தம்ம பதம்/நிரய வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் இருபத்திரண்டு

நரகம்

304.உண்மையா யில்லாததைப் புனைந்துரைப்பவன் நரகத்தை அடைகிறான்; ஒன்றைச் செய்துவிட்டு, ‘அதை நான் செய்யவில்லை’ என்போனும் அப்படியே அடைகிறான். மரணத்திற்குப் பின் மறுமையில் இருவரும் நிகராகி, நரகம் என்ற ஒரே இடத்தை அடைகின்றனர். (1)

305.காஷாய ஆடை தரித்தவர்களிலும் தம்மை அடக்கிக் கொள்ளாமல் பாவ கருமங்களைச் செய்வோர் பலர் இருக்கின்றனர்; இத்தகையோர் தங்கள் பாவச் செயல்களால் நரகத்தை அடைகின்றனர். (2)

306. புலனடக்கமில்லாத தீயொழுக்க முள்ளவன் நாட்டு மக்கள் (அளிக்கும்) உணவை உண்பதைக் காட்டினும், அனல் வடிவமான பழுக்கக் காய்ந்த இரும்பு உருண்டையை முழுங்குவதே நலமாம். (3)

307. மற்றொருவனுடைய தாரத்தை இச்சிக்கும் பேதை நான்கு விதமான பயன்களை அடைவான்; பாவம், அமைதியான உறக்கமின்மை, மூன்றாவதாகப் பழி, நான்காவதாக நரகம். (4)

308. பாபம் ஏற்படுகிறது; அத்துடன் பாவிகளுக்குரிய தீய கதியும் அடைய வேண்டும்; அஞ்சி நடுங்கும் ஒருத்தியுடன் ஒருவன் அஞ்சிக்கொண்டே துய்க்கும் இன்பம் மிகவும் அற்பமானது; அரசனும் கடுமையான தண்டனை விதிக்கிறான். ஆதலால் எந்த மனிதனும் பிறன் மனைவியை விரும்பலாகாது. (5) 309. தர்ப்பைப் புல்லைத் தவறாக இழுத்தால் அது கையை அறுத்து விடுகிறது; அதுபோல் தீய வழியில் பயிலும் துறவறமும் ஒருவனை நரகில் சேர்க்கிறது. (6)

310. சிரத்தையின்றிச் செய்யும் காரியமும், ஒழுங்காகக் கடைப்பிடியாத விரதமும், மனமாரப் பேணாத பிரம்மசரியமும் பெரும் பயனை அளிக்கமாட்டா. (7)

311. ஒருவன் யாதேனும் ஒன்றைச் செய்ய வேண்டுமாயின் அதை ஊக்கத்தோடும் உறுதியோடும் செய்வானாக; கவனக்குறைவான துறவி தானே தன் மீது அதிகப் புழுதியையே பூசிக்கொள்கிறான். (8)

312. தீய வினையைச் செய்யாது விடுதலே நலம். ஏனெனில் தீவினை பின்னால் துன்பத்தை அளிக்கின்றது. நல்வினை புரிவதே நலமாகும்; அதனால் பின்னால் வருந்த நேராது. (9)

313. (இராஜ்யத்தின்) எல்லைப் புறத்தில் இருக்கும் நகரத்தை உள்ளும் வெளியும் அரண் செய்து காப்பது போல், ஒருவன் தன்னைக் காத்துக் கொள்க. கண நேரத்தையும் வீணாக்கவேண்டாம்; ஒவ்வொரு நிமிஷத்தையும் நல்வழியிலே பயன் படுத்தாமல் நிமிஷங்களை வீணாகக் கழித்தவர்கள் நிரயத்தில் விழும்போது வருந்துவர். (10)

314. நாண வேண்டாதகருமங்களுக்கு நாணியும், நாண வேண்டியவைகளுக்கு நாணாமலும் இருக்கும். மனிதர் தவறான கொள்கைகளைப் பின்பற்றித் தீயகதியை அடைகின்றனர். (11) 315. அஞ்ச வேண்டாத ககுமங்களுக்கு அஞ்சியும், அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமலும் இருக்கும் மனிதர் தவறான கொள்கைகளைப்பின்பற்றித் தீய கதியை அடைகின்றனர். (12)

316. பாவமில்லாத இடத்தில் பாவத்தையும் பாவமுள்ள இடத்தில் பாவமின்மையையும் காண்கிறவர்கள் தவறான கொள்கைகளைப்பின்பற்றித் தீய கதியை அடைகின்றனர். (18)

317. பாவத்தைப் பாவமாகவும், பாவமின்மையைப் பாவமற்றதாகவும் காண்பவர்கள், சத்தியமான கொள்கைகளைப் பின்பற்றி நற்கதியை அடைகின்றனர். (14)

"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/நிரய_வக்கம்&oldid=1381699" இலிருந்து மீள்விக்கப்பட்டது