தம்ம பதம்/ஜரா வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் பதினொன்று

முதுமை

144. இந்த உலகம் எப்பொழுதும் எரிந்துகொண்டேயிருக்கையில், இங்கே என்ன சிரிப்பு? இங்கே என்ன களியாட்டம்? இருளால் மூடப்பட்டிருக்கும் நீங்கள் ஏன் ஒளியைத் தேடுவதில்லை? (1)

145. இந்த உடலாகிய வர்ணம் தீட்டிய பொம்மையைப் பார்! இது புண்கள் நிறைந்தது, (எலும்புகளாலும் சதையாலும்,) ஒன்றாகக் கோத்து வைக்கப்பட்டது. நோய்க்கு இடமானது, பல எண்ணங்கள் நிறைந்துள்ளது, ஆனால் நிலையில்லாதது! (2)

146. இந்த உடல் நலிந்து தேய்வது, இது நோய்களின் கூடு, மிகவும் நொய்மையானது. இந்த அசுத்தக் குவியல் உடைந்து சிதறிப்போகும்; வாழ்வின் முடிவு சாவுதான். (3)

147. சரத்காலத்தில் காற்றில் பறக்கும் சுரைக்கொடி போன்ற இந்த வெள்ளை எலும்புகளைப் பார்ப்பவனுக்கு என்ன இன்பம் இருக்கிறது? (4)

148. அஸ்திகளைக் கொண்டு ஒரு மாளிகை கட்டி’ ஊனும் உதிரமும் கலந்த சாந்து பூசப்பட்டிருக்கிறது; இதிலே வசிக்கின்றன முதுமையும், மரணமும், கர்வமும், கபடமும். (5)

149. அரசர்களுடைய அழகிய தேர்களும் அழிவடைகின்றன. அவ்வாறே உடலும் மூப்படைந்து அழியும். ஆனால் நல்லோரின் தருமம் மட்டும் ஒரு போதும் முதுமை யடைந்து பழுதாவதில்லை. இவ்வாறு நல்லவர் நல்லவர்களுக்கு உபதேசம் செய்கின்றனர். (6)

150. கல்வியில்லாதவன் மாடுபோல் முதிர்ந்து வளர்கிறான்; அவனுடைய ஊன்தான் பெருகுகிறது, ஆனால் அறிவு வளர்வதில்லை. (7)

151. பலவிதமான பிறவிகளை நான் எடுத்தாயிற்று இந்த (உடலாகிய) குடிலைக் கட்டியவனை நான் இரவும் பகலும் தேடியும் காணவில்லை. மீண்டும் மீண்டும் பிறப்பது துக்கமாகவேயுள்ளது. (8)

152. குடிலைக் கட்டிய கொற்றனே [1] இப்போது உன்னைக் கண்டு கொண்டேன்! குடிலை மறுபடி நீ கட்ட முடியாது. உன்னுடைய உத்திரங்கள் எல்லாம் உடைந்துவிட்டன, குடிலின் முகடும் குலைந்து விட்டது. என் சித்தம் நிருவாணப் பேற்றில் இலயித்து விட்டது; (அதனால்) ஆசைகள் அவிந்தொழிந்து விட்டன! (9)

153. இளமையிலே பிரம்மசரியத்தைப் பேணாதவரும், செல்வத்தைத் தேடிக்கொள்ளாதவரும், மீன்களில்லாத குளத்தில் இரைதேடிக் காத்திருக்கும் கிழக்கொக்குப் போலத் தவிப்பார்கள். (10)

154. இளமையிலேயே பிரம்மசரியத்தைப் பேணாதவரும், செல்வத்தைத் தேடிக்கொள்ளாதவரும், உளுத்துப் போன விற்களைப்போல், பழமையை எண்ணி எண்ணிப் பரிதவிப்பார்கள். (11)

  1. கொற்றன்-ஆசையே இங்குக் கொற்றனாகக் கூறப்படுகிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/ஜரா_வக்கம்&oldid=1381547" இலிருந்து மீள்விக்கப்பட்டது