உள்ளடக்கத்துக்குச் செல்

தம்ம பதம்/பிய வக்கம

விக்கிமூலம் இலிருந்து

இயல் பதினாறு

இன்பம்


207. தியானத்தில் நிலைபெற்று நிற்காமல், உலகபாசங்களில் ஆழ்ந்து, தன் நன்மையையும் கைவிட்டு, இன்பத் தோட்டத்திலே இருப்பவன் , தியானத்தில் ஆழ்ந்து முயற்சியோடு இருக்கும் யோகியைக் கண்டு பொறாமைப் படுவான். (1)

208. இன்பமயமானதையோ துன்பமானதையோ எவனும் பற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இன்பமானதைக் காணாமையும் துக்கம், துன்பமானதைக் காண்பதும் துக்கமே. (2)

209. ஆதலால், எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப் பட்ட பொருளை இழத்தல் துன்பம். ஆசையும், வெறுப்பும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை. (3)

210. ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;

ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை :
பயம்தான் ஏது?

(4)

211. பிரேமையிலிருந்து சோகம் தோன்றுகிறது;

பிரேமையிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
பிரேமையற்றவனுக்குச் சோகமில்லை;
பயம்தான் ஏது?

(5) 212. போகத்திலிருந்து சோகம் தோன்றுகிறது;

போகத்திலிருந்து அச்சம் தோன்றுகிறது;
போகத்தை விட்டவனுக்குச் சோகமில்லை;-
பயம்தான் ஏது?

(6)

213. காமத்திலிருந்து சோகம் தோன்றுகிறது;

காமத்திலிருந்து அச்சம் தோன்றுகிறது;
காமத்தைக் கடந்தவனுக்குச் சோகமில்லை;
பயம்தான் ஏது? (7)

214. பேராசையிலிருந்து சோகம் தோன்றுகிறது;

பேராசையிலிருந்து பயம் தோன்றுகிறது; :பேராசையற்றவனுக்குச் சோகமில்லை;
பயம்தான் ஏது?

(8)

215. சீலங்கள் நிறைந்து மெய்யறிவு பெற்றவனை, அறத்தில் நிலைபெற்றவனை, வாய்மையாளனை , தன் கருமத்திலேயே நாட்டமுள்ளவனை உலகம் அன்போடு அரவணைத்துக் கொள்கிறது. (9)

216. வர்ணனைக்கு எட்டாத நிருவாணப்பேற்றில் நாட்டங்கொண்டவன், உள்ளத்தில் நிறைவு கொண்டவன், காமங்களைக் கடந்த மனமுள்ளவன்,-அவனே ஒடும் ஆற்றை எடுத்துச் செல்வோன் [1] என்று கூறப்படுவான். (10)

217. தூரதேசத்தில் நெடுங்காலம் சென்றிருந்தவன் சேமமாகத் திரும்பி வருகையில் சுற்றத்தாரும், நண்பர்களும், அன்பர்களும் அவனைக் களிப்போடு வரவேற்று உபசரிப்பார்கள். (11) 218. அவ்வாறே, புண்ணியம் செய்தவன் இவ்வுலகை விட்டுமறுஉலகம் செல்லும்போது, அவன் செய்த புண்ணியங்கள் (முன்னதாக அங்கே சென்று), சுற்றத்தார் அன்பன் திரும்பி வருகையில் வரவேற்பது போல, அவனை அங்கே வரவேற்கின்றன. (12)

  1. ஓடும் ஆற்றை எதிர்த்துச் செல்வோன் - ‘உத்தம ஸோதோ’ அல்லது ‘ஊர்த்வம் ஸ்ரோத’ என்று பெளத்த நூல்களில் கூறப்படுவோன். உலகம் போகிற போக்கில் செல்லாமல் இவன் எதிர்த்துச் செல்பவன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/பிய_வக்கம&oldid=1397962" இலிருந்து மீள்விக்கப்பட்டது