தமிழ் இலக்கியக் கதைகள்/திரை விலகியது

விக்கிமூலம் இலிருந்து

47. திரை விலகியது

ந்தகக் கவி வீரராகவ முதலியார் ஊனக் கண்கள் உதவாமற் போன குருடர். ஆனால் அவருடைய ஞானக் கண்கள் எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருந்தன. ஊனக் கண்கள் இல்லாத குறையால் உலகில் அவருக்கு ஏற்படவேண்டிய துன்பங்கள் ஏற்படாமல் அவர்தம் ஞானக் கண்கள் அவரைப் பாதுகாத்து வந்தன. கண்ணில்லாமல் அவர் வருத்தங் கொண்டு நெஞ்சழிந்து போகாத வண்ணம் அவருடைய மாணவர்கள் எந்நேரமும் பக்கத்திலேயே இருந்து அவருக்கு வேண்டியவற்றை வெறுப்பின்றிச் செய்து வந்தனர். அவர் கற்றிருந்த தமிழும், பெற்றிருந்த அன்பர்களும், மாணாக்கர்களும் அவருடைய சொந்தக் கண்களாக விளங்கினர். ஒரு முழு மனிதராக வாழ்வதாக எண்ணிக் கொள்ளத்தக்க மன நிறைவை அவர் இதனால் பெற்றிருந்தார்.

ஒருகால் அவர் பெருமையைக் கேள்விப்பட்ட ஈழநாட்டு அரசன் அவரைக் கண்டு பழக வேண்டும் என்ற கலை ஆர்வத்தோடு ஈழத்துக்கு வந்து போக வேண்டும் என்று அவருக்கு அன்போடும் மரியாதையோடும் திருமுகம் அனுப்பி இருந்தான். வீரராகவ முதலியார் போக வேண்டும் என்று விரும்பினாலும் 'கடல் கடக்க வேண்டிய பயணமாயிற்றே’ என்று தயங்கினார். அன்பர்களிடமும் மாணவர்களிடமும் திருமுகத்தைக் காட்டச் செய்தபோது அவர்கள் யாவரும் அவரை ஈழத்திற்குப் போய் வருமாறு வற்புறுத்தி ஊக்கமளித்தனர். பற்றும் மதிப்பும் மிகுந்த மாணவர் இரண்டொருவர் அவருக்குத் தேவையான பணிவிடை களையும் தொண்டுகளையும் செய்ய உடன் வருவதாக உறுதி கூறினர். கவிஞர் ஈழநாட்டுப் பயணத்திற்கு ஒப்புக் கொண்டார்.வர ஒப்புக் கொண்டு விட்டதாகத் தூதர் மூலம் திருமுகம் பெற்ற பரராசசிங்கன் (ஈழ வேந்தன்) வசதியான மரக்கலம் ஒன்றைத் தகுந்த மீகாமன் ஒருவனோடு அனுப்பி வைத்தான். புலவருக்குக் கடற்பயணம் புதிது. உடன்வரும் மாணவர்கள் துணையை நம்பி ஒப்புக்கொண்டிருந்த அவருக்கு மரக்கலத்துடன் வந்த மீகாமனும் வேண்டிய துணிவூட்டிப் பேசினான். மரக்கலத்தைக் கடலில் செலுத்திக் கரை சேர்க்கும் அவனுடைய உறுதி மொழிகளும் கிடைக்கவே வீரராகவ முதலியார் துணிவோடு புறப்பட்டார்.

இரண்டரை நாள் கடற்பயணம் இன்பமாகக் கழித்தபின் ஈழநாட்டை அடைந்தனர் புலவரும் அவருடைய மாணவரும் கடற்பயணத்தில் ஒரு சிறு துன்பமும் அவருக்கு ஏற்படவில்லை. குளிர்ந்த கடற்காற்றும் மரக்கலத்தில் செல்லும் இன்பமும் அவருக்கு மிகவும் திருப்திகரமாகவே அமைந்திருந்தன. புலவருக்கெனப் பரராசசிங்கன் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்த அந்த மரக்கலத்தின் தலைவனாகிய மீகாமனோ அவரிடம் மிக அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொண்டான். மரக்கலமும் வசதிகள் நிறைந்ததாக இருந்தது.

புலவரும் அவருடைய மாணவரும் மரக்கலத்திலிருந்து இறங்கி, அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன் அரண்மனையில் பரராசசிங்கனுக்கும் அவனுடைய அமைச்சர்களுக்கும் நிகழ்ந்த வாக்குவாதம் ஒன்றை நாம் இங்கே முன்னதாக அறிந்துகொள்ள வேண்டும்.

ஈழநாட்டு அமைச்சர்கள் தம் அரசனுக்குத் தாங்கள் சொல்லக் கடமைப்பட்டிருந்த உண்மைகளைத்தான் சொன்னார்கள். “ஆட்சியை மேற்கொண்டிருக்கும் முடியணிந்த அரசன் ஒருவனுக்கு ஆகாது என்று விலக்கப்பட்ட அமங்கலச் செயல்கள் பல உண்டு. அவைகளை அவன் செய்தால் தன் திருவையும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும். அரச பரம்பரையினர் தொன்று தொட்டு இக்கொள்கையை அனுசரித்து வருகின்றனர். நாங்கள் எல்லாமறிந்த தங்களிடம் இதை எடுத்துக் கூறுவதற்காக எங்கள்மேல் சினங்கொள்ளக் கூடாது. இது எங்கள் கடமை, அந்தகக் கவி வீரராகவ முதலியார் சிறந்த புலவர்தாம். அவரைப் பாராட்டுவதிலும் போற்றுவதிலும் எங்களுக்கும் மகிழ்ச்சி உண்டு; அதை நாங்கள் மறுக்கவில்லை. அன்போடு ஏற்றுக்கொள்வோம். ஆனால் அவர் ஒரு குருடர். அவரைத் தாங்களே நேரடியாகச் சந்தித்து வரவேற்பதோ, பேசுவதோ அமங்கலம். அது தங்கள் மங்கலத்திற்கு இழுக்கு.” இப்படி அமைச்சர்கள் கூறியபோது பரராச சிங்கனுக்கு மிகுந்த சினம் வந்துவிட்டது.

“மங்கலமாவது, அமங்கலமாவது நீங்கள் சொல்கிறபடி செய்தால் ஒரு பெரிய புலவரை வற்புறுத்தி அழைத்து வந்து அவமதிப்புச் செய்து திரும்பி அனுப்புதலாக அல்லவா முடியும்? இதனை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.” ஆத்திரமும் படபடப்பும் கொண்ட பரராசசிங்கன் இவ்வாறு அமைச்சர்களுக்கு மறுமொழி கூறினான். இவ்வாறு அரசருக்கும் அமைச்சர்களுக்கும் வாக்குவாதம் வளர்ந்து கொண்டிருந்த போதிலும் புலவரை வரவேற்கக் குறித்திருந்த நேரமும் நெருங்கிவிட்டது.

ஒரேயடியாக அமைச்சர்களிடமும் முகத்தை முறித்துக் கொள்ளவும் பரராசன் துணியவில்லை. இறுதியில் அவர்கள் கூறிய இருதரப்பார்க்கும் துன்பம் அதிகமில்லாத ஒரு முடிவை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகப் போயிற்று. அரசன் புலவருடைய அண்மையிலிருந்தே அவரை வரவேற்றுப் பேசுவது போலவே பேசிப்பாராட்ட வேண்டியது, ஆனால் அப்போது அரசனுக்கும் புலவருக்கும் இடையே ஒரு மெல்லிய பட்டுத் திரை தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். புலவர் குருடராகையால் 'அரசன் தம் முகத்தைப் பார்ப்பது அமங்கலமென்றெண்ணித் திரையிட்டுக் கொண்டு திரைக்குப் பின்னாலிருந்து பேசித் தம்மை அவமதிக்கிறான்’ என்று அவரால் அறிந்துகொள்ள முடியாது. அரசனும் அவரை வரவேற்றுப் போற்றி விட்டோம் என்று மன நிறைவு அடைந்துவிடலாம். அதே சமயத்தில் மங்கலக் குறைவும் ஏற்படாது. இந்த முடிவு பரராசசிங்கனுக்கு விருப்பமில்லைதான். ஆனாலும் அமைச்சர் சொல்லைத் தட்ட முடியாமல் எற்றுக் கொண்டான். அமைச்சர்கள் ஏற்பாட்டின்படியே வரவேற்பு நடந்தது. மெல்லிய பட்டுத்திரை இடையே தொங்கியதால் கண்விழித்துப் பார்த்தாலொழியப் பக்கத்தில் அமர்ந்து பேசிப் பாராட்டுவது போலவே குரல் கேட்கும். புலவருடன் வந்த மாணவர்களுக்கு ‘இந்தப் பட்டுத்திரை தொங்குவதும் அத்திரைக்குப் பின் இருந்து அரசன் புலவரைப் பார்க்காமல் வரவேற்பதும்’ என்ன என்றே புரியவில்லை. ஆனால் தங்கள் ஆசிரியரை அவமதிக்கும். ஏதோ ஒர் அம்சம் இதில் கலந்திருப்பதாகப் பொதுவாக அவர்கள் அறிந்தனர். கலைகள், தமிழ்க் கவிதைகள் இவைபற்றி அரசனும் வீரராகவரும் பேசிக்கொண்டே இருந்தனர்.திரை தொங்குவதை எப்படியாவது குறிப்பாக ஆசிரியருக்குப் புலப்படுத்தி விடவேண்டும் என்று கருதினர் மாணவர். உடன் வந்திருந்த மாணவருள் ஒருவருக்குப் பழைய நிகழ்ச்சி ஒன்று நினைவிற்கு வந்தது. ஆசிரியருடன் சிதம்பரம் போயிருந்தபோது சிதம்பரத்துக் கோவிலில் ‘சிதம்பர ரகசியம்’ என்ற பகுதிக்குத் திரையிட்டு மறைத்திருந்ததையும், ஆசிரியரிடம் அதைக் கேட்டபோது ‘இதுதான் தில்லைத் திருச்சிற்றம்பலம்’ என்று வேடிக்கையாகப் பதில் கூறியதும், அதன்பின் ‘மறைவு’ என்று கூறவேண்டிய போதெல்லாம் விளையாட்டாக அவர் அவ்வாறு கூறிவருவதும் அந்த மாணவரின் நினைவில் அப்போது தோன்றின. உடனே ஆசிரியருக்குப் பக்கமாகச் சென்று தற்செயலாகக் கூறிக் கொள்வது போல அவர் காதில் விழும்படியாக ‘தில்லைத் திருச்சிற்றம்பலம்’ என்று அழுத்தி இரண்டு தரம் சொன்னார் அந்த மாணவர். மாணவர் ஒதிய மந்திரம் விரைவில் வேலை செய்தது. கல்விமானான புலவர் விரைவிலேயே எல்லாம் புரிந்து கொண்டார். விரும்பியழைத்த பரராசன் தம்மைப் பார்த்தால் அமங்கலமென்று திரையிட்டுப் பேசும் அவமானம் அவர் நெஞ்சில் முள்போல குத்தியது. அந்த வேதனை உடனே ஒரு பாட்டாய் வெளி வந்தது.

நரைக்கோட்டி ளங்கன்று
நல்வளநாடு நயந்தளிப்பன்
விரையூட்டு தார்புயன் வெற்பீழ
மன்னனென்றே விரும்பிக்
கரையோட்ட மீதில் மரக்கலம்
போட்டுன்னைக் காணவந்தால்
திரைபோட்டு நீயிருந்தாய்
சிங்கபூப சிரோமணியே.”

நயந்து = விரும்பி, விரை = மணம், தார் = மாலை, வெற்பீழம் = மலைகளையுடைய ஈழம், சிங்கபூபன் = பரராசசிங்கன்.

வீரராகவர் பாட்டை முடித்துக் கால்நொடிகூடக் கழிந்திருக்காது. பரராசன் தன் கையாலேயே அந்தத் திரையை விலக்கி எறிந்து விட்டு அவரிடம் ஓடோடி வந்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டான்.