தமிழ்மொழி இலக்கிய வரலாறு/பத்துப்பாட்டு

விக்கிமூலம் இலிருந்து

18. பத்துப்பாட்டு

முன்னுரை

ஐங்குறுநூறு குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய தொகை நூல்கள் அகவற்பாவில் அமைந்தவை. அவ்வாறே புறநானூற்றுப் பாடல்களும் அகவற்பாவில் அமைந்தவையே. அகநானூற்றுப் பாடல்கள் 13 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையும் உடையவை. புறநானூற்றில் 40 அடிப் பெருமையுள்ள பாடலும் (395) இடம் பெற்றுள்ளது. பதிற்றுப்பத்தில் 57 அடிகளைக் கொண்ட பாடலும் (90) இடம் பெற்றுள்ளது. ஆயின், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட அகவற்பாக்களும் உண்டு. அத்தகைய நீண்ட பாடல்கள் பத்தின் தொகுதியே பத்துப்பாட்டு எனப்படும்.

பத்துப்பாட்டு என்பவை-திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை. பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகும். இப்பத்தும் முறையே 317, 248, 269, 500, 1035 782, 188, 261, 301, 583 அடிகளைக் கொண்டவை. இவற்றுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு (103 அடி); மிகப் பெரியது மதுரைக் காஞ்சி (782 அடி) .

பத்துப்பாட்டின் காலம்

(1) திருமுருகாற்றுப்படை நக்கீரர் என்பவரால் முருகப் பெருமானைப் பற்றிப் பாடப்பட்டது: (2) முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் கரிகாற் சோழன் மீது பொருநர் ஆற்றுப் படையைப் பாடினார். (3) கடியலூர் உருத்திரன்

கண்ணனார் என்ற புலவரும் கரிகாற் சோழன்மீது பட்டினப்பாலை பாடினார். (4) இப்புலவரே தொண்டைமான் இளந்திரையன் மீது பெரும்பாண் ஆற்றுப்படையைப் பாடினார். எனவே, கரிகாற் சோழனும் தொண்டைமான் இளந்திரையனும் ஒரு காலத்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறதன்றோ? கரிகாற்சோழன் காலம் ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம் (கி.பி. 75-115) என்பது முன்பே குறிக்கப்பட்டது. மாங்குடிமருதனார்என்ற புலவர் தலையாலங்கானத்துச் செருவென்றநெடுஞ்செழியன்மீது மதுரைக் காஞ்சியைப் பாடியுள்ளார். நக்கீரர் என்ற புலவரும் அதே அரசன்மீது நெடுநல்வாடையைப் பாடியுள்ளார். நக்கீரர் அகநானூறு 141 ஆம் செய்யுளில்,

செல்குடி கிறுத்த பெரும்பெயர் கரிகால் வெல்போர்ச் சோழன்'

என்று குறித்துள்ளார். இவர் கரிகாலன் காலத்தவர் என்பதற்குச் சான்றில்லை. எனவே, இவர் கரிகாலனுக்குப் பிற்பட்டவர் என்பதே பொருந்தும். ஆகவே, நக்கீரரால் பாடப்பட்ட நெடுஞ்செழியனும் கரிகாலற்குப் பிற்பட்டவன் என்று கொள்வதே பொருத்தமாகும். கரிகாலனைப் பாடிய புலவருள் ஒருவரேனும் இந்நெடுஞ்செழியனைப் பாடாமையும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துகிறது என்னலாம்.4

பெருங்கெளசிகனார்என்ற புலவர் நன்னன் சேய் நன்னனைப் பற்றி மலைபடுகடாம் பாடியுள்ளார். இந் நன்னன் சிறந்த கொடைவள்ளல் என்று மலைபடுகடாம்


1. S. Vaiyapuri Pillai, History of Tamil Language& Literature, pp. 33–34 .

த-20
306 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

(வரி 71-72) புகழுதலை நோக்க, மதுரைக் காஞ்சியில் வரும்,

 "பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
  சேரி விழவின் ஆர்ப்பெழுங் தாங்கு " 

என்னும் அடிகள் (318-329) இந்நன்னனைப் பற்றியன என்று கருதுதல் பொருத்தமாகும்.2 இங்ஙனம் கொள்ளின், மாங்குடி மருதனார் காலத்திலோ சிறிது முற்பட்டோ மலை படுகடாம் பாடப்பட்டது என்று கருதலாம்.

 பதிற்றுப்பத்து என்னும் நூலில் உள்ள எட்டுப்பத்துகளும் காலமுறைப்படி அமைந்துள்ளன. அவற்றுள் ஐந்தாம் பத்தைப் பரணர் பாடியுள்ளார். ஏழாம் பத்தைக் கபிலர் பாடியுள்ளார். இவ்விருவரும் பேகனைப் பாடியுள்ளனர்.3 ஆதலின், கபிலர், பரணரது முதுமைக் காலத்தில் இளைஞராய் இருந்தவர் என்று கருதுதல் தகும். பரணர் கரிகாலன் தந்தையாகிய உருவப்பல்தேர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளார் (புறநானூறு, 4) . எனவே, கபிலர் ஏறத்தாழக் கரிகாலன் காலத்தில் குறிஞ்சிப் பாட்டைப் பாடினார் என்று சொல்லுதல் பொருத்தமாகும்.
 மேலும், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரவேந்தன் மதுரைக்காஞ்சிக்குரிய பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தோற்றவன். அவன், "கபிலன் இன்றுளனாயின் நன்றுமன்"என்று (புறம், 53) கூறி யுள்ளான். இதனால் அவன் காலத்தில்-மதுரைக் காஞ்சி

 2. கொண்கானம் கிழானாகிய நன்னன் பெண்கொலை புரிந்தவனாதலின், அவனையும் அவன் மரபினரையும் புலவர் பாடா தொழிந்தனர். ஆதலின் இந்த நன்னன் அந்த நன்னன் மரபினரினும் வேறானவன் எனக் கொள்வது பொருத்தமாகும். இவன் செங்கண்மர் (செங்கம்) நகரை ஆண்டவன் என்னலாம்.
 3. புறநானூறு 143, 144. 

பாடப்பட்ட காலத்தில்-கபிலர் இல்லை என்பது வெளிப்படை.

 ஆகவே, பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப் படை, பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு ஆகிய நான்கும் ஏறத்தாழ ஒரு காலத்தன என்று கூறலாம். மலை படுகடாம், மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை என்ற மூன்றும் ஒரு காலத்தன என்று கூறலாம்.
 சிறுபாண் ஆற்றுப்படையில் பாரி முதலிய ஏழு வள்ளல்களின் வரலாறு இறந்த காலச் செய்தியாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வள்ளல்கள் கபிலர், பரணர், முடமோசியார், ஒளவையார் முதலிய புலவர்களால் பாடப்பட்டவர்கள். எனவே, இப்புலவர்களுக்கும் பிற்பட்ட காலத்தில் நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் சிறுபாண் ஆற்றுப் படையைப் பாடினார் என்று கொள்வது பொருத்தமாகும். இவ்வாற்றுப் படை ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்ற சிற்றரசனைப்

பற்றியது.

  முல்லைப்பாட்டில் யவனரைப் பற்றியும் மிலேச்சரைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன (வரி 60-66), நெடுநல் வாடையிலும் இவ்விருவரைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன (31-35, 101) . ஆதலால் இவ்வகைக் குறிப்புகள் காணும் நூல்கள் காலமுறையில் அடுத்தடுத்துத் தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமே. எனவே, நெடுநல் வாடையை அடுத்து முல்லைப்பாட்டுத் தோன்றியிருத்தல் கூடும்.4
   பதிற்றுப்பத்தில் பத்தாம் பத்து யானைக்கட்சேய் மாந்த ரஞ்சேரல் இரும்பொறை பற்றியதாக இருத்தல் கூடும் என்று அறிஞர் கருதுகின்றனர்.5 அவன் ஐங்குறுநூற்

 4. எஸ். வையாபுரிப்பிள்ளை, இலக்கிய தீபம், பக்.8-9 
 5. S. V. Piİlai, History of Tamil Language&litera. ture, p. 37. 308 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

றைத் தொகுப்பித்தவன் ஆதலால் அவன்மீது புலவர் ஒரு பத்தைப் பாடியிருக்கலாம். அவன் இறுதிப் பத்துக்கு உரியவனாயின் ஐந்தாம் பத்துக்குரிய செங்குட்டுவனுக்கு மிகவும் பிற்பட்டவனாவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறையைப் போரில் வென்றதாகப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று (17) கூறுவதால், இப்பாண்டியன் நெடுஞ்செழியன் செங்குட்டுவற்குப் பிற்பட்டவன் என்று கூறலாம்: பதிற்றுப்பத்தின் வைப்பு முறையை நோக்க, இவன் காலம் ஏறத்தாழக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்னலாம்."6 இங்ஙனம் கொள்ளின், இப்பாண்டியனைப் பற்றிய நெடுநல் வாடையும் மதுரைக் காஞ்சியும், நெடுநல்வாடையை ஒத் துள்ள முல்லைப்பாட்டும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டு நூல்கள் என்னலாம். இவை அனைத்திற்கும் பிற்பட்ட நல்லியக் கோடனைப் பற்றிய சிறு பாணாற்றுப்படையும் இம்மூன்றாம். நூற்றாண்டின் இறுதியில் செய்யப்பட்டது எனக் கொள்ளலாம்.

  இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளைக் கொண்டு குறிஞ்சிப் பாட்டு, பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நான்கு பாடல்களும் ஏறத்தாழக் கரிகாலன் காலத்தவை (கி.பி. 75-115) என்றும், (2) மலைபடுகடாம், நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி, முல்லைப்பாட்டு ஆகிய நான்கும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகலாம் என்றும், அனைத்திலும் இறுதி

   6. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் இப்பாண்டியன் காலம் ஏறத்தாழக் கி.பி. 250 என்று குறித்துள்ளனர். History of Tamil Language 8 Literature,. pp. 35–36. ..
  பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் இவன் காலம் கி.பி. 210ஜச் சுற்றியிருக்கலாம் என்பர்—History of S. India,. p. 121. யில் பாடப்பெற்ற சிறுபாணாற்றுப்படை கி. பி.3 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் செய்யப்பட்டதாகலாம் என்றும் கொள்வது பொருத்தமாகும். வேறு தக்க சான்றுகள் கிடைக்கும் வரையில் இம்முடிபைக் கொள்ளல் தகும். 
   பத்துப்பாட்டுள் எஞ்சியிருப்பது திருமுருகாற்றுப்படை ஒன்றேயாம். இனி இதனைப்பற்றி ஆராய்வோம். திருமுருகாற்றுப்படையின் காலம்
  வள்ளல்பால் பரிசு பெற்று மீளும் பாணர், கூத்தர். புலவர் முதலியோர் வறுமையால் வாடும் பாணர் முதலிய இரவலரை ஆற்றுப்படுத்தல் 'ஆற்றுப்படை' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.7 பாணனை ஆற்றுப்படுத்தல் "பாணாற்றுப்படை' எனவும், புலவரை ஆற்றுப்படுத்தல் 'புலவர் ஆற்றுப்படை' எனவும், கூத்தரை ஆற்றுப்படுத்தல் 'கூத்தர் ஆற்றுப்படை' எனவும் பெயர் பெறும்,
  திருமுருகாற்றுப்படை பக்தி நூல். முருகன் அருளைப் பெற்ற ஒருவன் பக்தி மிகுந்த மற்றோர் அடியவனை அம்முருகன்பால் ஆற்றுப்படுத்தல் முருகாற்றுப்படையின் பொருளாகும். இது தொல்காப்பிய இலக்கண விதிக்கு மாறுபட்டது. அஃதாவது, சமயத் துறையில் ஆற்றுப்படுத்தி நூல் செய்தல் தொல்காப்பியர் காலத்தில் இல்லை என்பது அவரது நூற்பாவால் தெரிகிறது. ஆதலின் என்க.
  (1) சிவபெருமானது வீரியத்தை இந்திரன் பெற்றான். முனிவர் அறுவர் அதனை இந்திரனிடமிருந்து பெற்று வேள்வித் தீயில் இட்டு அதன் வேகத்தைக் குறைத்துத் தம் மனைவியர் அறுவருக்கு உண்ணக் கொடுத்தனர். அதனை உண்ட முனிவர் பத்தினிமார் ஆறு குழந்தைகளைப் பெற்றனர். அக் குழந்தைகளே ஆறு முகங்களும் பன்னிரண்டு கைகளும் உடைய ஒரே குழந்தையாக மாறின என்று ஐந்தாம் பரிபாடல் கூறுகிறது. ஆயின்,

7. புறத்திணை இயல், நூற்பா 36, எச்ச இயல் 60.

310

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

'ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப

அறுவர் பயந்த ஆறமர் செல்வ’

என்று திருமுருகாற்றுப்படை (வரி 254-255) கூறுகின்றது. ஐவருள் ஒருவன் என்பது நிலம், நீர், காற்று, தீ விசும்பு, ஆகிய ஐந்தினுக்கும் உரிய தேவர் ஐவருள் ஒருவனைக் குறிப்பதாகும். அவன் தன் உள்ளங் கையில் (சிவன் தந்ததைப்) பெற்றான் என்பது முதல் வரியின் பொருளாகும். ஆயின் பரிபாடலில் ஐவருள் ஒருவன் அங்கை ஏற்றதாகக் கூறப்பட வில்லை என்பது கவனித்தற்குரியது.

சிவபெருமான் ஆறு முகங்களோடு விளங்கி ஆறுநெற்றிக் கண்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தினார்: காற்றுத் தேவனையும் தீத்தேவனையும் அப்பொறிகளைக் கங்கையில் விடுமாறு பணித்தார். காற்றுத் தேவன் சிவனை வணங்கி அத் தீப்பொறிகளைப் பெற்றுச் சென்றான். வழியில் தீக்கடவுள் அப்பொறிகளைத் தாங்கிச்சென்று கங்கையில் விடுத்தான். கங்கை சரவணப் பொய்கையில் அவற்றை உய்த்தது. சரவணப் பொய்கையில் ஆறு முகங்களையும் பன்னிரண்டு கைகளையும் உடைய ஒரே குழந்தையாக அப்பொறிகள் மாறின. திருமால் முதலிய தேவர்கள் கட்டளைப்படி கார்த்திகை மாதர் அறுவர் குழந்தைக்குப் பாலூட்டச் சென்றனர். முருகன் அத்தாய்மார் பொருட்டு ஆறு குழந்தைகளாக மாறினான் என்பது கந்த புராணம் கூறும் செய்தியாகும்.

திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள "ஐவருள் ஒருவன்' காற்றுக் கடவுளே என்பது இக் கதையால் விளங்குகிறது. எனவே, சங்ககால நூலாகிய பரிபாடலில் சொல்லப்பட்டுள்ள முருகனது பிறப்பு வரலாறு வேறு திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள முருகனது பிறப்பு வரலாறு வேறு என்பது தெளிவாகும். சங்க காலத்தில் திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் இருந்திருப்பாராயின், அவர் பரிபாடல். கதையையே கூறியிருப்பர்.

இவர் அங்ங்ணம் கூறாமையின், சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் என்று கருதுவதே பொருத்தமாகும்.

(2) சங்க கால நக்கீரர் 56ஆம் புறப்பாட்டில்,

“ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா கல்லிசை நால்வர்”

என்று கூறினார். இதனால் சிவன், முருகன், கண்ணன், பலராமன் ஆகிய நால்வர்க்கும் ஞாலம் காத்தலும் கால முன்பும், தோலா நல்லிசையும் இயற்கையாகவே அமைந்துள்ளமை தெரிகிறது. ஆயின், திருமுருகாற்றுப் படையைப் பாடிய நக்கீரர், மும்மூர்த்திகளும் தத்தம் தொழில் புரியும் தலைவர் ஆகும்படி, முருகன் தோன்றியருளினான்’ (வரி 162-163) என்று பாடியுள்ளார். இதனால், முருகன் பிறப்பினால் மும்மூர்த்திகளின் தலைமை செயற்கையாய் அமைந்தது என்பதன்றோ பொருளாகிறது? இங்ஙனம் கடவுள் பற்றிய செய்தியில் மாறுபட்ட இரண்டு கருத்துக்களை ஒரே நக்கீரர் பாடியிருப்பாரா?

சங்ககாலப் புலவர் ஒரு தெய்வத்தை உயர்த்தப் பிற தெய்வங்களைத் தாழ்த்திக் கூறினமைக்குச் சான்றில்லை. அவர்கள் சமரச மனப்பான்மையுடனே தெய்வங்களைப் பாடியுள்ளனர். கடுவன் இளஎயினனார் என்ற ஒரே புலவர் பரிபாடலில் திருமாலுக்கு ஒரு பாடலும் முருகனுக்கு ஒரு பாடலும் பாடியுள்ளார். மதுரைக் கண்ணத்தனார் திருமாலையும் சிவனையும் இரு பெருந்தெய்வம்' என்று (அகம்360) பாடியுள்ளார்.

இளங்கோவடிகள் சிவனையும் முருகனையும் திருமாலையும் ஒருபடித்தாகவே பாடியுள்ளமையும் நோக்கத்தகும். இவை அனைத்தையும் நோக்க, முருகனை முழு முதற்கடவுளாகக் கருதும் நிலை சங்க காலத்துக்குப் பிற்பட்டதாகும் என்று கருதுதல் பொருத்தமாகும். ஆகவே, மும்மூர்த்திகட்கும் மேலாகப் பாடியுள்ள திருமுருகாற்றுப் படை ஆசிரியரான நக்கீரர் சங்க கால நக்கீரரின் வேறாவர் என்று கொள்வதே ஏற்புடையதாகும்.

ஆவிநன்குடி முருகற்குரிய இடமாகச் சங்க நூல்களிற் குறிக்கப்பட்டிலது. எனவே, சங்க காலத்திற்குப் பின்னரே ஆவிநன்குடியில் முருகனுக்குக் கோவில் உண்டாயிருக்கலாம். திருமுருகாற்றுப்படை தொல்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டது; ஆயின் நடை ஏறத்தாழச் சங்கச் செய்யுட்களின் நடையை ஒத்துள்ளது.

முருக வணக்கம் சங்க காலத்திற் சிறப்புற்றிருந்தது. பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கி. பி. 6முதல் உண்டான நூற்றாண்டுகளில் சிவ வணக்கமே சிறப்புறலாயிற்று என்பதற்குப் பன்னிரு திருமுறைகளே ஏற்ற சான்றாகும். இவை அனைத்தையும் நோக்க, திருமுருகாற்றுப்படை சங்க காலத்திற்குப் பின்பு கி. பி. 300 க்குப் பின்பு) அப்பர் சம்பந்தர்க்கு முன்பு (கி. பி. 600 க்கு முன்பு) பாடப்பட்டிருக்கலாம் என்று கூறுதல் பொருத்தமாகும்.8

சங்க கால நூல்களுள் தொல்காப்பியத்திலும் மணிமேகலையிலும் கடவுள் வாழ்த்து இல்லை. சிலப்பதிகாரத்தில் திங்கள், ஞாயிறு, மழை என்னும் மூன்றையும் போற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடம் பெற்றுள்ளது. அஃது இடைச் செருகல் என்று கூறுவாரும் உளர். தொகை நூல்கள் பின்பு தொகுக்கப்பட்டவையாதலின் கடவுள் வாழ்த்துச் சேர்க்கப்பட்டது. பின்னர்த் தோன்றிய நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடுதல் புலவர் மரபாயிற்று.

பத்துப் பாட்டுள் 9 பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில், பின் தோன்றிய திருமுருகாற்றுப்படையை (அது


8. Prof. T. P. Minakshisundaram's 61st Birthday Commemoration volume. P. 70.

கடவுள் பற்றிய பாடலாதலாலும் அதன் நடை சங்க கால நடையை ஒத்திருத்தலாலும்) முன் வைத்துப் பத்துப் பாட்டு' என நூலுக்குப் பெயரிடப்பட்டது எனக்கோடல் பொருத்தமாகும். முருகனைப் பற்றிச் சங்க காலத்தில் பாடப்பட்ட பரிபாடல்கள் சேர்க்கப்பெறாமல் முருகனைப் பற்றிய இத்திருமுருகாற்றுப்படை மட்டும் 11ஆந் திருமுறையில் இடம் பெற்றிருத்தலே, இது சங்க காலப் பாடல் அன்று என்பதற்கு ஏற்ற மற்றொரு சான்றாகும். பத்துப்பாட்டு என்னும் பெயர்

 இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் உரை கண்டார் என்பது இறையனார் அகப்பொருள் உரையிற் கூறப்பட்டுள்ளது. அவ்வுரையில் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் நெடுமாறன்மீது பாடப்பட்ட பாண்டிக் கோவையின் செய்யுட்கள் காணப்படுகின்றன; நாலடியார், சீவக சிந்தாமணி முதலிய நூல்களின் கருத்தும் சொற்றொடரும் காணப்படுகின்றன. எனவே, அவ்வுரை கி.பி. 11 அல்லது 12ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது என்னலாம்."

அக் களவியலுரையில் கடைச் சங்க நூல்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அப்பட்டியலில் பத்துப்பாட்டு இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அக் காலத் தில் பத்துப் பாக்களும் தொகுக்கப்பட்டிருக்குமாயின் அத் தொகுப்பின் பெயர் அவ்வுரையில் இடம் பெற்றிருக்கு மன்றோ?

இளம்பூரணர்என்பவர் தொல்காப்பிய உரையாசிரியருள் காலத்தால் முற்பட்டவர். அவர் காலம் கி. பி. 11 அல்லது 12ஆம் நூற்றாண்டு என்னலாம்." அவர் பத்துப் பாட்டுள் ஒவ்வொன்றையும் அதனதன் தனிப்பெயர்


9. எஸ். வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், அபக்.29 .

10. கலைக்களஞ்சியம், தொகுதி 2, பக். 141. 

314

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கொண்டே கூறியுள்ளார். கி. பி. 13ஆம் நூற்றாண்டினரான பவணந்தி முனிவர்க்குப் பிற்பட்டவரான (கி. பி. 13அல்லது 14ஆம் நூற்றாண்டினரான) பேராசிரியர்' இத்தொகுதியைப் பாட்டு (செய்யுளியல் நூற்பா 50, 80 உரை) என்றே குறித்துள்ளார். இதனை நோக்க, இப் பாடல்கள் இளம்பூரணருக்குப் பின்பும் பேராசிரியர்க்கு முன்பும் தொகுக்கப்பட்டன என்பது தெரிகிறது. ஆயின், அப்பொழுதும் இத்தொகுதிக்குப் பத்துப் பாட்டு’ என்னும் பெயர் அமையவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்,மயிலைநாதர்என்பவர் நன்னூலுக்கு உரை வரைந்தவர். இவர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்குப்பிற்பட்டவர்.' இவரே நன்னூல் நூற்பா 387 இன் உரையில் பத்துப்பாட்டு’ என்று முதன் முதலாகக் கூறியுள்ளார். ஆதலின், பேராசிரியர்க்குப் (கி. பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டிற்குப்) பின்பே இத்தொகுதிக்குப் பத்துப்பாட்டு என்று பெயர் வழங்கலாயிற்று என்று கொள்வது பொருத்தமாகும்.'


11. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் இளம்பூரணர் உரையை ஏடுகளிற்கண்டு, இளம்பூரணர் 'பத்துப் பாட்டு' என்று கூறவில்லை என்று குறித்துள்ளார்கள். ஆயின் அச்சிடப்பட்ட நூல்களில் செய்யுளியல் நூற்பா 150இன் உரையில் 'பத்துப் பாட்டு' என்பது காணப்படுகிறது. இவருக்குப்பின் வந்த பேராசிரியர் 'பாட்டு' என்றே பல இடங்களில் குறித்துள்ளார். தமக்கு முற்பட்ட இளம்பூரணர் பத்துப் பாட்டு என்று குறித்திருப்பாராயின், பின் வந்த பேராசிரியர் அதனையே குறித்திருத்தல் இயற்கை யன்றோ? எனவே, இளம்பூரணர் பத்துப்பாட்டு’ என்று குறிக்கவில்லை என்பதே உண்மையாகும்.

12. கலைக்களஞ்சியம், தொகுதி 7, பக். 631, 13. கலைக்களஞ்சியம், தொகுதி 8, பக். 106. 14. இலக்கிய தீபம், பக். 40; பத்துப்பாட்டிற்கு இலக்கணம் கூறும் பன்னிரு பாட்டியல் கி. பி. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென்னலாம்.

பத்துப்பாட்டுச் செய்திகள்

1.திருமுருகாற்றுப்படை : இதன்கண் முருகன் கோயில் கொண்டுள்ள திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் , திரு ஆவினன்குடி, திரு ஏரகம் ஆகிய தனித்தனி இடங்கள் நான்கு குறிக்கப்பட்டுள்ளன; பின்பு பழம் உதிர்கின்ற. சோலைகளையுடைய மலைகளை விரும்பியுறையும் முருகன் எல்லாக் குன்றுகளிலும் சதுக்கங்களிலும் நீர்த்துறைகளிலும் பிற இடங்களிலும் வாழ்கின்றான் (முருகன் எங்கும் உறைபவன்) என்பது குறிக்கப்பட்டுள்ளது. 317 அடிகளைக் கொண்ட இந்நெடும்பாட்டு ஆறு பிரிவுகளை உடையது. முதற் பிரிவில்-முருகனது திருவுருவச் சிறப்பு, அப்பெருமான் அணியும் மாலைகள், சூரர மகளிர் செயல்கள், சூரபதுமன் அழிவு, கூடலின் சிறப்பு, திருப்பரங்குன்றத்தின் இயற்கை வளம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில்-முருகனது யானையின் இயல்பு, அப் பெருமானுடைய ஆறு திருமுகங்களின் செயல்கள், பன்னிரண்டு திருக்கைகளின் செயல்கள், அவன் திருச்சீரலை வாயில் எழுந்தருளியிருத்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பிரிவில்-முருகனை வழிபடும் முனிவர் ஒழுக்கம், அவனை வழிபடவரும் தேவர்-மகளிர் இயல்புகள், திருமால் முதலிய தேவர்கள் பற்றிய செய்திகள், திருவாவினன் குடியில் முருகன் கோவில் கொண்டிருத்தல் ஆகியவை கூறப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில்-மந்திரம் ஒதுவார் இயல்பும் அருச்சகர் நிலையும் முருகன் திருஏரகத்தில் இருத்தலும் கூறப்பட்டுள்ளன. ஐந்தாம் பிரிவில்-குன்றக்குரவையின் நிகழ்ச்சி, ஆடு மகளிர்-பாடு மகளிர் இயல்பு, முருகனுடைய அணி, ஆடை செயல் முதலியன, அப்பெருமான் குன்றுதோறும் உவந்து ஆடுதல் என்பவை இடம் பெற்றுள்ளன. ஆறாம். பகுதியில்-முருகன் எழுந்தருளியுள்ள நீர்த்துறை முதலிய. பல இடங்கள், தேவசாட்டி முருகனை ஆற்றுப்படுத்தும்

முறை அப்பெருமானை வழிபடும் முறை, அவனிடம் சென்று அருள் பெறும் முறை, முருகனுடைய அடியார் இயல்புகள். முருகன் அருள்புரியும் விதம், பழமுதிர் சோலை மலையின் வருணனை ஆகியவை கூறப்பட்டுள்ளன.

2.பொருநராற்றுப்படை: இப்பாட்டு 248 அடிகளை உடையது. சோழன் கரிகாலனிடம் பரிசில் பெற்று மீண்டு வந்த பொருநன் ஒருவன் பரிசில் பெறக் கருதிய பொருநன் ஒருவனை வழியிற் கண்டு, அவனைக் கரிகால் சோழனிடம் ஆற்றுப்படுத்தியதாக இது பாடப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்பவராவர். பொருநர் ஏர்க்களம் பாடுவோர் என்றும், போர்க்களம் பாடுவோர் என்றும், பரணி பாடுவோர் என்றும் பலவகைப்படுவர். அவருள் இப்பாட்டில் வரும் பொருநன் போர்க்களம் பாடு பவனாவன்.

பொருநர் ஊர் விழாவில் தங்கள் இசைக் கலைத்திறனைக் காட்டுதல், அவ்விழா முடிந்த பின்பு வேற்றுாரை நோக்கிச் செல்லுதல், பாலையாழ் வருணனை, இவர்கள் வாசிக்கும் பாலைப்பண்ணைக் கேட்டு ஆறலை கள்வர் தம் கொடுஞ்செயலை மறந்து அன்புடையராதல், விறலியின் வருணனை, கரிகாற் சோழன் பரிசிலரை விரும்பி உபசரித்தல், உணவு வகை, பொருநர் விறலியர் முதலியோர் பரிசு பேறுதல், கரிகாலன் வீரச்செயல்கள், காவிரியின் சிறப்பு முதலியன இந்நெடும்பாட்டில் இடம் பெற்றுள்ளன.

3.சிறுபாண் ஆற்றுப்படை: 269 அ டி க ைள க் கொண்ட இப்பாட்டு, சீறியாழை வாசித்த பாணனொருவனைப் பரிசில் பெற்ற சிறுபாணன் ஒய்மானாட்டு நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் இடைக்கழி நாட்டு கல்லூர் நத்தத்தனார் என்பவர் இடைக்கழி நாடு என்பது செங்கற்பட்டு மாவட்டத்து மதுராந்தகம் வட்டத்திலுள்ள கடற்கரைப் பகுதியாகும். அப்பகுதி உப்பங்கழிக்கும் கடலுக்கும் இடைப்

பட்ட நாடாகும். அதனால் இடைக்காழி நாடு எனப்பட்டது. அந்நாட்டில் நல்லூர் என்னும் ஊர் இன்றும் இருக்கின்றது. ஓய்மானாடு என்பது திண்டிவனம் வட்டத்தின் பெரும்பகுதியும், விழுப்புரம் வட்டத்தின் கிழக்குப் பகுதியும் மதுராந்தகம் வட்டத்தின் தென்கோடிப் பகுதியும் சேர்ந்த நிலப் பரப்பாகும். இத்நாட்டுக்குத் தலைநகர் கிடங்கில் என்பது. இப்பண்டை நகரம் இன்றுள்ள திண்டிவனத்தின் பெரும் பகுதியாயிருந்தது,

இப்பாட்டில் மாவிலங்கை, எயில்பட்டினம் என்ற நகரங்களைப் பற்றிய செய்திகள், விறலியின் வருணனை, சேர சோழ பாண்டியர் தலைநகரங்களின் சிறப்பு, உமணர் செயல்கள், நல்லியக்கோடனுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பாரி பேகன் முதலிய வள்ளல்கள் எழுவரின் அரிய செயல்கள், நல்லியக்கோடனது வீரம், சிறுபாணனுடைய வறுமை நிலை, நெய்தல் நில இயல்பு, அதனை அடுத்த எயிற்பட்டினத்துப் பரதவர் வாழ்க்கை, முல்லை நில இயல்பு, அதனைச் சார்ந்த வேலூர் எயிற்றியர் விருந்தினரைப் பேணும் முறை, மருதநில இயல்பு. அதனைச்சேர்ந்த ஆமூர் உழவர் மகளிர் உபசரிப்பு, நல்லியக்கோடனுடைய நற்பண்புகள், அவன் பாணனை வரவேற்றுப் பரிசில் நல்கும் அருமை ஆகிய செய்திகள் கூறப்பட்டுள்ளன,

4. பெரும்பாண் ஆற்றுப்படை: ஐந்நூறு அடிகளைக் கொண்ட இந்நெடும்பாட்டு, காஞ்சி நகர மன்னனான தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசு பெற்ற பெரும்பாணன் ஒருவன் பரிசில் பெற விரும்பிய மற்றொரு பெரும் பாணனை அத்தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தியதாகப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவர். சிறிய யாழை வைத்திருந்தவன் சிறுபாணன் என்று அழைக்கப்பட்டாற் போலப் பெரிய யாழை இசைத்தவள் பெரும்பாணன் எனப்பட்டான்.

இப்பாட்டில் யாழின் வருணனை, இளந்திரையன் ஆட்சிச்சிறப்பு, உப்பு வாணிகர் இயல்பு, நாட்டு வழிகளைக் 

318

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

காப்பவர் தன்மை, எயிற்றியர் செயல், கானவர் செயல் , வீரக்குடி மக்கள் இயல்பு, முல்லை நில மக்களின் செயல்கள், உழவர் செயல்கள், பாலை நிலத்தார் இயல்புகள், அந்தணர் ஒழுக்க முறை, நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு, பட்டினத்தின் (மாமல்லபுரம்) சிறப்பு, திருவெஃகாவில் திருமால் கிடந்த கோலம், காஞ்சி நகரின் சிறப்பு, இளந்திரையனுடைய வீரம் கொடை முதலிய பண்புகள், பாணரும் விறலியரும் மன்னனிடம் சிறப்புப் பெறுதல் முதலியன கூறப் பட்டுள்ளன.

5. முல்லைப் பாட்டு: 103 அடிகளை உடைய இப்பாட்டு முல்லை என்னும் ஒழுக்கத்தைப் பற்றியது. மனைவி, தன்னைப் பிரிந்து சென்ற கணவன் கூறியபடி அவன் வரும் வரையில் அவனது பிரிவை ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்தும் ஒழுக்கமே முல்லை என்பது. முல்லை ஒழுக்கம் பற்றிய பாட்டு முல்லைப் பாட்டு’ எனப் பெயர் பெற்றது. இதனைப் பாடியவர் நப்பூதனார் என்பவர். இவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகர்.

பிரிந்து சென்ற தலைவன் வரத்தகும் சகுனத்தைப் பெருமுது பெண்டிர் பார்த்தல், போருக்குச் சென்ற தலைவன் தங்கியுள்ள பாசறையின் அமைப்பு, அங்குப் பாகர் யானைகளிடம் பழகும் தன்மை, அங்குள்ள அரசனது பள்ளியறையின் இயல்பு, அங்கு வீரமங்கையர், நாழிகை சொல்பவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் செயல்கள், அரசன் பகைவர் தாக்குதலால் துன்புற்ற தன் படைகளைப் பார்வையிடுதல், தலைவி தலைவனைக் காணாமல் துன்புறுதல், கார்காலத்து மீண்டுவரும் தலைவன் வழியில் காணும் காட்சிகள் முதலியன இப்பாட்டில் இடம் பெற்றுள்ளன .

6.மதுரைக்காஞ்சி மதுரைக்காஞ்சி என்பது "மதுரையில் அரசனுக்குக் கூறிய காஞ்சி' எனப் பொருள் படும். யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை முதலிய பல்வேறு நிலையாகையைச் சான்றோர் கூறுதல் காஞ்சித்

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

319

திணை எனப்படும். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடு பேறு நிமித்தமாகப் பலவகை நிலையாமையைக் கூறுவது இந்நெடும் பாட்டின் குறிக்கோளாகும். இதனைப் பாடியவர் மாங்குடி மருதனார் என்பவர். அவர் நெடுஞ்செழியனால் மதிக்கப்பெற்ற புலவருள் முதல்வர். மதுரைக் காஞ்சி என்னும் பாடல் 782 அடிகளை உடையது.

இந்நீண்ட பாட்டில் நெடுஞ்செழியன் படையெடுப்பு, போர்ச் செயல்கள். பகைவர் நாடுகளை அழித்தல், இருபெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வெற்றி கொள்ளல், பரதவரை அடிப்படுத்தல், பகைவர் நாட்டுப் பொருள்களை நட்டோர்க்கும் புலவர் முதலியோர்க்கும் வழங்கும் பாண்டிய னுடைய சிறப்பியல்புகள், அவன் முன்னோர் அருஞ்செயல்கள், பாண்டிய நாட்டின் ஐந்திணை வளங்கள், ம துரையின் சிறப்பு, மதுரைக் கடைத்தெரு பற்றிய விவரங்கள், மக்கள் செயல்கள், மன்னன் நாட்காலையில் வீரர்க்கும் பரிசிலர்க்கும் களிறு முதலியவற்றை வழங்குதல் மன்னன் மேற்கொள்ள வேண்டும் கடமைகள் முதலியன அழகுறக் கூறப்பட்டுள்ளன.

7. நெடுநல்வாடை: 188 அடிகளைக் கொண்ட இப்பாடல், பகைமேற் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் கோப்பெருந்தேவிக்கு அவ்வருத்தம் நீங்கும் படி அவன் பகையை வென்று விரைவில் வருவானாக என்று கொற்றவையைப் பரவும் ஒருத்தி கூறும் முறையில் அமைந்துள்ளது. இதனைப் பாடிய புலவர் நக்கீரனார் என்பவர்.


  • இப்பாட்டில் நெடுஞ்செழியன் பெயரோ, தலையாலங்கானப் போரோ குறிக்கப்படவில்லை. ஆயினும் இப்பாடல் நெடுஞ்செழியனைப் பற்றியதென்று நச்சினாக்கின்ரியர் கூறியுள்ளார். அவர் கூற்றைத் தழுவியே இப்பாடல் நெடுஞ்செழியனைப் பற்றியது என்று இங்குக் கூறப்பட்டுள்ள்து.

நெடுநல்வாடை என்பது 'நெடிதாகிய நல்ல வாடை' என விரியும். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு ஒரு நாள் ஓரூழிபோல நெடிதாகிய வாடையாய், அரசன், மனைவியோடு உறைவதில் மனமற்றுப் பகைவர் நாட்டில் பாசறை அமைத்துத் தங்கியிருப்பதால் அவனுக்கு நல்லதாகிய வாடையாயினமையின், 'நெடுநல்வாடை' எனப் பட்டது.

இப்பாடலில்-குளிர்காலத்தில் மக்களும் விலங்குகள் பறவைகள் முதலியனவும் குளிரால் வருந்தியிருக்கும் நிலை, அரசமாதேவி வாழும் அரண்மனை அமைப்பு, அவள் உறங்கும் கட்டிலின் சிறப்பு, அவள் மன்னனின் பிரிவால் வருந்தும்நிலை, அவளது வருத்தம் தீரச் செவிலியரும் பணிப் பெண்களும் ஆற்றும் செயல். பாசறையில் அரசன் நடந்து சென்று, புண்பட்ட வீரர்களைக் கண்டு முக மலர்ச்சியோடு ஆறுதல் கூறுதல் என்பன அழகுறக் கூறப்பட்டுள்ளன. மேலும் இப்பாடலில் இடையிடையே பூவின் மலர்ச்சிகொண்டு பொழுதை அறியும் வழக்கம், மகளிர் மாலைக் காலத்தைக் கொண்டாடுதல், அரண்மனை வகுக்கும் முறை முதலியவை. கூறப்பட்டுள்ளன.

8. குறிஞ்சிப்பாட்டு : 261 அடிகளைக் கொண்ட இப்பாடல் குறிஞ்சி ஒழுக்கத்தைப் பற்றியது. இதனைப் பாடியவர் கபிலர் என்பவர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச் சுவையை ஊட்டக் கபிலர் இப்பாடலைப் பாடினார். களவு வாழ்க்கையில் தலைவிக்குக் காவல் இருந்தது. அவள் தலைவன் வரும் வழியிலுள்ள கேடுகளை எண்ணி அஞ்சினாள். அதனால் அவள் பாங்கிக்கு அறத்தொடு நின்றாள். அப்பாங்கி அதனைச் செவிலிக்கு நயம்பட உரைக்கும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுள் தலைவி தலைவனைச் சந்தித்தல், அவருள் அன்பு உண்டாதல், குறிஞ்சி நிலச் சிறப்பு, குறிஞ்சி நிலத்து மலர்கள் 99இன் பெயர்கள் முதலியவையும் கூறப்பட்டுள்ளன, குறிஞ்சித்

திணை பற்றிப் பாடுவதில் கபிலர் வல்லவர் என்பதற்கு இக்குறிஞ்சிப் பாட்டு ஏற்ற சான்றாகும்.

9. பட்டினப்பாலை : பட்டினம் என்பது, சோழர் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்தைக் குறிக்கின்றது. பாலை என்பது, தலைவன் தலைவியை விட்டுப் பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாகும். எனவே, பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைப் பாடல் 'பட்டினப் பாலை' எனப்பெயர் பெற்றது. தலைவியை விட்டுப் பிரிந்து பொருள் ஈட்டுவதற்கு வேற்று நாட்டுக்குச் செல்ல விரும்பிய தலைவன். 'புகழ் மிக்க காவிரிப்பூம்பட்டினத்தைப் பெறுவதாயினும் என் மனைவியைப் பிரிந்து வாரேன்; கரிகால் வளவன் பகைவர்மீது செலுத்திய வேலினும் கொடியது யான் கடக்க விரும்பும் கானம்; என் மனைவியின் தோள் அச்சோழனது செங்கோலினும் குளிர்ச்சியுடையது', என்று கூறிச் செலவு தவிர்ந்ததாக இப்பாடல் அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பவர்.

இப்பாட்டில் சோழநாட்டின் சிறப்பு, காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, கரிகாற்சோழனின் வீரச்செயல்கள், உறையூரை அவன் வளப்படுத்தினமை முதலியவை கூறப்பட்டுள்ளன. கரிகாலனது வாழ்க்கை, காவிரியின் சிறப்பு, சோழநாட்டுக் குடிவளம், பரதவர் செயல்கள், கடல் வாணிகம், வணிகர் நல்லியல்புகள், நகரத்தில் உயர்த்தப்பட்ட பலவகைக் கொடிகள் பற்றிய விவரங்கள், கரிகாலன் உறையூரில் செய்த நற்பணிகள் முதலிய செய்திகள் இப்பாட்டில் விளக்கமாக இடம் பெற்றுள்ளன.

10. மலைபடுகடாம் : 583 அடிகளைக் கொண்டுள்ள இந்நெடிய பாடல், செங்கண்மாத்து வேள் நன்னன்சேய் நன்னன் என்பவனிடம் பரிசில் பெற்ற கூத்தன் ஒருவன், பரிசில் பெற வரும் கூத்தனை அவ்வேளினிடம் ஆற்றுப் படுத்தியதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர்

த-21 இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் என்பவர். இரணிய முட்டம் என்பது மதுரையை அடுத்த ஆனைமலைப் பகுதி-அழகர் மலைப்பகுதி-இவ்விரண்டையும் சூழஉள்ள பகுதி ஆகிய சிறிய நிலப்பகுதியின் பெயராகும். இந்நிலப்பகுதியில் சிறு குன்றுகளும் பெருங்குன்றுகளும் மலைகளும் மிக்குள்ளன.

மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் 'கடாம்' எனச் சிறப்பித்தமையால் இப்பாட்டு "மலைபடுகடாம்' எனப் பெயர் பெற்றது. இது கூத்தர் ஆற்றுப்படை எனவும் வழங்கும்.

வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள சவ்வாது மலைத் தொடரும் அதனைச் சூழ உள்ள நிலப்பகுதியும் நன்னனது நாடாகும். அடிவாரத்திலிருந்து மலைமீது ஏறிச்சென்று, மலையில் பாய்ந்தோடும் சேயாற்றைத் தாண்டி அதன் கரை வழியே நடந்து தரையில் அமர்ந்திருந்த செங்கண்மா என்னும் நன்னனது நகரத்தை அடையும்வரையில் மலையடிவார ஊர்கள், மலைமேலிருந்த ஊர்கள், காடுகள், ஊர் மக்கள் இயல்புகள், அவர்கள் விருந்தினரை உபசரிக்கும் முறை, ஆங்காங்குக் கிடைத்த உணவு வகை, மலைமீது காரியுண்டிக் கடவுள் பற்றிய விவரம், நன்னனது கொடைத்திறன் இன்ன பிறவும் இந்நெடிய பாட்டில் அழகுறக் கூறப் பட்டுள்ளன.

சிறப்புச் செய்திகள்

உயிர்க் காட்சிச்சாலை : பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் அவனது தலைநகரான மதுரை மாநகரத்தில் கரடி, புலி முதலிய கொடிய விலங்குகள் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன என்று மதுரைக் காஞ்சி (வரி 677) கூறுகின்றது. இக்காலத்துச் சென்னை போன்ற மாநிலத் தலைநகரங்களில் வைக்கப்பட்டுள்ள உயிர்க் காட்சிச்சாலை இத்தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே இருந்தது என்பது இதனால் தெரிகிறதன்றோ? வாணிகம் : உள்நாட்டு வாணிகத்தில் கழுதைகளும் பெரும்பங்கு கொண்டன. அவை மிளகு முதலியசரக்குகளைக் கொண்ட பண்டப் பொதிகளைச் சுமந்து வரிசையாகச் சென்றன. உப்பு ஏற்றப்பட்ட வண்டிகளை எருதுகள் இழுத்துச் சென்றன (பெ. ஆ. படை, 78-80). தமிழகத்தில் மலை நாட்டிலிருந்து சந்தனம், அகில், மிளகு முதலிய பொருள்கள் தரைவழியே வந்தன.

தொண்டை நாட்டுத் துறைமுக நகரங்களுக்கு அயல் நாடுகளிலிருந்து குதிரைகள் வந்தன (பெரும்பாண், வரி 320). முத்து, சங்கு, வளை, பலவகை உணவுப்பொருள்கள், தீம்புளி, வெள்ளுப்பு, மீன் உணக்கல், உயர்ந்த வேலைப் பாடமைந்த நகைகள் ஆகியவை மேல் நாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின (ம. கா. வரி 315-322). காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகப் பகுதியில் மேலைநாடுகளிலிருந்து வந்த குதிரைகளும், தென்கடல் முத்தும், கீழ்க்கடல் பவளமும், இலங்கை உணவுப் பொருள்களும், பர்மா நாட்டுப் பொருள்களும் இறக்குமதியாயின. அவற்றுடன் சேரநாட்டு மிளகு மூட்டைகளும், வடமலையில் கிடைத்த மணிகளும் பொன்னும் இடம் பெற்றிருந்தன.

இக்கடல் வாணிகம் ஒய்வின்றி நடைபெற்றது என்பதைப் பட்டினப்பாலை தெளிவாகத் தெரிவிக்கின்றது (வரி 120- 134). பல மொழிகள் பேசிய பல நாட்டு வணிகரும் பூம்புகார் நகரில் வாணிகத்தின் பொருட்டு வாழ்ந்துவந்தனர் என்று பட்டினப்பாலை (வரி 216.217) பகருகின்றது.

இக் கடல் வாணிகத்தில் பங்குகொண்ட பல்வேறு நாட்டவருள் யவனர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். “யவனர் கொண்டு வந்த பொருள்களுள் பாவை விளக்கு, அன்னப் பறவை விளக்கு என்பவை குறிப்பிடத்தக்கவை.15 யவனர் அரையாடையும் சட்டையும் அணிந்திருந்தனர். இவர்கள் அர


15. நெடுநல்வாடை, வரி 101-102; பெரும் பாணாற்றுப்படை, வரி 316-317. சாங்கப்பணியில் ஈடுபட்டிருந்தனர். சட்டையிட்ட வெளி நாட்டு ஊமையர் அரசன் பாதுகாவலராய் இருந்தனர். அவர்கள் ‘மிலேச்சர்’ எனப்பட்டனர்.[1]

அந்தணர் செல்வாக்கு : தொல்காப்பியருக்கு முன்னரே வடமொழியாளர் தமிழகத்தில் தங்கித் தங்கள் மொழியையும் வேத நெறியையும் இந்நாட்டில் பரப்பலாயினர் என்பது தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை நூல்களைக் கொண்டு முன்பே உணர்த்தப்பட்டது. காலம் செல்லச் செல்ல வேதநெறி தமிழகத்தில் வேரூன்றிப் பரவலாயிற்று என்பதும் முன்னரே விளக்கப்பட்டது. கீழ்வரும் பத்துப் பாட்டுச் செய்திகள் இவ்வுண்மையை நன்கு உணர்த்துகின்றன.

பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை சங்ககாலத்தது அன்று என்பது முன்பே கூறப்பட்டுள்ளதன்றோ? அஃதொழிந்த ஒன்பது பாடல்களுள் நான்கு பாடல்களைப் பாடியவர் அந்தணராவர். இளந்திரையன்மீது பெரும் பாணாற்றுப்படையும் கரிகாலன் மீது பட்டினப்பாலையும் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், குறிஞ்சிப் பாட்டைப் பாடிய கபிலர், நன்னன்மீது கூத்தராற்றுப் படையைப் பாடிய இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனார் ஆகிய மூவரும் அந்தணப் புலவாாவர்.[2] இவருள் உருத்திரங்கண்ணனார் கரிகாலனால் நூறாயிரம் பொன் பரிசளிக்கப் பெற்றவர் என்று கலிங்கத்துப் பரணி (இராச பாரம்பரியம், 21) கூறுகிறது. கரிகாலன் அப் புலவர்க்குப் பரிசிலாக வழங்கியிருந்த பதினாறுகால் மண்டபம் ஒன்று உறையூரில் இருந்தது. முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி. பி. 1219இல் உறையூரைத் தரைமட்ட

மாக்கியபொழுது, புலவருக்குப் பரிசிலாக வழங்கப்பட்ட இம் மண்டபத்தை மட்டும் இடிக்காமல் விட்டுவிட்டான் என்று திரு வெள்ளறையில் உள்ள அச்சுந்தரபாண்டியன் கல்வெட்டுக் கூறுகின்றது.18

ஓய்மானாட்டு ஊர்களுள் ஆமூர் என்பது ஒன்று. அவ்வூரில் அந்தணர் நிறைந்திருந்தனர் என்று சிறுபாணாற்றுப்படை (வரி 187-188) செப்புகிறது, ஓய்மானாட்டு மன்னனது அரண்மனை வாயில் பொருநர்க்கும் புலவர்க்கும் அடை யாதது போலவே அருமறை காவின் அந்தணர்க்கும் அடை யாதது (வரி 204-206) என்று அப்பாட்டுக் குறிக்கின்றது. இச்செய்தி வேறு எந்த நூலிலும் குறிக்கப்படாதது என்பது கவனிக்கத்தகும். எனவே, புலவர். பாணர் - பொருநர் - கூத்தர் போலவே அந்தணரும் அரசர்களால் பிற்காலத்தில் சிறப்பிக்கப்பெற்றனர் என்பது இதனால் தெரிகிறது. ஆமூர், அந்தணர்க்கு விடப்பட்ட பிரமதேயச் சிற்றூராக இருந்திருக் கலாம் என்று கருதுவதும் பொருத்தமாகும்.

தொண்டைநாட்டுப் பல பகுதிகளையும் கடந்து காஞ் சிக்குச் செல்ல வழி கூறிய பெரும்பாணன், அவ்வழியில் வேதியர் வாழ்ந்த ஓர் ஊரைக் குறிப்பிட்டுள்ளான்; மறை

18. : 'வெறியார் தளவத் தொடைச்செய மாறன்

வெகுண்டதொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப்

பாலைக்கன்று நெறியால் விடுந்துரண் பதினாறு மேயங்கு

நின்றனவே.' திருவெள்ளறைக் கல்வெட்டு, செந்தமிழ்த் தொகுதி 41, பக் 215 கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலனால் விடப்பட்ட இம்மண்டபம் சுந்தரபாண்டியன் படையெடுப்பின் போது (கி. பி. 1219) இருந்தது என்பது கவனிக்கத் தகும். தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

காப்பாளர் உறைபதி' என்று அவன் கூறியிருப்பதை நோக்க, அவ்வூரும் பிரமதேயச் சிற்றூர் என்று கருதுதல் தகும். அங்கு இருந்த அந்தணர் வீடுகளில் கோழியும் நாயும் புகவில்லை. வீட்டை அடுத்துப் பந்தல் இருந்தது . அப்பந்தலின் ஒரு காலில் பசுக்கன்று கட்டப்பட்டிருந்தது. இல்லம் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது. அங்கு வளர்ந்த கிளிக்கு வேத ஓசை கற்பிக்கப்பட்டது. அவ்வில்லத்து அரசியாகிய பார்ப்பணி ஆவுதிக்கு உரிய நெற் சோற்றைப் பதமறிந்து சமைத்தாள். கொம்மட்டி மாதுளங் காய் மிளகுப்பொடி கலக்கப்பட்டுக் கறிவேப்பிலை அளாவப் பட்டு வெண்ணெயில் வேகவைக்கப்பட்டது. மாவடு ஊறுகாயும் உணவுப் பொருளாகப் பயன்பட்டது (பெ.ஆ. படை,

297-310).

அந்தணர்கள் தாம் தங்கியிருந்த இடங்களில் யாக சாலைகளை அமைத்திருந்தனர். ஒவ்வொரு யாகசாலையிலும் வேள்வித்தூண் (யூபம்) நடப்பட்டு இருந்தது என்று பெரும்பாணாற்றுப்படை (வரி 315-316) பேசுகின்றது. பூந்தாதினை உண்ணும் வண்டு ஒலி செய்வது போல வேதத்தை முழுதுணர்ந்த அந்தணர் துதிப்பாடல்களைப் பாடினர் என்று மதுரைக் காஞ்சி (வரி 655-656) கூறியுள்ளது. மதுரையில் பெளத்தர் பள்ளி, சமணர் பள்ளி இருந்தாற்போல அந்தணர் பள்ளியும் அமைந்திருந்தது. அப்பள்ளி மலையை உள்வெளியாக வாங்கி இருப்பிடம் ஆக்கினாற் போன்ற அமைப்பைப் பெற்றிருந்தது (ம.கா. வரி 474) .

யாகங்களைப் பண்ணிப் பெரிய சுவர்க்கத்து ஏறப் போகும் அந்தணர்கள் அரசனை அடக்குமாறு போல அமைச்சர்கள் அரசனிடத்திருந்த நன்மையும் தீமையும் நெஞ்சத்தாலே கண்டு அத்தீங்குகளை ஆராய்ந்து அவற் றிலே ஒழுகாமல் அடக்கினர் (ம. கா. வரி. 494-496) . இந்த உவமையிலிருந்து, வேதியராகிய அந்தணப் பெரியோர்கள் அரசனுக்கு அறிவுரை கூறும் (ஆசான் என்ற) உயர் நிலையில் இருந்தனர் என்பது தெளிவாகிறதன்றோ?

அதே பாடல், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், அந்தணர்க்குக் கூறிய முறைப்படி முன்னுள்ள கருமங்களை முடித்துப் பின்னர்த் தத்துவங்களை ஆராய்ந்து மெய்ப்பொருள் உணர்ந்து, வீட்டின்பம் எய்திய ஆசிரியரிடத்தே தானும் அம்முறையே சென்று வீட்டின்பத்தைப் பெற்றான் (வரி 759-762) என்று கூறுகின்றது. பாண்டியன் வேதியர் சொற்படி பல யாகங்களைச் செய்து முடித்தவன் என்பதை இச்செய்தி உணர்த்துகிறது.

அந்திக்கால நிகழ்ச்சிகளைக் குறிக்கும் குறிஞ்சிப்பாட்டு, “அந்தணர் அந்தி நேரத்தில் வேத நெறிப்படி சில தொழில்களை நிகழ்த்தினர்” (வரி, 225) என்று கூறியுள்ளது. "பூம்புகார் வணிகர் யாகங்களைச் செய்தனர், நான்மறை யோர் புகழ் பரப்பினர்' என்று பட்டினப்பாலை (வரி 200-202) குறித்துள்ளது. இச்செய்தியும் பிற சங்க நூல் களில் காணப்படாதது.

இதுகாறும் கூறப்பெற்ற அந்தணர் பற்றிய செய்திகளால், அந்தணர் அரசர்களிடம் தனி ஊர்களைப் பெற்று வாழ்ந்தனர், அரசர்களிடம் பரிசில் பெற்றனர், மன்னராலும் குடிகளாலும் மதிக்கப்பட்டனர், கல்வி கேள்வி ஒழுக்கங்களில் சிறந்திருந்தனர். புலவர்கள் தம் பாக்களில் பாடும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பன அங்கைக் கனியென விளங்குகின்றன அல்லவா?

புராணக் கதைகள் : திருமுருகாற்றுப் படையில் முருகன் இந்திரன் மகளான தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டமை (வரி 6), முருகன் சூரபதுமனைக் கொன்றமை (46, 60), முருகன் தாய்மார் அறுவரால் வளர்க்கப்பட்டமை (255) , சிவபெருமான் முப்புரம் எரித்தமை (154), இந்திரன் நூறு வேள்விகள் செய்தமை (155-156) , திருமாலின் கொப்பூழிலிருந்து தோன்றிய தாமரை மலரில் நான்முகன் உண்டானமை (164-165), ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் 

328

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

(167), பதினெண் கணங்கள் (168), நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரமசரிய விரதம் காத்த அந்தணர் (179), முருகன் மலைமகள் (பார்வதி) மகன் (257), கொற்றவை சிறுவன் (வரி 258) என்னும் புராணச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சிறுபாணாற்றுப் படையில் அருச்சுனன் தமையன் வீமன் என்பதும் அவன் மடைத்தொழிலில் சிறந்தவன் என்பதும் அவனது நூற்படி நல்லியக்கோடன் அரண்மனையில் உணவு சமைக்கப்பட்டது (வரி 239.241) என்பதும் கூறப்பட்டுள்ளன. அதே பாட்டில் வேலூரின் பெயர்க் காரணம் கூறப்பட்டுள்ளது. நல்லியக்கோடன் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்டான். அப்பெருமான், “இக்கேணியில் உள்ள பூவை எடுத்துப் பகைவர்மீது எறி,’’ என்று கனவில் தோன்றிக் கூறினான். நல்லியக்கோடன் கேணியிலிருந்த பூவை எடுக்க அது வேலாக மாறிற்று. அன்று முதல் அக்கேணியிருந்த ஊர் வேலூர்' என்று பெயர் பெற்றது (172-173).

திருமாலின் கொப்பூழில் தோன்றிய தாமரையிலிருந்து பிரமன் தோன்றியமையும் (402-403), பாண்டவர் கவுரவர் போரும் (415-417) பெரும்பாணாற்றுப் படையில் கூறப்பட்டுள்ளன. முருகன் பகைவர்மீது செல்லலும் (183), திருமால் பிறந்த ஒணநாள் விழாவும் (591) மதுரைக் காஞ்சியில் இடம் பெற்றுள்ளன. உரோகிணி சந்திரனை விட்டுப் பிரியாதவள் என்பது நெடுநல்வாடையில் (163) கூறப்பட்டுள்ளது. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரினன் என்பது குறிஞ்சிப்பாட்டில் (215.216) இடம் பெற்றுள்ளது.

"சிவன் அல்லது ருத்திரன் என்னும் கடவுள் மலைக்குரிய கடவுளாக வடவரால் கருதப்பட்டான். ஆயின், தமிழர் முருகனை மலைக்குரிய கடவுளாகக் கருதினர். வேதகாலத்தில் சுப்பிரமணிய வணக்கம் இல்லை. இந்திரன் பணியாளரான அக்கினியும் வாயுவும் சுப்பிரமணியர் என்ற ழைக்கப்பட்டனர் என்று தைத்ரீய ஆரணியகம் கூறுகிறது. அந்நூலில் அச்சுப்பிரமணியன் வழிபாட்டுக்குரிய சுலோகங்கள் இல்லை. ஆயின், இதிகாச காலத்தில் கார்த்திகேயன் அல்லது சுப்பிரமணியன் பிறப்புப்பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. அக்கடவுள் உருத்திரன் அல்லது அக்கினியின் மகனாகக் கூறப்பட்டுள்ளான். உருத்திர வணக்கம் அல்லது சிவ வணக்கத்தின் வளர்ச்சியின் பயனாகவே சுப்பிரமணிய வணக்கம் தோன்றியிருக்கலாம். தென்னாட்டவர் தங்கள் முருகனை இச்சுப்பிரமணியனாகக் கருதி வழிபடக் கருதினர் என்ளலாம்.[3]

வடசொற்கள்

திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பத்துப்பாடல்களிலும், சில வடசொற்களே காணப்படுகின்றன, அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கவை கீழ்வருவனவாகும்:

(1) மகரம், பிண்டி, அவுணர், மந்திரம், அங்குசம் (திருமுருகாற்றுப்படை).

(2) மாத்திரை, மது (பொருநர் ஆற்றுப்படை).

(3) ஆரம். இமயம், தெய்வம், நாகம், நித்திலம், கோபம், நேமி (சிறுபாணாற்றுப்படை).

(4) பூதம், விசயம், கின்னரம் (பெரும்பாணாற்றுப்படை)

(5) படம், மிலேச்சர், கடகம் (முல்லைப்பாட்டு).

(6) யூபம், சலம், நியமம், பதாகை, ஆதி, அரமியம், அந்தி, தூரியம், வேதம், சாவகர், ஆவுதி அமிர்து, மாயம், கணம், அவுணர், ஓணம், சாணம், சமம், சூதர், மாகதர், வேதாளிகர், மதுரை (மதுரைக் காஞ்சி).

(7) சாலேகம், உரோகிணி (நெடுநல் வாடை).

(8) திலகம், சண்பகம், நந்தி, சேமம் (குறிஞ்சிப்பாட்டு).

(9) மகம், நாடகம், மஞ்சிகை, அமரர் (பட்டினப்பாலை).

(10) வதுவை, தேம் (தேசம், தேயம்), வாதி, நிதி (மலைபடுகடாம்).[4]


  1. முல்லைப்பாட்டு, வரி 59-56.
  2. தொல்காப்பியம், மரபியல், நூற்பா 74, பேராசிரியர் உரை.
  3. சி. வி. நாராயண அய்யர், தென்னிந்தியாவில், சைவ சமயத் தோற்றமும் தொடக்க வரலாறும், பக். 192.
  4. சிறுபாணனை ஆற்றுப்படுத்திப் பாடப்பட்டது சிறு பாணாற்றுப்படை எனவும், பெரும்பாணனை ஆற்றுப்படுத்தியது பெரும்பாணாற்றுப்படை எனவும், பொருநனை ஆற்றுப்படுத்தியது பொருநராற்றுப்படை எனவும் வழங்கினாற் போலவே கூத்தரை ஆற்றுப்படுத்தியது கூத்தராற்றுப்படை என்றே சங்ககாலத்தில் பெயர் பெற்றிருத்தல் வேண்டும். இதுவே முறையாகும். இடைக்காலத்தில் பொருத்த மற்ற முறையில் இப்பாடலுக்கு ‘மலைபடு கடாம்’ என்று எவரோ பெயரிட்டுவிட்டனர் எனக் கொள்வதே பொருத்தமாகும். இவ்வாறே புலவர் ஆற்றுப் படையைப் பிற்காலத்தார். திருமுருகாற்றுப்படை என மாற்றிவிட்டனர் என்று நினைத்தல் தகும்.