தாய்மொழி காப்போம்/தமிழின் செம்மை
48. தமிழின் செம்மை
எண்ணி லடங்காத எத்தனையோ நன்மொழிகள்
மண்ணிற் பிறந்து வளமையுறாக் காலத்தே
தன்வளமை காட்டித் தனிப்பெருமை கொண்டிலங்கிச்
சொன்மரபு மாறாமல் தூய நிலைநாட்டி
வாழ்க்கைப் பெருநிலத்தை வளமாக்கிச் செம்மைதனைச்
சேர்க்கப் பொருள் நூலைச் செப்பிப் பெருமையொடு
செப்பமுறச் செய்தமையால் செந்தமிழென் றோதினரோ?
அப்பெருமை யாரே அறிந்துரைக்க வல்லார்கள்?
மெய்யுணர அன்புணர மேன்மைத் திறமுணர
உய்வகைகள் தேர்ந்தே உளந்தெளிய வையத்துள்
வாழ்வாங்கு வாழ வழிவகுத்துத் துன்பமெனும்
பேழ்வாய் எரிநரகில் பேதுற்று வீழாமல்
இம்மையினில் காக்கும் இணையில்லா ஓர்மறையால்
செம்பொருளைக் காட்டுவதால் செந்தமிழென் றோதினரோ?
நூல்மறைந்து போனாலும் நுண்மாண் நுழைபுலத்துக்
கால்மறைந்து போகாமல் காக்கும் அகத்தியனும்
பல்காப் பியந்தோன்றப் பாட்டு நெறியுரைக்குந்
தொல்காப்பி யனென்னுந் தூயோனுந் தோன்றியிங்கு
நம்மொழியைக் காப்பதற்கு நல்வரம்பு கட்டி அதைச்
செம்மையுறச் செய்தமையால் செந்தமிழாக் கண்டனரோ?
ஆரியம்போற் பேச்சற் றழிந்து சிதையாத
சீரிளமை கண்டவர்கள் செம்மைமொழி என்றனரோ?
நீரால் நெருப்பால் நிலைகுலைந்து போகாமல்
சீராய்த் திகழ்வதனால் செந்தமிழென் றோதினரோ?
முந்தைத் தமிழ்கெடுக்க மூண்டெழுந்த நோக்கமுடன்
எந்தத் துணைகொண்டிங் கெந்தமொழி வந்தாலும்
நோவுக்கும் அஞ்சோம் நொடிப்பொழுதில் வீழ்கின்ற
சாவுக்கும் அஞ்சோம் தமிழ்காப்போம் என்றெழுந்த
அஞ்சலிலாக் கூட்டத்தை ஆளவந்தோர் தாக்கியதால்
நெஞ்சிருந்து சிந்தி நெடிதோடுஞ் செங்குருதி
பாய்ந்து தமிழ்மொழியாம் பைங்கூழ் செழிப்பதனால்
ஆய்ந்தமொழி செந்தமிழென் றானதென நானுரைப்பேன்;
ஆரியத்தார் ஆட்சிமுதல் ஆங்கிலத்தா ராட்சிவரை
சீரழித்த ஆட்சிகளைச் செப்பத் தொலையாது;
தேன்மொழியாந் தென்மொழியின் சீர்மை பரவிவர
மீன்புலிவில் ஏந்திநல் மேலோர் துணைநின்று
காத்ததிரு நாட்டிற் கதவு திறந்திருக்கப்
பார்த்திங்கு வேற்றுப் பகைமொழிகள் உள்நுழைந்து
நீக்கமற எங்கும் நிறைந்தாலும் நம்மினத்தார்
தூக்கங் கலையாமல் சோர்ந்து கிடந்தாலும்
நான்வணங்குந் தெய்வ நலமிக்க செந்தமிழ்த்தாய்
தேன்வழங்கும் நாண்மலர்போல் என்முன் திகழ்கின்றாள்;
அண்ணன் திருமுகத்தில் அணுவளவும் சோர்வின்றி
என்னை வளர்க்கின்றாள் இவ்வுலகைக் காக்கின்றான்;
தெவ்வர் எவர்வரினுந் தென்மொழிக்குக் கேடில்லை;
எவ்வெவர் சூழினும் ஏதும் இடரில்லை;
ஆற்றல் குறையாமல் அம்மொழித்தாய் நின்றாலும்
ஏற்ற இடமின்றி ஏனோ தவிக்கின்றாள்?
சீர்மை குறையாமல் செம்மை சிதையாமல்
நேர்மை பிறழாமல் நின்றாலும் அம்மகளை
உற்றாரும் பெற்றாரும் உற்ற துணையாரும்
அற்றாரைப் போல அலையநாம் விட்டுவிட்டோம்;
கல்வி தருங்கோயிற் கட்டடத்துட் செல்வதற்குச்
செல்வி தயங்குகிறாள் செல்லும் உரிமையின்றி;
மூவேந்தர் ஆண்ட முறைதெரிந்தும் செங்கோலைத்
தாயேந்த இங்கே தடையுண்டாம்; அங்காடி
சென்றுலவ ஒட்டாமற் சேர்ந்து விரட்டுகிறோம்:
நின்றுமனம் ஏங்கி நிலைகலங்கச் செய்கின்றோம்;
பாட்டரங்கிற் சென்றிருந்தால் பைந்தமிழ் கேட்பதிலை
கூட்டுமொழிப் பாடல்களே கோலோச்சக் காண்கின்றோம்;
எங்கெங்கு நோக்கினும் இங்கே புகுந்தமொழி
அங்கங்கே ஆட்சிசெய் தார்ப்பரிக்கக் காண்கின்றோம்;
செம்மை யுறுமொழிக்குச் சீரில்லை பேரில்லை;
செம்மை யுறுமொழிக்குச் சீருண்டு பேருண்டு
பாலறியாப் பச்சைப் பகட்டு மொழிதனக்குக்
கோலுரிமை ஈயுங் கொடுமை நிலைகண்டோம்;
தாரமெனுஞ் சொல்லைத் தயங்காமல் ஆண்பாலாக்
கூறும் மொழியுண்டு; கொங்கை எனுமொழியை
ஆண்பா லெனவுரைக்க அஞ்சா மொழியுண்டிங்
காண்பா லிவனென் றறிய வுணர்த்துகிற
மீசை எனுஞ்சொல்லை மேதினியிற் பெண்பாலென்
றாசையுடன் பேசும் அழகு மொழியுண்டு;
செம்மை ஒருசிறிதுஞ் சேராச் சிறுமொழிக்கு
அம்ம எனவியக்க ஆக்கம் பலவுண்டு;
பண்டே திருந்தியநற் பண்புடனே சீர்த்தியையும்
கொண்டே இயங்கிவரும் குற்றமற நின்றொளிரும்
தூய்மொழியாம் தாய்மொழியைத் தொன்மைத் தனிமொழியைச்
சேய்மையில் தள்ளிவிட்ட சேயாகி நிற்கின்றோம்;
நற்றவத்தால் நம்நாடு நல்லோர்தம் கையகத்தே
உற்றமையால் அன்னை உறுதுயரம் நீங்குமினி;
எங்கெங்குந் தாய்மொழிக் கேற்றம் மிகக் காண்போம்
இங்கினிநம் செந்தமிழ்க்கோர் ஏறுமுகம் ஈதுறுதி
எங்குந் தமிழாகும் எல்லாந் தமிழாகும்
பொங்கும் இனிமேற் பொலிந்து.
கவியரங்கம் (தருமபுரம் திருமடம் 13.05.1968)