உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/ஆஷ்டவுனுக்குப் பின்னால்

விக்கிமூலம் இலிருந்து

14
ஆஷ்டவுனுக்குப் பின்னால்


ஆஷ்டவுனில் வைசிராயைச் சுட்டு வீழ்த்துவதற்காகச் செய்யப்பெற்ற போராட்டத்தைப் பற்றி முதல் அத்தியாயத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அப்போராட்டத்திற்குப் பிறகு காயமடைந்த தான்பிரீன் தோழர்களுடன் சைக்கிளில் விரைவாக வந்து டப்ளின் நகரத்தின் வடபாகத்தில் தங்கியிருந்தான். மற்ற நண்பர்களை பல இடங்களுக்குப் பிரித்து அனுப்பிவிட்டான். பிறகு பிப்ஸ்பரோ வீதியிலிருந்த திருமதி டுமி அம்மாளுடைய வீட்டில் அவன்தங்கி வைத்திய சிகிச்சை பெற்று வந்தான். ஜே. எம். ரியான் என்ற பெரிய வைத்தியரும், மேட்டர் ஆஸ்பத்திரியிலிருந்து மற்றொரு வைத்தியரும் அடிக்கடி அவனைக் கவனித்து வந்தனர். டுமியின் அன்புக்கு அளவேயில்லை. அவள், இமைகள் கண்ணைக் காப்பதுபோல, தான்பிரீனைக் காத்துவந்தாள். தான்பிரீன் படுத்த கட்டிலை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் மிகவும் தளர்ச்சியடைந்திருந்தான்.

ஆஷ்டவுன் சம்பவத்திற்குப் பின்னால் லார்ட் பிரெஞ்சைச் சுடுவதற்கு வேறு சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. அவர் பொது வாழ்க்கையிலிருந்து அடியோடு விலகி விட்டார். எந்த விசேஷத்திலும் அவர் பொது மக்கள் முன்னிலையில் தோன்றுவதில்லை; மாளிகைக்குள்ளேயே அடைந்து கொண்டு கிடந்தார். கடைசியாக அவர் சீமைக்குச் செல்லும் பொழுது கூட ஆயுதந்தாங்கிய வீரருடன் பல மோட்டார் கார்கள் வீதியின் இருபுறங்களிலும் பாதுகாப்புக்காகச் சென்றுகொண்டிருந்தன. பல்லாயிரம் சிப்பாய்கள் வழியெங்கும் அணிவகுத்து நின்றனர். கப்பலிலும் அவருக்குப் பந்தோபஸ்து அதிகம். சீமைக்குச் சென்ற பின்னும் அவரை ஆயுதந்தாங்கிய இரகசிய போலிசார் காத்து வந்தனர்.

டப்ளின் பத்திரிகைகளின் வாசகத்தைப் படிக்கும்பொழுதெல்லாம் தான்பிரீன் மனக் கொதிப்படைந்தான். அவை தொண்டர்களுடைய செய்கைகளை, முக்கியமாக ஆஷ்டவுன் போராட்டத்தை வெகு இழிவாகக் கண்டித்து வசை மாரி பொழிந்துவந்தன. அவற்றுள் 'ஐரிஷ் டைம்ஸ்' என்ற ஆங்கிலேயருடைய பத்திரிகை உள்று. அது தன் இனத்தாரையே ஆதரித்தெழுவது இயற்கை. 'பிரீமன்ஸ் ஜேர்னல்' என்ற பத்திரிகையை புரட்சிக்காரர்கள் கையில் எடுத்துப் பார்ப்பது கூடக்கிடையாது. ஆனால், ஐரிஷ் இன்டிப்பென்டென்ட் (ஐரிஷ் சுதந்தரம்) என்ற பத்திரிகை ஐரிஷ் மக்களின் பண உதவியால் அவர்களுடைய நன்மைக்காகவே நடத்தப்படுவதாய்ச் சொல்லப்பட்டு வந்தது. அப்பத்திரிகை ஆஷ்டவுன் போராட்டத்தைப் பற்றி எழுதும் பொழுது, 'கொலைகாரர்கள், கொடுங்குற்றம், அக்கிரமம், படுகொலை' முதலிய கடுமையான பதங்களை உபயோகத்திருந்தது. அவற்றைக் கண்ணுற்றவுடன் அப்பத்திரிகைக்கு ஒரு பாடம் கற்பித்து அதன்மூலம் மற்றப் பத்திரிகைகளும் திருந்தும்படி செய்ய வேண்டும் என்று தான்பிரீன் தீர்மானித்தான். அப்பொழுது அவன் படுத்த படுக்கையாக் கிடந்ததால், மற்ற நண்பர்கள் அவ்வேலையை மெற்கொண்டனர். தேசத்திற்காக மார்ட்டின் சாவேஜ் உயிர்நீத்து அவனுடைய சரீரத்தை அடக்கஞ் செய்வதற்கு முன்னாலேயே, இன்டிப்பென்டென்ட் அவனுடைய ஆன்மாவைப் பழித்துக் கூறியதற்குப் பழிவாங்க வேண்டும் என்று அவர்கள் துணிந்தனர். அப்பத்திரிகையின் ஆசிரியரைச் சுட்டுத்தள்ளிவிடலாமா என்று யோசித்தனர். பின்னர் அது வேண்டாம் என்றும் பத்திரிகையைக் கொஞ்சம் அடக்கிவைத்தாலே போதும் என்றும் முடிவுசெய்தனர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு பீடர் கிளான்ஸியின் தலைமையில், சுமார் முப்பது தொண்டர்கள் இன்டிப்பென்டென்ட் காரியாலயத்தை நோக்கிச் சென்றனர். அங்கு சென்றதும் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களையும் எழுது வினைஞர்களையும் எழுந்து விலகி நிற்கும்படி உத்தரவிட்டார்கள். துப்பாக்கிகளைக் கண்டதும் எல்லோரும் வாய்பேசாது உத்தரவுக்குப் பணிந்து நின்றனர். ஆசிரியருக்கும் அதேகதிதான் நேர்ந்தது. தொண்டர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த அச்சு யந்திரங்களையும் எழுத்துக்கோர்க்கும் யந்திரங்களையும் தகர்த்தெறிந்தனர். மறுநாள் முதல் பத்திரிகை நடக்காமல் இருப்பதற்கு எவ்வளவு இடையூறு செய்யவேண்டுமோ அவ்வளவையும் செய்துவிட்டு, அவர்கள் வெளியேறிச்சென்றனர். ஆனால் மறுநாள் பத்திரிகை வெளிவந்து விட்டது. அதன் ஆசிரியர் வேறு அச்சுக்கூடங்களின் உதவியால் அதை வெளியிட ஏற்பாடுகளைச் செய்தார். 'இன்டிப்பென்டென்ட்' பத்திரிகாலயத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களில் பலர் புரட்சிப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களைச் சேர்ந்த தொண்டர்கள் வந்தவுடன் அவர்களோடு ஒத்துழைப்பதுபோல், எதிர்க்காமல் பேசாதிருந்துவிட்டனர். எனினும் ஆசிரியர் அவர்களின் யாரையும் வேலையில் இருந்து நீக்கவில்லை.

'இன்டிப்பென்டென்ட்' தாக்கப்பட்டதிலிருந்து மற்றப் பத்திரிகைகளெல்லாம் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டன. அதன்பிறகு டப்ளின் பத்திரிகை எதுவும் தொண்டர்களுடைய செய்கைகளைப் பற்றி அவதூறாக எழுதுவதில்லை. 'இன்டிப்பென்டென்ட்' பத்திரிகை கூட நாளடைவில் மாறுதலடைந்து, பிற்காலத்தில் பிரிட்டிஷார் செய்த கொடுமைகளையெல்லாம் கண்டித்து வந்தது.

மார்ட்டின் லாவேஜினுடைய பிரேத விசாரணைக்குப் பிறகு சரீரம் அவன் உறவினரிடம் கொடுக்கப்பட்டது. டப்ளினிலிருந்த மர்தாகோயில்களின் அதிகாரிகள் அப்பிரேதத்தைத் தங்கள் இடுகாடுகளில் புதைக்கக்கூடாது என்று தடுத்துவிட்டனர். பின்னர் அச்சடலம் பல்லிஸொடேர் என்னும் இடத்திற்குக் கொண்டு போகப்பட்டது. அதுதான் ஸாவேஜின் ஊர். அங்கு மக்கள் பிரேதத்தைத் தொடர்ந்து பலமைல் நீளமுள்ள ஊர்வலமாகச் சென்றனர். அவ்வூர்ப் பாதிரியார் சவக்குழியின் பக்கத்தில் நின்று கடைசிப் பிரார்த்தனையைக் கூறினார். அப்பொழுது பல ஐரிஷ் கான்ஸ்டபிள்கள் உருவிய கத்தியும், நீட்டியதுப்பாக்கியுமாகக் குழியைச் சுற்றி நின்றனர். கலவரமேற்படாமல் பாதுகாப்பதற்காகவே அவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர்.

சில நாட்களுக்குப் பின்னால் தான்பிரீன் டூமி அம்மையாரின் வீட்டிலிருந்து புறப்பட்டு கிரந்தான் தெருவில் 13ஆம் எண்ணுடைய வீட்டிற்குச் சென்று வசித்துவந்தான். அங்கு மலோனும், அவருடைய மனைவியும், இரண்டு பெண்களும் தங்கியிருந்தார்கள்.

மலோன் 1916ஆம் ஆண்டு ஈஸ்டர்கலகத்தின் போது போராட்டத்தில் தமது மகனை இழந்தவர். அதுமுதல் கணவனும், மனைவியும் இதர தொண்டர்களைத் தமது மகன் மைக்கேலைப் போலவே பாவித்து அன்புடன் ஆதரித்து வந்தனர். சிலநாட்கள் கழிந்தபின் தான்பிரீன் டிரீஸியையும் ஹோகனையும் அங்கு அழைத்து வந்து மலோன் குடும்பத்தாரை அறிமுகம் செய்துவைத்தான். மலோனின் பெண்களான பிரிஜிட்டும் எயினியும் பெண்களுடைய சுதந்திரச் சங்கத்தில் அங்கத்தினராக இருந்து தீவிரமாக வேலை செய்து வந்தார்கள். அவர்கள் தான்பிரீனுடைய தபால்களை விநியோகம் செய்வதற்கும் அங்கிருந்து திப்பெரரிக்கு அனுப்ப வேண்டிய வெடிமருந்தையும் துப்பாக்கியையும் கிங்ஸ் பிரிட்ஜ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய் ரயிலில் அனுப்புவதற்கும் மிக்க உதவியாயிருந்தனர். தான்பிரீன் தன் கையில் கிடைக்கும் சகல ஆயுதங்களையும் தோட்டாக்களையும் உடனுக்குடன் திப்பெரரிக்கு அனுப்பி விடுவது வழக்கம். அங்குள்ள சில வியாபாரிகளுடைய விலாசங்களுக்கே அவன் அனுப்புவான். வியாபாரிகளுக்குச் சாமான் வருகிற விபரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும். சர்க்கார் அந்தச்சாமான் பெட்டிகளைப் பற்றிச் சந்தேகமே கொள்வதில்லை.

100