தாய்மொழி காப்போம்/மூன்று தமிழ் தோன்றியது
2. மூன்று தமிழ் தோன்றியது
கலி வெண்பா
நீர்நிறைந்து யாண்டும் நிலமொன்றுங் காணாமல்
பார்மறைந்து வெள்ளம் பரவிநின்ற தோர்காலம்;
அந்தப் புனல்குறைய ஆங்கிருந்த ஓங்குமலை
வந்து தலைகாட்டி வானோக்கி நின்றதைத்தான்
கற்றோன்றி மண்தோன்றாக் காலமெனப் பூவியலைக்
கற்றோர்தம் நூலிற் கணித்தார்கள்; மண்டிணிந்த
ஞாலத்தின் முன்தோன்றும் நீலப் பெருங்கல்லைக்
கோலக் குறிஞ்சியெனக் கூறி மகிழ்ந்தனர்; அவ்
வெற்பிடத்துங் காட்டிடத்தும் வேட்டம் பலபுரிந்து
கற்களிலே தீயெழுப்பிக் காலங் கடத்தியவன்
ஆடை யறியாமல் ஆசை புரியாமல்
வீடுந் தெரியாமல் வீரமட்டுந் தானறிவான்;
ஆதி மனிதனவன் அன்னான் கருத்துரைக்க
ஏதும் அறியாதான் எண்ணம் எடுத்தியம்பப்
பேசும் மொழியறியான் பிள்ளைநிலை யுற்றிருந்தான்;
பேச விழியுண்டு பேணும் முகமுண்டு
நீண்ட இரு கையுண்டு நெஞ்சிற் படுங்கருத்தை
வேண்டும் படிஎடுத்து விண்டுரைத்தான் சைகையினால்;
எண்ணம் பலித்துவிடின், எக்களிப்பு மீதூரின்
நண்ணும் உணர்ச்சியினால் நாடித் துடிப்பேறித்
துள்ளிக் குதித்தெழுந்து தோழனுக்குத் தன்கருத்தை
உள்ளக் கிளர்ச்சிதனை ஓதினான் சைகையினால்;
அந்தக் குறிப்பும் அவன்காட்டுஞ் சைகைகளும்
முந்திக் கலந்து முகிழ்த்தனகாண் கூத்தாக;
மற்றொருநாள் மாந்தன் மகிழ்ந்து குதித்துவந்தான்
உற்ற பெருங்களிப்போ உள்ளத்துப் பூரிப்போ
பெற்ற பெரும்பொருளோ பெண்காதற் கூட்டுணர்வோ
எற்றுக்கே ஆடினனோ என்ன நடந்ததுவோ
எப்படியோ ஒருணர்ச்சி இன்னதெனாப் பேருணர்ச்சி
அப்படியே உள்ளோடி ஆவி கலந்தெழுந்து
நாடிநரம் பெல்லாம் நடமாடச் செய்தோடிக்
கூடி மனத்தகத்திற் கூத்தாட்டம் ஆடியது;
கூத்தாடும் அவ்வுணர்ச்சி கூடி நிலைநிற்க
ஆற்றாமல் வாய்திறந்தே ஆர்ப்பரித்துக் கூவிவிட்டான்;
கூவுங் குரல்கேட்டான் கொண்டான் பெருவியப்பு;
கூவினான் மீண்டுங் குரலெடுத்துக் கூவினான்;
கோட்டிற் குயிலொன்று குக்குக்கூ என்றொலிக்கக்
கேட்டான் கிளைக்குயில்போற் கூவினான் வாய்குவித்தே;
ஒட்டி இருகுரலும் ஓரொலியாய்த் தொட்டிசைக்க
விட்டுவிட்டுக் கூவி விளையாடிக் கொண்டிருந்தோன்
கிட்டும் பெருமகிழ்வால் கொட்டினான் கையிரண்டும்
கொட்டினான் கூவினான், கூவின கொட்டினான்
கூவுதலுங் கொட்டுதலுங் கூடி இசையென்றும்
மேவிவருந் தாளமென்றும் மேதினியில் பூத்தனகாண்;
எண்ணுங் கருத்தை எடுத்துரைக்க அம்மாந்தன்
கண்ணசைத்தான் கையசைத்தான் காலங் கடந்துவரப்
பைய அவன் நாவசைத்தான்; பாலோ தெளிதேனோ
செய்ய ஒரு நற்கரும்பின் தீஞ்சாறோ என்னஒரு
சொன்மொழிந்தான் மீண்டுமதைச் சொன்னான், எதனாலோ
பன்முறையும் பன்னிப் பழகினான் அச்சொல்லை;
சொல்லிப் பழகுமொழி மெல்லத் தமிழாகி
இல்லைநிகர் என்ன இயலாய்க் கனிந்ததுகாண்;
இவ்வண்ணம் முத்தமிழாய் ஏற்றம் பெறுமொழியை
எவ்வண்ணம் ஏத்திப் புகழ்வோம்நாம்? அம்மொழியில்
கூத்தும் இசையுங் குறிக்கின்ற நூலெங்கே?
ஏத்தும் இயல்நூலில் ஏனையவை தாமெங்கே?
பாழுங் கடல்கோளும் பாவிப் பகைக்குலமும்
சூழுங் கொடுவினையால் சொல்லரிய ஏடுகள்தாம்
காணா தொழிந்தனவே; கண்மூடிக் கொள்கையினால்
மாணாச் செயல்செய்தோம் மற்றும் பல இழந்தோம்;
ஆடிப் பெருக்கிலிட்டோம் அந்தோ நெருப்பிலிட்டோம்
வேடிக்கை மாந்தர் விளையாட்டை என்னென்போம்!
அஞ்சியஞ்சிச் சாகாமல் ஆளடிமை யாகாமல்
எஞ்சியவை காப்போம் இனி.
(விருது நகர், செந்தில்குமார நாடார் கல்லுரிக் கவியரங்கம்)