தமிழ் இலக்கியக் கதைகள்/என்று விடியும்

விக்கிமூலம் இலிருந்து

தமிழ் இலக்கியக் கதைகள்


1. என்று விடியும்?

ண்ணும் காதும் படைத்த மனிதர்கள்தாம் கவிஞர்களாக இருக்க வேண்டுமென்ற நியதி இல்லையே? கற்றுத் தேர்ந்து முற்றிய கவிஞர், வாழ்வின் இடையே அவற்றை இழக்க நேரிட்டாலும் கவிதைக்கு என்றும் அழிவேயில்லை. அது சாகாக் கலை:

சிதைவுகளை வென்றுகொண்டே வளரும் சீரிய கலை. பதினெட்டு முதல் இருபது நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் அங்கங்கே அவ்வப்போது தாம் வாழ்ந்த காலத்தில் புலவர் பலர் பாடிய சில்லறைப் பாடல்களின் தொகுதியே தனிப்பாடல் திரட்டு, பல சந்தர்ப்பங்களின் இயற்கையான உணர்வுடன் பாடிய இத் தனிப் பாடல்கள் எல்லாம் படிக்க அருஞ்சுவையும் இனிமையும் நல்குவன. கடையில் கூடைகூடையாக வைத்திருக்கும் கொய்யாப்பழங்களைக் காட்டிலும் தோட்டத்தில் மரத்திலிருந்து உதிர்ந்த கொய்யாப்பழம் அணில் கடித்ததாக இருப்பினும் சுவை மிக்கதாகத் தெரிகிறதல்லவா? அதுபோல வரன் முறை வகுப்புக்கள் பிறழாமல் இயற்றப்பட்ட காவியங்களும் பிரபந்தங்களும் ஒருபுறம் இருந்தாலும் நினைத்தபோது நினைத்தவாறு பாடிய தனிப்பாடல்களின் சுவை தனிப்பட்ட இனிப்பை உடையது. இந்த உண்மையை மெய்ப்பிப்பது போல அமைந்துள்ளன தனிப்பாடல் திரட்டில் காணப்படும் இரட்டையர் கவிதைகள், அந்த இன்பம் இரட்டையர்கள் பாடல் மூலம் முதலில் இங்கே தோற்றுவாய் செய்யப்படுகிறது. மலையடிவாரம். அடர்ந்து வளர்ந்திருந்த காடு. இருவர் நடந்து போகின்றனர்; இல்லை, ஒருவர் நடந்து போகிறார். நொண்டியாகிய மற்றொருவர் அவருடைய முதுகில் ஏறிக் கொண்டிருக்கிறார். நடப்பவர் குருடர். முதுகில் அமர்ந்திருக்கும் நொண்டி அவருக்கு வழியைக் காட்டுகிறார். காண முடியாத குருடர் காண முடிந்த நொண்டியைச் சுமந்து அவர் உதவியால் வழி நடக்கிறார். அவர்களுக்கிடையில் உள்ள தொடர்பு இந்த அளவில் மட்டும் அமைந்துவிடவில்லை. இருவரும் நண்பர்கள். தமிழில் தேர்ந்த புலமை பெற்றவர்கள். பழு மரங்களை நாடிச்செல்லும் பறவைகளைப்போல் வள்ளல்களை நாடிச் சென்று தங்கள் புலமையைப் பாட்டுருவில் வெளிக்காட்டிப் பரிசில் பெறுவதுதான் அவர்கள் வாழ்க்கை. ஆனால் வள்ளல்கள் எல்லோருமா இரசிகர்களாக இருக்கிறார்கள்? இல்லையே. சிலரிடம் இகழ்ச்சியும் வேறு சிலரிடம் இல்லையென்ற பெரும் பொய்யும் ‘சிறப்பான பாட்டு’ என்ற கையாலாகாத வாய்ப் பாராட்டும்கூடப் பெறவேண்டியிருந்தது. முழு மனிதர்களாக இருந்தாலாவது இந்தத் துன்பத்தை ஒருவாறு தாங்கிக் கொள்ள இயலும். குருடரும் நொண்டியும் கூடிவாழும் கூட்டுறவு வாழ்க்கை, ஒருவரின்றி மற்றொருவர் ஓரணுக்கூட அசைய முடியாது. கண் தெரிந்த நொண்டி வழியைச் சொன்னாலும் கண் தெரியாத குருடருக்கு, காட்டிலும் மலையிலும் மேட்டிலும் பள்ளத்திலும் நடப்பது பெருத் தொல்லையாக இருந்தது. இவ்வளவு தொல்லைகளையும் மீறித் தோன்றுகின்ற பெரிய தொல்லை ‘இல்லை’ என்று கூறும் வள்ளல்களின் கூசாத எதிர்மறை வாய்ச்சொல்.

நடந்து கொண்டிருந்த குருடர் ஒரு சிறு பள்ளத்தில் தெரியாமல் காலை விட்டுவிடுகிறார். சிறிது தடுமாறுகிறது. மேலே கொஞ்சநேரம் எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த நொண்டி, “மெல்ல, மெல்லப் பார்த்து நடவுங்கள்” என்கிறார். அதைக் கேட்டு ‘என்னடா இவன் நம் முதுகில் சவாரி விடுவதும் அல்லாமல் என்னென்வோ பேசுகிறானே’ என்று வருத்தப் பட்டிருக்க வேண்டும் குருடர். அதுதான் இல்லை. அமைதியான அவர் முகத்தில் புன்சிரிப்பின் சாயை நிழலிட்டது. இருவரும் சமதரையிலே செல்லும் நல்ல வழிக்கு வந்துவிட்டனர். இப்போது குருடர் அந்தப் பிரதேசத்தில் கணீரென்று எதிரொலிக்கும் படியாக எடுப்பான குரலில் இதோ பாடுகின்றார்.

‘குன்றும் குழியும் குறுகி வழி நடப்ப(து)
என்று விடியும்? எமக்கென் கோவே’

அதே புன்சிரிப்புக் கொஞ்சும் முகபாவத்துடன் பாடிச் சற்றே நிறுத்தினார் குருடர்.

‘ஒன்றும் கொடாதானைக் கோ வென்றும் கா என்றும் கூறில்
இடாதோ நமக்கிவ் விடி’

(கோ-அரசு. கா-கற்பகம், இடி.-துன்பம்) என்று வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே குருடர் பாடிய முதலிரண்டு அடிகளைப் பூர்த்தி செய்தார், மேலே முதுகிலிருந்த நொண்டி, துன்பத்திலும் இன்பம் காணும் புலமை வாழ்க்கையில் பசி முதலிய துன்பங்களை வெல்லும் தூய கருவி சிரிப்புத்தானே! சிரிப்போடுகூட ‘என்று விடியுமோ?’ என்ற கேள்வியும் எதிரொலிக்கிறது.