உள்ளடக்கத்துக்குச் செல்

தம்ம பதம்/தம்மட்ட வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் பத்தொன்பது

சான்றோர்


254. பலாத்காரத்தால் தன் காரியத்தை முடிப்பவன் நீதிமான் ஆகான். நன்மை தின்மை இரண்டையும் சீர்தூக்கி முடிவு செய்பவனே ஞானி. (1)

255. நீதியான அஹிம்சை நெறியிலே மற்றவர்களுக்கு வழிகாட்டுவோனே தருமத்தைக் காப்பவன் , மேதாவி, நீதிமான் எனப்படுவான். (2)

256. அதிகமாய்ப் பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். வெறுப்பும் அச்சமும் இல்லாமலே உபசாந்தியோடு இருப்பவனே அறிஞன் என்று கருதப்படுவான். (3)

257. அதிகமாய்ப் பேசுவதால் மட்டும் ஒருவன் அறத்தை ஆதரிப்பவனாகிவிட மாட்டான். [அற விதிகளைச்] சிறிதளவே அறிந்தவனாயினும், ஒருவன் தன் வாழ்வில் [மன, மொழி, மெய் ஆகிய] உடலால் அறத்தை உணர்த்து, தருமம் தவறாமல் நடந்தால், அவனே அறத்தை ஆதரிப்பவன். (4)

258. தலை நரைத்திருப்பதால் மட்டும் ஒருவன் தேர [1]னாகி விடமாட்டான். அவன் வயது முதிர்ந்திருக்கலாம். ஆனால் பயனில்லாமல் வளர்ந்து வயோதிகமடைந்தவன் என்றே சொல்லப்படுவான். (5)

259. எவனிடம் சத்தியம், தருமம், அஹிம்சை, நிதானம், புலனடக்கம் முதலிய பண்புகள் நிலைத்திருக்கின்றனவோ, எவன் மலங்கள் நீங்கிப் புத்திமானாயிருக்கிறானோ, அவனே தேரன் எனப்படுவான். (6)

260. பொறாமையும், பேராசையும், தீயொழுக்கமும் உள்ளவன் , பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிட மாட்டான். (7)


261. எவன் இவைகளையெல்லாம் அழித்துவிட்டானோ வேரொடு பறித்து எறிந்துவிட்டானோ, எவன் குற்றமற்ற மேதாவியோ, அவனே உண்மையான அழகுடையவன். [2] (8)

262. புலனடக்கம் இல்லாமல் பொய் சொல்லித் திரியும் ஒருவன், தலையை முண்டிதம் செய்து கொள்வதால் முனிவனாகிவிட மாட்டான் . இச்சைகளுக்கும் பேராசைக்கும் அடிமைப்பட்டிருக்கும் ஒருவன் முனிவனாயிருப்பது எங்ஙனம்? (9)

263. பாவ உணர்ச்சிகள் சிறியவையாயினும், பெரியவையாயினும், அவைகளை எப்போதும் அடக்கியாள்பவனே முனிவன் எனப்படுவான். ஏனெனில், அவனே தீமை அனைத்தையும் அவித்தவன். (10)

264. மற்றவர் பிச்சை ஏற்பதால் மட்டும் ஒருவர் பிக்கு ஆகிவிடமாட்டான். தருமம் அனைத்தையும் மேற்கொள்பவனே பிக்கு, ஒரு பகுதியை மட்டும் மேற்கொள்பவன் பிக்கு ஆகான். (11)

265.எவன் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாற்பட்டு, பிரம்மசரியத்தைக் கைக்கொண்டு, கருத்தோடு உலகிலே சஞ்சரிக்கிறானோ, அவனே பிக்கு எனப்படுவான். (12) 266. அறிவில்லாது மூடனாயிருக்கும் ஒருவன் மெளனத்தினால் மட்டும் முனிவனாகிவிட மாட்டான்; ஆனால் தராசு பிடித்து நிறுத்துப் பார்த்து நன்மையை மட்டும் மேற்கொண்டு, (13)

267. தீமையை விலக்கும் ஒருவனே முனிவனாவான், அந்தக் காரணத்தாலேயே அவன் முனிவன். இந்த உலகில் இரண்டு பக்கத்திலுள்ளதையும் எடை போட்டுப் பார்ப்பவனே முனிவன். (14)

268. உயிர்ப் பிராணிகளை ஹிம்சை செய்வதால், ஒருவன் உயர்ந்தவனாக மாட்டான்; உயிர்ப் பிராணிகளைத்துன்புறுத்தாததாலேயே அவன் உயர்ந்தவன் எனப்படுவான். (15)

269. கட்டுப்பாடான ஒழுக்கத்தாலும், திடசங்கற்பத்தாலும், அதிகக் கல்வியறிவாலும், சமாதிநிலையாலும், ஏகாந்தமாய் வசிப்பதாலும் மட்டுமே- (16)

270. உலகத்தார் அடைவதற்கு அரிய நிருவாண இன்பத்தை நான் அடைந்துவிட முடியாது. ஒ பிக்கு! ஆஸவங்களை அழிக்கும் வரை திருப்தியுடன் அயர்ந்திருக்கலாகாது! (17)

  1. தேரன்-பெளத்தத் துறவிகளில் முதன்மையானவன்: முதியோன்: பெண்பால்-தேரி
  2. உருவ அழகும் குண அழகும் பொருந்தியவன்.