தமிழ்மொழி இலக்கிய வரலாறு/மதுரையில் தமிழ்ச்சங்கம்

விக்கிமூலம் இலிருந்து

5. மதுரையில் தமிழ்ச் சங்கம்

முச்சங்கங்கள் பற்றிய செய்தி

இறையனார் களவியல் உரையில் நாலடி, சீவக சிந்தாமணி முதலிய நூல்களின் கருத்தும் சொற்றொடரும் காணப்படுவதால் அவ்வுரை பத்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதெனக்கொள்ளுதல் வேண்டும். பெரும்பாலும் 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் அவ்வுரை தோன்றியது எனக் கொள்ளுதல் மிகவும் பொருத்தமாகும்.[1] அவ்வுரையில் முச்சங்கங்களைப் பற்றிக் கீழ்வரும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

இன்றுள்ள கள்ளிமுனைக்குத் தெற்கே ஒரு காலத்தில் பாண்டிய நாடு விரிவடைந்திருந்தது. அங்குப் பாண்டியன் தலைநகரம் இருந்தது. அக்கோநகரில் பாண்டியன் ஆதரவில் தமிழ் வளர்க்கச் சங்கம் ஒன்று தோற்றுவிக்கப்பெற்றது. அதனில் சிவபெருமான், முருகக் கடவுள், அகத்தியர்[2] உள்ளிட்ட 549 பேர் இருந்தனர். 4449 புலவர் தமிழாராய்ந்தனர். அச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்தது. அத்தலைநகரமும் அந்நிலப் பகுதியும் கடல் கொந்தளிப்புக்கு இரையாயின.

பின்பு கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது. அதனில் அகத்தியர், தொல்காப்பியர் உள்ளிட்ட 59 பேர் இருந்தனர். 3700 புலவர் தமிழ்ப் பாடல்களைக் செய்தனர். இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. பின்பு கபாடபுரமும் கடலுள் ஆழ்ந்தது.

அதன் பின்பு இன்றுள்ள மதுரையில் ஒரு சங்கம் ஏற்பட்டது இச்சங்கத்தில் நக்கீரர் உள்ளிட்ட 49 புலவர் இருந்தனர். 449 புலவர் தமிழ்ப்பாக்களைச் செய்தனர். இச்சங்கம் 1850 ஆண்டுகள் இருந்தது. இங்ஙனம் மூன்று சங்கங்கள் இருந்தன என்பதற்கு இக்கூற்றைத் தவிர வேறு சான்றில்லை. ஆயின், மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்தது என்பதற்கு இலக்கியச் சான்றும் பட்டயச் சான்றும் இருக்கின்றன.

சங்கம் இருந்தமைக்குப் பிற்காலச் சான்றுகள்

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தருமி பொற்கிழி பெற்றதைத் தம் பாடலில் கீழ்வருமாறு குறித்துள்ளார்:

“நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்களகக் கிழிதருமிக் கருளி னோன்காண்”

என்பது அப்பர் தேவாரம் (6.76-3)

கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள்,

“சங்கத் தமிழ்”

என்று திருப்பாவையில் (செ. 30) குறித்துள்ளார்.

அதே நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார்,

“சங்க முகத்தமிழ்”

என்று பெரிய திருமொழியிற் (3.4.10) பாடியுள்ளார் . கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர்,

“உறைவான் உயர்மதிற் கூடலில் ஆய்ந்தவொள் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ”

என்று மதுரையில் புலவர் தமிழாராய்ந்த திறத்தைத் திருக் கோவையாரிற் (20) குறித்துள்ளார்.

அகநானூற்று உரைப்பாயிரம் செய்த இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் அப்பாயிரத்தில்,

“பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண்
அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து
வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை”

என்று கூறியிருத்தல் கவனிக்கத் தக்கது.

நல்லிசைச் சான்றோர் மதுரையில் பாண்டியர் அவையில் கூடியிருந்து முத்தமிழையும் வளர்த்தனர் என்பதை, இவ்வடிகள் தெரிவிக்கின்றன அல்லவா?

யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கண நூல் கி. பி. 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கலாம்.[3] அந்நூலில் வரும் மேற்கோள் செய்யுள் ஒன்று, ‘சேரன் வில் சிறப்பை உடையவன்; பாண்டியன் தமிழ்ச் சிறப்பு உடையவன்; சோழன் நெல்சிறப்பை உடையுவன்’, என்னும் பொருள்பட வந்துள்ளதைக் காண்க.

“வில்லுடையான் வானவன் வியாத் தமிழுடையான்
பல்வேறுக டற்றானைப் பாண்டியன் - சொல்லிகவா

வில்லுடையான் பாலை யிளஞ்சாத்தன் வேட்டனே
நெல்லுடையான் நீர்நாடர் கோ”
[4]

கி.பி 12- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர், சோழ நாட்டைப் ‘புனல் நாடு’ என்றும், பாண்டிய நாட்டைத் தென் தமிழ்நாடு என்றும் குறித்துள்ளார். மேலும், அவர் ‘பாண்டிய நாடு முத்துகளுக்கும் முத்தமிழுக்கும் பெயர் பெற்றதாதலால் தேவர் நாட்டிலும் விஞ்சியது’, என்றும் கூறியுள்ளார். அவர் பாடிய செய்யுட்களைக் கீழே காண்க:

“அனைய பொன்னி அகன்புனல் நாடொரீஇ
மனையின் மாட்சி குலாமலை மண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்
இனிய தென் தமிழ் நாடுசென் றெய்தினார்”

“அத்தி ருத்தகு நாட்டினை யண்டர்நா(டு)
ஒத்திருக்குமென் றாலுரை யொக்குமோ
எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்து முத்தமி ழுந்தந்து முற்றலால்”
[5]


கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் பெரும்பற்றப் புலியூர் நம்பி பாடிய திருவிளையாடற் புராணத்திலும், 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணத்திலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பல செய்திகள் காணப்படுகின்றன.

புறத்திரட்டில் சேர்க்கப்பட்டுள்ள ஆசிரிய மாலை என்னும் பழைய நூலின் செய்யுள் ஒன்றில்,

“பாடு தமிழ்வளர்த்த கூடல்”

என்று மதுரை பாராட்டப்பட்டுள்ளது. ‘ஆசிரிய மாலை’யின் காலம் திட்டமாகக் கூறக்கூடவில்லை யாயினும், பழங்கால நூல் என்பதில் ஐயமில்லை. நச்சினார்க்கினியர் காலம் ஏறத்தாழக் கி.பி. 14-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகும். அவர் திருமுருகாற்றுப்படை உரையில்,

"சோமன் வழிவந்த பாண்டியநின்

 நாட்டுடைத்து நல்ல தமிழ்"

என்னும் இரண்டு வரிகளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். எனவே, இவ்விரண்டு வரிகளும் அவர் காலத்துக்கும் முற்பட்ட ஒரு பழம் பாடலைச் சேர்ந்தது என்பது தெளிவாகும்.

இங்ஙனம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் ஒவ்வொரு நூற்றாண்டிலும் வாழ்ந்து மறைந்த புலவர் பெருமக்கள் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது என்பதைத் தம் பாக்களில் குறித்துள்ளமை ஆழ்ந்து சிந்திக்கத்தகும். ‘மதுரையில் பாண்டியர் ஆதரவில் தமிழ்ச் சங்கம் ஒன்று நடைபெற்று வந்தது-அதன்கண் புலவர் பலர் கூடி முத்தமிழையும் ஆராய்ந்தனர்-நூல்கள் பல செய்தனர்-பிறர் பாடிய நூல்களை ஏற்றுக்கொண்டனர்,’ என்ற கருத்துத் திருநாவுக்கரசர் காலம் முதல் புலவர் பெருமக்களிடையே நிலவியிருந்தது என்பதை இதுகாறும் கூறப்பெற்ற சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன அல்லவா? இங்ஙனம் பின்னோரால் குறிக்கப்பெற்ற புலவர் பேரவை ஒன்று திருநாவுக்கரசருக்கு முன்பு தோன்றிய தொகை நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காவியங்களிலும் குறிக்கப்பட்டுள்ளதா? என்பது இனி ஆராயத்தகும்.

அப்பர்க்கு முற்பட்ட சான்றுகள்
1. மதுரைக் காஞ்சியில்
(வரி 761-762)

"தொல்லாணை கல்லாசிரியர்
 புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
 நிலந்தரு திருவின் நெடியோன்"

என வந்துள்ள அடிகள், ஆசிரியர் பலர் கூடியிருந்த பேரவையைக் குறிக்கும் என்பது தெளிவு. இது பற்றி மகா வித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

“இதன் கண் ‘நல்லாசிரியர் புணர் கூட்டுண்ட புகழ்’ என்பது, நல்லாசிரியர் பலர் தம்முள் மனமொத்தியைந்த கூட்டத்தில் அவர்களோடு கல்வி இன்பம் துய்த்த புகழ் என்று கொள்க. நல்லாசிரியர் புணர்-நல்லாசிரியர் புணர்ப்பு (சங்கம்) என்றது, ஆசிரியர் தம்முளொத்துப் புணர்ந்த கலப்பினையுடைய அவையென்றபடி. பசுங்கூட்டென்பது பசிய பல பொருள்கள் கலந்ததற்கு வருவது போலப் புணர் கூட்டு-புணர்ந்த கூட்டம் எனினும் இயையும். ‘கூட்டுண்ட’ என்பது. ‘அவரோடு கலந்து துய்த்த’ எனினும் பொருந்தும். எங்கனமாயினும், இது பல்லாசிரியர் கூடியிருந்த நல்லவையையே குறிக்குமென்று துணிந்து கொள்க. ‘உண்ட’ வென்னும் வினையால் அக்கூட்டத்துள் இன்பம் துய்த்தவாறு கூறியதாம். இதற்கேற்பவே பனம்பாரனார் தொல் காப்பியப் பாயிரத்தில்,

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து”

எனக் கூறுதலும் நோக்கிக் கொள்க. இவ்வவைக்கண் தொல்காப்பியம் அரங்கேற்றியது கூறியவாற்றால், இவ்வவை, கற்ற பல பெரியார் குழுமிய நல்லவையாதல் தெள்ளிது. தமிழுக்குத் தலைசிறந்த இலக்கணமாகிய இப்பெருநூலைக் கேட்டு, அதன் நலந்தீங்கு காணவல்ல தமிழறிந்த பெரியார் இல்லாதது அவையுமாகாது அரங்கேற்றத்திற் குரியதுமாகாது என்பது கண்டு உண்மையுணர்க. இதனாற் பாண்டியர் கல்வி அவையம் கெடுங் காலத்துக்கு முன்னரே உளதாதலறியலாம்”.[6]

2. "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை"

என வரும் சிறுபாணாற்றுப்படை அடிகள் (வரி 66-67). மதுரையில் தமிழ்ப் புலவர்கள் வீற்றிருந்த தெருவைக் 60 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு.

குறித்தல் காணலாம். இதுபற்றி மகா வித்துவான் கூறுவதைக் கீழே காண்க:

"இதன்கண் நச்சினார்க்கினியர், 'தமிழ்நிலை பெற்ற மறுகின் மதுரை' எனக் கூட்டித் 'தமிழ் வீற்றிருந்த தெரு வினையுடைய மதுரை' என உரை கூறினார். தமிழ் வீற்றிருத்தல் தனியே நிகழாதென்பது யாம் கூறியறிவிக்க வேண்டுவதன்று. இது தமிழ்ப்புலவர் வீற்றிருந்த தெருவையே குறிக்கும் என்பது தெள்ளிது.”

“இமிழ்.குரல் முரசம் மூன்றுடன் ஆளுந் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே’’

என்று காரிக்கண்ணனார் பாடிய புறப்பாட்டு (58) அடிகள் உணர்த்தும் உண்மை யாது? மூன்று முரசுகளுடன் முத்தமிழும் மதுரையில் ஆளப்பட்டன என்பதன்றோ கருத்து! “தமிழ் ஆளப்படுதல் என்பது, நாடுபோற் குற்றங்கடிந்து நல்லன கண்டு தமிழ் போற்றப்படும் சிறப்பான் என்று கொள்க” 8 -

4. கலித்தொகை 85-ஆம் செய்யுளில்,

"நிலனாவிற் றிரிதரூஉ நீண்மாடக் கூடலார்

புலனாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ"

என்பது கூறப்பட்டுள்ளது. 'மதுரையில் உள்ள சான்றோருடைய அறிவுடைய நாவின்கண் தோன்றும் சொற்புதுமை' என்னும் குறிப்பு இதன்கண் இருத்தல் காணத்தக்கது. இது மதுரையில் கூடியிருந்த சான்றோரையும். அவர்தம் அறிவுடைய நாவன்மையையும், அவர் புதிது புதிதாகப் பாடும் செய்யுள் திறத்தையும் குறித்ததென்று எளிதில் அறியத்தகும். இது கூடற்கே (மதுரை) சிறந்தது. இல்லாவிடில்,

7. தமிழ் வரலாறு, பக், 47. 8. தமிழ் வரலாறு, பக் 59. டாக்டர் மா இராசமாணிக்கனார் 岱阻

  • கூடலார் புலனாவிற் பிறந்தசொற் புதிது" என்பது வேண்டாததாகும்."

5. கலித்தொகை 68-ஆம் செய்யுளில், 'மதிமொழி யிடல்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சித்த செவிசெறு வாக முதுமொழி நீராப் புலனா வுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர' என்று பாண்டியன் குறிக்கப்பிடல் காணலாம். இதன்கண் பேரரசனுக்கு அமைச்சனைப் போல நூல்வல்ல ஆசிரியர் பலர் மதுரைக்கண் இருந்தனர் என்றும், அவரது செவி செய்யாகவும். சான்றோர் செய்யுட்கள் நீராகவும், அவர்தம் நா ஏராகவும் கொண்டு புலமுழுதுழும் புலவரென்றும், அவர் புதிய புதிய கவிகளை மிகுதியாக உண்டாக்குபவரென்றும், அச்செய்யுள் வளத்தைக் கொள்ளைக் கொண்டு உண்டது மதுரை என்றும் கூறியது காணலாம்."

6. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், .

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக வுலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகளின் னிலவரை." என்று வஞ்சினங் கூறினான் என்று புறநானூற்றுப் பாடல் (76) கூறுகின்றது. இக்கூற்றிலிருந்து, அவனைச் சார்ந்து புலவர் பலர் இருந்தனர் என்பதும், அவர் அனைவர்க்கும் மாங்குடிமருதன் என்பவர் தலைவராய் விளங்கினார் என்பதும் தெளியலாம். இதனால், பாண்டியன் அணைப்பில் புலவர் பலர், ஒரு புலவர் பெருமான் தலைமையில் ஒத்து வாழ்ந்தனர் என்பது இனிதின் உணரலாம்.

9. தமிழ் வரலாறு. பக். 49. 10. தமிழ் வரலாறு, பக், 42. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

7. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள்,

"புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற் பொதியிற் றென்றல் போலா தீங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர்"11

என்று கூறியிருத்தல் காணத்தகும் பொதியில் தென்றலை விட மதுரைத் தென்றலுக்குள்ள சிறப்பு. புலவர் செந்நாப் பொருந்திய ஏற்றம் என்பது இளங்கோவடிகள் கருத்து. சங்கப் புலவரது செந்நாவாலே புகழப்பட்ட இச்சிறப்பு களையுடைத்தாகலிற் பொதியில் தென்றல் தன்னை ஒவ்வா மைக்குக் காரணமாகி இந்த மதுரைத் தென்றல் வந்தது, என இவ்வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம் காண்க .*

8. இங்ஙனம் மதுரையில் தமிழ் வளர்ந்த சிறப்பை, நோக்கியே, மணிமேகலை ஆசிரியரும்.

'தென்தமிழ் மதுரை 'என்றனர்.

"தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம் நின்று நிலைஇப் புகழ்பூத்தலல்லது குன்றுதல் உண்டோ மதுரை "

என வரும் பரிபாடல் அடிகள் இங்குக் கருதத்தகும். 'தமிழ் நாட்டு அகமெல்லாம் தண்டமிழுக்கு வேலியாய் நின்று நிலைபெற்ற மதுரை புகழ் பூத்தலல்லது குன்றுத லுண்டோ என்று கூறும் இவ்வடிகள், தமிழ்நாட்டுத் தமிழ்ப் பயிர் வளர மதுரை வேலியாய் அமைந்தது - தமிழ்,

11. புறஞ்சேரி, வரி. 130-132.

12. தமிழ் வரலாறு, பக். 51-52, 18. காதை 25, வரி 181.

14. பரிபாடல், மதுரை, 3.

மொழிக்குப் பெருங்காப்பாய் அமைந்தது எனப் பொருள் படல் காண்க." -

புலவர்கள். 'தமிழ்கெழு கூடல்' என்று மதுரையைப் போற்றிப் புகழ்ந்தாற் போலவே, மதுரையில் பாயும் வையை யாற்றையும் தமிழ் வையை' என்று பாராட்டினர்.

இவ்வாறு மதுரைக்கும் தமிழுக்கும் தொடர்பு கூறும் சங்கச் செய்யுள் அடிகளைப் போலச் சோழர் நகரத்திற்கோ, சேரர் நகரத்திற்கோ தமிழ்த் தொடர்பான குறிப்பு ஒன்றேனும் வாராதிருத்தல் நோக்கத்தகும். இஃது ஒன்றே, மதுரை தமிழ் வளர்த்த சிறப்புடையது என்பதை விளக்கப் போதிய சான்றாகும். எனவே, மதுரையில் பாண்டியரால் சங்கம் நிறுவப் பெற்றிருந்தது-அதனில் புலவர் தமிழ் வளர்த்தனர் என்பன நன்கு துணியப்படும். இவ்வுண்மையை, இலண்டன் பொருட்காட்சிச் சாலையிலுள்ள சின்னமனூர்ச் செப்பேடுகளில் காணப்படும்,

'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ ’ எனவரும் அடிகளும் மெய்ப்பிக்கின்றன.

'சங்கம்’ என்னும் பெயர் இதுகாறும் கூறப்பெற்ற இலக்கியச் சான்றுகளை நோக்க, மதுரையில் கலைக்கழகம் ஒன்று இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும் உண்மையாகும். ஆயின், சங்கம்' என்னும் சொல் பழம் பாக்களில் இல்லாமை கவனிக்கத்தகும். அப்பெயர், தொகை நூல்ககளுக்கும் பின்னரே உண்டாகி, அப்பர் காலத்தில் வழக்கிற்கு வந்திருத்தல் கூடும் என்று கருதுதல் பொருத்தமாகும்.

கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் மதுரையில் வச்சிரநந்தி என்ற சமணப் பெரியார் தலைமையில் திகம்பர சமணர் சங்கம் ஒன்று கூடியது. சங்கம் என்ற சொல் மிகுதியாகப்

15. தமிழ் வரலாறு, பக். 52-3. 16. பரிபாடல் , வரி 60 .

17, Dr. Meenakshi–Aaministation B. social Life:

under the Pallavas, p. 227. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

புத்தர் காலத்தில் வழங்கத்தொடங்கியது. புத்தர், தருமம், சங்கம் என்னும் மூன்றும் பெளத்த மும்மணிகள் எனப்படும். இவ்வாறே சமணத்திலும் சங்கம் உண்டு. சங்கம் என்னும் சொல்வழக்குப் பெளத்தராலும் சமணராலும் தமிழகத்தில் இடம் பெற்றது என்று கூறுதல் பொருத்தமாகும். அச் சொல் வழக்கே மதுரையில் இருந்த புலவர் கழகத்திற்ரும் பின்னோரால் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருதுதல் தகும். சங்ககாலம்

'மதுரையில் சங்கம் இருந்த காலம் எது" என்பது அடுத்து ஆராயவேண்டுவது ஒன்றாகும். பல்லவர் என்னும் புதிய மரபினர் காஞ்சியை அரசிருக்கையாகக் கொண்டு தொண்டை நாட்டை ஏறத்தாழக் கி. பி. 300 இல் ஆளத் தொடங்கினர் என்பது வரலாறு கண்ட உண்மை.18 பல்லவரைப் பற்றிய குறிப்புத் தொல்காப்பியத்திலோ, திருக்குறளிலோ, தொகை நூல்களிலோ. சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் காவியங்களிலோ இல்லை. எனவே, பல்லவர் ஆட்சி காஞ்சியில் தோன்றிய காலம் (கி. பி. 300) சங்கத்தின் இறுதி எல்லையாகக் கொள்வது வரலாற்று ஆராய்ச்சிக்குப் பொருத்தமாகும். அதன் பேரெல்லை ஆய்வுக்குரியது.

மூன்று சங்கங்கள் இருந்தன என்பதற்குக் களவியல் உரையைத் தவிர, வேறு தக்க சான்றுகள் இல்லாவிடினும் மதுரையில் தமிழ்ப்பேரவை இருந்தது என்பது, இதுகாறும் கூறப்பெற்ற பல்வகைச் சான்றுகளால் தெளிவாதல் காணலாம். இச்சங்க நூல்களுள் தொல்காப்பியம் என்னும் பேரிலக்கண நூல் பெற்றுள்ள உயர்வைக் காண, அந்நூல் அத்தகைய முழுமையைப்பெற, அதற்கு முன்பு எத்துணைப் புலவர்கள் இருந்து நூல்கள் இயற்றினர் என்பது எண்ணத் தகுவதாகும். அங்ஙனம் _ எண்ணிப்பார்க்கும் பொழுது. இச்சங்கத்திற்கு முன்பு சில சங்கங்கள் இருந்திருக்கலாம் என்று கொள்வதில் தவறில்லை. களவியலுரையில் கூறப் பெற்றுள்ள ஆண்டுகளோ-புலவர் எண்ணிக்கையோ வேறு படலாம். களவியலுரையில் கூறப்பெற்றவாறு சில சங்கங்கள் இருந்து தமிழை வளர்த்தன என்று கொள்வதில் குற்றம் ஒன்றும் இல்லை. ஒரே சங்கமாகக் கொள்ளின், அதன் கீழ் எல்லை ஏறத்தாழக் கி.பி. 300, மேல் எல்லை கூறற்கியலாத பழைமையுடையது என்று கொள்வதே பொருத்தமாகும்.

18. Dr. D. Sircar, Successors of the Satavahanas,

- pp. 164–166. `


  1. எஸ். வையாபுரிப்பிள்ளை, இலக்கிய தீபம், பக். 29.
  2. அகத்தியர் தமிழ் இலக்கணத்தைச் செய்தார் என்று தொல்காப்பியரோ, பிற சங்ககாலப் புலவர்களோ கூறவில்லை. இச்செய்தியை முதன் முதல் கூறியுள்ளது இறையனார் களவியலுரையேயாகும். அதன் காலம் கி.பி. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டு என்பது மேலே கூறப்பட்டதன்றோ? ‘அகத்தியர் பற்றிய கதைகள் எல்லாம் ஆரியர் தென்னாட்டிற்கு வந்ததையும் அவ்வருகைக்கு அவர் தலைவராயிருந்ததையும் குறிப்பனவாகக் கோடலே பொருத்தமாகும்’ - K. A. N. Sastry, A History of S. India, Pp. 57-70. கே. என். சிவராசப்பிள்ளையவர்கள் எழுதியுள்ள “தமிழகத்தில் அகத்தியர்” என்னும் நூலும் படித்துணரத் தகும்.
  3. சீநிவாசப்பிள்ளை, தமிழ் வரலாறு, இரண்டாம் பகுதி, பக், 230.
  4. யாப்பருங்கல விருத்தி, பக். 229.
  5. கிஷ்கிந்தாகாண்டம், ஆறுசெல்படலம், 52-53.
  6. தமிழ் வரலாறு, பக். 46.