தமிழ் இலக்கியக் கதைகள்/பட்டால்தான் தெரியும்
32. பட்டால்தான் தெரியும்
திருமணமான புதிதில் உடனடியாக மனைவியைக் கூட்டிக்கொண்டு போய்க் குடித்தனம் வைத்துக்கொள்ள முடியாத தொலை தூரத்து ஊருக்கு வேலை மாறுதல் கிடைத்து விடுகிறது சில இளைஞர்களுக்கு.வேறு வழியில்லாமல் கலியானமாகியும் பிரம்மச்சாரி என்ற நிலையில் தனிக்கட்டையாகப் பல நூறு மைல்களைக் கடந்துபோய் வாய்க்கு விளங்காத சாப்பாட்டோடு ஏங்கி ஏங்கி வாழ வேண்டியிருக்கிறது அவர்களுக்கு. உத்தியோக யுகமாகிய இந்த நூற்றாண்டில் வடக்கே வெகு தூரத்திலுள்ள நகரங்களில் உத்தியோகம் பார்க்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்படுவது இயற்கை.ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து குடியிருக்க வீடு கிடைக்கிறவரை தங்கள் மனைவிக்கு அவர்கள் எழுதும் கடிதங்களே அவர்களுடைய மனவேதனைக்குச் சான்று பகரும். வாழ்வதிலும் பணம் சேர்க்கும் இலட்சியத்திலும் வேகம் அதிகரித்துள்ள இந்த நூற்றாண்டுக்கு இது இயல்பாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருக்கலாம்.
ஆனால் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கை அமைப்பில் உறவிலும் பந்தங்களின் பிணைப்புக்களிலும் நெருக்கம் அதிகம் ஓர் ஊர், ஒரு மொழி, ஒரு நோக்கம் என்று வாழ்க்கைக்கு மீற முடியாத எல்லைகள் இருந்தன அப்போது, ஒரு மனிதனின் வாழ்க்கை அவன் வாழ்கின்ற இடத்தில் ‘பதிவது’ என்ற அர்த்தத்தில்தான் ஊர்களுக்குப் ‘பதி’ என்று தமிழில் பெயர் வைத்திருந்தார்கள். இப்போதுள்ள நிலையிலோ எந்த ஊரிலும் எதிலும் பதியாமல் ஒடுகிற இயல்பு உத்தியோக வாழ்க்கைக்கு வந்துவிட்டது. கணவன் மனைவியைப் பிரிந்து தொடர்ந்தாற் போல் சில ஆண்டுகள் வெளியே இருக்கிற நிலை இப்போது இயற்கை. ஒரு நூற்றாண்டுக்கு முந்தியோ அப்படி இருப்பது குற்றம்.அப்படிப் பிரிந்து வாழும் வாழ்வைக் குடும்ப வாழ்வு என்று ஒப்புவதில்லை. மக்களின் ஒழுக்கமே பதிந்து வாழ்வதைப் பொறுத்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த புலவர் ஒருவர் மனைவியைப் பிரிந்து வெளியூரில் இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட உணர்வைப் பற்றி இங்கே ஒரு சம்பவத்தைக் காணலாம். இல்வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் நூறு ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் எப்படி மாறி எளிதாகியிருக்கிறதென்பதை இந்தச் சம்பவம் விளக்கிவிடும்.
சுந்தரக் கவிராயர் என்று ஒரு புலவர் இருந்தார்.நல்ல அழகர் அவர். அப்போது அவருக்குச் சரியான வாலிபப் பருவம். மெல்ல கண்திறந்து முல்லைச் சிரிப்பினொடு மெல்லியலார் பார்த்து மகிழும் வயது.அந்த வயதில் வறுமை இருப்பது மனிதனுக்கு ஒரு சாபக்கேடு. ஏழைமை, இளமையின் உற்சாகத்தையும் மகிழ்ச்சித் துள்ளலையும் மறக்கச் செய்து விடும். வறுமையோடு வறுமையாகப் பெற்றோர்கள் அவருக்கு ஒர் அழகான பெண்ணாகப் பார்த்துத் திருமணமும் செய்து வைத்து விட்டார்கள். வயிற்றோடு போராடிக் கொண்டிருந்தவனை மன்மதனோடும் போராட விட்டு விட்டார்கள்.
ஒரு வயிற்றுக்கே போராடிக் கொண்டிருந்த கவிராயர் இன்னொரு வயிற்றையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அழகிய இளம் மனைவியின் சிரிப்பையும், கண் பார்வையையும் பார்க்கும்போது தாம் சுந்தர்வ வாழ்க்கை வாழ்வதாக எண்ணி அவருக்கு ஒரு பிரமை உண்டாகும். வயிற்றின் பசியும், வீட்டின் ஏழைமையும் நினைவுக்கு வரும்போது கொடுமையான நரகத்தில் விழுந்து விட்டது போலிருக்கும். ஏழைக் கைகளோடும் அழகான மனைவியோடும் எத்தனை நாட்கள் பட்டினிக் குடும்பம் நடத்த முடியும்? தமக்குத் தெரிந்த கவிபாடும் கலையை வைத்துக் கொண்டு யாராவது சில செல்வர்களைச் சந்தித்துப் பொருளுதவி பெறலாமென்று அவருக்குத் தோன்றியது.
தையூரிலிருந்த முத்து முதலியார் என்ற செல்வரும் நெடுங்கலி நகர்க் கந்தசாமி முதலியார் என்ற செல்வரும் சுந்தரக் கவிராயருக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள். திருமணமான புதிதில் இளம் மனைவியைப் பிரிந்து பொருள் தேடப் புறப்பட்டார் அவர் எத்தனையோ இன்பக் கனவுகளைக் கண்டு கொண்டிருக்கும் இளம் மனைவியைப் பிரிந்து செல்வது அவர் உள்ளத்தை வேதனைப்படுத்தியது. மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு புறப்பட்டார் அவர். அந்த முயற்சியில் சில மாதங்கள் கழிந்தன. போனவுடன் வாரிக்கொண்டு வருவதற்குப் பொருள். எங்கும் குவிந்து கிடக்கவில்லையே! வேண்டியவர்களைச் சந்தித்து அவர்கள் மனம் கோணாமல் சில நாட்கள் உடனிருந்து உற்சாகமான வேளைகளைத் தெரிந்துகொண்டு கவிதை பாடிப் பொருளுதவி கேட்க வேண்டும். ஒவ்வொரு கணமும் ஊரில் தனியாக இருக்கும் மனைவி என்னென்ன எண்ணி வேதனைப்படுகிறாளோ என்று நினைத்து வருந்திக்கொண்டே கழித்தார் அவர். அவருடைய கண்களுக்கு முன்னால் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வாழும் செல்வக் குடும்பத்துத் தம்பதிகள் பலர் தென்பட்டனர்.
ஒரு நாள் இரவு வாடைக் காற்றில் தரையில் விரிக்க விரிப்பின்றி மேலாடையை விரித்து முழங்கையை மடித்துத் தலையணைபோல் வைத்துப் படுத்திருந்தார் கவிராயர். அது வெளியூர் படுத்திருந்த இடம் சத்திரத்துத் திண்ணை, வயிறோ பட்டினி, வயிற்றைவிட அதிகமான பசி மனத்தில் உண்டாகியது. அனாதைபோல் அப்படி வாடைக் காற்றில் பசியோடு படுத்திருப்பது அவருக்கு என்ன வேதனையைக் கொடுத்ததோ! நினைவுகள் சூடேறிக் கொதித்தன. அவள் அங்கே! நான் இங்கே! இப்படி வாழ்வதற்கு நான் என்ன பாவம் செய்தேன்? வாழ்வைப் படைத்த விதியும், விதியைப் படைத்த இறைவனும் என்னை மட்டும் ஏன் சோதிக்க வேண்டும்? முட்டாள்களுக்குப் பிச்சை கொடுக்கிற தகுதியையும், அறிவாளிகளுக்குப் பிச்சை எடுக்கிற நிலையையும் படைத்த படைப்புக் கடவுளை என்ன செய்தால்தான் என்ன? சில பேருக்கு அறிவைக் கொடுத்து வயிற்றைக் காயவிடுவது பல பேருக்குப் பணத்தைக் கொடுத்து மனத்தைக் கொடுக்க மறந்துவிடுவது! இதுதான் படைப்பின் நியதியா? அந்தப் படைப்புக் கடவுளுக்கு நான் சாபம் கொடுக்கிறேன். நான் பட்ட இதே பிரிவு வேதனையை அவனும் பட்டால்தான் எனது துன்பம் அவனுக்குத் தெரியும். நான் என் இளம் மனைவியைப் பிரிந்து ஊரூராகச் சுற்றிக் கொண்டு பட்டினி கிடப்பதுபோல் படைப்புக் கடவுளும் தன் மனைவியாகிய கலைமகளைப் பிரிந்து ஊரூராகத் திரிய வேண்டும். வாடைக் காற்றில் மெலிய வேண்டும். விரிப்பின்றி வெறுந்தரையில் படுக்க வேண்டும். அப்படியெல்லாம் துன்பப்பட்டால்தான் என்னைப் படைத்தவனுக்கு என் துன்பம் தெரியும்’ என்று அந்த வேதனையை ஒரு பாட்டாக எழுதிவைத்தார் கவிராயர்.
“நறையொழுகுங் குழலாளை அமுதொழுகு
மொழியாளை நயனவேலிற்
பிறையொழுகும் நுதலாளைப் பிரிந்திருக்க
இப்பிறப்பிற் பெரிதும் யான்செய்
குறையெதுவோ மதன்கனைக்கு மிகவருந்த
எனைவிதித்த கொடியோனான
மறையவனும் கலைமகளைப் பிரிந்திருந்தால்
தெரியுமந்த வருத்தந்தானே.”
‘என் துன்பத்தை உணர்வதற்காக என்னைப் படைத்தவனும் அதே துன்பத்தை அடைய வேண்டும்’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லுகிற தெம்பு கவியுள்ளம் படைத்தவனுக்குத் தான் இருக்க முடியும்.
பணம் சம்பாதிப்பதற்காக இளம் மனைவியை ஊரில் விட்டு விட்டு இந்தக் காலத்திலும் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் தொலைவிலுள்ள நகரங்களுக்குப் போகிறார்களே அவர்களில் எவராவது ஒருவராயினும் மேற்கண்ட சுந்தரக் கவிராயர் பாடியது போல் ஒரு பாட்டுப் பாட முடியுமா? முடியாது இயந்திர யுகத்தில் மோட்டார்ச் சக்கரங்கள் உருளுகிற மாதிரி உணர்ச்சிகளை வெறும் இயக்கமாக்கிக் கொண்டு விட்டோம். அவைகளில் துடிப்பு இல்லை. ஆகவே, கவிதையும் இல்லை. கவியும் இல்லை. கற்பனையும் இல்லை.