உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்மொழி காப்போம்/வாகை கொள்வோம்

விக்கிமூலம் இலிருந்து

7. வாகை கொள்வோம்

மூன்றாம்நாள் முளைத்துவரும் இந்திப் பெண்ணே!
முனைகின்றார் உன்புகழைப் பரப்பிக் காக்க!
ஈன்றாளைக் காப்பதுமோர் கடமை யாகும்;
எங்களையும் ஈன்றெடுத்தாள் ஒருத்தி யுண்டே!
ஆன்றோரும் சொலற்கரிய காலங் கண்ட
அன்னையையும் காப்பதெங்கள் கடமை யன்றோ?
சான்றோர்கள் பழிக்கும்வினை செய்தல் வேண்டா
தடுமாறும் நின்புதல்வர்க் கிதனைக் கூறு!

புன்மக்கள் பெற்றெடுத்தாய் பழிசு மந்தாய்!
பொதுமகளா நினையாக்கத் துடித்தல் காணாய்!
நன்மைக்கே சொல்கின்றேன் கற்பைக் காக்க
நாடுவதே முறையாகும்; தீமை வந்த
பின்னுக்கு வருந்துவதிற் பயனே இல்லை;
பேசாதார் தலைவாயில் நுழைதல் நன்றோ?
நன்மக்கள் மனம்வருந்தப் புகுதல் வேண்டா
நாடுகிற கடைவாயில் நாடிச் செல்க!

முன்னமிரு முறைநீயே வந்த போது
முழுமூச்சோ டுனைத்தமிழர் எதிர்த்து நின்றார்;
என்னினத்தார் இருதோழர் உயிர்கள் தந்தார்.
ஏந்திழையார் துயருழந்தார் குருதி சிந்திப்
பன்னரிய கொடுஞ்சிறையுள் வீரர் புக்கார்,
பைந்தமிழைத் தாய்மொழியைக் காத்து நின்றார்;
இன்னுமிங்கு வன்முறையால் நுழைவா யென்றால்
எதற்கெடுத்தோம் இவ்வுடலம்? ஒருகை பார்ப்போம்.


வீடென்ன மனையென்ன மக்க ளென்ன
வீணுக்கு வாழ்வென்ன பதவி என்ன
நாடென்ன மொழியன்னை நலியும் போது?
நாமென்ன மரமென்று நினைந்தார் போலும்?
ஓடென்ன மெலிந்தென்ன? நரம்பி லெல்லாம்
ஓடுவது புண்ணீரா? செந்நீர் வெள்ளம்;
ஈடென்ன கண்டதுண்டு தமிழ்மொ ழிக்கே?
ஈந்திடுவோம் நம்முயிரை; வாகை கொள்வோம்.


(ஓடென்ன - ஓடுபோல)