நகம் முளைத்த நாள் முதலாக. 8170


காலில் பட்டது கண்ணில் பட்டது போல.

(தைத்தது போல.)

காலில் பட்டது கையிலும் படும்; மூக்கிலும் படும்.

காலில் பட்ட பிறகு கிரகசாரம் போய் விடாது.

(போகாது.)

 காலில் பட்ட பீ மூஞ்சிக்கு வந்தாற் போலே.

காலில் விழுகிறது நல்லது; மேலில் விழுகிறது கெட்டது. 8175


காலுக்கு ஆகாத செருப்பைக் கழற்றி எறி.

(உதவாத செருப்பை)

காலுக்கு ஆகிற செருப்புத் தலைக்கு ஆகுமா?

காலுக்கு என்றால் தலைக்கு இடுவான்.

காலுக்குக் கடுப்பே தவிரக் கண்ட பலன் ஒன்றும் இல்லை.

காலுக்குக் கண் வேண்டுமா? 8180


காலுக்குக் கை உதவி, கைக்குக் கால் உதவி.

காலுக்குச் சேராத செருப்பைக் கழற்றி எறிய வேண்டும்.

காலுக்குத் தக்க செருப்பும் கூலிக்குத் தக்க உழைப்பும்.

காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான்.

காலும் இல்லாமல் தலையும் இல்லாமல் பேசுகிறான். 8185


காலும் தலையும் சாமி குடுமியும் போல.

காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர் கோலை விட்டுக் குலாவி நடப்பரே.

காலை உப்பலும் கடும்பகல் வெயிலும் மாலை மேகமும் மழைதனில் உண்டு.

காலைக் கடம்பர், மத்தியான்னச் சொக்கர், அந்தித் திருவேங்கிநாதர், அர்த்தஜாமம் சிம்மபுரீசுவரர்.

(கருப்பத்தூர்.)

காலைக் கல், மாலைப் புல், 8190


காலைக் குளி மாதம் தாங்கும்; நடுப்பகல் குளி வாரம் தாங்கும்;

அந்திக் குளி அன்றைக் குளி.

(எண்ணெய் தேய்த்துக் கொள்ள.)

காலைக் கடன் வாங்கச் சொல்லும்; அந்தி ஆனை கட்டச் சொல்லும்,

(பயிரின் நிலை. காலையில் வாட்டம். மாலையில் செழிப்பு.)

காலைக் கூழைத் தள்ளாதே; கம்மாளன் வரவைக் கொள்ளாதே.

(காயைலக் குழையது. காலைப் பழையது.)

காலைக் கேட்டுக் கொண்டா நடக்கிறது?

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் ஒழிய விடாது. 8195

(கடியாமல் விடாது.)

காலைச் செவ்வானம் கடலுக்குப் பெய்யும்.

காலைச் செவ்வானம் கரம்பில் கட்டு; அந்திச் செவ்வானம் ஆற்றில் கட்டு.

காலைச் செவ்வானம் காலத்திலும் மழை இல்லை; அந்திச் செவ்வானம் அப்பொழுதே மழை.

காலைச் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும்.

(அடர்த்த மழை.)

காலைத் தூக்குகிற கணக்கப்பிள்ளைக்கு மாசம் பத்து ரூபாய். 8200


காலைத் தென்றல் மழையைக் காட்டும்; மாலைத் தென்றல் மழையை விலக்கும்.

காலை துயில்வானும் மாலை இருப்பானும் பதர்.

காலைப் பனிக்கும் கண் விழிக்கும் ஒத்தது செல்வம்.

காலைப் பிடி என்றால் கழுத்தைப் பிடித்தாளாம்.

காலைப் பிடித்த சனி நடந்தால் ஒழிய விடாது. 8265


காலைப் பிடித்த சனியன் ஊரைச் சுற்றியடிக்கும்.

காலைப் புல்லும் மாலைக் கல்லும் ஆளைக் கொல்லும்.

காலை மிதித்தால் தலையை மிதிப்பான்.

காலை மேகமும் கருந்தனி வெயிலும் மாலை உப்பலும் மழைதனில் இல்லையே.

காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது. 8210

(ஆகாது.)


காலையில் எழுந்து காக்கை முகத்தில் விழிக்காதே.

காலையில் தயிர், கடும் பகலில் மோர், மாலையில் பால்.

காலையில் பூத்த மலர் மாலையில் வாடுவதைப் போல.

காலை வாடை, மாலை உப்பு, மழை அப்புறம்.

காலை விருத்தைத் தட்டாதே; கசடருடன் கூடித் திரியாதே, 8215


காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.

காவல் காக்க வந்த குரங்கு கைத்துப்பாக்கி கேட்டதாம்.

காவல்தானே பாவையர்க்கு அழகு.

காவேட்டி ரங்கனுக்கு மேல் வெட்டி இரண்டாம்.

காவேட்டி ரங்கனுக்கு மேல் வேட்டி வெள்ளை. 8220

 காவேட்டி ரங்கனுக்கு வைப்பாட்டி இரண்டாம்.

காவேரிக் கரைப் பசுப் போல் அலைகிறான்.

காவேரி கடவாக் கந்தாடை அண்ணன்.

(காவிரி)

காவேரித் தண்ணீர் குடித்தவனுக்குச் சாவேரி ராகம் கஷ்டமா?

காவேரி ஆறு கரை புரண்டு போனாலும் வீராணத் தேரி விதை முதலுக்குக் கட்டாது. 8225


காவேரி ஆற்றை மறிப்பாய்; கார்த்திகை மாதத்துக் கர்க்கடகச் சந்திரனையும் மறிப்பாயா?

காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கவேன்டும்.

காவேரி பாதி, கர்ணன் பாதி.

காவேரியைப் போல நதி இல்லை; சாவேரியைப் போல ராகம் இல்லை.

காவோலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம். 8230


காழி பாதி, வீழிபாதி

(தேவாரம் வீடு திருவீடுமீழலை)

காளை தேட, சோமன் அழிக்க, சுந்தரன் சுகிக்க.

(காளையார் கோயிலில் 3 கோயில்கள். காமேசுவரர், சொர்ணவல்வி இவர் மேல், சோமேசுவரர் செளந்தரிய நாயகி அலங்கார விசேஷம். சுந்தரேசர், மீனாட்சி நிவேதன விசேஷம்.)

காளவாய்க்கு மழையும் கைம்பெண்டாட்டிக்குப் பிள்ளையும்.

காளி தோட்டத்துக் கற்பக விருட்சம் ஆருக்கும் உதவாது.

காளிப் பட்டம் போனாலும் மூளிப் பட்டம் போகாது. 8235


காளியோடு பிறந்த மூளி, மூளியோடு பிறந்த காளி.

காளை ஈன்றதென்று கேட்குமுன்னே கயிறு எடு என்றானாம்.

காளை கட்டிக் கார் உழவை ஒட்டு.

காளை போன வழியே கன்று போகும்.

(கயிறு போகும்.)

காளை மாடு ஆனாலும் கன்றுக்கு உழக்குப் பால் தா என்றானாம். 8240


காளையைக் கட்டுத் தறியில் விட்டுவிட்டு மேயும் இடத்தில் பிடிக்க முடியுமா?

காற்றில் அகப்பட்ட இலவம் பஞ்சு போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_2/4&oldid=1160257" இலிருந்து மீள்விக்கப்பட்டது