தம்ம பதம்/மல வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் பதினெட்டு

குற்றம்

233. இப்போது உலர்ந்த சருகுபோல் ஆகிவிட்டாய்; எமதூதர்கள் உன் அண்டையில் வந்திருக்கின்றனர். நீயும் பிரிவதற்கான வாயிலில் (வந்து) நிற்கிறாய், ஆனால், நீயோ செல்லும் வழிக்கு வேண்டிய உணவு எதுவும் தயாரிக்கவில்லை. (1)

234. நீ (அடைக்கலம் புகுவதற்கான) ஒரு தீவை [1] தயாரித்துக்கொள்; விரைவாக முயற்சி செய்; அறிஞனாக இரு. உன் மலங்கள் துடைக்கப்பட்டுப் பாவங்கள் நீங்கியதும் நீ மேலோர் தங்கும் சுவர்க்கத்தை அடைவாய். (2)

235.உன் வாழ்க்கை முடியப் போகிறது. எமன் சந்நிதிக்கு நீ வந்துவிட்டாய். வழியிலே தங்கும் இடமும் வேறில்லை. நீயோ செல்லும் வழிக்கு வேண்டிய உணவு எதுவும் தயாரிக்கவில்லை. (3)

236. நீ (அடைக்கலம் புகுவதற்கான) ஒரு தீவைத் தயாரித்துக் கொள்; விரைவாக முயற்சி செய்; அறிஞனாக இரு. உன் மலங்கள் துடைக்கப்பட்டுப் பாவங்கள் நீங்கியதும், மறுபடி பிறப்பும் மூப்பும் உனக்கில்லை. (4)

237. தட்டார் வெள்ளியின் அசுத்தங்களைப் போக்குதல் போல, மேதாவியானவன் தன் மாசுகளைக் கொஞ்சங் கொஞ்சமாக, முறையாக, அவ்வப்போது நீக்கி வரட்டும். (5)

238.இரும்பிலிருந்து துரு தோன்றினும், அதை அது அரித்து விடுகிறது; அதுபோலவே (அற நெறி) பிறழ்ந்தவனை அவனுடைய கருமங்களே தீய கதியில் கொண்டு சேர்க்கின்றன. (6)

239. மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை;

வீட்டின் குறை பழுது பாராமை;
அழகின் குறை சிரத்தையின்மை;
காவலாளியின் குறை கவனக்குறைவு.

(7)

240. பெண்ணுக்கு இழுக்கு தீய நடை; கொடையாளிக்கு இழுக்கு கருமித்தனம்; தீச்செயல் யாவும் இம்மையிலும் மறுமையிலும் இழுக்குடையவை. (8)

241. மலங்களில் எல்லாம் பெரியதோர் மலம் உண்டு - அறியாமையே முதன்மையான மலம். பிக்குக்களே! அந்த மலத்தையும் ஒழித்துவிட்டு மாசற்றவராக விளங்குவீர்! (9)

242. வெட்கமின்றிக் காகம் போல் துணிவுடையவனுக்கும், வம்பு வளர்ப்பவனுக்கும், புறங்கூறுவோனுக்கும், முரடனுக்கும், துார்த்தனுக்கும் வாழ்க்கை எளிதாகவே யிருக்கிறது. (10)

243.ஆனால், நாணமுள்ளவனுக்கும், நன்னெறியில் நாட்டமுள்ளவனுக்கும், சுயநல மற்றவனுக்கும், அகங்கார மற்றவனுக்கும், தூயோனுக்கும் வாழ்க்கை கஷ்டமாகவே யிருக்கிறது. (11) 244. உயிர்க்கொலை செய்வோனும், பொய் பேசுவோனும், பிறர் பொருள்களைப் பறிப்போனும், பிறர் மனை நண்ணுவோனும், (12)

245. வெறி கொடுக்கும் மது வகைகளைப் பருகுவோனும் இவ்வுலகிலேயே தம் வேர்களைத் தாமே கல்லியெறிகிறார்கள். (18)

246. ஏ மானிட, இதை அறிந்து கொள்! பாவத்தை எளிதில் அடக்க முடியாது. பேராசையும் தீயொழுக்கமும் உன்னைத் தீராத துக்கத்தில் அழுத்தாமலிருக்கட்டும். (14)

247. மக்கள் தங்கள் தகுதிக்கும் தரும சிந்தனைக்கும் தக்கபடிதானம் செய்கின்றனர். பிறருக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் அளிப்பதைக் கண்டு பொறாமைப்படுவோர் பகலிலோ இரவிலோ மன அமைதி பெறுவதில்லை. (15)

248. இந்தப் பொறாமை உணர்ச்சியை அழித்தவன் - வேரோடு அழித்தவனே-பகலும் இரவும் அமைதி பெறுவான் . (16)

249. காமவெறி போன்ற அனல் வேறில்லை; துவேஷத்தைப்போல் பற்றிக்கொள்ளும் முதலைவேறில்லை. | தெளிவின்றி | மயங்குதலைப் போன்ற வலை வேறில்லை; ஆசைகளைப்போல் | அடித்துக் கொண்டு போகும் | ஆறு வேறில்லை. (17)

250. பிறர் குறையைக் காண்பது எளிது; ஆனால் தன் குற்றத்தை அறிதலே அரிது. மற்றவர் குறைகளை ஒருவன் பதரைத் தூற்றுவதுபோல் துாற்றி விடுகிறான். ஆனால், சூதாட்டத்தில் கரவடமுள்ளவன் காய்களை மறைப்பது போல், தன் குறைகளை மட்டும் மறைத்துக் கொள்கிறான். (18)

251. பிறர் குறைகளிலேயே நோட்டமுள்ளவன் , எப்போதும் புறங்கூறிக் கொண்டேயிருப்பவன், தன் குற்றங்களை வளர விடுகிறான்; அவன் தன் ஆஸவங்களை அழித்தல் கடினமாகி விடும். (19)

252. ஆகாய வீதியிலே பாதை கிடையாது. அதுபோல் சமணனின் ஒழுக்கம் (அகத்திலன்றிப்) புறத்திலேயில்லை. மக்களோ உலகப்பற்றில் இன்புறுகின்றனர். உலகப்பற்று இல்லாதவர் ததாகரே.[2] (20)

253. ஆகாய வீதியிலே பாதை கிடையாது. அதுபோல் சமணனின் ஒழுக்கம் (அகத்திலன்றிப்) புறத்திலேயில்லை. பிரபஞ்சத்திலே நிலையானது எதுவுமில்லை; புத்தர்களுக்கோ நிலையற்றது எதுவுமில்லை. (21)

  1. தீவு-பிறவிக் கடலில் தவிப்பவனுக்குத் தீவு தாரகமாகும்.
  2. ததாகதர்-புத்தர், முன்னோர் (முந்திய புத்தர்கள்) வழியை மேற்கொண்டவர் என்று பொருள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/மல_வக்கம்&oldid=1381689" இலிருந்து மீள்விக்கப்பட்டது