தாய்மொழி காப்போம்/உயிர் கொடுப்போம்
5. உயிர் கொடுப்போம்
“இந்திமொழி பொது மொழியா? தகுதி என்ன
இருக்கின்ற தம்மொழிக்கு? குயில்கள் கூவும்
கொந்தவிழும் மலர்ச்சோலை தமிழர் நாடு;
கோட்டானுக் கங்கென்ன வேலை?” என்று
செந்தமிழும் பிறமொழியும் நன்கு கற்றோர்
சீர்தூக்கி நன்குணர்ந்து மறுத்து ரைத்தார்;
எந்தவழி இந்திமொழி வந்த போதும்
ஏற்பதிலை என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்.
அரசியலில் மூதறிஞர் மறுத்துச் சொன்னார்
ஆய்வுரைகள் அறிவுரைகள் எழுதிப் பார்த்தார்;
முரசொலிக்கும் போர்க்களத்தில் நின்று நாளும்
முழக்கமிடும் பேரறிஞர் எதிர்த்து நின்றார்;
உரமிகுந்த அறப்போர்கள் பல நடாத்தி
உயிர்ப்பலிகள் பலகொடுத்தார்; எல்லாம் கண்டும்
இருள்மதியர் இந்திவெறி கொண்ட மாந்தர்
இன்றுவரை கேளாராய் உலவு கின்றார்.
விரலைந்தும் தனித்தனியே இயங்கி நிற்கும்
வேலேந்தும் பொழுதிலவை இணைந்து நிற்கும்;
தரமறந்த உரிமையுடன் மாநிலங்கள்
தனித்தனியே இயங்கிவரும்; பகைவ ருங்கால்
உறவுணர்ந்து தோள்தந்தே இணைந்து நிற்கும்;
ஒற்றுமை என் றிதனைத்தான் உரைப்பர் மேலோர்;
ஒருமைஎனும் பெயராலே விரல்கள் ஐந்தை
ஊசியினால் தைப்பதற்கு முனைவா ருண்டோ?
தத்தமது நாகரிகம் மொழிகள் பண்பு
தனித்தன்மை எள்ளளவும் கெடுத லின்றி
ஒத்துரிமை உணர்வுடனே மாநி லங்கள்
உளமொன்றி வாழ்வதுதான் நமது வேட்கை;
பித்தரென வெறியரென ஒருமை என்ற
பெயர்சொல்லி இந்தியினால் தைத்து விட்டால்
எத்தனைநாள் ஒட்டிருக்கும்? குனிந்த மாந்தர்
இருதோளும் விரித்தெழுந்தால் தெறித்துப் போகும்.
உறவுக்குக் கைகொடுப்போம் எனினும் எங்கள்
உரிமைக்கும் குரல்கொடுப்போம்; தென்பு லத்தின்
மறுதிக்கில் வாழ்வோர்கள் குரலைக் கேட்க
மறுத்துவிடின் உயிர்கொடுப்போம்; சிறையில் மாண்ட
திறமிக்க நடராசன் தாள முத்து
தென்னாட்டில் பலருள்ளார்; இன்று வாழ்வோர்
உரிமைக்கே உயிர்கொடுப்போம் என்பர் நாளை
உணர்வுடையார் என்சொல்வார்? யாரே கண்டார்.