தமிழ் இலக்கியக் கதைகள்/பூபன் போட்ட கடுக்கன்
28. பூபன் போட்ட கடுக்கன்
புலமை நெஞ்சத்தின் சமத்கார சாதுரியம் அருமையாக வெளிப்படக்கூடிய இடம் புலவரின் தற்குறிப்பு ஏற்றமே. இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியின், அல்லது காரியத்தின் விளைவைத் தன் கற்பனைக் குறிப்பினால் வேறொன்றாக ஏற்றிப் பாடுவதுதான் தற்குறிப்பேற்றம். இதை நளினமாகவும் கவிதையின் மோகனம் கெட்டுப் போகாமலும் அமைத்துக் காட்டக்கூடிய தனிப்பாடல்கள் அநேகம். அவைகளை எத்துணை முறை படித்தாலும் இனிமையும் சுவையும் குன்றித் தோன்றுவதே இல்லை.
தனிப்பாடல் திரட்டிலே இராமச்சந்திர கவிராயர் பாடல்கள், ஏழைமையின் மனோபாவத்தையும், புலமை உள்ளத்தின் பொறுக்க முடியாத வேதனையையும், தமக்கு நிகரற்ற முறையில் சித்திரித்துக் காட்டுவது போலவே மேலே கூறிய விதமான கற்பனைகளையும் அழகாகச் சித்திரித்துக் காட்டுகின்றன. இந்த இருவகைத் தகுதிகளையும், கவிராயர் பால் நாம் கண்டு அனுபவிக்கும் போதுதான் அவரைப் பொறுத்து எழுந்த இம்முடிவு வலுப்பெறும்; அவர் புலமைத் திறமும் சுவைத் தேர்ச்சியும் நமக்குப் புலப்படும்.
மாதிரிக்குத் தஞ்சாவூர்க் குருவப்ப பூபன் என்ற கொடை வள்ளல்மீது அவர் பாடிய பாடல் ஒன்றைக் கண்டு அனுபவிப்போம்.
தஞ்சாவூர்க் குருவப்ப பூபன் அந்தப் பகுதியிலேயே தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருஞ் செல்வன். தமிழார்வம் பொருந்தியவன். கருணைக்குக் குறைவில்லாத அவன் நெஞ்சம் தமிழ்ப் புலவர்களுக்கும் வேண்டுகோளுடன் தேடிவரும் பிறருக்கும் இல்லையென்று சொல்ல நினைத்தும் அறியாது. அந்த வட்டாரத்துப் புலவர்க்கும் இரவலர்க்கும் மட்டுமல்ல, எங்கிருந்து வந்தாலும் சரி, எல்லோருக்கும் கண்கண்ட தற்பக மரமாக விளங்கி வந்தான் குருவப்ப பூபன். இத்தகைய வள்ளலைப் பலமுறை சந்தித்துப் பாடி மகிழ்ந்து பரிசிலும் பெற்ற பழக்கம் இராமச்சந்திர கவிராயருக்கு மிகுதியாக உண்டு. அடிக்கடி அவன் போற்றுதலில் மகிழ்ச்சி கண்டார் கவிராயர். குருவப்ப பூபனோ, அவர் வந்துவிட்டால் உலகையே மறந்துபோய் அவருக்கு முன்னால் தமிழ் இரசிகனாக உட்கார்ந்துவிடுவான்.கவிதையை இரசிப்பதில் அவனுக்கு அவ்வளவு ஆவல்.
இப்படி ஒருமுறை கவிராயர் குருவப்ப பூபனைக் காணச் சென்றிருந்த போது, வழக்கத்தை விடச் சற்றுப் பெரிய யோகம் அவருக்காக அங்கே காத்திருந்தது. கைதேர்ந்த வைரப் பரிசோதகர்களைக் கொண்டு பொறுக்கி எடுத்த புஷ்பராகக் கற்களைப் பதித்த ஒரு ஜதை கடுக்கன்களை அம்முறை அவருக்காகச் செய்து வைத்துக் காத்துக் கொண்டிருந்தான் குருவப்ப பூபன்.
அவன் கொடுத்துக் கொடுத்துத் தருமத் தழும்பேறிய தன் கைகளாலேயே அதைப் புலவர் காதுகளில் இட்டான். அப்படி இட்டபோதுதான் குருவப்ப பூபனுக்குத் தான் செய்திருந்த ஒரு சிறு தவறு தெரியவந்தது. ‘புலவருக்காகப் போடவேண்டும்’ என்ற ஆசை தூண்டிட அவசரத்தில் செய்து விட்ட அந்தக் கடுக்கன்கள் அவர் காதுகளுக்குக் கொஞ்சம் பெரிதாக இருந்தன. அதன் பலன்?...புலவருடைய தாடைகளில் அடிக்கடி மோதி இடித்தன கடுக்கன்கள். தூர்ந்து போயிருந்த அவர் காதுத் துளைகளை ஒட்டி இறுக்கிப் பிடித்த அவைகள் அவருக்குச் சிறிது வலியையும் கொடுத்தன. இதைக் கண்ட பூபன் அவைகளை அழித்துவிட்டு, அளவோடுகூடிய வேறு கடுக்கன்களைச் செய்வதாகவும், பிழைக்குத் தன்னை மன்னிக்கும்படியாகவும் புலவரிடம் கேட்டுக் கொண்டான். புலவர் சிரித்துக்கொண்டே, “உன் அன்புபோலப் பெரியதாகவும், நட்புபோல இறுக்கமாகவும் இருக்கும் இவைகளையே நான் அணிந்துகொள்கிறேன்! வேறு செய்யவேண்டா” என்று மறுத்தார். -
அளவைவிடப் பெரிதாகக் தாடைகளில் மோதியும், காதுத் துளைகளை ஒட்டி இறக்கி வலியை உண்டாக்கியும் வருத்த வேண்டியதற்குப் பதிலாக அற்புதமான கற்பனை ஒன்றை அளித்தன. அவை. “பாட்டும் தமிழும் அறியாத கஞ்சர்களிடம் போய்த் தமிழைப் பாடி வீண் துதி செய்யாதே என்று கன்னத்தில் மோதித் தாடைகளில் அடித்தன கடுக்கன்கள். ‘குருவப்ப பூபன் போன்ற வள்ளல்களிடம் மட்டும் தமிழ்ச் சுவையைக் கூறு! பிற வகையான பேதைகளிடம் என்றும் தமிழைக் கூறாதே’ என்று காதுகளில் இரகசியம் கூறவது போல ஒட்டி இறுக்கி வலிகொள்ளச் செய்தன.” இந்த அழகான கற்பனை பாட்டாக வடிவம் பெற்றது. புலவர் குறும்புச் சிரிப்போடு பாட ஆரம்பித்தார்.
“ஏதிலே வறியவர்க்கும் இனிய
கவிப்புலவருக்கும் இரங்கியந்தப்
போதிலே தனங்கொடுக்கும்
தஞ்சைநகர்க் குருவப்பபூபன் எற்குக்
கோதிலே கிடந்துழலும்
பலரிடத்திற் சென்று தமிழ் கூறாவண்ணம்
காதிலே ஒட்டிட்டுத் தாடையின்
மோதக் கடுக்கன் தானிட்டானே.”
ஏதிலே = எப்போதும், தனம் = செல்வம், எற்கு = எனக்கு. கோது = குற்ற, ஒட்டுஇட்டு = இரகசியம் கூறி.
தமிழ்ப் பயனை வீண் செய்யாதே என்று கடுக்கன்கள் கன்னத்திலடித்துத் தண்டித்ததாகவும் ஒட்டி இரகசியம் கூறியதாகவும் பாடும் சமத்காரம் அபூர்வமாக அமைந்து விட்டது.