உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் இலக்கியக் கதைகள்/முதலும் முடிவும்

விக்கிமூலம் இலிருந்து

34. முதலும் முடிவும்

சோழ வேந்தனது அவைக்களம், சோழன் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் வலது பக்கம் சோழ ராஜ்யத்தின் ஆஸ்தான கவிஞர் ஒட்டக் கூத்தர் சிங்க ஏறு போலச் செம்மாந்து வீற்றிருந்தார். இடது பக்கம் சற்றுத் தாழ்வான ஓர் அசனத்தில், முதல் நாள் பாண்டிய நாட்டிலிருந்து அரசனின் தூதுவராக வந்திருந்த புகழேந்திப் புலவர் உட்கார்ந்திருந்தார்.

கூத்தர் நெஞ்சு குரோதத்தால் கொதித்தது. புகழேந்தியோ எந்த விதமான எண்ணமுமின்றி நிஷ்களங்கமான நெஞ்சத்துடன் சோழன் அவையில் அமர்ந்து கொண்டிருந்தார்.அவராக ஏதாவது பேச்சைத் தொடங்கி வாளைக் கொடுப்பார். அப்போது சரியானபடி அவைக்கு நடுவிலே வைத்து அவமானப்படுத்தி விடலாம் என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒட்டக்கூத்தருக்கு எதிரியின் மெளனம் ஏமாற்றத்தைக் கொடுத்தது. சோழனுடைய அவைக்குப் புலவர் என்ற பெயரில் யார் வந்தாலும் சரி, அவர்களை ஒருவர் விடாமல் மட்டந்தட்டித் தலைகுனியச் செய்து அனுப்பும் பணியை வழக்கமாகக் கொண்டிருந்தார் அவர். சாதாரணப் புலவர்களையே அந்தக் கதிக்கு ஆளாக்கி அனுப்பும் அவர் பாண்டிய நாட்டு அவைப் புலவராகப் பாண்டியனிடமிருந்து வந்திருக்கும் தம்மை யொத்தவர் போல விளங்கும் புகழேந்தியை எப்படிச் சும்மா விட்டுவிட முடியும்? ஆகவேதான் அவர் மனம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் துறுதுறுப்புடனே துடித்துக் கொண்டிருந்தது.

அன்றைய அவையில் வழக்கமாக நிகழவேண்டிய அம்சங்கள் யாவும் நிகழ்ந்து முடிந்தபின் சோழ அரசனே பேச்சுக்கு நடுவே தற்செயலாகக் கவிதைகளின் இயல்பைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தான். சோழன் கவிதைகளைப் பற்றிப் பேசும் அந்தச் சந்தர்ப்பத்தையே புகழேந்தியை மடக்குவதற்கு ஏற்றதாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் கூத்தர். “அரசே, இதோ அமர்ந்திருக்கின்றாரே, பாண்டிய நாட்டுப் புலவர் புகழேந்தியார்! அவரோடு நான் ஒரு சிறு போட்டி நடத்துவதற்கு இந்த அவையில் இடமளிக்க வேண்டும். இதில் தவறாக நினைப்பதற்கு எதுவும் இல்லை. வெறும் விளையாட்டாக இந்த அவையும் தாங்களும் கண்டு இரசிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். விஷயம் வேறு ஒன்றுமில்லை, நான் ஒரு வெண்பாவின் முதல் இரண்டு அடிகளைப் பாடுவேன். புகழேந்தியார் அதன் பின்னிரண்டு அடிகளைப் பொருத்தமாகப் பாடி முடித்து விட்டால் போதும். இவ்வளவுதான்.” இவ்வாறு கூறிக் கூத்தர் விண்ணப்பித்துக் கொண்டபோது சோழவேந்தன் அதை மறுக்கவில்லை.

"அதற்கு என்ன? அப்படியே செய்து விட்டால் போயிற்று” என்று கூறிவிட்டுக் கூத்தரையும் புகழேந்தியையும் அவன் பார்த்தான். கூத்தரைப் பற்றி நன்கு கேள்விப்பட்டு அறிந்து கொண்டிருந்த புகழேந்தி அவர் தம்மை வீணாக வம்புக்கு இழுக்கிறார் என்று எண்ணிக் கொண்டார். பின்னிரண்டு அடிகளைப் பாடிப் பொருத்தமாகப் பாடலை முடித்துக் காட்ட வேண்டுமே என்பதற்காகவோ, கூத்தரின் வேறு நிபந்தனைகளுக்காகவோ அவர் சிறிதும் அஞ்சவில்லை. ஆனால் தேவையில்லாத நேரத்தில் அநாவசியமாக, இந்தப் போட்டியைத் தன் சொந்தப் பொறாமையைத் தீர்த்துக் கொள்வதற்காக இந்த மனிதர் ஏற்படுத்திச் சொற் போருக்குக் கூப்பிடுகின்றாரே என்றுதான் வருந்தினார்.

கூத்தர் கூறியபடியே செய்யவேண்டும் என்று சோழன் மிகவும் ஆவலோடு கேட்டுக் கொண்டபோது புகழேந்தியால் அதை மறுக்க முடியவில்லை. சூது வாது தெரியாத அரசன். கூத்தரின் அந்த விண்ணப்பம் விளையாட்டாக, பொழுதுபோகப் பாடுவதற்கே என அவர் கூறியபடியே இருக்கும் என்று நம்பினான். கூத்தனாரின் பொறாமை உள்ளம் அவனுக்குப் புலப்படவில்லை.

சோழன்,'பாட ஆரம்பிக்கலாமே!’ என்னும் குறிப்புத் தோன்ற ஒட்டக்கூத்தரைப் பார்த்தான். கூத்தர் படுத்துக் கிடக்கும் மதயானை ஒன்று எழுந்திருப்பது போலத் தம் இருக்கையில் இருந்து எழுந்தார். தேவைக்கு அதிகமான கர்வமும் கம்பீரமும் அவரிடம் தோன்றின. அவ்வளவில் நிபந்தனைப்படி பாடலின் முதல் இரண்டு அடிகளைக் கூத்தர் பாடலானார். அவையில் பூரண அமைதி நிலவியது.

வென்றி வள்வன் விறல்வேந்தர் தம்பிரான்
என்றும் முதுகுக் கிடான்கவம்-”

வென்றி = வெற்றி, வளவன் = சோழன், விறல் வேந்தர்= திறமைமிக்க அரசர், பிரான் = தலைவன்.

கூத்தர் பாடிவிட்டு நிறுத்தியதும் அந்த முதல் இரண்டு அடிகளின் பொருளை உணர்ந்து கொண்ட சோழனும் அவன் அவையினரும் அளவற்ற மகிழ்ச்சி கொண்டார்கள். புகழேந்தியையும் அவருடைய பாண்டிய மன்னனையும் இழிவுபடுத்த முயல்வது போல அமைந்திருந்தது பாடலின் முதற் பகுதி. அது புகழேந்தியின் மனத்தைப் புண்படுத்தினாலும் தயக்கமில்லாமல் உடனே எழுந்தார் அவர். ஒட்டக்கூத்தரைவிட அதிகமான குறும்புச்சிரிப்பு ஒன்றை உதிர்த்துக் கொண்டே அவர் தொடர்ந்து பாடலானார். அவை மீண்டும் அமைதி அடைந்தது.

... ... ... ... துன்றும்
வெறியார் தொடை கமழும் மீனவர்கோன்
கைவேல் எறியான் புறங்கொடுக்கின் என்று.”

வெறிஆர்= வண்டுகள் மொய்க்கும், தொடை = மாலை மீனவர்கோன்= பாண்டியன். புறங்கொடுப்பின் = சோழன் புறமுதுகு காட்டினால்,

என்று புகழேந்தி பாட்டை முடித்தார். சோழன் முகத்தில் ஈயாடவில்லை. ஒட்டக்கூத்தர் தலைகுனிந்தார். அவையில் கூத்தர் பாடி முடித்தவுடன் ஆரவாரம் செய்தவர்கள் இப்போது அடித்து வைத்த கற்சிலைகளைப்போல ஆடாமல் அசையாமல் உட்கார்ந் திருந்தனர். புகேழந்தி திரும்பவும் ஒருமுறை முதலையும் முடிவையும் சேர்த்து முழங்கினார்.

வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்
என்றும் முதுகுக்கி டான்கவசம் - துன்றும்
வெறியார் தொடைகமழும் மீனவர்கோன் கைவேல்
எறியான் புறங்கொடுக்கின் என்று.”

முதல், முடிவை அவமானப்படுத்த முயன்றது. முடிவோ, முதலை ஆதாரமாக வைத்துக்கொண்டு முதலையே அவமானப் படுத்தி அகங்காரத்தை அழித்துவிட்டது. புற்றுக்குள்ளே மாணிக்கம் இருக்கும் என்று முதலில் எண்ணிக் கை நுழைத்தவன் முடிவில் உள்ளே இருக்கும் பாம்பினால் தீண்டப் பெற்றார் போலாயிற்று பொறாமையே இயற்கையாகக் கொண்ட கூத்தர் நிலை, மட்டந்{{ தட்டிப் புகழேந்தியை மடக்க முயன்றார் கூத்தர். புகழேந்தி மட்டந் தட்டிக் கூத்தரையே மடக்கிவிட்டார். பிறருக்குத் தீமை எண்ணுபவர்கள் அதைத்தாமே முடிவில் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நியதியோ? என்னவோ?