உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்மொழி காப்போம்/கோவிலுக்குள் கொடுமை

விக்கிமூலம் இலிருந்து

33. கோவிலுக்குள் கொடுமை

தருக்கினால் அயலான் வந்து
தமிழனைப் பழித்துப் பேசும்
வெறுப்புறுங் குற்றஞ் செய்தால்
விரைந்தவன் முதுகெலும்பை
நொறுக்கடா என்ற பாடல்
நுவன்றவன் பிறந்த மண்ணிற்
செருப்பினால் தாக்கப் பட்டான்
செந்தமிழ் பழித்த வாயன்.

என்னுமோர் சொல்லைக் கேட்டேன்
இருசெவி குளிரப் பெற்றேன்
வன்முறை நோக்க மன்று
வழிவழி மரபு மன்று
சொன்முறை யெல்லாஞ் சொல்லித்
தொலைத்தும்நற் கோவி லுக்குள்
தென்மொழி வேண்டா வென்றால்
செய்வது வேறென்? சொல்லும்

தாய்மொழி பழித்துப் பேசுந்
தறுதலை எவனுந் தோன்றின்
பாய்புலி யாவர் எங்கள்
பைந்தமிழ் மறவர் என்று
கூய்வரும் மொழியைக் கேட்டுக்
குளிர்ந்ததென் னுள்ள மெல்லாம்;
நாய்களின் வாலைச் சற்று
நறுக்கித்தான் வைக்க வேண்டும்.

தன்னுடல் வளர்ப்ப தற்குத்
தமிழையே சொல்லிச் சொல்லிப்
பொன்பொருள் பெருக்கிக் கொண்டான்;
புல்லியன் நன்றி கொன்றே
தென்மொழி வெறுத்தல் கண்டும்
திருவிழா நடத்துங் கூத்தர்
பின்னுமேன் அழைக்க வேண்டும்?
பித்தர்கள் இவர்போ லுண்டோ?

வடமொழி ஒன்றே ஏற்பர்
வண்டமிழ் ஏலா ரென்றால்
கடவுளர் உருவக் கல்லைக்
கடலிடை வீச லன்றி
இடமுடைக் கோவி லுக்குள்
இன்னுமேன் வைத்தல் வேண்டும்?
மடமிகு மதிய ரானீர்
வந்தவர் ஏறிக் கொண்டார்.

கல்லினைக் கடவு ளாக்கிக்
கைத்திறன் காட்டுஞ் சிற்பி,
கல்லொடு கல்ல டுக்கிக்
கோவிலைக் கட்டுங் கொற்றன்,
கல்லினை மண்ணைச் சாந்தைக்
களத்தினிற் சுமக்குஞ் சிற்றாள்
செல்லவுந் தடையாம் செய்த
சிலைகளைத் தொட்டால் தீட்டாம்.

மாந்தரைத் தடுத்த போது
மடமையாற் பொறுத்துக் கொண்டீர்
தீந்தமிழ் மொழியை நம்மை
ஈன்றருள் தாயைத் தீயர்
போந்தவர் தடுக்கும் போதும்
பொறுமையா காட்டு கின்றீர்?
மாந்தரென் றும்மை யெண்ண
மனமிகக் கூசு கின்றேன்.

தன்மதிப் பிழந்தீர் வேதர்
தாளிணை வருடி நின்றீர்
நன்மதி திரிந்து கெட்டீர்
நால்வகை 'வருண தர்மம்'
பன்னுதல் நம்பி ஏய்ப்போர்
பகட்டுரைக் கடிமை யானீர்
இந்நிலை தெளியா தின்னும்
இருட்டினில் உழலு கின்றீர்

கதிரவன் தோன்றக் கண்டும்
கண்களை மூடிக் கொண்டீர்
மதியொளி பரவல் கண்டும்
மயக்கினை விட்டீ ரல்லீர்
புதியதோ ருலக மிங்குப்
பூப்பது காணீ ராகி
முதுகினை வளைத்துக் கொண்டீர்
முப்புரி நிமிர விட்டீர்.

(28-3-1984)