உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)/சங்க காலம்

விக்கிமூலம் இலிருந்து


2. சங்க காலம்
(கி.மு. 500 - கி.பி. 200)


கி.மு. 500 முதல் கி.பி. 100 வரை சங்க இலக்கிய காலமாகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 300 என்பர். சங்க இலக்கியப் பாடல்கள் தனித்தனிப் பாடல்களாகும். அவை பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை, பின் வந்தவர் இவற்றைத் தொகுத்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என வகைப்படுத்தினர். இவை பொருள், அடிவரையரை கருதித் தொகுக்கப்பட்டுள்ளன. அகம், புறம் என்பன பொருள் பற்றிய பாகுபாடுகளாகும் முதலில் இவை வாய் மொழி இலக்கியமாக வழங்கியிருக்க வேண்டும் என்றும், இவற்றுக்குப் புலவர்கள் எழுத்து வடிவு தந்தனர் என்றும் கூறுவர். இவற்றை ஆராய்ந்து இவற்றின் மரபையும், பொருளையும் கண்டு இலக்கண நூல்களை இயற்றினர். புறச்சார்பு ஏதுமின்றி மக்கள் உணர்வுகளினின்று இயற்கையாகத் தோன்றிய காதல் பாடல்களும் வீரப் பாடல்களும் சங்க இலக்கியங்களாயின.

மூன்று சங்கங்கள்

புலவர்களையும், அறிஞர்களையும் தன்னகத்தே கொண்டதொரு அமைப்பே சங்கமாகும். கி.பி. 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சமணத்துறவிகள் சங்கங்களைத் தோற்றுவித்துக் கல்வித் தொண்டும், சமயப் பணியும் செய்து வந்தனர். அவர்கள் காலத்துச் சங்கங்களைப்போலவே பழங்காலத்திலும் சங்கங்கள் இருந்திருக்க வேண்டும் எனப் பிற்காலத்தார் கருதினர். சங்கங்களில் அமர்ந்து புலவர்கள்  சங்க இலக்கியங்களைப் பாடினர் எனக் கருதுதற்குத் தக்க சான்றுகள் இல்லை.

இலக்கியச் சான்றுகள்

இறையனார் களவியல் உரை தரும் செய்திகள்

'கடலால் கொள்ளப்பட்ட தென் மதுரையில் முதற் சங்கமாகிய தலைச்சங்கம் இருந்தது. திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றம் எறிந்த குமரவேள், அகத்தியர். முரஞ்சியூர் முடி நாகராயர், நிதியின் கிழவன் முதலான 549 புலவர்கள் அச்சங்கத்தில் வீற்றிருந்தனர்; 4449 புலவர்கள் பாடினர். அவர்கள் பாடிய முதுநாரை, முதுமுருகு, பெரும்பரிபாடல், களரியாவிரை முதலான நூல்கள் மறைந்துபோயின. காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக 89 மன்னர்கள் தலைச் சங்கத்தைப் புரந்தனர். அச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலவியது. புலவர்க்கு அகத்தியமே இலக்கண நூலாக விளங்கியது.

"இடைச்சங்கம் கடல் கொண்ட கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் நிலவியது; இருந்தையூர்க் கருங்கோழி, சிறு பாண்டரங்கன், துவரைக் கோமான், கீரந்தை, வெள்ளூர் காப்பியன், திரையன் மாறன் உள்ளிட்ட 59 புலவர்கள் வீற்றிருந்தனர்: 3700 புலவர்கள் பாடினர். கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல், மாபுராணம், பூத புராணம், தொல்காப்பியம் முதலான பல நூல்கள் தோன்றின. இவற்றுள் இன்று தொல்காப்பியம் ஒன்றே கிடைத்துள்ளது. வெண்டேர்ச் செழியன் முதலாக மூடத் திருமாறன் ஈறாக 59 மன்னர்கள் இச் சங்கத்தைப் புரந்தனர்.

“கடைச்சங்கம் பாண்டியர் தலைநகரமாயிருந்த மதுரை மாநகரில் விளங்கியது. கபிலர், பரணர், நக்கீரர், சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், பெருங்குன்றூர்க் கிழார் உட்பட 49 புலவர்கள் வீற்றிருந்தனர். 499 புலவர்கள் பாடினர். எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் வேறு பிற நூல்களும் இப்புலவர்களால் இயற்றப்பட்டன; 1850 ஆண்டுகள் நிலவிய இச்சங்கத்தை முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 பாண்டிய மன்னர்கள் போற்றிப் புரந்தனர்.”

— இச் செய்திகளை இறையனார் களவியல் உரை கூறுகிறது; இதன் ஆசிரியர் நக்கீரர்.

முதற்சங்கம் தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாட புரத்திலும், கடைச் சங்கம் இன்றைய மதுரையிலும் இருந்தன என்பதும். முதற்சங்கத்தில் அகத்தியமும். இடைச் சங்கத்தில் தொல்காப்பியமும், கடைச் சங்கத்தில் எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் தோன்றின என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கன எனினும், அது குறிப்பிடும் ஆண்டுகளும் புலவர்களின் எண்ணிக்கையும் மிகைபடக் கூறலாகும். செவிவழிச் செய்தியாகப் பேசப்பட்டு வந்த இவற்றை நக்கீரர் தம்முரையில் குறிப்பிட்டார் என்பது பொருந்தும்.


மற்றும் பண்டைக் காலத்தில் சங்கங்கள் இருந்தன என்ற கருத்தைப் புலவர்களும்; மக்களும் நம்பினர். கீழ் வரும் சான்றுகள் அதற்குச் சான்று பகர்கின்றன.

'சங்கத் தமிழ் மூன்றும் தா'- அவ்வையார்.
'தலைச்சங்கப் புலவனார் தம்முன்'- மாணிக்க வாசகர்;
'சங்க முகத்தமிழ்; சங்க மலிதிகழ்'-- திருமங்கையாழ்வார்.


கல்வெட்டுச் சான்றுகள்

கல்வெட்டுகளும் சங்கம் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. சின்னமனூர்ச் செப்பேட்டில் அதுபற்றிக் குறிப்பு ஒன்று கிடைக்கிறது. அதன் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு என்பர்.

'மாபாரதம் தமிழ்ப்படுத்தும்,
மதுராபுரிச் சங்கம் வைந்தும்'- செப்பேட்டு வரிகள்

இச்சான்றுகள் சங்கம் இருந்தது என்பதனை வற்புறுத்துவனவேயாயினும், சங்க இலக்கியங்களில் அது பற்றிய குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை.

தொல்காப்பியம்

தொல்காப்பியம் கி. மு 300-க்கு முற்பட்டதாகும். காப்பியர் என்பது ஒருவகைக் குடிப்பெயர், அதுவே அவர் இயற்பெயராக மருவிவிட்டது. தொல் என்பது அடை மொழியாகும் தொல்காப்பியர் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக் களத்தில் இருந்தவர். கபாடபுரம் பாண்டியர் தலை நகரமாக விளங்கிற்று. அதங்கோட்டு ஆசான் என்னும் பெரும்புலவர் தலைமையில் இவர் தம் நூலை அரங்கேற்றினார் எனப் பாயிரம் கூறுகிறது.

‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று பாயிரத் தொடர் இவரது இலக்கணப் புலமைக்கும், வடமொழி அறிவுக்கும் சான்றாகும். இவரை உரையாசிரியர்கள் அகத்தியரின் மாணாக்கர் என்பர்.

தொல்காப்பியம், எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றிப் பொருளுக்கும் இலக்கணம் கூறுகிறது; எழுத்திலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல்லிலக்கணத்தைச் சொல்லதிகாரத்திலும், பொருளிலக்கணத்தைப் பொருளதிகாரத்திலும் விளக்குகிறது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. எழுத்துக்களின் இயல்பு. அவை மொழியாகும் திறம், மொழி புணருங்கால் ஏற்படும் திரிபு முதலியவற்றை எழுத்ததிகாரம் விளக்குகிறது ஒலிகளின் அமைப்பைப் பிறப்பியல் அடிப்படையில் விளக்குவது தொல்காப்பியத்திற்கே உரிய தனிச் சிறப்பாகும். இது மேலை நாட்டார் அணுகுமுறையை ஒத்துள்ளது. பெயர், வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொற்களையும் அவை தொடரும் முறையையும் சொல்லதிகாரம் விளக்குகிறது; வேற்றுமைத் தொடர், அல்வழித் தொடர் எனத் தொடரியலைப் பிரித்துக் காட்டுகிறது. இவ் அடிப்படையிலேயே சந்தியிலக்கணமும் அமைந்துள்ளது. பொருளதிகாரம் தமிழ் இலக்கிய மரபுகளைத் தெளிவுபடுத்துகிறது; அகத்திணை, புறத்திணை எனும் ஒழுக்கங்களையும், உவமை எனும் அணி வகையையும் மெய்ப்பாடுகளையும், செய்யுள் அமைப்புகளையும், சொற்பொருள் மரபுகளையும் விரிவாக விளக்குகிறது.

தொல்காப்பியம் வகுத்துள்ள மரபுகளை ஒட்டியே சங்க இலக்கியங்களின் பொருள் மரபும், யாப்பும், அணி நயங்களும் அமைந்துள்ளன. பிற்காலத்து இலக்கண நூல்களும் அதனையொட்டியே பெரும்பாலும் அமைத்துள்ளன. காலத்துக்கு ஏற்றவாறு அவற்றில் சில மாற்றங்கள் தோன்றின. இலக்கணங்களில் மட்டுமன்றி இலக்கியங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அம் மாற்றங்களின் வரலாறே இலக்கிய வரலாறாகும்.

மேலை நாட்டார் இலக்கிய ஆராய்ச்சிக்கு அரிஸ்டாட்டிலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்வதைப் போலத் தமிழ்ப் புலவர்கள் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை இலக்கியக் கோட்பாட்டையும் மரபையும் அறிவதற்கு. அடிப்படையாகவும், தொடக்கமாகவும் கொள்கின்றனர். தமிழ்மொழி அமைப்பையும் இலக்கிய மரபுகளையும் தெளிவுபடுத்தும் முதல் நூல் தொல்காப்பியமே. அஃது இலக்கண நூலாகத் திகழ்தல் குறிப்பிடத்தக்கது.

அகம், புறம் முதலியவற்றின் சிறப்பு

சங்க இலக்கியப் பாடல்கள் சில மரபுகளையொட்டி அமைந்தவை. காதல் பற்றிய செய்தியை அகம் என்றும், வீரம், கொடை, புகழ் முதலிய வாழ்க்கை முறைகளைப் பற்றிய செய்திகளைப் புறம் என்றும் பாகுபடுத்தினர். அகப் பாடல்களில் வரும் தலைவன் தலைவியர் கற்பனை மாந்தர்களாதலின் அவர்கள் பெயர் சுட்டிக் கூறப்படுவதில்லை. புறப் பாடல்களில் நாட்டை ஆளும் அரசனின் வீரச் செயல்களும், கொடைப்பண்பும், குடி மக்களுள் சிறந்தவர்களின் புகழ்மிக்க செயல்களும் குறிப்பிடப்படுகின்றன. அகப் பாடல்கள் கற்பனையால் அமைந்தவை; புறப்பாடல்கள் உண்மைச் செய்திகளைக் கூறுபவை. இவ்வகத்திணைப் புறத்திணைப் பாடல்களுக்கு மலை, காடு, பாலை, வயல், கடல், காலம் முதலியன பின்னணிகளாக அமைகின்றன. அவற்றால் தீட்டப்படும் காநல் வாழ்வு உரிப்பொருள் எனப் போற்றப்படுகிறது. பின்னணிகளுள் இடமும் (மலை, காடு.. பாலை. வயல், கடல்) காலமும் முதற் பொருள்களாகும். மரம், விலங்கு, பறவை. தொழில், இசை முதலியவை கருப் பொருள்களாகும். நிலம், குறிஞ்சி (மலை). முல்லை (காடு) பாலை, மருதம் (வயல்), நெய்தல் (கடல்) என ஐவகைத் திணைகளாக அமைந்தன. இவ்வாறே புறத்திணைகளும் திணைப் பாகுபாட்டைப் பெற்றன. அவை வெட்சி, கரந்தை. நொச்சி, உழிஞை, வஞ்சி, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என ஒன்பது வகைப்படும். அகத்திணை, புறத்திணை இரண்டும் பல துறைகளைத் தம்மகத்தே கொண்டன.

சங்க நூல்கள்

சங்க இலக்கியங்களுள் ஒரு பகுப்பாகிய எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை எனும் ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன. அவற்றுள் அகநானூறு 13 முதல் 31 அடிவரை உள்ள 400 பாடல்களைக் கொண்டது. நற்றிணை 9 முதல் 12 அடி வரை உள்ள 400 பாடல்களைக்கொண்டது. குறுந்தொகை 4 முதல் 8 அடிவரை உள்ள 400 பாடல்களைக் கொண்டது. ஐங்குறுநூறு 3 முதல் 5 அடிவரை உள்ள 500 பாடல்களைக் கொண்டது. இவை அடிவரையறையால் பாகுபாடு செய்யப்பட்டவை. கலித்தொகை கலியோசை தழுவிய 150 பாடல்களைக் கொண்டது.

பரிபாடல் என்பது இசை பற்றி அமைந்த பெயராகும். 70 பாடல்களுள் கிடைத்துள்ளவை 32 ஆகும். இவற்றுள் அகப் பாடல்களும் உண்டு; புறப்பாடல்களும் உண்டு. பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருளைப் பற்றியவை. பத்துப் பத்தாகப் பாடப்பட்ட சேரவேந்தர் பதின்மரைப் பற்றிய நூறு பாடல்களைக் கொண்டது பதிற்றுப்பத்தாகும். அவற்றுள் முதற்பத்தும் இறுதிப்பத்தும் இன்று கிடைக்கவில்லை. தமிழக மன்னர்கள், சிற்றரசர்கள். கொடை வள்ளல்கள், வீரர்கள் முதலானோரின் செயற்கு அரிய செயல்களையும், உயர் பண்புகளையும் கூறுவது புறநானூறாகும். வாழ்க்கை உண்மைகளை எடுத்துரைக்கும் பாடல்களும் இதில் உண்டு.

எட்டுத் தொகை

நற்றிணை , தல்லதிணை என்பது இதன் பொருளாகும்; இதன் பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். 'முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' என்றும், “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வமன்று; தம் செய்வினைப் பயனே” என்றும், 'சான்றோர் செல்வ மென்பது சேர்ந்தோர் புன் கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம்' என்றும் வரும் தற்றிணைத் தொடர்கள் குறிப்பிடத்தக்கன. இதில் வரும் உவமை அழகு நம் உள்ளத்தைக் கவர வல்லது, 'நின்ற சொல்லர் நீடு தோன்று இனியராக' விளங்கும் தலைவரின் நட்பின் திறத்திற்குச் சந்தன மரத்தின் உயரத்தில் தொகுத்து வைத்த தாமரை மலர்த் தேனை உவமையாகக் காட்டுகிறாள் தலைவி ஒருத்தி.

‘நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என்தோள் பிரிபு அறியலரே;
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை'

குறுந்தொகை

இது ' நல்ல குறுந்தொகை' என்று சிறப்பிக்கப்படுகிறது. இதன் பாடல்களை இருநூற்றுக்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர். ஒளவையார். அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடினியார், வெள்ளி வீதியார் முதலிய பெண்பாற் புலவர்களின் பாடல்களும் இதன் கண் இடம் பெற்றுள்ளன. இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.

பாரி, ஓரி. மலையமான், அஞ்சி, ஆய், நன்னன், நள்ளி, கட்டி, அகுதை முதலான குறுநில மன்னரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் குறுத்தொகை தருகிறது.

தலைவியின் அன்பு நெஞ்சினை அழகு ஓவியமாகப் படைத்துக் காட்டுகிறார் புலவர் ஒருவர். தான் சமைத்த உணவைத் தன் கணவன் இனிதென உண்ணும் போது பெரிதும் மகிழ்கிறாள் தலைவி ஒருத்தி, இல்லறத்தின் இனிமை இதில் இனிதாக இனிக்கிறது.

' முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துஉ டீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே'

ஐங்குறுநூறு

இதன் கண்ணுள்ள மருதப் பாடல்களை அம்மூவனாரும், குறிஞ்சிப் பாடல்களைக் கபிலரும், பாலைப் பாடல்களை ஓதலாந்தையாரும், முல்லைப் பாடல்களைப் பேயனாரும் இயற்றியுள்ளனர்.

பெருந்தேவனார் இதற்கும் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.

இதன்கண் ஒவ்வொருதிணையும் பிரிவுக்குப் பத்துப் பாடல்களாகப் பத்துப் பிரிவுகளை உடையது. ஒவ்வொரு பிரிவும் வேட்கைப் பத்து, வேழப்பத்து எனத் தனித்தனித் தலைப்புகளைப் பெற்றுள்ளன. பிற்காலத்தில் மணிவாசகரும் பிடித்த பத்து, வாழாப் பத்து எனப் பத்துப் பத்தாகப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைமகள் ஒருத்தி தன் தலைவனுடன் உடன் போக்காகச் சென்று விடுகிறாள். அதனை அறிந்த தாய் அவளைத் தேடி வருமாறு பலரையும் போக்கினாள்; அவர்களோ அவளைக் காணாது வறிதே திரும்பினர். தன் அருமை மகளை விட்டு ஒரு நாளும் பிரியாத தாய்க்கு மகளின் பிரிவு எல்லையற்ற துன்பத்தை அளித்தது. குழந்தைப் பருவத்திலிருந்து தன் மகள் விளையாடிய பாவை, அவள் வளர்த்த கிளி, பூவை முதலியவற்றை நோக்கி நோக்கி மளம் குழைந்து ஏங்கி வருந்துகிறாள் அவள்.

'இது என் பாவை பாவை; இது என்
பூவைக்கு இனிய சொற் பூவை என்று
அலமரு நோக்கின் நலம் வரும் சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி என்று இவை
காண்தொறும் காண்தொறும் கலங்க
நீங்கின னேஎன் பூங்க ணோளே!'

கலித்தொகை

பாலைக் கலியைப் பெருங்கோவும், குறிஞ்சிக் கலியைக் கபிலரும், மருதக் கலியை மருதனிள நாகனும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் பாடினர்.

நாடகப் போக்கிலமைந்த இனிய பாடல்களை இந் நூலில் காணலாம். கலியோசை நிறைந்த இசைப் பாடல்களைக் கொண்ட இந் நூல் ' கற்றறிந்தார் ஏத்தும் கலி' என்றும், 'கல்விவலார் கண்டகலி' என்றும் போற்றப் படுகிறது.

தலைவி, தன் காதலனுடன் சென்றுவிடுகிறாள். அதனை அறிந்த தாய் கலங்கி வருந்துகிறாள். அவளுக்கு ஆறுதல் கூறும் அறிஞர் ஒருவரின் அறிவுரை தக்க உவமைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

அம்மையே! சந்தனம் மலையில் பிறந்தாலும் மலைக் கென்ன பயன்? பூசிக்கொள்பவர்க்கன்றோ அது பயன்படுகிறது! முத்துக் கடலில் பிறந்தாலும் கடற்கென்ன பயன்? அணிபவர்க்கன்றோ அது பயன்படுகிறது. இசை யாழில் பிறந்தாலும் யாழுக்கு என்ன பயன்? கேட்பவர்க் கன்றோ பயன்படுகிறது! அவைபோல நின்மகளும் உனக்குப் பயன்படாமல் மற்றொருவனுக்கு உரிமையாகி விட்டாள்.'

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையனே
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

'

அகநானூறு

இதன்கண் அகப் பொருட்செய்திகள் மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன; அழகிய வருணனைகளும், வரலாற்றுச் செய்திகளும், பண்பாட்டுக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன. நந்தர் , மோரியர் முதலியோர் பற்றிய குறிப்புகளும், கடையெழு மன்னர்கள், குறுநில மன்னர்கள், மூவேந்தர் பற்றிய செய்திகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. தமிழகத்தின் மலைகளும், ஆறுகளும், நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

சோலையில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றில் பெடையும் வண்டும் பெட்புடன் படிந்து தேன் உண்டு தம்மை மறந்து கிடக்கின்றன. வினைமுடித்து மீளும் தலைமகன் அவ்வழியே தேரூர்ந்து வருகிறான்; இக்காட்சியைக் காண்கிறான். தன் தேர் மணி நாவொலி அவற்றின் இன்பத்திற்கு இடையூறு தருமே - எனக் கலங்குகிறான்; மணிகளிள் நாவை அசையாவாறு கட்டித் தேரைச் செலுத்துகிறான்.

‘பூத்த பொங்கர்த் துணையோடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண்வினைத் தோன்'

பதிற்றுப்பத்து

இது சேரவேந்தர் பதின்மரைப்பற்றிய பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய நூறு புறப்பாடல்களின் தொகுப்பாகும், சேர மன்னர்களின் வீரம், வெற்றிச் சிறப்புகள், கொடை, உயர் பண்பாடு, நீதி வழங்கும் முறை, அறம் வளர்த்த திறம். அஞ்சாமை, நாகரிகம் முதலிய பல செய்திகளை இதனால் அறியலாம்.

ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் ஒன்று காணப்படுகிறது. அஃது அப்பத்தால் பாடப்பெறும் மன்னன் பெயர், அவனது வெற்றி. கொடைத்திறம், பாடிய புலவர், அவர் பெற்ற பரிசில் முதலியவற்றைக் கூறுகிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் முதலிய செய்திகள் தரப்பட்டுள்ளன. பாட்டின்கண் இடம் பெற்றுள்ள ஒரு சிறந்த தொடரே ஒவ்வொரு பாட்டிற்கும் தலைப்பாக (பெயராக) அமைந்துள்ளது.

பூத்த நெய்தல், கூந்தல் விறலியர், கயிறு குறுமுகவை, செங்கை மறவர் , சில்வளை விறலி, ஏறாஏணி போன்றவை தலைப்புகளாக விளங்குகின்றன.

சேரமன்னர் தம் சிறப்பையும், செல்வாக்கையும் அறிவதற்குப் பெருந்துணை புரியும் இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுள்ளது.

'ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியோடு ஆயிடை
மன்மீக் கூறுநர்' பத்து-1
 
ஓவத் தன்னை வினைபுனை நல்லில்
பாவை அன்ன நல்லோள்

பத்து-61


போன்ற அடிகள் அழகிய சொற் சித்திரங்களாக அமைகின்றன.

புறநானூறு

இது சங்க நூல்களுள் தலையாயதும் வரலாற்றுச் சிறப்புடையதுமாக விளங்குகிறது. அறம், பொருள், வீடு எனும் புறப்பொருள் பற்றிய 400 பாடல்களைக் கொண்டுள்ளது. இதன் பாடல்களை ஏறத்தாழ 160 புலவர்கள் பாடியுள்ளனர்.

தமிழர் வாழ்வினையும், நாகரிகத்தினையும் அறிய இந்நூல் பெரிதும் துணை செய்கிறது. இது கிடைக்கப் பெறாதிருப்பின் பண்டைத் தமிழக வரலாற்றை அறிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். தமிழரின் வீரம், கொடை, பண்பாடு, நீதி, அறம், அஞ்சாமை: நாகரிகம் முதலியவற்றை இந் நூலால் அறியலாம்.

சேர, சோழ பாண்டிய மன்னர்களின் வெற்றியையும், செங்கோன்மைச் சிறப்புகளையும், குறுநில மன்னர்களின் கொடைச் சிறப்பையும் இது விளக்குகிறது. ஔவையும், அதிகமானும் அன்பும் பண்பும் பொருந்தக் கொண்ட நட்பின் திறமும், பாரியும் கபிலரும் கொண்ட மாரியும் நிலமும் போன்ற நெருங்கிய தொடர்பும் உணர்வுமிக்க சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. நாட்டு மன்னனிடம் வீரர்கள் காட்டிய அன்பும், அவனுக்காக அஞ்சாமல் உயிர் துறந்த வீர வரலாறும் சிறப்பாகப் பேசப்படுகின்றன. சுருங்கக் கூறின் இது பண்டைக் காலப் பண்பாட்டுக் கருவூலமாகவும், விளங்குகிறதெனலாம்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'

"எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே'

'இன்னா தம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்த்தோரே'

'செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே'

‘நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்'

முதலான புறநானூற்றுப் பகுதிகள் பண்டைத் தமிழரின் உயர்பண்பாட்டையும், ஒழுக்க நெறிகளையும் சிறந்து நாகரிகத்தையும் விளக்குவனவாகும்.

பரிபாடல்

இது பரந்து செல்லும் 'ஓசையுடைய ஒருவகை இசைப்பாவால் ஆன பாடல்களைக் கொண்டது. இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து. மலைவளம், புனல் விளையாட்டு முதலியவற்றையடக்கி 25 முதல் 400 அடிகட்கு உட்பட்ட அளவில் பாடப்படுவது, பரிபாடலாகும். அகப் பொருள், புறப்பொருள் பகுதிகள் இதன்கண் இடம் பெற்றுள்ளன. திருமாலைப்பற்றிய பாடல்கள் ஆறும், முருகனைப் பற்றிய பாடல்கள் எட்டும் புறப்பொருள் பற்றியன. வையைபற்றிய பாடல்கள் எட்டும் அகப்பொருள் பற்றியன.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் அரிய உரை இதற்கும் கிடைத்துள்ளது.

திருப்பரங்குன்றம், இருங்குன்றம், மதுரை, வையை, இருந்தையூர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை இந்நூல் தருகிறது; முருகனின் பெருமையையும், திருமாலின் சிறப்பையும் மிக அழகாகப் புனைந்துரைக்கிறது. இதன்கண் உள்ள 22 பாடல்களையும் பதின்மூன்று புலவர்கள் பாடியுள்ளனர்: அவற்றிற்கு இசையமைத்த புலவர்கள் வேறு. சங்க நூல்களுள் காலத்தால் மிகவும் பிற்பட்டது பரிபாடலே என்பது அறிஞர் கருத்து; டாக்டர் மா. இராசமாணிக்கனார் பரிபாடலின் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்பர். கலித் தொகையும் இக்காலத்தைச் சேர்ந்ததே என்பது அவர் கருத்து.

சிவபெருமான், முருகன். கண்ணன், அகலிகை முதலானவர்களைப் பற்றிய புராணக் கதைகள் பரிபாடலில் காணப்படுகின்றன.

முருகனிடம் அருள் வேண்டும் ஒருவன் ஐந்தாம் பாடலில் 'யாம் இரப்பவை, பொருளும் பொன்னும் போகமுமல்ல, நின்பால் அருளும் அன்பும் அறனும் உருளிணர்க் கடம்பி னொலிதா ரோயே' என்று கூறி வேண்டுகிறான்.

திருமாலுக்குரிய பாடல்கள் ஏழானாலும் திருமால் பலவாறு போற்றப்படுகிறார்.

‘தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ'

என்று திருமாலின் நிலை விளக்கப்படுகிறது. இவ்வடிகள் இறைவன் ' தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்' என்ற - பிரகலாதன் வாக்கிற்கு விளக்கமாக அமைந்துள்ளன.

பத்துப்பாட்டு

இதன் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக நீண்ட அளவின. அகப்பொருள் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஆற்றுப்படை

இதன் பாடல்களில் ஆற்றுப்படை நூல்கள் ஐந்துள்ளன . அவை புறப் பாடல்களாகும். வள்ளன்மைமிக்க மன்னிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் கலைஞன் ஒருவன். தனக்கெதிரே வரும் மற்றொரு கலைஞனைத் தனக்குப் பரிசில் தந்த மன்னனிடம் அவன் அருமை பெருமைகளைக் கூறி அவன்பால் அனுப்பி வைத்தல் ஆற்றுப்படை எனப்படும்.

1. திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்துப்போல முதலாவதாக அமைந்துள்ள பாடல் திருமுருகாற்றுப் படையாகும். இதனை ‘முருகு’ என்றும், ' புலவராற்றுப்படை' என்றும் அழைப்பர். 317 அடிகளைக் கொண்ட இப்பாடலி. ஆசிரியர் நக்கீரர்; சைவர் தம் பதினோராந் திருமுறையில் இஃது இடம் பெற்றுள்ளது. ' வீடு பேற்றை விரும்பும் ஓர் இரவலனை வீடுபெற்றான் ஒருவன் முருகன்பால் ஆற்றுப் படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. ஏனைய ஆற்றுப்படைகள் எல்லாம் ஆற்றுப் படுத்துபவர் பெயரால் அமைந்திருக்க, இஃதொன்று மட்டும் பாட்டுடைத் தலைவன் பெயரால் அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்க தாகும்.

சங்க இலக்கியத்தில் வரும் பக்தி உணர்ச்சிகள் நிரம்பிய முழுப்பாடல் இஃதொன்றே எனலாம். அக்காலத்தில் இருந்த முருகன் திருக்கோயில்களைப் பற்றியும், வழிபாட்டு முறைகளைப் பற்றியும் இது குறிப்பிடுகிறது. இதில் அமைந்துள்ள இயற்கை வருணனைகள் உள்ளம் கவரும் தன்மையன.

இது முருகக் கடவுள் எழுந்தருளியிருக்கும் திருப்பரங்குன்றம் முதலாகிய ஆறுபடை வீடுகளைப் பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

முதற்பகுதியில் முருகக் கடவுளுடைய திருவுருவச் சிறப்பும், அவர் அணியும் மாலை விசேடங்களும், சூரர மகளிர் செயல்களும், முருகக் கடவுள் சூரனை வென்ற சிறப்பும், மதுரையின் பெருமையும், திருப்பரங்குன்றத்தின் இயற்கை வளமும் கூறப்படுகின்றன.

இரண்டாம் பகுதியில் முருகனின் ஆறு திருமுகங்கள் பற்றிய குறிப்புகளும், பன்னிரண்டு கைகளின் செயல்களும், திருச்சீரலைவாயில் அவர் எழுந்தருளியிருக்கும் நிலையும் கூறப்படுகின்றன.

மூன்றாம் பகுதியில் முருகனை வழிபடும் முனிவர்களின் ஒழுக்கமும், மகளிர் இயல்புகளும் கூறப்படுகின்றன.

நான்காம் பகுதியில் அந்தணர் இயல்பும், அவர்கள் முருகனை வழிபடும் இயல்பும் கூறப்படுகின்றன.

ஐந்தாம் பகுதியில் குன்றக் குரவை நிகழ்ச்சிகளும் முருகனை வழிபடும் மகளிரின் இயல்பும் கூறப்படுகின்றன.

ஆறாம் பகுதி, முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்களையும், முருகன்பாற் சென்று அருள் பெறும் வழியையும், அவன் அருள் புரியும் திறத்தையும், பழமுதிர்சோலையில் உள்ள அருவியின் சிறப்பையும் கூறுகிறது.

முருகனது திருமேனியின் புனைந்துரை அழகிய சொல்லோவியமாக அமைத்துள்ளது.

'உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன் தாள்
செறுர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை'

2. பொருநர் ஆற்றுப்படை

இது 248 அடிகளைக் கொண்டது; வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பாவால் அமைந்தது. பரிசில் பெற விரும்பும் பொருநனைப் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் கரிகாற் சோழனிடம் ஆற்றுப் டுத்திப் பாடிய பாடல் இது. இதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்பவர்.

இதில் பொருநர்கள் விழவின்கண் ஒன்று கூடித் தம் இசைத்திறனைக் காட்டுகின்றனர்; அவ்விழா முடிந்ததும் வேற்றூரை நோக்கிச் செல்கின்றனர்,

பாலையாழின் வருணனையும், பாலைப்பண்னைக் கேட்டு ஆறலை கள்வரும் தம் கொடுஞ்செயலை மறந்து அன்பு காட்டும் திறமும் இதில் கூறப்படுகின்றன. விறலியரின் கேசாதி பாத வருணனை போற்றத்தக்கது.

கரிகாலன்பால் பொருநர் பொற்றாமரை பெறுதலும் விறலியர் பொன் மாலைகள் பெறுதலும் கூறப்படுகின்றன.

கரிகாலன் இளமையில் வெண்ணிப் பறந்தலையில் சேர பாண்டியர்களை வென்ற வரலாற்றுச் செய்தி இதில் கூறப்படுகிறது.

'சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே'

- பொருநர் 246-258

வரம்பு கட்டின வேலி நிலத்தில் ஆயிரங்கலம் செந்நெல்லை விளைவிக்கும் காவிரியால் பாதுகாக்கப்படும் நாட்டுக்குரியவன் கரிகாலன் என இத்தொடர்களால் காவிரியும் கரிகாலனும் பாராட்டப்படுதல் காண்க.

3. சிறுபாணாற்றுப் படை

இது 269 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாகும். இது பாணன் ஒருவனை ஓய்மா நாட்டு நல்லியக் கோடனிடத்தே ஆற்றுப்படுத்துகிறது. இதனைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்:

'இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ' (35) என்னும் வரி சிறுபாணனைக் குறிக்கிறது. அதனால், சிறுபாணாற்றுப்படை என வழங்கலாயிற்று.

இதிலும் விறலியின் கேசாதிபாத வருணனை தக்க உவமைகளால் கூறப்பட்டுள்ளது.

'உயங்கு நாய் நாவின் நல்லெழில் அசைஇ
வயங்கிழை உலறிய அடி என விறலியின்
அடிகளுக்கு நாயின் நாவை உவமை, கூறியமை பாராட்டத் தக்கது.

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்'

இது வறுமையால் வாடும் பாணன் ஒருவனது அடுப்பங்கரை வருணனை.

ஈன்று அணிமைப்பட்ட நாய், குட்டிக்கும் பால் கொடுக்க முடியாமல் அடுப்பங்கரையில் குரைத்துக் கொண்டிருக்கிறது என்பது வறுமைச் சித்திரம்.

பிறர்தம் வறுமை நிலையைக் காணாதவாறு கதவை அடைத்துக்கொண்டு பாண்மகள் ஒருத்தி உப்பும் இல்லாமல் வேகவைத்த வேளைக் கீரையை உண்கிறாள்.

'ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்'

இதில் நல்லியக் கோடனின் வீரமும் கொடையும் சிறப்பிக்கப்படுகின்றன.

4. பெரும்பாணாற்றுப்படை

இது 500 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் அமைந்தது; பாணன் ஒருவன் மற்றொருபாணனைத் தொண்டைமான் இளந்திரையளிடத்தே ஆற்றுப்படுத்துகிறான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாராவர்.

‘இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி’ (அடி- 467) எனப் பேரியாழ் சிறப்பிக்கப்படுதலால் இது பெரும்பாணாற்றுப்படை என வழங்கலாயிற்று.

'ஐவகை நிலங்களின் வருணைகளும் அவ்வந் திலங்களில் வாழும் பல்வகைச் சாதியார் இயல்புகளும், அவர்கள் தத்தமக்கு ஏற்றவாறு விருந்தினரை உபசரிக்கும் திறமும் இப்பாட்டில் அழகாகத் தரப்பட்டுள்ளன.

இளந்திரையன் பாணர்களை உபசரிக்கும் இயல்பு அழகாகப் புனைந்துரைக்கப்படுகிறது.

'பாசியன்ன சிதர்வை நீக்கி
ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் உடீஇ'

இத்தொடர்கள் பாணரின் சுற்றத்தினருக்கு வேந்தன் ஆடை வழங்கிய திறத்தை விளக்குகின்றன.

'கொட்டைப் பாசியின் வேரை ஒத்த கிழிந்த ஆடையை நீத்து விளங்குகின்ற நூலாற் செய்த பாலாவியை ஒத்த துகில்களைக் கரிய பெரிய சுற்றத்தாரோடு சேர உடுக்கப் பண்ணி' என்பது இத்தொடர்களின் கருத்தாகும்.

5. மலைபடுகடாம்

இது 583 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவில் அமைந்தது; கூத்தனை ஆற்றுப்படுத்துவதால் 'கூத்தராற்றுப்படை' என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது.

செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகர் - பாடியது.

“மலைபடுகடாஅம் மாதிரத்து இசைப்ப” என்ற அடி மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்தமையால் இப்பாட்டு மலை படுகடாம்' என வழங்குகிறது.

நன்னனது கவிர மலைச் சிறப்பு, மலைச்சாரலின் "வளம், அச்சாரலில் வாழும் குறவர்கள், மலைப்பக்கத்துத் திகழும் பல்வகை ஓசைகள், நன்னனது ஊரின் பெருமை. அவன் கூத்தர், விறலியர்களுக்குப் பரிசில் நல்கும் சிறப்பு. முதலியன இதில் கூறப்படுகின்றன.

இவை ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.

6. முல்லைப்பாட்டு

வினைமேற் கொண்டு பிரிந்து சென்ற கணவன் மீளுந்துணையும் தலைவி ஆற்றியிருத்தல் முல்லைத் திணையாகும். இது 103 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் அமைந்தது; அகப் பொருளைப் பற்றியது.

தலைமகனைப் பிரிந்த தலைவியின் பிரிவுத்துயரும், அவள் ஆற்றியிருக்கும் திறனும், வினை முடித்து மீளும் தலைவன் நிலையும் இதில் கூறப்படுகின்றன. இதனைப் பாடியவர் நப்பூதனார் என்பவர்.

போர்க் காரணமாகத் தான் பிரிதலைத் தலைவன் குறிப்பால் உணர்த்தத் தலைவி அதனைத் தாங்காமல் துன்புறுகிறாள். “அவள் வினைமுடித்து மீளல் உண்மை; நீ வருத்தம் நீங்குக” என்று பெருமுது பெண்டிர் ஆறுதல் கூறி அவளைத் தேற்றுகின்றனர்.

பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டலும், பாசறையில் மன்னன் தன்படைகளுக்குத் துணையாகிக் கடமையில் கண்ணுங் கருத்துமாய்ச் செயலாற்றலும், தலைவி தலைவனைக் காணாது துயருழத்தலும், கார்கால வருணனையும் இதில் கூறப்படுகின்றன.

செறியிலைக் காயா அஞ்சனம் மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்

கோடற் குவிமுகை அங்கை அவிழத்
தோடார் தோன்றி குருதி பூப்பக்
கானம் நந்திய செந்நிலப் பெருவழி'

என்னும் காட்டு வழியின் புனைந்துரை கற்பார் உள்ளத்தைக் கவர்கிறது. காயா கருநிறமாக மலர்கின்றனவாம்; கொன்றை நல்ல பொற்காசுகளைச் சொரிகின்றனவாம்; காந்தள் கை விரல்களை விரிக்கின்றனவாம்; தோன்றிப்பூ குருதியைப் பூக்கின்றனவாம். என்ன அழகு!

7. நெடுநல்வாடை

இது 188 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் அமைந்தது. பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியுள்ளார்.

கூதிர்ப்பருவம் இதில் அழகாகச் சித்திரிக்கப்படுகிறது. தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்குத் துணையாவி நல்வாடையாகவும் திகழ்தலால் இது நெடுநல்வாடை என வழங்குகிறது.

இஃது அகப் பொருளைப் பற்றியதாயினும் - வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம் (176) எனப் பாண்டியனது அடையாளப் பூக் குறிப்பிடப்படுவதால் இது புறத்திணையின் பாற்பட்டது.

இதில் கூதிர்க் காலத்தில் மக்களும் விலங்குகளும் பறவைகளும் குளிரால் நடுங்கும் நிலையும், அந்தப்புரத்தில் அரசி யாமத்தும் கட்டிற்கண் பிரிவுத்துயரால் உறக்கமின்றிக் கிடந்து வருந்தும் நிலையும், அதே சமயம் பாசறையில் வேந்தனும் உறங்குதலின்றிப் புண்பட்ட வீரர்களை நேரில் கண்டு ஆறுதல் கூறும் நிலையும் கூறப்படுகின்றன. ஒருபால் காதலும் மறுபால் கடமையும் சித்திரிக்கப்படுகின்றன. முல்லைப்பாட்டும் இவ்வகையில் இதனொடு ஒத்து விளங்குகிறது. அது முல்லை வருணனைச் சிறப்பால் முல்லைப்பாட்டு எனப்பட்டது இது வாடைக் காற்றின் வருணனையால் நெடுநல்வாடை எனப்பட்டது

"நள்ளென் காமத்துப் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே”

- (186-88)

இவை வேந்தனின் கடமை உணர்வைக் காட்டும் தொடர்கள்.

8. மதுரைக் காஞ்சி

இது 782 அடிகளைக் கொண்டது; வஞ்சியடிகள் விரலிய ஆசிரியப்பாவால் அமைந்தது. மதுரை என்னும் நகரின் பெயரும், காஞ்சி என்னும் திணைப் பெயரும் இணைந்து மதுரைக் காஞ்சி எனப் பாட்டின் தலைப்பாக அமைந்துள்ளது.

மதுரைக் காஞ்சி - மதுரையிடத்து வேந்தனுக்குக் கூறிய காஞ்சி என விரியும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைக் கூறி அறிவுரை கூறும் பாட்டு, அது. இதனைப் பாடியவர் மாங்குடி மருதனார்.

"திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர் தலை உலகம் மாண்டு கழிந்தோரே”

என்பது நிலையாமையை விளக்கும் தொடராகும். மதுரைக்கண் பாயும் வையை யாற்றின் சிறப்பு, அந்நகரின் நாளங்காடி அல்லங்காடி முதலியன இதில் புனைந்துரைக்கப்பட்டுள்ளன.

இதில் பாண்டியர்களின் பெருமை மிகுதியாகக் கூறப்படுகிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் சேர சோழர்களையும் குறுநில மன்னர்களையும் வென்ற செய்தி இதில் மிகுதியாகக் கூறப்படுகிறது.

நாளங்காடி என்பது பகற்கடைகளைக் குறிக்கும். பண்டம் விற்பவர், விழா எடுப்பவர் முதலியோர் எடுத்த பல்வகைக் கொடிகள் ஆண்டுத் திகழும்.

அல்லங்காடி என்பது இரவுக் கடைகளைக் குறிக்கும்.

குறிஞ்சிப் பாட்டு

இது குறிஞ்சித் திணைபற்றி அமைந்த பாட்டாகும், இது 261 அடிகளைக் கொண்டது; ஆசிரியப் பாவால் அமைந்தது.

தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் கூற்றாக இப்பா அமைந்துள்ளது. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தும் பொருட்டுக் கபிலர் இதனைப் பாடினார் என்பர்.

தலைவி தோழியுடன் நீராடிப் பூக்களைப் பறித்துக் குவித்தாள் என்ற செய்தியைக் கூறும் பகுதியில் 99 மலர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

'முத்தாலும், மணியாலும், பொன்னாலும் அமைத்த அணிகலன் கெட்டாலும் சீர் செய்து கொள்ளலாம்; மனிதரின் சால்பும், பண்பும் கெட்டுவிட்டால் அவற்றை மீண்டும் நிலை நிறுத்த முடியாது' என்னும் கருத்தைப் பின்வரும் தொடர்கள் அழகாக விளக்குகின்றன.

"முத்தினும் பொன்னினும் அத்துணை
தேர்வருங் குரைய கலங்கெடிற் புணரும்

சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்'

(13-18)

10 பட்டினப் பாலை

இது 301 அடிகளைக் கொண்டது; வஞ்சியடிகள் மிகுதியாக விரவிவந்த ஆசிரியப்பாவால் அமைந்தமையின் இது வஞ்சிநெடும்பாட்டு எனவும் வழங்குகிறது. இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாவார். கரிகாற் பெருவளத்தான் இதன் தலைவனாவன். தலைவியைப் பிரிய நினைத்த தலைவன், தன் நெஞ்சினை நோக்கிப் 'பட்டினமே பெறுவதாயினும் பிரிந்து வாரேன்' என்று கூறிச் செல வழங்குவதாகப் பாடப்பெற்ற அகத்திணைப் பாடல் பட்டினபாலை. பட்டினம் என்பது காவிரிப்பூம் பட்டினத்தையும், பாலை என்பது திணையொழுக்கத்தையும் குறிக்கும்.

தலைவன் செல்லும் கானமோ வெம்மையானது; தலைவியின் தோள்களோ தண்மையானவை; ஆகையால் புகார்ப் பட்டினமே கிடைப்பினும் அவளைத் தான் பிரிவதற்கில்லை" என்று தலைவன் தன் நெஞ்சினை நோக்கிக் கூறுவதனைப் பின்வரும் தொடர்கள் குறிப்பிடு கின்றன.

"முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே!”

அவன் கடக்க வேண்டிய சுரத்தைத் 'திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் வெய்ய கானம்' என்னும் தொடரும், அவன் தழுவும் தலைவியின் தோள்கள் அவன் கோலினும் தண்ணிய' என்னும் தொடரும் விளக்குகின்றன.

கரிகாலன் ஆட்சியைப் பெற்ற திறமும், அவன் வெற்றிகளும், காவிரிப்பூம் பட்டினத்து வணிகச் சிறப்பும் இதில் மிகுதியாக விளக்கப்படுகின்றன.


சங்க காலம் ஒரு பொற்காலம்

தொன்மைச் சிறப்பு


நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களுள் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களுமே தொன்மை வாய்ந்தவை. இவை பிற நாட்டின் தாக்குதலால் தோன்றியவை அல்ல; மக்கள் வாழ்க்கையினின்று தாமே முகிழ்த்து எழுந்தவை. பண்டைக் காலத் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்க்கை நடத்தினர். அவ்வாழ்க்கையின் பிரதிபலிப்பே சங்க நூல்களாகும். எட்டுத் தொகை, பத்துப் பாட்டு நூல்களேயன்றி அவற்றிற்கு முற்பட்ட தொல்காப்பியம் தமிழின் தொன்மைக்குச் சான்று பகரும்.

அகமும் புறமும்

சங்க இலக்கியங்கள் அனைத்தும் அகம், புறம் எனும் இரு பெரும்பிரிவுகளுள் அடங்கும். வாழ்க்கையின் உயிர் நாடியாகிய காதலும், போரும் சங்கப் பாடல்களில் சித்திரிக்கப்படுகின்றன. எட்டுத் தொகையுள் நற்றிணை, குறுத்தொகை, ஐங்குறுநூறு. கலித்தொகை, அகநானூறு எனும் ஐந்தும் அகத்திணை நூல்களாகும். பத்துப் பாட்டுன் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை தவிர ஏனைய ஏழும் புறப் பாடல்களாகும். இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்துள்ளன. பரிசில் பெற்ற கலைஞன் ஒருவன் பெறாதவர்க்கு அறிவுறுத்தி ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படையாகும். அது புறத்துறைகளுள் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. வேந்தர்கள் கலைஞர்களைப் போற்றிய திறம் ஆற்றுப் படைகளால் தெளிவாகப் புலப்படுகிறது.

உரிப்பொருளின் சிறப்பு

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் மூன்றும் அகப்பொருள் பாடல்களுள் இன்றியமையாதனவாகும்; நிலமும், பொழுதும் முதற் பொருளாகும். தெய்வம், உணவு , மரம், விலங்கு, தொழில், யாழ், பண், மலர், பறவை முதலியன கருப் பொருள்களாகும். உரிப்பொருள் இவ்விரண்டினையும் பின்னணியாகக் கொண்டு விளங்குகிறது. புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்பன முறையே குறிஞ்சி, பாலை, முல்லை; மருதம், நெய்தல் எனும் ஐந்திணைகளுக்குமுரிய உரிப்பொருளாகும். இம்மூன்றனுள் உரிப்பொருளே - சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இயற்கைக்காக இயற்கையைப் பாடும் மரபினைச் சங்க இலக்கியங்களில் காண இயலாது.

முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை"

(தொல்.அக, 8)

தன்மை நவிற்சி

இல்லது புனைதல் என்பதனைச் சங்க இலக்கியத்தில் காண முடியாது. உள்ளதை உள்ளவாறு கூறிச் சங்க காலப் புலவர்கள் மன நிறைவு பெற்றனர். உண்மை நிகழ்ச்சிகளை அழகுபடக் கூறி அழகுணர்வை வெளிப்படுத்தினர்.

‘திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்'

(சிறுபாண். 130-132)

என்பது வறுமை பற்றித் தீட்டிய சித்திரமாகும். இது தன்மை நவிற்சியாகும்.

உவமைத்திறன்

வினை, பயன், மெய், உரு எனும் நான்கன் அடிப்படையில் உவமைகளை அமைத்தனர்; உயர்ந்த பொருள்களையே உவமைகளாகக் கூறினர்.

‘தாமரைத் தண்தாது மாதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை'

-நற்

தலைவனின் நட்பின் திறத்திற்கு உயர்ந்த சந்தன மரத்தில் தொகுத்த தாமரை மலர்த்தேனை உவமையாகக் காட்டுகிறாள் தலைவி, உயர்ந்த பொருளை உவமையாகக் காட்டும் அழகை இங்குக் காணலாம்.

வெளிப்படையாக அன்றி உள்ளுறையாகவும் உவமம் கூறுதல் சங்கப் பாடல்களின் தனி அழகாகும்.

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்'

(குறுந். 8)

இதில் உள்ளுறைப் பொருள் அமைந்து கிடத்தலைக் காண்க.

உயர்ந்த கோட்பாடுகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் உயர்ந்த கோட்பாட்டைச் சங்க இலக்கியம் வெளிப்படுத்துகிறது.

'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி
நல்லை வாழிய நிலனே'

என்ற வரிகள் மக்களின் சிறப்பால் தான் நாடு உயர்வு பெறுகிறது என்பதைக் காட்டுகின்றன .

"'முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்'

என்பது அக்கால மக்களின் பண்பாட்டுச் சிறப்பை விளக்குகிறது.

'வினையே ஆடவர்க்கு உயிரே! வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்'

இல்லத் தலைவனுக்குத் தொழிலே உயிராம்; மனை உறை மகளிர்க்குந் தலைவனே உயிராம்; வினைக்கு ஆண்: காதலுக்குப் பெண் என்ற கோட்பாடு அவர்கள் வாழ்க்கையில் மிளிர்கின்றன.

அரசர்களுள் புலவர்கள்

அரசர்களும் தம் புலமையை அரிய பாடல்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். குறுகுறு நடந்தும், சிறு கை நீட்டியும், இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும் குழந்தை மயக்குகிறது என அறிவுடை நம்பி விளக்கி இருப்பது கற்பார் மனத்தைக் கவர வல்லது. இளம்பெரு வழுதி, சோழள் நல்லுருந்திரன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலாய வேந்தர் பலரும் பாடியுள்ளனர்.

பெண்பாற் புலவர்கள்

அதிகனின் உயிர் நண்பராக விளங்கிய அவ்வையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. காக்கை பாடினியார், நச்செள்ளையார், பொன்முடியார், பெருங்கோப்பெண்டு, ஆதிமந்தியார் முதலிய பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்களும் மிகச் சிறந்தனவாகும்.

யாப்பு

அகவல், கலிப்பா, வெண்பா, வஞ்சிப்பா இந்நால்வகைப் பாக்களே சங்க காலப் பாடல்களாகும், அகவற்பாவுக்கே அன்றைய புலவர்கள் முதலிடம் தந்தனர். ஓசைக்கு அவர்கள் முதன்மை தரவில்லை. உரை நடையே ஒலி நயம் பெற்று அழகாக இயங்கியபோது அது பாட்டாயிற்று: பிற்காலக் கவிஞர்கள் சந்தங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதனால், கருத்துக்கும். தக்க சொல்லாட்சிக்கும் சிறப்புத் தர இயலாமல் போய்விட்டது. அகவலும், செப்பலும், தூங்கலும், துள்ளலும் ஆகிய இவ்வோசைகளையே தம்பாடல்களில் கையாண்டனர்.

மரபுகள்

சங்க இலக்கியங்கள் சிறந்த இலக்கிய மரபுகளைக் கொண்டுள்ளன. அகப்பொருள், புறப்பொருள்கள் மரபு மீறாமல் விளங்குகின்றன. புலவர்கள் எண்ணிக்கையில் மிக்கு இருந்தும் அனைவரும் மரபுக்குக் கட்டுப்பட்டே பாடினர்.