உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/பதினாயிரம் பவுண்டு பரிசு

விக்கிமூலம் இலிருந்து

6
பதினாயிரம் பவுண்டு பரிசு


நாட்டுப்புறத்திலே, வீதி நடுவிலே, குண்டோசை கேட்டது. வயல்களிலும் பண்ணைகளிலும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டுப் போயினர். ஆங்காங்கே சிதறிக்கிடந்த வீடுகளின் வாயில்களில் ஆண்களும் பெண்களும் மொய்த்து நின்று, என்ன விசேஷம் என்று கவனித்தனர். மாண்டுகிடந்த போலிஸாரைப் பார்த்து வழிப்போக்கர்கள் பிரமித்து நின்றனர். வண்டிக்காரன் ஜேம்ஸ் காட்பிரேயும், முனிசிப்பல் வேலைக்காரன் பாட்ரிக் பிளினும் சாலை ஓரத்திலே மெய்மறந்து கிடந்தனர். ஒரு மணி நேரத்தில் அதிகாரிக்குத் தகவல் தெரிந்தவுடன் பல்லாயிரம் பட்டாளத்தார் அங்கு வந்து விடுவார்கள். சந்துகள், பொந்துகள், வீதிகள் எல்லாம் ராணுவ வீரர்கள் மொய்த்து விடுவார்கள்.

தான்பிரீன் ஒரு வினாடியேனும் வீண்போகக்கூடாதென்று அறிந்து போலிஸார் கையிலிருந்த ஆயுதங்களையும் தோட்டாக்களையும் பறித்துக்கொண்டு, இரண்டு பேரைத் தவிர மற்றத் தோழர்களை எல்லாம்பல திசைகளிலும் பறந்தோடும்படி உத்தரவிட்டான். அவனுடன் இருந்த நண்பர்கள் ஸீன் டிரீஸியும், ஸீன் ஹோகனும் வெடிமருந்து வண்டியின் பின்பக்கத்தில் தான்பிரீனும், டிரீஸியும் அமர்ந்து கொண்டனர். ஹோகன் சாரத்தியம் (சாரத்தியம் : வண்டி ஓட்டுதல்) செய்ய ஆரம்பித்தான். ஏனெனில் வண்டியில் இருந்தவர்களுடைய உயிர்கள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஹோகன் லகானை இழுத்தவண்ணமாகவே இருந்தான். வழியிலே வண்டியிலுள்ளவர்களைக் கண்டு பள்ளிக்கூடப் பிள்ளைகளும் குடியானவர்களும் ஆச்சரியப்பட்டுக்கொண்டே சென்றனர். வண்டி இடையில் நிற்கவில்லை.

டோனாஸ்கி என்னுமிடத்தை நோக்கி வண்டி சென்றது. வழியில் வெகுநேரம் வரை தொண்டர்களில் ஒருவரும் வாய் திறக்கவில்லை, கரடுமுரடான மலைப்பாங்கான வீதியில் வண்டி கற்களில் தூக்கிப்போடும்பொழுது குடல் தெறித்துவிடும்போலிருந்தது. ஆனால் வெடிமருந்து மட்டும் எப்படியோ வெடிக்காமலிருந்தது. வண்டியிலுள்ளோர் தாங்கள் தேடிக் கொணர்ந்த பண்டமே தங்களைத் தீர்த்துவிடுமோ என்று பயந்து கொண்டே சென்றனர்.

கடைசியாக அவர்கள், முன்னரே ஏற்பாடு செய்திருந்த இடத்தை அடைந்தனர். அங்கே தயாராக வைக்கப்பட்டிருந்த குழியில் வெடிமருந்தைக் கொட்டி மூடிவைத்தனர். தான்பிரீன் இரண்டு வெடிமருந்துக்குச்சுகளை மட்டும், போலிஸார் கண்ணில் மண்ணள்ளிப்போடுவதற்காகக் கையில் வைத்துக்கொண்டான். குதிரையை அவிழ்த்து ஓட்டிவிட்டு அந்த இடத்தில் அவற்றைப்போட்டு வைத்தான். பின்னால் போலிஸாரும், ராணுவத்தாரும் அப்பக்கத்தில் மாதக்கனக்காய் தேடும் பொழுது, வெடிமருந்து புதைக்கப்பட்ட இடத்தின் மேலே பல தடவை நடந்துவந்த போதிலும் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் வெகுதூரத்திற்கு அப்பால் கிடந்த இரண்டு குச்சிகளையும் சுற்றிச்சுற்றிப் பல நூறு சுரங்கங்களைத் தோண்டிவிட்டார்கள். வெடிமருந்து பூமிக்குள் இருப்பதாகக் கருதி அதை எடுப்பதற்காக அவர்கள் வெட்டிய குழிகளை, ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் பாசறைகளாக உபயோகிக்கலாம். அவ்வளவு சிரமப்பட்டு, அவர்கள் நாட்டுப்புறம் எங்கும் குழிதோண்டி விட்டனர். ஆனால் மருந்துள்ள இடம் மட்டும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை. வெளியே போடப்பட்டிருந்த இரண்டு குச்சிகளும் அவர்களை முற்றிலும் ஏமாற்றி விட்டன.

தொண்டர்கள் தென்பக்கத்தில் கால்டீ மலைகளை நோக்கி நடந்து சென்றனர். அம்மலைகளில் பிறர் அறியாமல் மறைந்திருக்க முடியும். நான்கு மைல்களுக்கு அப்பால் அவர்கள் பிட்ஸ்ஜெரால்டு என்ற ஒருத்தி வீட்டில் சிறிது நேரம் தங்கி உணவெடுத்துக்கொண்டனர். காலையில் வீட்டில் சாப்பிட்ட பிறகு அதுதான் அவர்களுடைய இரண்டாம் வேளை உணவு அங்கு அதிக நேரம் தங்காது மீண்டும் வழிநடக்கத் தொடங்கினர். குளிர்தாங்கமுடியாமல் இருந்தது. வழியில் இரண்டு மலை ஆடுகள் நின்றதைத் தவிர வேறு உயிர்ப்பிராணிகள் எதுவும் அப்பக்கத்திலே காணப்படவில்லை. அவர்களுக்கு மலைப் பாதைகள் சரியாகப் புலனாகவில்லை. வழியிலே இருந்த இரண்டொரு வீட்டாரிடம் பாதையை விசாரிக்கலாம் என்றால் அவர்களுடைய வாய் கம்மா இருக்காது. அப்பக்கத்தில் மூவர் சென்றதாக அவர்கள் யாரிடத்திலேனும் சொல்லிவிடக் கூடும். ஆதலால் மூவரும் யாரையும் கண்டு கேளாமல் கால்கள் போன இடமெல்லாம் சுற்றித்திரிந்தனர். வட்டங்கள் சுற்றினர். வழி தெரியாமல் திகைத்தனர். இடையில் ஸீன் டிரீஸீ இருபதடி ஆழமுள்ள ஓர் ஓடையில் வீழ்ந்துவிட்டான். அவன் மடிந்தான் என்றே மற்றவர்கள் கருதினார்கள். ஆனால் அவர்கள் அவனைத் தூக்கி வெளியே விட்டபொழுது அவன் 'இன்னும் எத்தனை பேரையோ சுட்டபின்பல்லவா நான் சாகவேண்டும்!' என்று கர்ஜித்தான். அவர்கள் மீண்டும் மலையுச்சியை நோக்கிச் சென்றனர் அம்மலையைத் தாண்டி மறுபக்கத்திற்குப் போய்விட்டால் அவர்களுடைய கவலை ஒழியும். உயரே போகப் போகக் குளிர் அதிகமாயிருந்தது. கோடை நடுவிலேயே இம்மலையில் பனி பெய்யும். அந்த மாரிக்கால இருளிலே இங்கு குளிர் தாங்கமுடியவில்லை. மூன்று மணிநேரம் அவர்கள் மலையில் ஏறிச்சுற்றிய பின்னால் முன்னால் பார்த்த இரண்டு மலை ஆடுகள் நின்ற இடத்திற்கே திரும்பிவந்துவிட்டனர் அதைக் கண்டு மனம் வருந்தினர். இனி அம்மலையைத் தாண்டுவது இயலாது என்று மலைத்தனர். அப்பொழுது ஸீன் ஹோகன் கவிபாடுகிற புலவர்கள் மட்டும் மலைகள் மாண்புடையவை என்றும், அழகின் உறைவிடம் என்றும் வர்ணிக்கிறார்களே! அவர்கள் வீட்டில் இருந்துகொண்டே ஆனந்தமாய்ப் பாடிவிடுகிறார்கள். நம்மைப் போல் பட்டினியும் பசியுமாய்க் குளிரில் வந்து நடந்தால், அவர்கள் ஏழு ஜன்மத்திலும் இயற்கை ஆழகைப் பற்றிப் பாடவே மாட்டார்கள் என்று வேடிக்கையாகப் பேசினான்.

பின்னர் அவர்கள் வேறு வழியில் செல்லவேண்டுமென்று தீர்மானித்தனர். இருப்புப் பாதை வழியாகக் காஹிர் என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டனர். இந்த யோசனை தோன்றியது.அவர்களுடைய நல்லதிர்ஷ்டமே. ஏனென்றால், வீதி வழியாக எந்தப் பக்கம் சென்றிருந்தாலும், அவர்கள் பட்டாளத்தார் கையில் சிக்கியிருப்பார்கள். நாலு பக்கத்தாலும் பட்டாளத்தார் மோட்டார் லாரிகளின் சுற்றிக்கொண்டே யிருந்தனர்.

வழி நடப்பதில் இருப்புப்பாதை வழியாகச் செல்வதைப் போல் கஷ்டமானது வேறில்லை. அதிலும் இரவு, அந்த அந்தகாரத்தின் நடுவே அவர்கள் முன்னும் பின்னும் எச்சரிக்கையுடன் கவனித்துக்கொண்டே சென்றனர். தான்பிரீன் திடீரென்று முன்னால் சிறிதுதுரத்தில் கறுப்பாக ஓர் ஒருவம் நிற்பதைக் கண்டான். உடனே ரிவால்வரைக் கையில் பிடித்துக்கொண்டு, யாரது கைகளை மேலே தூக்கு என்று உத்தரவிட்டான். அந்த ஒருவம் உத்தரவை அசட்டைசெய்து விட்டு, அசைவற்று நின்றது. தான்பிரீன் நீட்டிய ரிவால்வருடன் நெருங்கிச் சென்று பார்த்தான். இந்த நெடிய உருவம் ஒரு ரயில்வே கம்பம்! அதைக் கண்டதும் அவன் அடைந்த வெட்கத்திற்கு அளவேயில்லை. அந்தக் கம்பத்தில், 'உத்தரவில்லாமல் இங்கு பிரவேசிப்பவர்கள் கைதுசெய்யப்படுவார்கள்' என்ற ஓர் அறிக்கை தொங்கிக் கொண்டிருந்தது. கூட இருந்த நண்பர்கள் இருவரும் சிரிப்பை அடக்கமுடியாமல் கொக்கரிப்பதைக் கண்டு, தான்பிரீனும் அவகளுடன் சேர்ந்து சிரிக்கலானான்.

சிறிதுதூரம் சென்றதும் ஸீன் ஹோகனுடைய பூட்ஸ்களில் ஒன்று அறுந்து கிழிந்துபோய்விட்டது. அடிப்படி நின்று அதைக் கட்டவேண்டியிருந்தது. இத்தகைய கஷ்டங்களையெல்லாம் மறந்து நடக்கும்படி ஸீன்டிரீஸி வழியெங்கும் வேடிக்கையான கதைகள் கூறி நண்பர்களை மகிழ்வித்து வந்தான். காஹிர் எவ்வளவு தூரம் என்று யாராவது கேட்டால், அடுத்த வளைவு திரும்பியதும் வந்து விடும் என்று அவன் கூறிவந்தான். ஒரு வளைவிலிருந்து மற்றொரு வளைவுக்குச் சுமார் மூன்று மைலுக்குக் குறைவில்லை. அடுத்த வளைவுக்குப் போனவுடன், அவன் அதற்கடுத்த வளைவென்று கூறி வந்தான். வருந்தி, வாடும் உள்ளத்திற்கு அவனுடைய வேடிக்கைச்சொற்கள் அமிர்தம் போலிருந்தன. வழியில் ஆங்காங்கே சில மணல் மேடுகளில் ஐந்து நிமிஷ நேரம் இளைப்பாறிக் கொண்டு அவர்கள் முன்னேறிச்சென்றனர்.

முடிவில் காஹிர் வந்து சேர்ந்தனர். அவர்களுடைய களைப்புக்கும் உடல் வலிக்கும்.அளவேயில்லை. எந்த நிமிஷம் எலும்புகள் ஒரே குவியலாக வீழ்ந்துவிடுமோ என்று எண்ணும்படி அவர்கள் விளங்கினார்கள். ஆதலால் மேற்கொண்டு யோசிப்பதில் பயனில்லை என்றும், எங்காவது இளைப்பாற வேண்டுமென்றும் கருதி நேராக ஊருக்குள் சென்றார்கள். காஹிர் ஸோலோஹெட் பக்கிலிருந்து பதினைந்து மைல் தூரத்திலிருந்தது. யாரிடம் சென்று இருப்பிடம் கேட்பது என்று அவர்களுக்குப் புலப்படவில்லை. பசி கொடுரமாயிருந்தது. குளிரோ உதிரத்தைக் கட்டியாக உறையும்படி செய்து விட்டது. கால்கள் கெஞ்சித் தடுமாறின. தான்பரீனுக்கு ஒரு நண்பருடைய ஞாபகம் வந்தது. டாபின் என்ற ஒரு மாதின் வீட்டிற்கு அவன் நண்பர்களை அழைத்துச் சென்றான். அவள் வந்த விருந்தினரை மிக்க உவகையுடன் உபசரித்தாள். அவர்களுக்கு வேண்டிய படுக்கை முதலானவற்றைக் கொடுத்தாள். அந்நிலையில் அம் மூவரும் அங்கு சிறிது இளைப்பாறினார்கள்.

மறுநாள் காலையில் அவர்கள் எழுந்தவுடன் பத்திரிகைகளை வாங்கி ஆவலுடன் பார்த்தனர். லோலோஹெட்பக் விஷயமாய் என்ன செய்திகள் வெளிவந்திருக்கின்றன. என்பதைக் கவனித்தனர். 'திப்பெரரி அக்கிரமம்!' 'இரட்டைப் போலிஸார் கொலை' முதலிய தலைப்புகள் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தன. இறந்த போலிஸாரின் பெயர்கள் மக்டொன்னல், ஒகானல் என்று அச்சிடப்பட்டிருந்தன. அவர்களுடைய மரண விசாரனையும் வெளிவந்திருந்தது.

பின்னால் நாட்கள் போகப்போக, நம் தொண்டர்களுக்குப் பல தகவல்கள் தெரியவந்தன. கொலைகள் சம்பந்தமான இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு மாணவர்களும் சிறையிலிடப்பட்டார்கள். எங்கும் பொதுக் கூட்டங்களிலும், மாதா கோயில்களிலும் கொலைகளைப் பற்றிய கண்டனங்கள் கூறப்பட்டன. அவைகளைக் கண்டிக்காத பத்திரிகையே கிடையாது. ஸின்பீன் சங்கங்கள் கூடக் கண்டனத்தில் கலந்து கொண்டன.

திப்பெரரியின் தென்பாகம் ராணுவப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதாவது அரசாங்கத்தார் அங்கு ராணுவச்சட்டத்திற்கு நிகரான கொடிய சட்டத்தை அமுல் நடத்த ஆரம்பித்தனர். எங்கும் போலிஸூம் ராணுவமும் குழுமி நின்றன. கண்ட இடமெல்லாம் பாணாத்தடிகளும் போலிஸ் இயந்திரத்துப்பாக்கிகளும் நின்றவர், நடந்தவர், சந்தேகிக்கப்பட்டவர், யாரும் சோதிக்கப்பட்டனர். வீடுதோறும் சோதனை, தெருக்கள் தோறும் பாதுகாப்பு சந்தைகள், கூட்டங்கள், விழாக்கள் யாவும் தடுக்கப்பட்டன. ஒரு சிறு சம்பவம் ஆங்கில அரசாங்கத்தின் சகல சக்திகளையும் கிளப்பிவிட்டு விட்டது. அதன் கோர உருவத்தை உலகுக்குத் திறந்துகாட்டி விட்டது.

மேற்கொண்டு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளில் இருந்து தான்பிரீன் முதலியோர், தங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கும், பிடிப்பதற்குத் துப்புக் கூறுவோர்க்கும் ஆயிரம்பவுண்டு பரிசு பொடுப்பதாக அரசு விளம்பரப் படுத்தியிருந்ததைத் தெரிந்து கொண்டனர். பின்னால் இந்தப் பரிசு பதினாயிரம் பவுண்டாக உயர்த்தப்பட்டது. அவர்களுடைய தலைகளின் விலை பதினாயிரம் பவுண்டு என்று தீர்மானிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் அதிக எச்சரிகையுடன் நடமாட வேண்டியிருந்தது. மக்களில் யாரும் அவர்களைக் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் போலிஸாரில் சிலர்மட்டும் பரிசு பெறும் நோக்கத்துடன் ஊருராய்த் தேடினார்கள். நாளடைவில் அவர்களும் சிரத்தை குறைத்து ஒதுங்கிவிட்டனர்.