தமிழ் இலக்கியக் கதைகள்/துயரின்மேல் துயர்

விக்கிமூலம் இலிருந்து

4. துயரின்மேல் துயர்

துயரம் வருவதும் அதைப் பொறுத்துக்கொள்வதும் சகஜம்தான். ஆனால் அடுக்கடுக்காக ஒன்றை ஒன்று விஞ்சும் நிலையில் வரும்போது இன்னது என்று புரியாத குழப்ப நிலைக்கு ஆளாகின்றான் மனிதன். குழப்ப நிலையில் ஒரேயடியாக மனங் குமைந்து கல்லாய்ச் சமைந்துவிடுவர் சிலர். அழுவதா சிரிப்பதா என்று பேதலிப்பு அடைந்து விடுவர் மற்றுஞ் சிலர். இந்த விபரீத நிலையை வேடிக்கையாகக் கூறும் சுவைமிக்க தனிப் பாடல் ஒன்று உண்டு. துயரின் மேல் துயராக அடுக்கி, அவ்வடுக்குச் சூழலின் நடுவே ஒரு தனி மனிதனை நிறுத்திக் காட்டும் முறையில் அமைந்த இரசனை அனுபவித்து மகிழத்தக்கதாக இருக்கிறது. இதனைப் பாடியவரும் இராமச்சந்திர கவிராயரே.

நல்ல அடைமழைக் காலம். மழை! மழை! இடைவிடாமல் கொட்டு கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. அது ஒரு மண்குடிசை. நான்கு புறச் சுவரும் மண்ணால் எடுக்கப் பெற்றவை. மேலே பனை ஓலை வேய்ந்த கூரை. குடிசையின் ஒருபுறம் மாட்டுக் கொட்டமாக மறித்து விடப்பட்டிருந்தது. கொட்டத்திலே சினைமாடு கட்டப்பட்டிருந்தது. சிறிது நேரஞ் சென்ற அளவில் பசுமாடு கன்று போட்டுவிடுகிறது: அவசரத்தில் மண்ணைக் குழைத்து அள்ளிக் கட்டியிருந்த மாட்டுக் கொட்டத்தின் சுவர்கள் நன்றாக ஈரித்துப் போயிருந்தன. ‘சோ'வென்று பொழியும் மழை வேகத்தைத் தாங்கிக்கொண்டு அந்த ஈரச் சுவர்கள் எவ்வளவு நேரந்தான் நிற்கும்? மாடு கன்று ஈன்ற சற்று நேரத்தில் சுவர்கள் விழுந்துவிட்டன. வீட்டுக்குரியவனின் மனைவி கர்ப்பவதியாயிருந்தாள். அவளுக்கு அது நிறைமாதம். இன்றோ நாளையோ குழந்தை பிறந்துவிடும் என்று மருத்துவச்சி சொல்லிட்டுப் போயிருந்தாள். வீட்டிற்குள் பாயில் உடலைக் கிடத்தியவாறே அவள் பிரசவ வேதனை பட்டுக் கொண்டிருந்தாள். வீட்டுக்குரிய தலைமகன் அன்று வயலுக்கு விதை விதைக்கப் போக வேண்டியிருந்தது. முதல் நாள் நல்ல ஈரப்பதம் பார்த்து வயலை உழுது தொழி கலக்கி விதைப்பதற்கு ஏற்றவாறு வைத்துவிட்டு வந்திருந்தான். வீட்டில் வேலை பார்த்து வந்த பண்ணைக்காரப் பணியாளுக்குக் குளிர் ஜுரம் வந்து சாகக் கிடக்கிறான். ஐந்து நாட்களாக அவன் வேலைக்கே வரவில்லை.எமனோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இந்த நிலையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை குடும்பத் தலைவனுக்கு.

‘விதைக்கப் போகலாம்’ என்றால் வீட்டிலே மாடு கன்று போட்டிருக்கிறது. சுவர்கள் மழை தாங்காமல் சாய்ந்து விட்டன; மனைவியோ உடலில் வலி பொறுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துடிதுடித்துக் கொண்டிருக்கிறாள். அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டான் வீட்டிற்குரியவன். அப்பொழுது தலைவிரி கோலமாக ஓடிவந்தான் ஒருவன். அழுகையும் புலம்பலுமாக அந்த வீட்டுப் பண்ணைக்காரன் குளிர் ஜுரத்தினால் இறந்துபோன செய்தியைக் கூறியபின் மூக்கைச் சிந்திவிட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திரும்பினான் வந்தவன். வீட்டுத் தலைவனுடைய குழப்பம் முன்னிலும் பெருகியது. ‘எது எப்படியானாலும் சரி! விதைக்கப் பதமாக இருக்கும் வயலை ஈரம் போகும்படி காயவிட்டுவிட்டால், அப்புறம் வருடம் முழுவதும் வயிறு காயவேண்டியதுதான்! ஆகவே ஓடோடியும் சென்று விதையை விதைத்து விட்டு வந்தவிடுவோமென்று விதைக் கூடையுடன் வயலை நோக்கித் தலைதெறிக்க ஓடினான் அவன்.

“எங்கே அண்ணே ! அவசரமாக விதையும் கையுமாகப் புறப்பட்டு விட்டாற் போலிருக்கிறது. ஆளைப்பாரு ஆளை... வாங்கின கடனைக் கொடுக்க வக்கில்லை விதைக்கப் புறப்பட்டு விட்டார் துரை...ஏன் ஐயா? உனக்கு வெட்கமில்லை? கடன் வாங்கி எத்தனை நாள் ஆகிறது?” ஏகத்தாளமும் கேலியுமாக ஈட்டி குத்துவது போன்ற சொற்களுடன் கடன் கொடுத்த புண்ணியவான் அவனை மறித்துக் கொண்டார். விதைக்கூடையும் கையுமாக வந்து கொண்டிருந்த அவன் ஒன்றும் மறுமொழி கூற முடியாமல் தலை குனிந்தான். எவ்வளவு நேரந்தான் அவன் அப்படி நின்று கொண்டிருந்தானோ? கடன்காரர் இன்னும் ஏதேதோ திட்டிக் கொண்டிருந்தார். அவன் கொட்டுகிற மழையில் விதையுடன் நனைந்து கொண்டே நின்றான். அவர் குடை பிடித்திருந்தார். கடைசியில் உடல் வெடவெடவென்று நடுங்கிய அவன் பொறுமைக்கும் ஓர் எல்லை வந்து சேர்ந்தது. தலை நிமிர்ந்தான் அவன். அவன் கண்கள் கடன்காரரை ஏறிட்டுப் பார்ப்பதற்கு முன் வேறொருவனைக் கண்டன. ஆம்! வெளியூரினனான அவன் நெருங்கிய உறவினன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன் வாட்டத்தோடு காணப்பட்டான். நெருங்கி வந்ததும் அவன் ஓர் உறவினரின் சாவுச் செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்பது வெளிப்பட்டது. கடன்காரர் மெல்ல நழுவிவிட்டார். இப்போதும் அங்கே நிற்க அவருக்குப் பைத்தியமா என்ன? செத்தவர் நெருங்கிய உறவு முறையினர். எப்படியும் போய் வரவேண்டும்.

சாவோலை கொண்டு வந்தவனையும் கூட்டிக்கொண்டு வீட்டில் சொல்லிவிட்டு வரப் புறப்பட்டான். வீட்டில் நுழைந்த அவனுக்கு ஒருகணம் மூச்சு நின்று விடும் போலத் திகைப்பு ஏற்பட்டது. அங்கே அவனுடைய மனைவியின் தமக்கை கண்வனுடனும் குழந்தை குட்டிகளுடனும் விருந்தாக வந்து அப்போதுதான் இறங்கியிருந்தாள். அவர்களை வரவேற்றுவிட்டுக் கூடவந்தவனை வாசலில் உட்காரச் சொல்லியபின் கொல்லையில் கொட்டத்திற்குள் ஈன்ற பசு எவ்வாறிருக்கிறதென்று பார்க்கச் சென்றான். விதைக்கூடை நனைந்த விதைகளுடன் ஒருமூலையில் விட்டெறியப்பட்டுக்கிடந்தது. கொல்லையில் மல்லிகைப் புதரடியில் அவன் கண்ட காட்சி! தூக்கிவாரிப் போட்டது! ஒரு சிறு நல்லபாம்பு அவனுடைய ஆறு வயது பையனின் கையைச் சுற்றிப் படமெடுத்துக் கொண்டிருந்தது. அதைக் கையிலிருந்து உதற வழி தெரியாமல் ‘ஐயோ அப்பா’ என்று பையன் கூக்குரலிட ஆரம்பித்தான். மாட்டுக்கொட்டத்தில் நுழைய இருந்த அவனை அந்தக் குரல்தான் கொல்லைப்புறம் திரும்பவைத்தது. பக்கத்திலிருந்த தார்க்குச்சியை எடுத்துக்கொண்டு ஓடினான் அவன். ஆனால் அதற்குள் அந்தப் பாம்பு பையனின் முன்கையில் மணிக்கட்டின்மேல் தன் கொடு விஷத்தைப் பாய்ச்சிவிட்டது. சரசவென்று இறங்கிப் புதருக்குள் ஓடி ஒளிந்த பாம்பை அவனால் அடிக்கவும் முடியவில்லை. வாசலில் மூன்று இருசாலாகத் தீர்வை போடவில்லை என்று ஊர்கணக்கன் நிலத் தீர்வை நோட்டீசுடன் ஜப்தி செய்ய வந்திருந்தான். தெருவோடு போய்க்கொண்டிருந்த குருக்கள், “என்றோ அவன் திதி கொடுத்ததற்குத் தட்சிணை வைக்கவில்லை” என்று வாய் நிறைய வைது கொண்டே நடந்தார். என்ன செய்வான் ஒருவன்? அழவில்லை! சிரித்தான். நினைவுடன் கூடிய சிரிப்பல்ல அது. அவன் பைத்தியமாகிவிட்டான். துயரின் ஒருமை வரவைப் பொறுத்துக்கொள்ளமுடியும்! துயரின் பன்மை அடுக்கடுக்காக மேல் மேல்வந்தால் ஒருவன் பைத்தியமாகத்தானே ஆகவேண்டும்?

"ஆ ஈன மழைபொழிய இல்லம் வீழ
அகத்து அடியாள் மெய் நோவ அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சா வோலை கொண்டொருவன் எதிரே போகத் .
தள்ள ஒண்ணா விருந்து வரச் சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்களோ தட்சிணைகள் கொடு என்றாரே."

எவ்வளவு அருமையான மனோபாவப் பிடிப்பை விளக்குகிறது பாட்டு, கதையின் துரிதம் முழுமையும் பாட்டின் கருத்து வேகத்தில் அமைந்தவை.