உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)/பல்லவர் காலம்

விக்கிமூலம் இலிருந்து

4. பல்லவர் காலம்
(கி.பி. 600 - 900)


சிலப்பதிகாரம், மணிமேகலைகளுக்குப் பின் இடைக்காலத்தில் தமிழகம் இலக்கிய வளர்ச்சி குன்றி இருளடைந்து கிடந்தது. பாலியும், பிராகிருதமும் செல்வாக்குப் பெற்றன. சமணமும், பௌத்தமும் தழைத்தன, இக்காலத்தில் களப்பிரர் தமிழகத்தை ஆண்டனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் இந்நிலை நீடிந்தது. பாண்டியன் கடுங்கோன் உள்ளிருந்து எதிர்த்தான். வடக்கேயிருந்து பல்லவர்கள் படை எடுத்தனர்; களப்பிரர் ஆட்சி வீழ்ச்சி உற்றது.

தமிழ் இசையும், சைவ வைணவ சமயங்களும் தழைத்து ஓங்குவதற்குப் பலலவர் ஆட்சி வழிவகுத்தது. மக்கள் இன்னிசையால் தமிழ்பாடி இறைவனை வாழ்த்தி வணங்கினர்.

பன்னிரு திருமுறைகள்

சைவமும், வைணவமும் தழைத்தன. இறைவற்குப் பணி செய்த தொண்டர்களுள் தலை சிறந்தவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களுமாவர். நாயன்மார் அறுபத்து மூவர்; ஆழ்வார்கள் பன்னிருவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். மாணிக்கவாசகர், சேந்தனார், திருமூலர், காரைக்காலம்மையார் முதலியோர் இயற்றிய பாடல்களைப் பத்தாம் நூற்றாண்டில் இராசராசனின் வேண்டுகோட்கு இணங்கி நம்பியாண்டார் நம்பி என்பவர் பதினொரு திருமுறைகளாகத் தொகுத்துத் தந்தார். பின்னர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணமும் சேர்ந்து சைவ சமய குரவரின் திருமுறைகள் பன்னிரண்டாயின.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். மாணிக்கவாசகர் எனும் நால்வரும் சைவசமயக் குரவர் எனப் பெற்றனர், முதல் மூவரும் பாடிய பாடற்றொகுதி தேவாரம் எனப்பட்டது. மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம் எனப்பட்டது.

திருஞானம்பந்தர்

இவர் சீகாழிப்பதியில் சிவபாத இருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் பிறந்தவர், குழவிந் பருவத்திலேயே இறைவி பாலூட்ட ஞானம் பெற்றவர்.

இவர் தம் தந்தை தோளில் அமர்ந்து கோயில் தலங்கள்தோறும் சென்று கைத்தாளமிட்டுப் பாடல்கள் பல பாடினார்: திருக்கோலாக்கா என்னும் திருப்பதியில் இறைவன்பால் பொற்றாளம் பெற்று நாளும் இன்னிசையால் தமிழைப் பரப்பி வந்தார்; அறத்துறையில் முத்துப் பல்லக்கினையும் திருபட்டீசுவரத்தில் முத்துப் பந்தலையும், திருவாவடுதுறையில் பொற்கிழியையும், திருவீழிமிழலையில் படிக்காசும் பெற்றார். திருநல்லூரில் இவருக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமகளோடும் பிறரோடும் பெருமணம் என்ற கோயிலை அடைந்து இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

நரசிம்ம பல்லவனின் தானைத்தலைவரை இவர் சந்தித்ததாகப் பெரிய புராணம் கூறுவதால் இவரது காலம் ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பர், தம் காலத்தவராய திருநாவுக்கரசரை இவர் இருமுறை சந்தித்திருக்கிறார்.

'வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டக் செங்கு
முதம் வாய்கள் காட்ட
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும்
கழுமலமே'

எனும் வரிகள் இவரது இயற்கை வருணனைக்கும்

'சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனோடுபால்
முறையாலே உணத் தருவன் மொய்பவளத் தோடு தரளம்
துறையாரும் கடல்தோணி புறத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே

எனும் பாடல் இவரது அகத்துறைப் புலமைக்கும் தக்க எடுத்துக் காட்டுகளாகும்.

இவர் பாடிய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

திருநாவுக்கரசர்

இவக் வாகீசர் எனவும் அழைக்கப்பெறுகின்றார், இயற்பெயர் மருள் நீக்கியார்; தமக்கையார் திலகவதியார் இவரைச் சமண சமயத்தினின்றும் சைவத்திற்குக் கொண்டு வந்தார். சமண சமயம் புக்கவரை இறைவன் சூலைநோய் தந்து ஆட்கொண்டார்.

மகேந்திரவர்மன் காலத்தவராதலின். இவர் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.

இவர் பாடியவை 4900 என்பர் ; கிடைத்தவை 3066; இவை 312 பதிகங்களுள் அடங்கும். இவர் பாடிய விருத்தப்பா. தாண்டகம் எனப்பெயர் பெறும். இவரைத் தாண்டக வேந்தர் எனவும் அழைப்பர்.

'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை,

இவ்வரிகள் இவரது அஞ்சா நெஞ்சினைப் புலப்படுந்து வனவாகும்.

'மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே'

இப்பாடல் இவரது இறையுணர்வை இயம்பவல்லது.

இவர் பாடல்கள் 4, 5, 6, ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சுந்தரர்

திருக்கயிலையில் இறைவனுக்கு மலர்த்தொண்டு செய்து வந்த இவர் அநிந்திதை, கமலினி என்ற தெய்வ மகளிர் மீது காதல் கொண்டார். அதனால் இம்மூவரும் மண்ணில் பிறந்து தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள இறைவன் திருவுள்ளம் கொண்டார். அதன்படி கமலினி பரவையாராகவும். அநிந்திதை சங்கிலியாராகவும் பிறந்தனர்.

சடங்களியின் மகளை மணம் செய்து கொள்ளாதவாறு சுந்தரரை மண நாளில் ஆட்கொண்டார் இறைவர், இறைவனைத் தோழராகக் கொண்டமையால் சுந்தரர் தம்பிரான் தோழன் எனப்பெற்றார். இறுதியில் வெள்ளை யானை மீது இவர்ந்து திருக்கயிலைக்குச் சென்றார்.

இவர் பாடிய பாடல்கள் 38,000 என்பர், கிடைத்தவை 1029; இவை நூறு பதிகங்களில் அடங்கும்.

தம்மைப் பித்தன் என விளித்ததால் இறைவன் அதனையே தம்மைப்பற்றிப் பாடுவதற்கு முதல் அடியாகக் கொடுத்தார் என்பர்.

‘அரும்பருகே சுரும்பருவ அறுபதாம் பண்பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ்வயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலய நல்லூர் காணே'.

இப்பாடல், சுந்தரரது இயற்கைப் புனைந்துரைத் திறனை விளக்குகிறது.

கங்கை யாளேல் வாய்திற வாள்;
கணப தியேல் வயிறு தாரி;

அங்கை வேலோன் குமரன் பிள்ளை;
தேவி யார்கோற் றட்டி யாளர்
உங்களுக்குஆட் செய்ய மாட்டோம்
ஒண்காந்தள் தளியு ளீரே'

இஃது அவரது நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் பாடியவை திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். இவை எட்டாம் திருமுறையைச் சேர்ந்தனவாகும்.

இவர் திருவாதவூரில் பிறந்தவர்; தந்தை சம்புபாதாசிருதர்; தாய் சிவஞானவதியார். இறைவர் திருப்பெருந்துறையில் குருத்த மரத்தடியில் குருவடிவாய் எழுந்தருளி இவரை ஆட்கொண்டார். அரிமர்த்தன பாண்டியன் பரி வாங்கத் தந்த பொருளை இவர் கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார். இவருக்காக இறைவர் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியன் கைப் பிரம்பால் அடிபட்டார்.

இவர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்னும் பழமொழி இவர் பாடலின் சிறப்பைப் புலப்படுத்தும். இராமலிங்க அடிகளும் 'வான் கலந்த மாணிக்கவாசகர்' என்று தொடங்கும் பாடலால் இவர் பாடல் பெருமையை விளக்குகிறார்.

சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் எனும் நான்கு அகவற் பாடல்களும் திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருப்பொன்னுசல் ழுதவிய மகளிர் ஆடல்களை அடிப்படையாகக் கொண்ட பகுதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

இவர் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாகப் பாடியுள்ளமை போற்றதக்கது. அதிசயப் பத்து, அன்னைப்பத்து, ஆசைப்பத்து, அருட்பத்து, குயிற்பத்து முதலியன இத்தகையன.

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளம் தாழ் உறுபுனலின் கீழ்மேல் ஆப்
பதைத்துருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லால்
கண் இணையும் மரமாம்தீ வினையி னேற்கே'

இது பத்திச்சுவை நனிசொட்டும் பாடல் என்பதில் ஐயமில்லை.

மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் 400 கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டது. இறைவனைத் தலைவனாகவும், ஆன்மாவைத் தலைவியாகவும் கொண்டு இது பாடப்பட்டது. இலக்கியக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் பொழுது இஃது ஒரு சுவைமிக்க நூலாகப் புலப்படும்.

பன்னிரு ஆழ்வார்கள்

திருமால்பால் கொண்ட பக்தி வெள்ளத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆழ்வார்கள் பன்னிருவராவர். அவர்தம் நூல்கள் இருபத்து நான்கு. பாடிய பாடல் ஏறத்தாழ நாலாயிரம். இவை நாலாயிர திவ்வியபிரபந்தம் என்ற பெயரால் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. கி.பி.ஆறாம் நூற்றாண்டு தொடங்கி, ஒன்பதாம் நூற்றாண்டுக்குட்பட்ட முந்நூறு ஆண்டு காலத்தில இவ்வடியார்கள் திருப்பாசுரங்களைப் பாடித் தமிழையும் இறையுணர்வையும் ஒருங்கே வளர்த்துள்ளனர். இவர்கள் பாடல்கள் எளிமையும், இனிமையும் அழகும் பொலிந்து தமிழின் பெருமையை நிலை நாட்டி வருகின்றன. இவற்றைத் தொகுத்தவர் நாதமுனிகளாவார்.

1. பொய்கையாழ்வார்

இவர் காஞ்சியில் பிறந்தவர். சங்க காலப் பொய்கை யாழ்வார் இவரல்லர் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் எனும் மூவரையும் முதலாழ்வார்கள் என்பர். மூவரும் ஒருகால் தனித்தனியே திருக்கோவலூரை அடைந்து வைணவர் ஒருவர் வீட்டின் இடைக்கழியில் தங்கினர். ஒருவர் படுக்கவும், இருவர் இருக்கவும், மூவர் நிற்கவும் இருந்த அச்சிறிய இடத்தில் நாலாமவராக இறைவனும் வந்து புகுந்து நெருக்கிப் பின் தம் அருட் காட்சியினை அவர்களுக்கு அளித்தார்.

'வையந் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று'

இறைவனுக்குப் பாமாலை சூட்டிய நிலையினை இப்பாடலால் பொய்கையாழ்வார் உரைக்கின்றார். இவர் பாடிய 72 பாசுரங்களும் அந்தாதித் தொடையோடு வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.

2. பூதத்தாழ்வார்

இவர் கடன் மல்லை எனப்படும் மாமல்லபுரத்தில் தோன்றியவர் திருமாலைப் 'பூதம்' என்று பாடியதனால் இப்பெயர் பெற்றவர் எனக்கூறுவர்.

'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சித்தை இடுதிரியா - என்புருகி
ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்'

இஃது இவர் பாடிய இரண்டாம் திருவந்தாதியின் முதற்பாடலாகும்.

இவரும் வெண்பா யாப்பால் அந்தாதித்தொடை அமைத்துப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் காலம் ஏழாம் நூற்றாண்டு.

3. பேயாழ்வார்

இவர் திருமயிலையில் பிறந்து திருமாலைப் பாடிப் புகழ் பெற்றவர். இறைவன் மீது மிகுந்த காதல் கொண்டு பேயாய் அலைந்ததனால் பேயாழ்வார் என்ற பெயரைப் பெற்றவர் என்பர்.

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்.
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைகண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.”

இஃது இவர்கண்ட திருமால் காட்சியாகும். இவர் பாடல்கள் மூன்றாம் திருவந்தாதியாக அமைந்துள்ளன.

இவரும் பூதத்தாழ்வாரும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தனர்.

4. திருமழிசையாழ்வார்

தொண்டை நாட்டின் ஒரு பகுதியாகிய திருமழிசையில் பிறந்தவர் இவர். இவரது இயற்பெயர் பக்திசாரர் என்பது. பெற்றோரை இழந்த இவரைத் தாழ்ந்த குலத்தவர் ஒருவர் வளர்த்து வந்தார். இவ் ஆழ்வாரின் வேண்டு கோள்படி காஞ்சிபுரத்தில் திருமால் தம் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு சென்றார் என்றும், பின்னர் அவர் விரும்பியவாறே மீண்டும் திரும்பி அதனை விரித்துக் கொண்டார் என்றும் கூறுவர். இதனால் திருமாலும் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' எனப் பெயர் பெற்றார்.

இவர் பாடியவை திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்பன. இவரது காலம் கி பி. ஏழாம் நூற்றாண்டு.

5. பெரியாழ்வார்

இவர் திருவில்லிபுத்தூரில், வேயர் குலத்தில் பிறந்தவர்; வீட்டுசித்தர் என்னும் இயற்பெயருடையவர் ; நாள் தோறும் பெருமாளுக்குப் பூமாலை சார்த்தும் திருத்தொண்டு புரிந்து வந்தார். இவர் இறைவனுக்கே திருப்பல்லாண்டு பாடியதால் பெரியாழ்வார் என்றழைக்கப் பெற்றார். இவர் பாடிய திருப்பல்லாண்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. இவர் கண்ணனைக் குழந்தையாகக் கொண்டு, தம்மையே தாயாகப் பாவித்துத் தாலாட்டுப் பாடியுள்ளார். அதுவே பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கிய வகை தோன்றக் காரணமாயிற்று. இவர் பாடிய மற்றொரு நூல் பெரியாழ்வார் திருமொழியாரும். ஆண்டாளை வளர்த்தவர் இவரே.

“மாணிக்கம் கட்டி வயிர மிடைகட்டி
ஆணிப்பொன் னாற்செய்தவண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தாள்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தவனே தாலேலோ”

இஃது இவர் பாடிய தாலாட்டுப் பாடல்களுள் ஒன்று; இவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும்.

6. ஆண்டாள்

இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாவர். திருமாலுக்குப் பூமாலை சூடிக் கொடுத்ததால் 'சூடிக்கொடுத்த சுடர் கொடி' என்னும் பெயர் பெற்றார், திருமாலையே மணம் புரிவேன் என இரவும் பகலும் ஏங்கி இறுதியில் திருவரங்கத்தில் அவரோடு இரண்டறக் கலந்தார். இவரை ஒரு கற்பனைப் பாத்திரம்' என்பர் சிலர். இவர் பாடியவை நாச்சியார் திருமொழியும், திருப்பாவையுமாகும், திருப்பாவை இன்றும் மக்களால் - பெரிதும் விரும்பிப் பயிலப்படுகிறது.

‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான்,

இது இவரது காதல் மனத்தை அழகுறக் காட்டுவதாகும். இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.

7. திருமங்கையாழ்வார்

நாலாயிர திவ்விய பிரபந்தத்துப் பாடல்களுள் மிகுதியானவற்றைப் பாடியவர் இவ்வாழ்வாரே. இவர் திருக்குறையலூரில் ‘நீலன்’ என்ற பெயரோடு பிறந்தார். பின்னர் மன்னனிடம் 'பரகாலன்' என்ற பெயரோடு சேனைத் தலைவராக இருந்தார்; ‘திருமங்கை' என்னும் பதியை ஆண்டு திருமங்கை மன்னன் என்ற பெயரைப் பெற்றார். குமுதவல்லி என்னும் மாதினை மணந்து, அவள் வேண்டுகோள்படி திருமாலடியார்க்குப் பெருந்தொண்டு புரிந்தார்; தம் கைப் பொருள் முழுவதையும் செலவழித்தபின், இறைத்தொண்டுக்காக வழிப்பறியும் தயங்காமல் செய்து இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றார். இவர் பாடிய நூல்கள் பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம். திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் திருவெழு கூற்றிருக்கை என்பவை.

குலம் தரும் ; செல்வம் தந்திடும்; அடியார் படுதுயர்
ஆயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும்; நீள் விசும் பருளும்; அருளொடு
பெரு நில மளிக்கும்
வளந்தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற தாயினும்
ஆயின செய்யும்;
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்'

இஃது இவர் நாராயணன்மேல் கொண்ட பத்தியை நன்கு காட்டவல்லது.

இவர் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு.

6. தொண்டரடிப் பொடியாழ்வார்

இவர் திருமண்டங்குடி என்னும் சோழநாட்டுப் பகுதியில் முன்குடுமிச் சோழியப் பார்ப்பனர் குலத்தில் தோன்றியவர், இவர் இயற்பெயர் விப்பிர நாராயணர், திருமாலை, திருப்பள்ளி யெழுச்சி என்பன இவர் பாடியவை.

'பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே'

இஃது இவரது திருமால் பத்தியை நன்கு விளக்குகிறது, இவர் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு.

9. திருப்பாணாழ்வார்

இவர் உறையூரைச் சார்ந்தவர்; பாணர் குலத்தில் தீண்டத்தகாதவராய்ப் பிறந்தார். அதனால், இவர் கோயிலுள் புகாமல் காவிரியாற்றங் கரையிலேயே நின்று அரங்கன் ஆலயம் நோக்கிப் பாடி வந்தார். ஒரு நாள் இவரைப் பக்தரென்று பாராது கல்லெறிந்தனர். அதனால் திருவரங்கநாதர் தம் நெற்றியில் குருதி கொட்டச் செய்தார்; நல்லவர் கனவில் தோன்றித் திருப்பாணாழ்வாரை ஆலயம் புகவைத்தார். இறைவனை நேரில் கண்ட இவ்வாழ்வார். இறைவன் அழகிலே மையல் கொண்டு, 'அமலனாதிபிரான்' என்ற பதிகத்தைப் பாடியருளினார்.

கொண்டல் வண்ணனைக்கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே'

இவர் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு.

10. குலசேகராழ்வார்

இவர் சேர அரச பரம்பரையில் திருவஞ்சைக்களத்தில் தோன்றியவர். சேரகுலமும், வைணவமும் தழைக்கப் பிறந்ததனால் இவர் 'குலசேகரர்' என்றழைக்கப் பெற்றார். வீரப்போர் புரிந்து வெற்றிபல கண்ட இவர், இறுதியில் திருமால் அடியவரானார், இராமன்மீது பித்துக் கொண்டு இவர் பாடிய பாடல்கள் கற்பார் உள்ளத்தை உருக்க வல்லன. இவர் வடமொழியும், தமிழ் மொழியும் நன்குணர்ந்தவர். வடமொழியில் 'முகுந்தமாலை' என்னும் நூலையும், தமிழ் மொழியில் பெருமாள் திருமொழியையும் பாடியுள்ளார் இது 105 பாசுரங்களின் தொகுப்பாகும்.

‘அடியாரும் வான வரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே'

இஃது இவரது திருமால் பக்தியைக் காட்டவல்லது. இன்றும் அங்கு இறைவன் முன்னிலையில் உள்ள படி 'குலசேகரப்படி' என்றழைக்கப்படுகிறது.

இவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு.

'மன்னுபுகழ்க் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன் மா மதிள் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

'

இஃது இராமனுக்கு இவர் பாடிய ஒரு தாலாட்டுப் பாடலாகும்.

இவர் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டு.

11. நம்மாழ்வார்

இவர் திருக்குருகூரில் வேளாளர் குலத்தில் தோன்றினார். இயற்பெயர் நம்மாழ்வார். பதினாறு ஆண்டுகள் புளிய மரத்தடியில் யோக நிலையில் இருந்தார். ஆழ்வார்களுள் இவரை உடலாகவும், மற்றையோரை உறுப்பாகவும் வைணவர் கருதுவர். சடகோபன், பராங்குசன், வகுளாபரணன் முதலானவை இவர் வேறு பெயர்களாகும். இவர் திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகிய நான்கு நூல்களைப் பாடியுள்ளார், திருவாய்மொழி 'திராவிடவேதம்' என்று போற்றப்படுகிறது; இஃது இறுதி ஆயிரமாகத் திகழ்கிறது; வேத சாரமாக விளங்குகிறது. இதற்குப் பல உரைகள் உள்ளன; அவற்றுள் பெரியவாச்சான் பிள்ளை உரை சிறந்து விளங்குகிறது.

“பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்று காண்டொறும்-பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வாவை
எல்லாம் பிரான் உருவே”

இஃது இவர் உளங்கசிந்து உருகும் பாடல்.

12. மதுரகவியாழ்வார்

இவர் நம்மாழ்வாரின் சீடர். திருக்கோளூர் இவரது பிறப்பிடமாகும் அயோத்திக்குச் சென்றபோது ஒரு ஒளியினைக் கண்டு அதனைத் தொடர்ந்து வந்து நம்மாழ்வாரைக் கண்டார் என்பர். நம்மாழ்வாரின் பாடல்களனைத்தையும் தம் கரத்தால் எழுதிப் பெருமை பெற்றவர்; இவர் நம் ஆழ்வாரையே தம் தெய்வமாகக் கருதி வழிபட்டவர். ‘கண்ணி நுண் சிறுதாம்பு' என்பது இவர் பாடிய நூலாகும். அஃது அளவால் மிகச் சிறியது.

நண்ணித் தென்குருகூர் நம்பியென் றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே

என்பது போல இவர் பாடும் பாடல்கள் எல்லாம் நம்மாழ்வார் சிறப்பைப் பாடுவனவாகவே உள்ளன.

பிறநூல்கள்

சங்கம் மருவிய நூல்களாகக் குறிப்பிடத்தக்கன முத்தொள்ளாயிரமும் பெருங்கதையுமாகும்.

பெருங்கதை

இதனை இயற்றியவர் கொங்கு வேளிராதலின் இதற்குக் கொங்குவேள் மாக்கதை என்ற பெயரும் உண்டு. பைசாச மொழியில் குணாட்டியர் எழுதிய பிருகத் கதா எனும் நூலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை இவர் காவியமாகத் தந்துள்ளார். இது சமணச் சார்புடையது; காலம் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு. இதில் உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம். மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்கள் உள்ளன . இஃது ஆசிரியப்பாவால் இயன்றது.

வத்தவ நாட்டில் கௌசாம்பிய நகரத்து அரசன் உதயணன், இவனது யாழ் இசையில் மயங்கிய கடவுள் தன்மை வாய்ந்த யானை ஒன்று, இவன் அடிபணிகிறது. உச்சையினி நகரத்து அரசனால் சிறைபட்ட இவன் நண்பன் யூகியின் உதவியால் வெளியேறினான்; அந்நகரத்து மன்னன் மகள் வாசவதத்தையை மணந்தான். இறுதியில் துறவறம் ஏற்றான், இந் நூற்கண் சமணக் கோட்பாடுகள் மிகுதியாக விளக்கப்படுகின்றன.

“அன்புடைக் கணவர் அழிதகச் செயினும்
பெண்பிறந்தோர்க்குப் பொறையே பெருமை”

என்பது போன்ற அரிய கருத்துகள் இந்நூலில் உள்ளன.

முத்தொள்ளாயிரம்

இது சங்க காலத்தை அடுத்த இருண்ட காலத்துத் தோன்றிய நூலாகும். சேர, சோழ, பாண்டியர்களைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு அரசருக்கும் 900 பாடல்கள் பாடப்பட்டன என்பர். நூல் முழுமையும் இப்போது கிடைக்கவில்லை. 108 செய்யுள்களே கிடைத்துள்ளன.

யானை மறம், குதிரை மறம். அரசன் வெற்றி, ஈகை முதலான பல செய்திகளை அழகிய வெண்பாக்களால் இந்நூல் கூறுகின்றது. கைக்கிளை ஒழுக்கத்தைச் சார்ந்த இனிய காதற் பாடல்களையும் இதில் காணலாம். நள வெண்பாவினை நிகர்க்கும் வெண்பாக்களை உடையது இது. இதன் காலம் பி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு என்பார் சதாசிவப்பண்டாரத்தார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.

“கச்சி யொருகால் மிதியா ஒருகாலால்
தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப்-பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே நம்
கோழியர்கோக் கிள்ளி களிறு

என்பது சோழ மன்னனின் யானை மறத்தை இயம்பும் பாடல்.

புறப் பொருள் வெண்பாமாலை

இதன் ஆசிரியர் ஐயனாரிதனார். காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. இது புறப்பொருள் பற்றி எழுந்த பொருள் இலக்கண நூலாகும், கொளு சூத்திரயாப்பாலும்; எடுத்துக்காட்டு வெண்பா யாப்பாலும் இதில் அமைந்துள்ளன. இது பன்னிரு படலத்தைப் பின்பற்றி அமைந்துள்ளது.

நிகண்டுகள்

இக்காலத்தைப் போலப் பண்டைக் காலத்துச் சொற்களுக்குப் பொருள் கூறும் அகராதிகள் தோன்றவில்லை. நிகண்டுகள் அப்பணியைச் செய்து வந்தன. நிகண்டுகளுள் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது திவாகரமாகும். இதன் காலம் 10ஆம் நூற்றாண்டு, ஆசிரியர் திவாகர முனிவர். இக்காலத்திலேயே பிங்கலர் இயற்றிய பிங்கல நிகண்டும் மண்டல புருடன் இயற்றிய சூடாமணி நிகண்டும் தோன்றின .

இவற்றைத் தொடர்ந்து பதினைந்தாம் நூற்றாண்டுக்கு மேல் உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு, அகராதி நிகண்டு முதலியன தோன்றின.

பெளத்த சமண நூல்கள்

பெளத்தர்கள் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை மணிமேகலையும், குண்டலகேசியுமாகும். மணிமேகலை சங்கம் மருவிய காலத்ததாகும். இவை இரண்டும் ஐம்பெருங் காப்பியங்களைச் சார்ந்தன.

வீரசோழியம் எனும் இலக்கண நூலும் புத்தமித்திரர் எனும் பெளத்தரால் இயற்றப்பட்டதே: இதன் காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.

பெளத்தர்களைவிடச் சமணர்களே இலக்கிய இலக்கணங்களை மிகுதியாக எழுதியுள்ளனர். ஐம்பெருங் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் (சங்கம் மருவிய காலம்), சீவக சிந்தாமணி (சோழர் காலம்), வளையாபதி (சோழர் காலம்) எனும் மூன்றும் சமணச் சார்புடைய இலக்கியங்களாகும். சிறுகாப்பியங்கள் ஐந்தும் சமணர்கள் இயற்றியனவே. எஞ்சியவற்றைக் காப்பியங்கள் எனும் தலைப்பில் காண்க.

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் நாலடியாரும், பழமொழியும், சிறுபஞ்ச மூலமும், ஏலாதியும் சமணரால் இயற்றப்பட்டவை.

வாமன முனிவர் எழுதிய மேருமந்திர புராணமும் (கி.பி. 14ஆம் நூற்றாண்டு) சமண நூலே.

இலக்கண நூல்களுள் யாப்பருங்கலம், யாப்பருங் கலக்காரிகை, நன்னூல், நேமிநாதம். வெண்பாப்பாட்டியல், நம்பியகப் பொருள் முதலியன சமணர்கள் இயற்றியவையே.