உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் இலக்கியக் கதைகள்/என்ன கல்நெஞ்சம் இது

விக்கிமூலம் இலிருந்து

56. என்ன கல்நெஞ்சம் இது?

‘கம்பர் அம்பிகாபதி பற்றி வழங்கும் தனிப்பாடல்கள் மெய்யோ? பொய்யோ?’ என்னும் ஆராய்ச்சி இங்கு வேண்டுவதன்று. ஆராய்ச்சிக்கும் கவிச் சுவைக்கும் வெகுதூரம். அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துக் கொண்டு ஆராயத் தொடங்கி விட்டால் யந்திர உணர்ச்சிதான் வளரும், கவியுணர்ச்சி, அனுபவிக்கும் முனைப்பு இரண்டும் செத்துப் போய்விடும். விஞ்ஞானியின் மனநிலையோடு கவிதையைப் படிப்பதும், கவியின் மனநிலையோடு விஞ்ஞானத்தில் ஈடுபடுவதும் முடியாத காரியங்கள்.

சிந்தனைக்கு விருந்தளிக்கும் அழகிய பாடல் ஒன்று கம்பர் அம்பிகாபதி கதைகளிடையே சிக்கிக் கிடக்கிறது. சிந்திக்கச் சிந்திக்க அழகும் நயமும் தருகிற கவிதை அது. கம்பர் தமக்குத் தாமே பாடிக் கொண்டு கண் கலங்கிய முறையில் அப்பாடல் அமைந்திருக்கிறது. அந்தப் பாடலில் ஒர் இதயத்தின் குமுறல் உள்ளமுருக்கும் விதத்திலே தொனிக்கிறது. கவிநாயகராகிய கம்பர்பெருமான் தமக்குள் அழுது தவிக்கின்ற சோகத்தை அந்தப் பாடலிலிருந்து நாம் அறிய முடிகிறது. இராமாயணக் காவியத்தில் தசரதனுக்கு நேர்ந்த தாங்க முடியாததொரு துன்பத்தைக் கம்பர் தம் கவிதைகளால் உணர்ச்சி துடிக்க எழுதியிருந்தார். மகனைப் பிரியும்போது ஒரு தந்தைக்கு உண்டாகும் துன்ப உணர்ச்சியை வேறு எந்தக் கவியும் எழுத முடியாது என்பது போலக் கம்பர் எழுதிப் பெயர் பெற்று விட்டார் என்பது உலகறிந்த உண்மை.

கைகேயியின் கொடுமையாலே இராமன் பதினான்கு ஆண்டுகள் காடு செல்ல நேர்ந்ததும், அது பொறாமல் தசரதன் உயிர் நீத்ததும் ஆகிய நிகழ்ச்சிகள் இராமாயணக் காவியத்தில் முக்கியமான கட்டங்கள் அல்லவா?

அதே மாதிரி ஒரு சம்பவம் கம்பருடைய சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்டது. தசரதனுக்கு ஏற்பட்டதை விடக் கொடுமையான முறையில் கம்பருக்கு அந்தத் துன்பம் ஏற்பட்டது. ஆனால் தசரதன் செய்தது போல் கம்பரால் அந்தத் துக்கத்தில் தோய்ந்து மனம் தவிக்க முடியவில்லை. ‘அப்படி முடியவில்லையே’ என்பதற்காகக் கம்பரே வருந்துகிறார். அந்த வருத்தத்தை எதிரொலிப்பது போல் கம்பர் பாடிய ஒரு பாடலைத்தான் இங்கே காணப்போகிறோம்.

சோழ மன்னன் மகளைக் காதலித்த குற்றத்துக்காகக் கம்பருடைய மகன் அம்பிகாபதி தண்டனை அடைந்து இறந்து போகிறான். ஒரே மகனை இழந்த பாசத்தில் நெஞ்சு துடித்து வேகின்றார் கம்பர்.

‘கண்ணுக்குக் கண்ணான மகனை இழந்த பின்னும் நான் துடிதுடித்துச் சாகாமல் உயிரோடு நின்று கொண்டிருக்கிறேனே! எனக்கு எத்தனை கல்லான நெஞ்சம்? நாட்டிலிருந்த மகன் காட்டுக்குப் போனதற்கே பொறுக்காமல் தசரதன் இறந்தான் என்று என்னுடைய இராமாயணத்தில் எழுதினேனே!. அப்படி எழுதிய நானா என் மகனை இறப்புக்குக் கொடுத்த பின்னும் இப்படி உயிர் தரித்து நின்று கொண்டிருக்கிறேன்? எனக்கு என்ன நெஞ்சுரப்பு?’ என்று மனம் அவரைக் கசக்கிப் பிழிந்தது. ‘தசரதனுக்கு இருந்த மகப் பாசம் தமக்கு இல்லாமற் போய் விட்டதே’ என்பதை எண்ணும் போதுதான் கம்பர் தாம் மாபெரும் கவிஞர் என்ற நிலையிலிருந்து கீழிறங்கிச் சாதாரண மனிதனுக்குரிய தாபங்களை அடைவது தெரிகிறது.

மகன் இறந்த போதும் கலங்கித் தவிக்காத தமது நெஞ்சுரத்தைக் கம்பர் பாராட்டிக் கொள்ளவில்லை. ‘மகன் இறந்த அந்தக் கணத்திலேயே தம் உயிர் போகாமல் இன்னும் உடலில் தங்கி இருந்து தொலைக்கிறதே!’ என்றுதான் அவர் வருந்துகிறார். தாம் சாமான்ய மனிதனாக இல்லாத தன் குறை அவரை வாட்டுகிறது. கவியாக இருந்ததற்காக அவர் அப்போது வருத்தப்பட்டார். ஆனால் அந்த வருத்தமும் ஒரு கவிதையாகவே வெளிவருகிறது.

பரப்போத ஞாலம் ஒருதம்பி யாளப் பனிமதியம்
துரப்போன் ஒருதம்பி பின்வரத் தானும் துணைவியுடன்
வரப்போன மைந்தற்குத் தாதை பொறாது உயிர்மாய்ந்தனன் நெஞ்சு
உரப்போ எனக்கு இங்கு இனியார் உவமை உரைப்பதற்கே!”

தனிப்பாடல்

ஒரு மகாகவி சாதாரண மனிதனைப்போல் தன் சொந்த மனத்தவிப்பை வெளியிடுகிற அழகு பாடலில் எவ்வளவு அற்புதமாகப் பதிந்திருக்கிறது, பார்த்தீர்களா?