உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/ஸோலோஹெட்பக்

விக்கிமூலம் இலிருந்து

5
ஸோலோஹெட்பக்


அரசர்களுக்கு வரிப்பணம் எவ்வளவு அவசியமோ புரட்சிக்காரருக்கு அவ்வளவு அவசியமான பொருள் வெடிமருந்து. தான்பிரீன் முதலானவர்கள் அதைத் தேடுவதில் முதலில் கருத்தைச் செலுத்தினர். 1919 ஜனவரி ஆரம்பத்திலேயே ஸோலோஹெட்பக் கல்லுடைக்கும் பாசறைகளுக்குப் பக்கம் வெடிமருந்து கொண்டுவரப்படும் என்று செய்தி அவர்களுக்கு எட்டியது. ஆனால் வெடிமருந்து வண்டியுடன் அதன் பாதுகாப்புக்கு ஆயுதம் தாங்கிய போலிஸ்காரர்களும் வருவார்கள். வெடிமருந்து வேண்டுமானால் அவர்களிடமிருந்து அதைப் பறிக்கத்தான் வேண்டியிருந்தது. தான்பிரீனும் ஸீனும் இதைப்பற்றி அடிக்கடி கலந்துபேசினார்கள். அவர்களிடம் ஆட்கள் அதிகமில்லை. ஆனால் இருந்த சிலரோ மிகுந்த தைரியசாலிகள். அச்சிலரை வைத்துக்கொண்டு விரைவாக மருந்துக் காரியத்தை முடிக்காவிட்டால் வெளியிலுள்ள மற்றத் தொண்டர்களும் உற்சாசங் குன்றிக்கிடப்பார்கள்.

எதிரிகளோடு நேராக நின்று இடைவிடாது போராடமல் மறைந்து நின்று சமயம் வாய்த்தபோதெல்லாம் எதிரிகளைத்தாக்கிவிட்டு மீண்டும் மறைந்து கொள்வது கொரில்லச் சண்டை என்று சொல்லப்படும். 'கொரில்லா என்பது மனிதக் குரங்கு, அது இப்படித்தான் சண்டை செய்வது வழக்கம்.[1]

அடிமை நாட்டில் அந்நியர் வலியராகி நிற்கும் பொழுது மக்கள் இத்தைகயை கெரில்லாச்சண்டையே செய்யமுடியும். பல கெரில்லாச்சண்டைக்கு ஆட்களின் தொகையைப் பார்க்கிலும் அவர்களின் தீரமும் திறமையுமே முக்கியம். தான்பிரீன் இதையறிந்து தன்னிடமிருந்த நண்பர்கள் சிலரைத் தயார் செய்து வைத்துக்கொண்டான்.

வெடிமருந்துடன் வரும் போலிஸாரைச் சுடுவதா அல்லது ஆயுதங்களை மட்டும் பறித்துக் கொண்டு அவர்களை விட்டு விடுவதா என்று பிரச்சினையைப்பற்றி அவன் நண்பர்களுடன் யோசனை செய்தான். ஸீன் அநாவசியமாய் அவர்களைக் கொல்ல வேண்டாம் என்றும் ஆயுதங்களே தங்களுக்குக் குறி என்றும் எடுத்துக் கூறினார்.

ஸோலோஹெட்பக் திப்பெரரியிலிருந்து இரண்டரை மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய நகரம். லிமெரிக் ஜங்ஷனுக்கும் அதற்கும் இடையில் உள்ள தூரம் ஒரு மைல். கல்லுடைக்கும் இடம் ஒரு கிளை வீதியின் மேல் இருந்தது. அங்கு ஏராளமான பாறைகள் உண்டு. அந்தப் பகுதி மலைப்பாங்கான பிரதேசம். வெகுசமீபத்தில் ஊர்களில்லை. நிலங்களின் மத்தியில் சில வீடுகள் மட்டும் கட்டப்பட்டிருந்தன. கல்லுடைக்கும் இடம் கிளை வீதியின் வலது பக்கத்திலிருந்தது. அதன் இரண்டு பக்கத்திலும் உயர்ந்த மரக்கிளைகள் இருந்தன. அவற்றிற்குப் பின்னால் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. ஒளிந்திருப்பதற்கு அவை மிகவும் உதவியாயிருந்தன.

தான்பிரீன் கூட்டத்தாருக்கு வெடிமருந்து வண்டி வரும் நிச்சயமான தேதி தெரியவில்லை. வரப்போகின்ற நாளைக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே அது வருவதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அந்த ஐந்து தினங்களிலும் அவர்கள் புதர்களில் மறைந்து காத்திருந்து ஏமாந்தனர்.

வெடிமருந்துக்காகக் கடைசிவரை காத்து நின்றவர்கள் பின் கண்ட ஒன்பது பேர்கள் தான்பிரீன், ஸீன் டிரீஸி, ஸீமஸ் ராபின்ஸன், ஸீன்ஹோகன், ஜாக் ஒமீரா, பாட்ரிக் மக்கார் மிக், மைக்கேல் ரியான், பாட்ரிக் ஒட்வியர், டிம்குரோ.

எவரும் அறியாதபடி அவர்கள் மறைந்திருக்க வேண்டியிருந்தது. காலம் மிகக் குழப்பமானது. கண்டவர்களையெல்லாம் போலிஸார் சந்தேகிப்பது வழக்கம். கல்லுடைக்கும் இடத்தில் வேலைசெய்துவந்த நூற்றுக்கணக்கான தொழிலாளரில் யாரேனும் அந்நியர்கள் அக்கம்பக்கத்தில் நடமாடுவதைக் கண்டால் சந்தேகங்கொளவர். சந்தேகம் சத்துருக்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் ஆதலால் அங்கு காத்திருந்தவர்கள், அதிகாலையில் பொழுது விடியுமுன்பே வந்து புதர்களுக்குப் பின்னால் மறைந்து கொள்வது வழக்கம். எந்த நேரத்திலும் ஆயுதங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு பகைவரின் வரவை அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டெயிருந்தனர். இரண்டு மணிக்குப் பின்பு போலிஸார் வரமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் போலிஸார் அங்கிருந்து நகரத்திற்கு இருட்டு முன்பே திரும்பவேண்டியிருக்கும். இரண்டு மணிக்குப் பின் தான்பிரீன் தோழர்களுடன் தன்வீட்டுக்குச் சென்றுவிடுவான். வீட்டில் அவனுடைய அன்னை யாவருக்கும் உணவு சமைத்துப் போடுவது வழக்கம். அதிகாலையில் நான்கு மணிக்கே காலை ஆகாரம் தயாரித்துக் கொடுத்து, அவள் அவர்களை வழியனுப்புவாள். ஆறாவது நாள் காலையில் அவள் காலை உணவு கொடுக்கும் பொழுது 'இன்று காரியத்தை முடிக்காமல் வந்தீர்களானால் நாளை முதல் நான் உங்களுக்குச்சோறு படைப்பது சந்தேகம்தான்!' என்று எச்சரிக்கை செய்தனுப்பினான்.

கடைசியாக ஜனவரி 21ஆம் தேதி வந்து சேர்ந்தது. அன்றைய தினம் அயர்லாந்தின் சரித்திரத்தில் மிக விசேஷமானதாகும். சர்வ வல்லமையுள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து அயர்லாந்து விடுபட்டுத் தனது உயிரினும் இனிய குடியரசை அன்றுதான் ஸ்தாபித்துக் கொண்டது. டப்ளினின் டெயில் ஐரான் ஏற்பட்டதும் அன்றுதான். உலகத்திலுள்ள சகல சுதந்திர நாடுகளுக்கும் அயர்லாந்து யாருக்கும் அடிமையில்லை என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தினத்நில் தான்பிரீன் கூட்டத்தார் ஸோலோஹெட்பக் புதர்களில் பகைவரை எதிர்பார்த்து வெகு நேரம் காத்திருந்தனர். அவர்கள் அனுப்பியிருந்த தூதுவன் கிளை வீதியில் நடமாடிக்கொண்டு திப்பெரரி வீதியில் வண்டி வருகின்றதா என்று திகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் திடீரென்று ஓடிவந்து சுடர்விடும் கண்களுடன் 'ஆசாமிகள் வந்துவிட்டனர். வந்து விட்டனர், என்று கூவினான்.

உடனே ஒவ்வொருவனும் முன்னரே குறித்தபடி தனது இடத்திற்குச் சென்று தயாராய் நின்றான். அவர்களில் யாருக்காவது கூச்சமோ அதிர்ச்சியோ ஏற்பட்டிருந்தாலும் ஒருவரும் அதை வெளிக்காட்டவில்லை. மின்னல் பாய்வது போல் ஒவ்வொரும் விரைந்து சென்று கடமையில் ஈடுபட்டனர். வெகுசீக்கிரத்தில் போராட்டத்தில் அவர்களுக்கு வாழ்வு அல்லது மரணம் ஏற்படக் காத்திருந்தது. தூதன் மீண்டும் ஓடிவந்து வருகிறவர்களுடைய எண்ணிக்கையையும் நெருங்கி எவ்வளவு தொலைவில் வருகிறார்கள் என்பதையும் அறிவித்தான். வண்டி நெருங்கி வந்துகொண்டிருந்தது. சக்கரங்கள் வீதியில் 'சடசட' வென்று உருளும் ஓசை கேட்டது. குதிரைக் குளம்புகளின் ஓசையும் கேட்டது.

தான்பிரீன் பரபரபடைந்தான். மிகவும் அமைதியுடன் நிற்க வேண்டுமென்று விரும்பினாலும் அது மிகக் கஷ்டமாயிருந்தது. கூடியவரை ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, புதரை விலக்கிவெளியே வீதியில் எட்டிப்பார்த்தான். குதிரை வண்டி வெகுசமீபத்தில் வந்துவிட்டது. குதிரையின் இரண்டு பக்கத்திலும் இருவர் வந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் வண்டிக்காரன். மற்றவன் ஒரு 'முனிசிப்பல்' வேலைக்காரன். வண்டிக்குப்பின்னால் சிறிது தூரத்தில் ஆயுதந்தாங்கிய இரண்டு போலிஸாரும் வந்துகொண்டிருந்தனர்.

போலிஸார் வெகுசமீபத்தில் வந்தவுடன் புதரில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் ஒரே தொனியில் 'தூக்குங்கள் கைகளை' என்று உரக்கக் கூவினார்கள். ஆனால் போலிஸார் இருவரும் கைகளைத்துக்குவதாகக் காணப்படவில்லை. தான்பிரீன் முதலியோர் அவர்களை வீணாகக் கொன்றுதள்ள மனமின்றி, மீண்டும், 'தூக்குங்கள் கைகளை!' என்று உத்தரவிட்டனர். போலிஸார், கைகளைத் தூக்குவதற்குப் பதிலாக, யுத்த வீரர்களைப் போல், துப்பாக்கிகளைக் கையில் பிடித்துச் சுடுவதற்குக் குறிபார்த்தனர். அவர்களும் ஐரிஷ்காரர்கள் அல்லவா! மரியாதையாகப் போலிஸார் துப்பாக்கிகளைத் துார எறிந்திருந்ததால், உயிர்ப் பிச்சை பெற்றிருப்பார்கள். அந்நிய அரசாங்கத்திடம் வாங்கிய கூலிக்காக அவர்கள் உயிரை விடத் துணிந்து நின்றனர்; ஒரு நிமிஷம் தாமதித்திருந்திருந்தால் புரட்சிக்காரர்கள் மடிந்திருப்பார்கள். ஆதலால் அவர்கள் கண்கொட்டு முன்னால் போலிஸாரைக் குறிவைத்துத் துப்பாக்கி விசைகளை இழுத்துவிட்டனர். குண்டுகள் ஏக காலத்தில் குறிதவறாமல் பாய்ந்தன. இரண்டு போலிஸாரும் மூச்சற்றுக் கீழே சாய்ந்தனர். ஐரிஷ் தேசிய வீரர்கள் தங்களுடன் பிறந்த ஐரிஷ் சகோதரர்களை வீழ்த்திவிட்டனர்!


  1. நூலாசிரியரின் இக் கருத்து பிழையானது கொரில்லாக் குரங்குக்கும் இவ்வகைச் சண்டைக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. கிரமப் படைகளுக்கு (Regular Army) எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்தும் போராட்ட முறையின் பெயர் கெரில்லாப் போராட்டம் (Guerilla warfare) ஆகும். இது முதன் முதலாக ஸ்பெயின் நாட்டில் உருவாயிற்று நூலாசிரியர் அதனை கொரில்லாக் குரங்கின் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தி இங்கு எழுதுவதால் 'கொரில்லாச் சண்டை' என்று அவர் பயன்படுத்திய சொற்றொடர் இங்கு மட்டும் அப்படியே தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. நூலில் இதற்கு முன்பும் பின்பும் உள்ள பகுதிகளில் 'கெரில்லாச் சண்டை' என்று திருத்தப்பட்டுள்ளது -பதிப்பாளர்