தம்ம பதம்/தண்ட வக்கம்
இயல் பத்து
தண்டனை
127. தண்டனைக்கு எல்லோரும் நடுங்குகின்றனர். மரணத்திற்கு எல்லோரும் அஞ்சுகின்றனர். மற்ற உயிர்களையும் தன்னைப்போல எண்ணி ஒருவன் கொல்லவுங் கூடாது. கொலைக்கு உடன் படவுங் கூடாது. (1)
128. தண்டனைக்கு எல்லோரும் நடுங்குகின்றனர். வாழ்வில் எல்லோருக்கும் பிரியமிருக்கின்றது. மற்ற உயிர்களையும் தன்னைப் போல் எண்ணி ஒருவன் கொல்லவுங் கூடாது. கொலைக்கு உடன் படவுங் கூடாது. (2)
129. இன்பமாக வாழ விரும்பும் உயிர்களை ஒருவன் தன் சுகத்தை நாடித் தண்டித்துத் துன்புறுத்தினால், மரணத்திற்குப் பின் அவன் நலமடைவதில்லை. (3)
130. ஒருவன் தன் சுகத்தை நாடி, தன்னைப்போலவே இன்பத்தை நாடும் ஏனைய உயிர்களைத் தண்டித்துத் துன்புறுத்தாமலிருந்தால், மரணத்திற்குப் பின் அவன் நலம் பெறுவான். (4)
131. எவரிடத்தும் கடுஞ்சொல் பேசாதே. அதே முறையில் மற்றவர்களும் பதிலுரைப்பார்கள். கோபமான பேச்சு துக்கமளிப்பதால், பதில் பேச்சு உன்னைத் தாக்கும். (5)
132. உடைந்து போன மணி ஒசையற்றிருப்பதுபோல் , உன்னை நீ அடக்கிக் கொண்டு அமைதியாயிருந்தால், நீ நிருவாணத்தை அடைந்தவனாவாய். ஏனெனில், நீ கலக்கம் நீங்கிச் செயலற்ற நிலையிலிருக்கிறாய். (6)
133. ஆயன் தன் கழியால் பசுக்களைப் புல்வெளிக்கு ஒட்டிச் செல்வது போல், மூப்பும் சாக்காடும் மக்களின் ஆயுளை ஒட்டுகின்றன. (7)
134. மூடன் பாவமான கருமங்களை அறியாமல் செய்கிறான். ஆனால் தீய மனிதன் தீயால் எரிக்கப்படுவது போல், தன் கருமங்களாலேயே வேகிறான். (8)
135. தண்டிக்கத் தகாதவர்களையும், குற்றமற்ற நல்லவர்களையும் தண்டித்துத் துயரப்படுத்துவோன் (பின் கண்ட) இந்தப் பத்து நிலைகளில் ஒன்றை அடைவான்: (9)
136. வேதனை, நஷ்டம், உடலில் சேதம், பெருநோய்கள், சித்தப் பிரமை, (10)
117. அரச தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு, பந்துக்களை இழத்தல், பொருள் அழிவு, (11)
118. அல்லது, அவன் வீடுகளில் இடிவிழுந்து எரித்தல், மேலும், உடல் அழிந்த பின்னர் அந்த மூடன் நிரயம் புகுவான். (12)
119. மெய்ப்பொருளை உணராமல் ஐயத்தில் உழல்வோனை எதுவும் புனிதமாக்கி விடாது; ஆடையின்றி அலைதல், சடைத்தலை, புழுதியால் (உடல்) மாசடைதல், உபவாசம், வெறுந்தரையில் கிடத்தல், நீறு பூசுதல், அசைவில்லாமல் அமர்ந்திருத்தல் ஆகிய எதுவும் புனிதமாக்கி விடாது. (13) 140. ஒருவன் அலங்காரமான உடை அணிந்திருந்தாலும், அவன் தெளிந்த சிந்தையுடையவனாயும், அமைதியானவனாயும், (பெளத்த தரும) நியமத்தில் நிற்பவனாயும், பிரமசாரியாயும், எல்லா உயிர்களிடத்திலும் (ஹிம்சை) உணர்ச்சி நீங்கியவனாயும் இருந்தால், அவனே பிராமணன், அவனே சமணன் [1] அவனே பிக்கு. (14)
141. நன்கு பழக்கப் பெற்ற குதிரைக்குச் சவுக்கு அவசியமில்லை; அதுபோல் தன்னைப் பிறர் குறை கூறாதபடி பழிக்கு அஞ்சும் நாணமுள்ள மனிதன் இவ்வுலகில் இருக்கிறானா? (15)
142. நன்கு பழக்கப்பட்ட குதிரை, சவுக்கு மேலே பட்டதும் (வேகமாக ஒடுவது போல்) சிரத்தையுடனும் தீவிர முயற்சியுடனும் இருப்பாயாக, நம்பிக்கையாலும், நற்சீலங்களாலும், வீரியத்தாலும், தியானத்தாலும், தருமத்தை ஆராய்ந்த நிச்சயத்தாலும், ஞானம், ஒழுக்கம், கருத்துடைமை ஆகியவற்றில் நிறைவு பெற்று (உலக வாழ்வான ) இந்தத் துக்கத்தை ஒதுக்கிவிட முடியும். (16)
143. நீரை நெறிப்படுத்திச் செலுத்துவர் சிற்பக் கலைஞர்; அம்பை நேராக நிமிர்த்துவர் வில்லாளிகள்; மரத்தில் (சித்திரங்கள்) பொளிப்பார்கள் தச்சர்கள்; தம்மைத் தாமே அடக்கியாள்வர் நல்லோர். (17)
- ↑ சமணன்-சிரமணன்-சாந்தி பெற்றவன், துறவி. புத்தர் காலத்திய பிராமணரையும் சமணர் என்பது வழக்கம்.