தமிழ் வரிவடிவச்சீரமைப்பு : இனப் பாதுகாப்புக்கு இன்றியமையாதது
தமிழ் வரிவடிவச்சீரமைப்பு : இனப் பாதுகாப்புக்கு இன்றியமையாதது
டாக்டர் வா.செ.குழந்தைசாமி
ஏறத்தாழ 2300 ஆண்டுகட்கு முன் பனம்பாரனார்
வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்
என்று தமிழக எல்லைகளை வரையறுத்தார். அவை காலப் போக்கில் சுருங்கி விட்டன என்றாலும் தமிழர்கள் இன்று தமிழக எல்லைகள் தாண்டி, இந்திய மாநிலங்களிலும், இலங்கை முதல் அறுபதுக்கு மேற்பட்ட அயல் நாடுகளிலும் வாழ்கிறார்கள்.
புவனமும் மானுடர்க்குப் பொதுவெனும் தமிழச் சாதி குவலயக் குடும்பம்
என்பான் கவிஞன். எனவே தமிழர்கள் இன்று இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு மாநில மக்கள் மட்டும் அல்லர். இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் வாழ்பவர்கள் மட்டும் அல்லர். அவர்கள்
இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லைகள் கடந்து பூமிப் பந்திடை அமைந்த நாடு பலவினும் பரவி
வாழ்பவர்கள். தமிழர்களை உலகம் இந்திய மக்களாக மட்டும் பார்க்கவில்லை. உலகம் தெற்கு ஆசிய மக்களாகப் பார்க்கிறது. உலகு தழுவி வாழும் ஒரு மொழிக் குடும்பமாகவும் பார்க்கிறது. இந்த உண்மையை நிலை நிறுத்த நாம் சில சான்றுகள் காண்போம்.
1. பிரித்தானிய நாட்டின் B.B.C எனும் ஊடக வாரியம் உலகறிந்தது. அதன் வானொலி 32 மொழிகளில் ஒலிபரப்புகிறது. இந்திய மொழிகளில் உருது, பாக்கிஸ்தானின் ஆட்சி மொழி. வங்க மொழி, வங்காள நாட்டின் ஆட்சி மொழி. இவை தவிர்த்து மீதமுள்ள 20 இந்திய மொழிகளில், B.B.C இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளில் மட்டும்தான் ஒலிபரப்புகிறது. எண்ணிக்கை என்று பார்த்தால் மராத்தி பேசுபவர்கள் அதிகம்: தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். ஆனால் B.B.C இந்தி தவிர்த்து தமிழில் மட்டும் ஒலிபரப்புவதன் காரணம், தமிழ் இந்திய மொழி மட்டுமன்று. அது தெற்கு ஆசிய மொழியுமாகும் என்று மதிப்பிடப்படுகிறது என்பதுதான்.
2. சீன வானொலி, 42 மொழிகளில் ஒலிபரப்புகிறது. அவற்றுள், மேலே கூறிய காரணங்களின் அடிப்படையில் இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் மட்டும் தான் இடம் பெறுகின்றன.
3. பாரிசில் உள்ள UNESCO நிறுவனம் ஒரு சர்வதேச அமைப்பு. அது அண்மைக் காலம் வரை COURIER என்ற ஒரு மாத இதழை 30-க்கு மேற்பட்ட மொழிகளில் நடத்தி வந்தது. அந்த இதழும் இந்திய மொழிகளில் இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் தான் வெளியிடப்பட்டது.
4. உண்மையில் தமிழ் இன்று உலகு தழுவி வாழும் ஒரு மொழிக் குடும்பத்தின் தாய்மொழி. தமிழர்கள் நிலையைச் சற்று விளக்கமாகச் சொல்வதானால்,
தமிழர்கள் ஒரு மொழியினர். பல நாட்டினர். எல்லா நாட்டிலும் சிறு பான்மையர் - இந்தியா உட்பட.
நாம் நம்மை இந்தியாவின் ஒரு மாநில மக்கள் என்ற பரிமாணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவில் நாம் பல மாநிலங்களிலும், இந்திய எல்லைகள் தாண்டி அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவி வாழும் மொழிக் குடும்பத்தினர். நமது சொல்லின் செயலின் அலைகள், தமிழக எல்லைகள் தாண்டி, இந்தியாவின் மற்ற மாநிலங்கட்கும் விரியும் தன்மை கொண்டவை. அது மட்டுமின்றி மற்ற நாடுகட்கும் விரியும்
தன்மை கொண்டவை. எனவே நமது சொல்லில், செயலில் நாம் ஒரு பன்னாட்டுச் சிறுபான்மை இனம் என்பதை எங்கும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நினைவிற் கொள்ள வேண்டும். நமது கலை, இலக்கியம், மொழி தொடர்பான அணுகுமுறையிலும் இந்த உணர்வு பிரதிபலிக்க வேண்டும்.
எல்லா நாடுகளிலும், நாம் முன்பே கூறியது போல, பெரும்பான்மையரிடையே சிறுபான்மையராகத் தமிழினம் வாழ்கிறது. பெரும்பான்மை என்பது ஒரு சக்தி வாய்ந்த திரவம் போன்றது. அதில் சிறுபான்மை கரைந்து, கலந்து, காலப் போக்கில் மறைந்து விடக் கூடும். இதைத் தவிர்ப்பதற்குச் சிறுபான்மையர் தங்கள் அடையாளத்தைக் காப்பாற்ற வேண்டும்.
தமிழர்கள் பல மதத்தினர். அவர்கட்குச் சமயம் அடையாளமன்று. அவர்கள் பல நாட்டினர். எனவே நாடும் ஓர் அடையாளமன்று;
ஆனால் தமிழர்கள் ஒரு மொழியினர். அவர்கட்குத் தமிழ்தான் அடையாளம். அவர்கள் என்றெனினும், எங்கெனினும் தங்கள் அடையாளத்தைக் காக்கத் தமிழ் கற்க வேண்டும்.
உலகத் தமிழர்களில் ஏறத்தாழ 20 சதவீதத்தினர் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். இந்திய மொழிக் குடும்பத்தினரில் சதவீத அளவில் அதிகமாக உலகு தழுவி வாழ்பவர்கள் தமிழர்கள் தான். இந்திய எல்லைகட்கு வெளியே இரண்டு நாடுகளில் [இலங்கை, சிங்கப்பூர்] தேசிய ஆட்சி மொழி என்ற பெருமையும் இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உண்டு. பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழி [Recognised language] என்ற தகுதியும் தமிழுக்கு உண்டு.
இன்று ஃபிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் இருக்கும் ரெயூனியன் [Reunion] தீவை எடுத்துக் கொண்டால், அங்கு வாழும் மொழிக் குடும்பத்தினரில் மற்ற மொழிகளைவிட அதிகமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்ப் பாரம்பரியத்தினர்தான். அவர்கட்குத் தமிழ் தெரியாது. தீச்சட்டி ஏந்துவதும், காவடி தூக்குவதும் தான், உலகில் அந்தப் பகுதியில் வாழும் தமிழர்களுடைய பாரம்பரியத்திற்கு அடையாளம். இப்பொழுது சில பள்ளிகளில் தமிழ் கற்பிக்கிறார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகம், அங்கு இரண்டு மையங்களை அமைத்து, அங்குள்ள சில தமிழ் உணர்வாளர்களின் உதவியுடன் தமிழ் கற்பித்து வருகிறது. என்றோ ஒரு நாள் ரெயூனியன் தீவு சுதந்திரம் பெறும். அப்பொழுது நடக்கும் ஆட்சியில் தமிழ் மொழிப் பாரம்பரியத்தினர் பெரும்பான்மை மொழிப் பிரிவாக இருப்பர். அவர்கள் தமிழும் கற்றிருந்தால் ரெயூனியன் தீவிலாவது பெரும்பான்மை மொழியினர் என்னும் பெருமை தமிழுக்குக் கிடைக்கும். எனது ஏழை மனத்தில் இப்படியும் ஓர் ஆசை. என்றோ ஒரு நாள் இது நடக்கலாம். நடக்க வேண்டும்.
ஒரு மொழிக்கு இலக்கணம் முக்கியம். இலக்கியம் முக்கியம். இவை இரண்டை¬யும் விட, பேசுபவர்களின் எண்ணிக்கை முக்கியம்.
உலகில் வடமொழி உண்மையிலேயே வியக்கத்தக்க இலக்கண, இலக்கிய வளம் படைத்த பண்டை மொழி. ஆனால் அது பேசுவாரின்மையால் வழக்கிழந்த மொழியாகிவிட்டது. எனவே பேசுபவர் எண்ணிக்கையைக் காப்பாற்றுவதற்கு ஒப்பான மொழிப் பாதுகாப்பு வேறில்லை, அதற்காக நாம் முறையானதாக, எந்த மாற்றமும் செய்யலாம். எந்த விலையும் கொடுக்கலாம். அயலகத் தமிழர்களின் எண்ணிக்கை நமக்குப் பெரிய அளவில் வலிமை சேர்ப்ப, இலங்கைப் பிரச்சினையில் கூட, தமிழகத்தின் தமிழினக் குரலை விட உலகத் தமிழர்கள் குரல் தான் ஓங்கி ஒலித்தது. ஒற்றுமையாகவும் ஒலித்தது. அந்த வலிமை மேலும் வலுப்பெற, தொடர, உலகத் தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும். அதற்கு அவர்கள் தமிழ் கற்க வேண்டும். அவர்கள் தமிழ் கற்பதை ஊக்குவிக்க நாம் இயன்றவரை தமிழ் கற்பதை எளிதாக்க வேண்டும். எளிதாக்கும் முயற்சியில் தமிழ் வரிவடிவமைப்புச் சீரமைப்பும் ஒரு முக்கியமான பகுதியாகும்.
இந்தியாவில் தமிழ் தவிர, மற்ற மொழிக் குடும்பத்தினர் - திராவிட மொழிக் குடும்பத்தினர் உட்பட - தங்களை வடமொழி சார்ந்தவர்களாகவே எண்ணுகிறார்கள். தங்கள் மொழியின் வேரும் வடமொழியே எனக்கூடக் கூறுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள். தனித்து நிற்பவர்கள் நாம்தான். தனிமைப்பட்டு நிற்பவர்களும் நாம்தான். சான்றாக, இந்திய மொழிகளில் கலைச் சொற்கள் உருவாக்குவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கீழ்க்காணும் மூன்று உத்திகளைக் கடைப் பிடிக்க முடிவு செய்தது.
1. தேவையான இடங்களில் சர்வதேசக் கலைச் சொற்களை [International technical terms] ஏற்கலாம் 2. அடுத்த கட்டமாக அகில இந்தியக் கலைச் சொற்களை [Pan Indian technical terms] உருவாக்கலாம். 3. இறுதியாக, அந்தந்த மொழிகளில் கலைச் சொற்களை [Technical terms in individual languages] படைக்கலாம்.
அகில இந்தியக் கலைச் சொற்கள் என்பவை வடமொழி வேர்களைக் கொண்டவை. அவற்றை மற்ற மொழியினர் ஏற்கின்றனர். நாம் ஏற்க மறுக்கிறோம். மறுப்பதில் நமக்குள் இருக்கும் ஒற்றுமை, மாற்று வழி காண்பதில் இல்லை. மாற்று வழி காண முனைப்பில்லாது மறுப்பைப் பதிவு செய்து விட்டு எழுந்து போவதால் ஒரு சமுதாயத்திற்கு நன்மை இல்லை. பொதுவாக ஒருங்கிணைப்பவர்கட்கு எதிர்காலம் உண்டு. ஒதுங்கி நிற்பவர்கள் தங்கள் வலிமைக்கு வழிகாண வேண்டும். சார்ந்து நிற்பவர்கட்குக் கொழுகொம்பு உண்டு. தனித்து நிற்பவர்கள் தங்கள் வலிமைக்கு வேரின் ஆழத்தையும் விழுதின் விரிவையும் நம்பித்தான் இருக்க வேண்டும். அனைத்தையும் கூட்டிக் கழித்து, அளவிட்டுப் பார்ப்போமானால், சாதி கடந்து, மதம் கடந்து, நாடுகளும் கடந்து
தொன்றுள பிறப்பின் தொடர்போ, நாடோ, இன்றுள நடைமுறை இயல்போ, மேனியின் நிறமோ சமயமோ, நியதியோ வாழ்வின் அறமோ தமிழரின் அறிகுறி காட்டும் உரைகல் அன்று; தம் உணர்வின் ஊற்றுகள் கறையில வாகக் கன்னித் தமிழ்எம(து) அன்னை யென்பவர் அனைவரும் தமிழரே
என்ற உள்ளத்துடன், உணர்வுடன் தமிழர்களின் வலிமையை ஒருங்கிணைக்க வேண்டும். தமிழர்களின் எதிர்காலத்திற்கு, உலகத் தமிழர்களின் வலிமை இன்றியமையாத தேவை. அதை உறுதிப்படுத்திக் கொள்ள உலகத் தமிழர்கள், பரம்பரை, பரம்பரையாகத் தமிழர்களாக, தமிழ் மரபொடு, தமிழர் வாழ்வொடு தொடர்புள்ளவர்களாக வாழவேண்டும். அதற்கு அவர்கள் தமிழ் கற்க வேண்டும். தமிழ்ப் பாரம்பரியத்தைக் காலத்துக் கேற்ற மாற்றங்களுடன் காப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப உதவும் தலைமையைத் தமிழகத் தமிழ் அறிஞர்கள் ஏற்க வேண்டும்.
அயலகத் தமிழர்கட்கு - இலங்கை, சிங்கப்பூர் தவிர - தமிழ் பொருளாதாரத் தேவை அன்று. அரசியல் தேவை அன்று. சமுதாயத் தேவையுமன்று. தமிழ் ஒரு பண்பாட்டுத் தேவை மட்டுமே. அவர்கள் தமிழ் கற்க, தமிழ் கற்பது எளிதாக்கப்பட வேண்டும். அதற்கு முதற்படியாக எழுத்துகளைக் கற்பது, இயன்ற வரை, எளிதாக்கப் பட வேண்டும். அயலகத் தமிழர்கள் எங்கிருந்தாலும் ரோமன் வரிவடித்தை [ஆங்கில எழுத்துகளை] பயன்படுத்தும் ஏதாவது ஒரு மொழியொடு தொடர்புள்ளவர்களாகவே இருக்கின்றனர். எனவே ஒரு மொழி என்றால், எளிய வடிவங்களில் அமைந்த 26 எழுத்துகள் எனப் பழக்கப்பட்டுப்போன அவர்களுடைய குழந்தைகள், கட்டாயத் தேவை என்பது இல்லாத நிலையில், மிகவும் சிக்கலான வரிவடிங்களைக் கொண்ட 247 தமிழ் எழுத்துகளை உறுதியாக நீண்ட கால அளவில் கற்க மாட்டார்கள். இந்த உண்மை நிலையை நாம் எதிர் கொள்ள வேண்டும். 21-ஆவது நூற்றாண்டுச் சமுதாயம் எளிமை, விரைவு, எனும் இரு சக்கரங்களில் ஓடும் ஊர்தியில் ‘மாற்றம்’ எனும் குறிக்கோளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. இத்தகைய ஊர்தியில் ஏறமறுக்கும் சமுதாயத்தை, விட்டு விட்டு, உலகம் மேலே சென்று விடும்.
அரைமணி நேரம் நின்றேன் யான் ஆயிரம் காதம் பின்னடைந்தேன்
என்பது 21-ஆவது நூற்றாண்டுத் தத்துவம். இந்தப் பின்னணியில் நாம் எழுத்துச் சீர்திருத்தத்தம் பற்றிய பிரச்சினையை:
* ஆழ்ந்த புரிதலுடன் * திறந்த மனத்துடன் [Understanding]
அணுக வேண்டும். இங்கு ஒரு தகவலை வலியுறுத்துவது முறையாகும். அது பின்வருமாறு:
* நாம் கூறும் எழுத்துச் சீரமைப்பு. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளில், ஒரு காற்புள்ளியளவு கூட எதையும் குறைப்பதன்று.
247 எழுத்துகளையும் எழுதுவதற்கு இப்பொழுது அவற்றை 107 குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. 39-ஆகக் குறைத்து, குழந்தைகள் கற்பதை எளிதாக்குவதுதான் சீரமைப்பின் நோக்கம்.
* நாம் பரிந்துரைக்கும் சீரமைப்பு எளியது: ஆலின் விதை போன்றது. ஆனால் விளைவில் நன்மையில், அதன் வேரும், விழுதும் போன்றது.
மேலும் விபரங்கட்கு தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பற்றிய கட்டுரையைப் பார்க்கலாம்.