தம்ம பதம்/பண்டித வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் ஆறு

ஞானி

76. குற்றங்களைக் கண்டித்து, விலக்க வேண்டியவைகளை விலக்கக்கூடிய ஞானியைக் கண்டால் ஒருவன், அந்த ஞானி புதையல் பொக்கிஷங்களுக்கு வழிகாட்டுவோன் என்று கருதி, அவரைப் பின்பற்ற வேண்டும். அத்தகைய மனிதரைப் பின்பற்றுவதால் நன்மையே தவிர தீமையில்லை. (1)

77. அவர் கண்டிப்பார், அறிவு புகட்டுவார், தீயோரிடமிருந்து விலக்குவார். நல்லோர் அவரை நேசிப்பர். தீயோரே வெறுப்பர். (2)

78. தீயோருடன் சேரவேண்டாம்; இழிந்தவருடன் இணக்கம் வேண்டாம்; ஒழுக்கமுள்ளவரோடு உறவாடுக; சான்றோர் தொடர்பை மேற்கொள்க. (3)

79. தருமத்தைப் பருகுவோன். மேலோர் அறிவுறுத்திய தருமத்தில் அவன் எப்போதும் இன்புற்றுக் கொண்டிருக்கிறான். (4)

80. நீரை நெறிப்படுத்திச்செலுத்துவர் [1] அம்பை நேராக நிமிர்த்துவர் வில்லாளிகள்; மரத்தில் (சித்திரங்கள்) பொளிப்பார்கள் தச்சர்கள்; தம்மைத் தாமே அடக்கியாள்வர் அறிஞர். (5)

81. நிலையான பாறை புயல் காற்றுக்கும் அசையாமலிருப்பது போல், ஞானிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசைவதில்லை. (6) 82. தரும உபதேசங்களைக் கேட்டறிந்த ஞானிகள், ஆழமாயும் தெளிவாயும், அமைதியாயமுள்ள ஏரியைப் போல், சாந்தியடைகிறார்கள். (7)

83. நன்மக்கள் எதிலும் பற்றுக் கொள்வதில்லை; இன்பங்களை விரும்பி இரைச்சல் போடுவதில்லை. சுகமோ துக்கமோ வந்தால், ஞானிகள் எழுச்சியடைவதுமில்லை; அயர்வு கொள்வதுமில்லை. (8)

84. தனக்காகவோ மற்றவர்க்காகவோ, புத்திர ஆசை, பொருளாசை, இராஜ்ய ஆசை (பிரபுத்துவத்தில் நாட்டம்) ஆகிய ஆசைகளில்லாமல், அதரும வழிகளில் இன்ப வாழ்வை அடைய விரும்பாமல் வாழ்பவன் ஒழுக்கமுள் உரவோனாயும், ஞானியாயும், அறநெறிச் செல்வனாயும் இருப்பவன் . (9)

85. மனிதர்களில் மிகச் சிலரே (நிருவாண மோட்சமாகிய) அக்கரையை அடைகின்றனர்; மற்றவர் எல்லோரும் (ஜனன-மரண ஸம்ஸாரமாகிய) இக்கரையிலேயே உழன்று திரிகின்றனர். (10)

86. தரும உபதேசத்தைக்கேட்டு, அதன்படி நடப்போர் மறு கரையை அடைவர் -கடத்தற்கு அருமையான எமலோகத்தையும் கடந்து செல்வர். (11)

87.ஞானி இருள் வழியை நீக்கி ஒளியின் நெறியில் செல்வானாக, வீட்டை விட்டு விரும்புவதற்கு அரிய விவேகத்தை நாடித் துறவு வாழ்க்கையின் ஏகாந்த இன்பத்தில் அவன் திளைப்பானாக. (12)

88. காமிய இன்பங்களைக் கைவிட்டு, எதையும் தனதென்று கொள்ளாமல், ஞானி மனமாசுகளை அகற்ற வேண்டும்; அந்நிலையில் அவன் ஆனந்தமடைவான். (13)

89. ஞானத்திற்கு உரிய (ஏழு) அங்கங்களில் [2] சித்தத்தை நிலை நிறுத்தி, எதிலும் பற்று வைக்காமல், ஆசைகளை அடக்கி வென்று எவர்கள் மாசற்ற ஒளிமயமாய்த் திகழ்கிறார்களோ, அவர்கள் இந்த உலகிலேயே நிருவான மோட்சத்தை அடைகிறார்கள். (44)

  1. சிற்பக்கலைஞர்;சிற்பக் கலைஞர்- ‘எஞ்சினீயர்கள்’ என்று இக் காலத்தில் அழைக்கப் பெறுவோர்.
  2. ஏழ அங்கங்கள்-ஞானத்தை அடைவதற்குரிய ஏழு கருவிகள்; சாமர்த்தியம், ஞாபகம், மனனம், திரி பிடக சாத்திர ஆராய்ச்சி, ஆனந்தம், சாந்தி, சம திருஷ்டி என்பவை. இவைகளை 'ஸப்த போத்தியங்கங்கள் ' அல்லது 'ஸம்போதி அங்கம்’ என்பர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/பண்டித_வக்கம்&oldid=1381529" இலிருந்து மீள்விக்கப்பட்டது