தமிழ் இலக்கியக் கதைகள்/புலவர்கள் பாவம்

விக்கிமூலம் இலிருந்து

24. புலவர்கள் பாவம்

பொதிய மலையின் அடிவாரம்.'சோ’ என்ற பேரொலியுடன் நுரைத்து வீழும் அருவிக் கரையில் கம்பீரமாகக் காட்சியளித்தது பெரியநாயகியம்மை கோவிலின் பிரதான வாசலின் கோபுரம், கோபுரத்தை ஒட்டிப் பின்னணியில் ஒரு பெரிய வெள்ளை முத்து மாலைபோல மலைமுகட்டிலிருந்து விழுந்து கொண்டிருந்தது நீர் அருவி. இந்த அற்புதமான இயற்கை அழகை எண்ணி வியந்தவாறே வந்து கொண்டிருந்தார் கவிராயர். பசி, தாகம், இளப்பு, களைப்பு இவைகளெல்லாம் வயிற்றுக்கும் உடலுக்கும் தானே?...இரசனைக்கு இல்லையே? அவர் கவிதையுள்ளம் படைத்தவர். வயிறு வற்றி வாயுலர்ந்து போனாலும் இரசனையை வற்றவிடாத அளவுக்கு உள்ளம் பரந்து விரிந்து பண்பட்டவர். மலையும் அதன் சிகரங்களை அணைத்துச் செல்லும் மேகக் கூட்டமும், பொங்கிப் பாயும் அருவியின் பொலிவும், மலைச் சாரலில் எடுப்பாக அமைந்திருந்த கோவிலும் அவர் கவனத்தைக் கவர்ந்ததில் வியப்பில்லை.

மேளதாள ஆரவாரத்தோடு கோவிலுக்கு வந்து கொண்டிருந்த ஒரு கூட்டம் அவரது ஆழ்ந்த சிந்தனையைக் கலைத்து நிறுத்தியது. கவிராயர் விலகி நின்றுகொண்டு கூட்டத்தைக் கவனித்தார். ‘கூட்டத்தின் நடுநாயகமாக விளங்கிய ஒருவர் படாடோபமான தோற்றத்துடன் மிக்கசெல்வந்தர் போலக் காணப்பட்டார். அலங்காரமான பட்டு ஆடை மேலே ஒளி வீசும் பீதாம்பரம். காதில் ஜாஜ் வல்யமாகப் பிரகாசிக்கும் நீலநிறத்து வைரக் கடுக்கன்கள். நெற்றியில் சவ்வாதுப்பொட்டு. மார்பில் ஒளிவிடும் நவமணி மாலை. கைவிரல்கள் ஐந்திலுமே மோதிரங்கள். அவரைச் சுற்றிச் சென்றவர்கள் கோயிலில் வழிபாடு செய்வதற்கு வேண்டிய பலவகைப் பொருள்களை ஏந்திச் சென்றனர்.

கூட்டத்தையும் அவரையும் கவனித்துக் கொண்டிருந்த புலவர் கவனத்தை, பின்புறம் நின்றுகொண்டு இதே காட்சியைக் கண்டு கொண்டிருந்த வேறு இருவர் பேசிக் கொள்வது கவர்ந்தது.

“தம்பீ! இவனுக்கு வந்த யோகத்தைப் பார்! எனக்குத் தெரிந்து மலைச் சாரலிலிருந்து புல்லும் விறகுக் கட்டும் சுமந்து கொண்டிருந்தவன்! இப்பொழுது பார்த்தால் அப்படிச் சொல்ல முடியுமா? கையிலும் - நல்ல இருப்பு, நிலங்கரைகளோ...? அவ்வளவும். நன்செய்! நாள் ஒன்றுக்கு நூறு பொதிக்குக் குறையாமல் களஞ்சியத்தில் நெல்லைக் கொட்டுகிறான், இதைத்தான் தம்பி, பெரியவர்கள் அதிர்ஷ்டம் என்கிறார்கள் போலும்.” இப்படிப் பேசிக் கொண்டே அவ்விருவரும் கோவிலுக்கு எதிர்த் திசையில் நடந்தனர். புலவருக்கு மின்னலென ஒருயோசனை உதித்தது. ‘இளமையில் புல்லும் விறகும் சுமந்து கஷ்டப்பட்டவனாக இருப்பதனால் இவன் வீட்டிற்குச் சென்றால் நம் குரலுக்கு நிச்சயம் இவன் இரங்கிச்செவி கொடுப்பான்’ என்று எண்ணினார். இப்படி எண்ணியவாறே கோவிலுக்குள் போகலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த அவர் மேளதாளத்தோடு உள்ளே சென்ற கூட்டம் திரும்பி வருவதைக் கண்டார். பிறர் சந்தேகம் கொள்ளாதபடி அவரும் கூட்டத்தைப் பின்பற்றிச் சென்றார். இரண்டு மூன்று தெருக்கள் கடந்தபின் அரண்மனைபோல் பெரிதாகச் சிறந்து விளங்கிய ஒரு வீட்டிற்குள் புகுந்தது கூட்டம். கோவிலிலிருந்து வந்த அவசரத்தில் உடனே தாமும் உள்ளே போய்த் தம் குறையைச் சொல்லுவது நன்றாக இராது என்று கருதியவராய் வீட்டெதிரே இருந்த மரத்தடியில் அரை நாழிகை தாமதித்தார் புலவர்.

வீட்டில் ஒரு வழியாக ஆரவாரம் குறைந்து அமைதி யுற்றதுபோல் தென்பட்டபோது. கவிராயர் மெல்ல தாமும் உள்ளே நுழைந்தார். நடையைக் கடந்து கூடத்திற்குள் நுழைய இருந்த அவரைப் பக்கத்திலிருந்து வந்த அதட்டும் குரல் அப்படியே நிறுத்தியது. புலவர் திரும்பிப் பார்த்தார். நடையோரமாகச் சாய்வு மெத்தையில் அதே செல்வர் சாய்ந்து கொண்டிருந்தார்! “யாரையா நீர்?” என்ற அந்த இடிக்குரலுக்குப் பதில் சொல்லாமல் கிட்ட நெருங்கிப் பவ்யமாகத் தம் நிலையைச் சொல்லி, அந்தச் செல்வரைப்போற்றி இரண்டொரு பாடல்களையும் பாடினார் புலவர். சாய்ந்து கொண்டிருந்த செல்வரின் முகத்திலோ நொடிக்கு நொடி: கடுமை வளர்ந்து வந்தது. புலவருக்குப் பெருத்த ஏமாற்றம். திட்டாத குறையாக அவரை வாசல் வரை கொண்டுவந்து விட்டபின் திட்டி வாசலின் கதவை இழுத்துச் சாத்திக் கொண்டுபோனான் அந்தச் சீமான்.

புல்லுக்கட்டும் விற்கும் சுமந்த பேர்
பூர்வகாலத்துப் புண்ணிய வசத்தினால்

நீலக்கல்லிற் கடுக்கனும் போடுவார்
சொல்லுக் கட்டும் புலவரைக் கண்டக்கால்
தூறிப் பாய்ந்து கதவை அடைத்தெதிர்
மல்லுக் கட்டும் மடையரைப் பாடவோ
மலையச் சாரலில் வாழ் பெரியம்மையே"

தூறி = ஆத்திரமடைந்து, மலையம் = பொதியமலை,: மல்லுக்கட்டும் = சண்டையிடும்.

தம் பாவத்தை இப்படி நொந்தவாறே பெரியம்மை கோவிலை நோக்கி மீண்டும் அந்தப் புலவர் நடந்து கொண்டிருந்தார்.