உள்ளடக்கத்துக்குச் செல்

தம்ம பதம்/பிக்கு வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் இருபத்தைந்து

பிக்கு


358. கண்ணைக் காத்தல் நலம்; காதைக் காத்தல் நலம்; நாசியைக் காத்தல் நலம்; நாவைக் காத்தல் நலம். (1)

359. உடலைக் காத்தல் நலம். வாக்கைக் காத்தல் நலம்; மனத்தைக் காத்தல் நலம்; எல்லாவற்றையும் காத்துக் கொள்ளல் நலம். எல்லாவற்றையும் காத்துக்கொள்ளும் பிக்கு சகல துக்கங்களிலிருந்தும் விடுபடுகிறான். (2)

360. எவன் கைகளை அடக்கி பாதங்களை அடக்கி, வாக்கை அடக்கித் தன்னை நன்கு காத்துக் கொண்டவனோ, எவன் தியான இன்பத்திலுள்ளவனோ எவன் மன அமைதி பெற்றுத் திருப்தியுடன் ஏகாந்தமாக இருக்கிறானோ,அவனையே பிக்கு என்பர். (3)

361. நாவடக்க முள்ளவனாய், உயர்ந்த கருத்துக்களை. உபதேசிப்பவனாய், கர்வமற்ற அமைதியுள்ளவனாய்த் தருமத்தையும் அதன் பொருளையும் விளக்கிக் கூறுதல் இனிமையேயாம். (4)

362. தரும உபதேசத்தை மகிழ்ச்சியுடன் பின்பற்றி, தருமத்திலேயே திளைத்து, தருமத்தையோ எப்போதும் சிந்தனை செய்து, தரும வழியிலேயே நடக்கும் பிக்கு உண்மையான தருமத்திலிருந்து பிறழ்வதில்லை. (5)

363. அவன் தனக்குக் கிடைத்ததை அலட்சியமாக எண்ணாமலும், மற்றவர்களிடம் பொறாமை கொள்ளாமலும் இருக்க வேண்டும். பிறரைக் கண்டு பொறாமைப்படும் பிக்கு மனச் சாந்தி, பெறுவதில்லை. (6) 364. பிக்கு ஒருவன், தனக்குக் கிடைத்தது அற்பமேயாயினும், அதை இகழாமல், துயவாழ்வுடன் சோம்பலின்றி உழைத்து வந்தால், அவனைத் தேவர்களும் புகழ்கின்றனர். (7)

365.எவ்விதமான நாமருபத்தையும், ஒருபோதும் தனது என்று கருதாமல், ஒன்றும் இல்லாத நிலைக்கு வருந்தாமல் இருப்பவனே பிக்கு எனப்படுவான். (8)

366. [எல்லோருடனும்] அன்புடன் பழகி, புத்தருடைய தருமத்தில் இன்புற்று வாழும் பிக்கு, வாழ்வின் துயரம் நீங்கி, சாந்தி நிலையமான நிருவாண இன்பத்தை அடைவான். (9)

367.ஒ பிக்கு இந்த ஒடத்தைக் காலியாக்கு; பாரம் குறைந்தால் இது இலகுவாக ஒடும். விருப்பையும் வெறுப்பையும் சேதித்துவிட்டால், நீ விடுதலைப் பேற்றை அடைவாய். (10)

368. ஐந்தை வெட்டித் தள்ளவும்: ஐந்தைக் கைவிடவும்: ஐந்தில் தேர்ந்து மேலே உயரவும் ஐந்து தளைகளிலிருந்தும் தப்பிய பிக்கு ‘ஒகதிண்ணா’ - ‘வெள்ளத்தைக் கடந்தவன்’ -என்றும் சொல்லப்படுகிறான். [1] (11)

369. ஒ பிக்கு! தியானம் செய்வாயாக, அசிரத்தையாக இருக்கவேண்டாம். உனது சிந்தனை பலன்களின் இன்பங்களில் திளைத்திருக்க வேண்டாம். அசிரத்தையினால், பழுக்கக் காய்ந்த இரும்பு உருண்டைகளை விழுங்க நேராமலும், அவை சுடும்போது ‘இது துக்கம்!’ என்று கதறாமலும் இருக்க வழிசெய்து கொள்ளவும். (12) 370. ஞானமில்லாதவனுக்குத் தியானம் இல்லை; தியானமில்லாதவனுக்கு ஞானம் இல்லை. தியானமும் ஞானமும் சேர்ந்திருப்புவனே நிருவாணத்தின் பக்கம் இருக்கிறான். (13)

371. சாந்தியடைந்த உள்ளத்துடன் ஒரு பிக்கு காலியாயுள்ள ஒரு மனைக்குள் சென்றால், தருமத்தை அவன் மெய்க் காட்சியுடன் தெரிந்திருப்பதன் மூலம், மனிதர் அடைவதற்கு அரிதான இன்பத்தை அடைகிறான். (14)

372. அவன் [உடலின் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள மூலப் பொருள்களான] ஸ்கந்தங்களின் சேர்க்கையையும், பிரிவையும் பற்றித் தெளியும் போதெல்லாம், இன்பமும் மகிழ்ச்சியும் அடைகிறான், அறிந்தவர்களுக்கு அதுவே நித்தியமான வாழ்வு. (15)

373. அறிவுள்ள பிக்குவுக்கு இதுவே அடிப்படையான முறை; புலன்களை அடக்குதல். திருப்தி, தருமத்தின்படி காத்துக்கொள்ளல், புனித வாழ்வு, பெருமை, ஊக்கம். (16)

374. அவன் யாவர்க்கும் இனியவனாக வாழ்வானாக; தன் கடமைகளைத் திறமையுடன் நிறைவேற்றி வருவானாக; பின்னர் அவன் தனது இன்ப நிறைவாய் துன்பத்தை ஒழித்து விடுகிறான். (17)

375. பிலக்குகளே! வஸ்ஸிகைச் செடி வாடிப்போன மலர்களை உதிர்த்து விடுவதுபோல் நீங்களும் விருப்பு வெறுப்புக்களைக் கை விட்டுவிட வேண்டும். (18)

376. உடலில் அமைதி, பேச்சில் அமைதி, உள்ளத்தில் அமைதியுடன், நிதான நிலைபெற்று, உலகின் ஆசைத் துாண்டுதல்களை ஒழித்த பிக்குவே உபசாந்தி பெற்றவன் என்று கடறப்படுவான். (19) 377. ஓ பிக்கு! உன்னை நீயே துண்டிக்கொள்; உன்னை நீயே சோதனை செய்துகொள்; உன்னை நீயே தற்காப்புச் செய்து கவனமாயிருந்தால், நீ இன்புற்று வாழ்வாய். (20)

378. ஒருவன் தனக்குத்தானே தலைவன், தனக்குத் தானே புகலிடம். ஆதலால், வணிகன் உயர்ந்த குதிரையை அடக்கிப் பழகுவதுபோல உன்னை நீயே அடக்கிப் பழகவும். (21)

379.மன மகிழ்ச்சியோடும், அமைதியோடும், புத்த தருமத்தில் நம்பிக்கை கொண்ட பிக்கு (துயரமான) வாழ்வை நீத்து இன்பமயமான சாந்தி நிலையை அடைவது திண்ணம். (22)

380.இளவயதாயிருப்பினும், புத்த தருமத்தில் மன மகிழ்ச்சியுடன் ஈடுபடும் பிக்கு, மேகத் திரையிலிருந்து விடுபட்ட வெண்மதி போல, இவ்வுலகில் ஒளியைப் பரப்புகிறான். (23)

  1. இதன் விளக்கம் அனுபந்தம் மூன்றில் காண்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/பிக்கு_வக்கம்&oldid=1381706" இலிருந்து மீள்விக்கப்பட்டது