உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் இலக்கியக் கதைகள்/காஞ்சிபுரத்தில் காளமேகம்

விக்கிமூலம் இலிருந்து


36. காஞ்சிபுரத்தில் காளமேகம்

ண்ணும் செவியும் கால்களும் பெற்று கண்டும் கேட்டும் நடந்தும் வாழ்க்கையை அனுபவிக்கும் போது வசதிகளைப் பெற்றவர்கள் உலகெங்கும் இருந்தாலும் அவர்களில் சிலரினும் சிலருடைய அனுபவங்களே காவியமாகும் தகுதியினைப் பெறுகின்றன. பிரதி தினமும் பிரகிருதியின் சின்ன பின்னங்களில் மனித அனுபவத்திற்கும் சுவாதீனத்திற்கும் உட்பட்ட ஒவ்வோர் அணுவிலும் காவியத்தின் மூலப் பொருளாகிய இரஸக் கனிவு இருக்கத்தான் இருக்கின்றது. அதனை அனுபவித்து வெளியிடும் சக்திதான் காவியம். பல்லாயிரம் பாடல்களும் அது சொல்லும் பெரிய கதையும் சேர்ந்தே காவியம் என்று மட்டும் எண்ணுவது பொருந்தாது. காவியம் என்ற சொல் ‘கவியாற் செய்யப்படுவது’ என்னும் பொருளை உடையது. எனவே அனுபவங்களை நகைச்சுவை தோன்றும் படியாகச் சொல்லும் காளமேகத்தின் தனிப்பாடல்களிலிருந்து அனுபவங்களைத் தெய்வீக அழகு தோன்ற வெளியிடும் கம்பர் காவியம் வரை யாவும் காவியங்களே. வெளியிடுகின்ற அனுபவம் ‘தன்னைப் பொறுத்ததா? பிறரைப் பொறுத்ததா?’ என்ற ஆராய்ச்சி இங்கே அவசியமில்லாதது.

காளமேகத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் ஒரு தனி நகைச்சுவைச் சித்திரம். உலகத்தை அவர் எந்தக் கோணத்தில் நின்று, எந்த மன நிலையோடு அனுபவித்திருக்கிறார் என்ற வினாவிற்கு அவருடைய பாடல்கள் விடை பகர்ந்துவிடும். அவருடைய பாடல்களிலிருந்து வேடிக்கையும் விநோதமும் பற்றில்லாத மன இயல்பும் சாதாரண உலகத்தை நகைத்து கிண்டிப் பார்க்கும் தன்மையையும் உடையவர் என்று நாம் அவரை அறிந்து கொள்ள முடிகின்றது. சுருங்கச்சொன்னால் அவர் காலத்துத் தமிழ்நாட்டிற்கு அவர் ஒரு பெர்னாட்ஷாவாக விளங்கி வந்திருக்கிறார். அவர் பாடல்களில் சொந்த அனுபவங்களை அவரே வெளியிடும் நிலையை ஊன்றி ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும். தமிழில் தனிப்பட்ட நகைச்சுவைப் பாடல்கள் என்று பிரித்தெடுத்தால் காளமேகத்தின் பாடல்களே பெரியஅளவிற் கிடைக்கும். ‘விட்டேற்றியாக மனம் போன போக்கில் சுற்றித் திரிந்தபோது பாடிய வெறும் பாடல்கள் தாமே?’ என்று காளமேகத்தின் கவிதைகளை வெறுப்பவர், அவரையும் அவருடைய பாடல்களையும் சரியாக உணரத் தெரியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும். காஞ்சிபுரம் சென்றிருந்தபோது காஞ்சி பூரீ வரதராஜப் பெருமாளின் கருட வாகனத்தைத் தரிசித்துக் காளமேகம் பாடிய நகைச்சுவைப் பாடல் ஒன்றுண்டு. கவிச் சுவையும் உயர்தர நகைச்சுவையும் பொருந்திய அந்தப் பாடலைப் படித்தால் அவரை ‘விட்டேற்றி’ என்று சொல்லுபவர்கள் தங்கள் அபிப்பிராயம் தவறு என்று உணர முடியும். முடிந்தால் அது இந்தப் பாட்டின் வெற்றிதான்.

காளமேகம் வந்திருந்த அன்றைக்கு காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளுக்குக் கருட வாகனத் திருநாள். ஜகஜ் ஜோதியாகப் பிரகாசிக்கும் தங்கக் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும்போது தற்செயலாகக் காளமேகத்திற்கும் அந்த தரிசனம் கிடைத்தது.பெருமாளைத் தரிசித்த காளமேகம் தரிசனப் பலனாகவோ என்னவோ தரிசனத்தோடு கூடிய கற்பனை ஒன்றையும் பெற்றார். ஆயிரக்கணக்கில் கூடியிருந்த அத்தனை மக்களும் அந்தத் தரிசன அனுபவத்தைப் பெற்றவர்கள் தாம். ஆனாலும் காளமேகம் ஒருவருக்கு மட்டும் தானே பெருமாளைப் பழிப்பது போலப் புகழும் அந்தப் பாடலைப் பாடுதற்குரிய கற்பனை ஏற்பட்டது? ‘கோவிலுக்குள்ளே இருந்த பெருமாள், கோவிலுக்குள்ளேயே சும்மா இருந்திருந்தால் இந்த வம்பெல்லாம் வந்திருக்காது. வெளியில் வரப்போக, ‘பருந்து’ தூக்கிக்கொண்டு போய் விட்டதே! ஐயையோ! வேண்டும் இந்தப் பெருமாளுக்கு நன்றாக இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். இவர் ஏன் இருந்த இடத்தில் இருக்காமல் வெளியே வந்தார்? இப்படி ஒரு குழந்தை வேடிக்கையாக நினைப்பது போல நினைத்தார் காளமேகம். நினைவை ஒரு வெண்பாவாகப் பாடினார். பாடல் வெளிப்படையாக இகழ்ச்சியோடு பாடிய வெறும் நகைச்சுவைப் பாடலாகத் தோன்றினாலும், புகழ்ச்சியும் ஒரு குழந்தை விளையாட்டாக எண்ணிப் பார்ப்பது போன்ற இயல்பும் அதில் துணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளன.

பெருமாளும் நல்ல பெருமாள் அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள் - பெருமாள்
இருந்திடத்திற் கம்மா இராமை யினால் ஐயோ!'
பருந்தெடுத்துப் போகின்றதேப் பார்!”

பெருமாள் = வரதராஜர், இருந்திடம் = இருக்குமிடம் ஆகிய கோவில், பருந்து = கருடன்.

இதே மாதிரி எத்தனையோ சிறு அனுபவங்கள் காளமேகத்தின் வாழ்க்கையில் நிறைந்துள்ளன. அவைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு அனுபவக் காவியம் என்ற முறையில் அவற்றை இரசிக்க முற்பட்டுவிட்டால் தவறாக எண்ணத் தோன்றாது. அந்த அளவு இரசிக்கும் இரசனையே நமக்குப் போதுமானது.