தாய்லாந்து/2

விக்கிமூலம் இலிருந்து

2

அயோத்தி என்று பெயர்தானே தவிர, அங்கே ராமருக்குக் கோயில் இல்லை. ராமரின் நினைவாக வைத்த பெயர்தானாம்!

ஊரிலும்,ஊருக்கு வெளியிலும் புத்தர் கோயில்கள் ஏராளமாக உள்ளன. நாங்கள் ‘வாட்ஃப்ரா’ கோயிலுக்குப் போயிருந்தோம். மிகப் பெரிய ஆலயம். எல்.ஐ.ஸி. கட்டிடத்தைப் படுக்க வைத்தால் அது எவ்வளவு நீளம் இருக்குமோ அவ்வளவு தூரத்துக்கு புத்தர் கால் நீட்டிப் படுத்திருக்கிறார். ஒரு பிரதட்சணம் வந்தால் நம் கால்கள் வலிக்கின்றன. ஒரு சைக்கிள் இருந்தால் சுலபமாகச் சுற்றிப் பார்த்து விடலாம். புத்தர் நீளமாக ஒரு கோடிக்கு இன்னொரு கோடி படுத்திருப்பதால் ‘தோள் கண்டார் கால் காணார்! கால் கண்டார் தோள் காணார்!’ என்று சொல்லலாம். கோயிலுக்குப் பக்கத்திலேயே திறந்த வெளியிலும் ஒரு புத்தர் படுத்திருக்கிறார். அந்த புத்தரைப் பார்த்த போது எனக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் நினைவுக்கு வந்தார். ரங்கநாதரைப் பார்த்து இவர் படுத்துக் கொண்டாரா, அல்லது இவரைப் பார்த்து ரங்கநாதர் படுத்துக் கொண்டாரா தெரியவில்லை!

“அழகான சோலைகள் நிறைந்த இயற்கைச் சூழ்நிலையைக் கண்டால் யாருக்குத்தான் இளைப்பாறத் தோன்றாது? அயோத்தியும் ஸ்ரீரங்கமும் அத்தகைய இடங்களாயிற்றே! அதனால் ‘ஹாய்'யாகப் படுத்துவிட்டிருப்பார்கள்” என்றார் ஸ்ரீவே.

“இந்த புத்த விஹார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது” என்றார் ஹுமாயூன்.

“இல்லை; அறுநூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு” என திருத்தினேன் நான். முகத்தில் கேள்விக் குறியுடன் அவர் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார். 

“நான் மூன்று வருடங்களுக்கு முன் இங்கே வந்திருந்த போதும் அறுநூறு வருடம் என்று சொன்னீர்கள். இப்போதும் அறுநூறு என்கிறீர்களே மூன்றைக் கூட்டிச் சொல்லியிருக்க வேண்டாமா?” என்று கேட்டேன்.

யோத்தியை விட்டுப் புறப்படுமுன், “எங்காவது நதிக் கரையில் வேனை நிறுத்திச் சாப்பிடலாமா?” என்று கேட்டார் ஹுமாயூன். எங்கே பார்த்தாலும் தென்னையும், வாழையுமாகத் தஞ்சாவூர், ஸ்ரீரங்கம் மாதிரியே ‘குளுகுளு’ தோற்றம். படித்துறை ஒன்றைத் தேடிப் பிடித்தோம். கரையில் மிக உயரமான நாலுகால் மண்டபம். அங்கே வசதியாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு மரப்பலகைகள்.

நதியைக் கண்டதும், ஸ்ரீவேணுகோபாலன் சின்னக் குழந்தைபோல் ஓடிப் போய் படித்துறையில் இறங்கித் தண்ணீரைக் கால்களால் அளைந்து கொண்டிருந்தார். நாங்கள் ஏழெட்டு பேர் வயிறு முட்டச் சாப்பிட்டது போக மிஞ்சியதை, அங்கே வாலைக் குழைத்து நின்ற நாய்கள் பலத்த சண்டை சச்சரவோடு பங்கு போட்டுக் கொண்டன. “காகங்கள் ஒன்று கூடி ஒற்றுமையாகச் சாப்பிடும். நாய்கள் சண்டையிட்டுக் கொள்ளும்; நாமெல்லாம் காகங்கள் மாதிரி” என்றார் ஸ்ரீவே.

“அடாடா எவ்வளவு அமைதி! இப்படி ஓர் இடம் கிடைத்தது நம் அதிர்ஷ்டம்தான்” என்றேன்.

“இது ஒரு மயானம் ஸார் இது சாதாரண அமைதி அல்ல. மயான அமைதி என்று சொல்லுங்கள். இந்த ஊர்க்காரர்கள் கடைசியாக வந்து சேரும் இடம்!” என்றார் ஹுமாயூன்.

சாவோ ப்ரியா எனும் நதியின் அகல நீளம் அதிகம். பாங்காக்கின் மையப் பகுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. பெரிய பெரிய கப்பல்கள் இந்த ஆற்றில் நிற்கின்றன. நாங்கள் ஒரு படகு பிடித்து அந்த நதியில் சங்கமிக்கும் கிளைக்கால்வாய் ஒன்றில் பயணம் செய்தோம். அந்த இடத்தை மிதக்கும் கடைத் தெரு (Floating Market) என்று சொல்கிறார்கள்.

வாய்க்காலின் இரு புறங்களிலும் தேக்குமரத்தினாலான வீடுகள். படகில் போகும் போது அந்த வீடுகளின் பின்புறத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் தோட்டப்

பக்கத்தில் படித்துறை. அங்கங்கே படிகளில் துணி துவைக்கும் பெண்களைப் பார்க்கும்போது கேரள ஜாடை வீசுகிறது!

படகுகளில் வேகமாக நம்மைத் துரத்தி வரும் தாய்லாந்து சிறுவர்களும், சிறுமிகளும் வாழைப்பழம், இளநீர் மல்லி போன்றவைகளை வாங்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

எங்கள் படகோட்டி ஓரிடத்தில் படகை நிறுத்தி “இறங்குங்கள்; இங்கே தான் வாட் அரண் இருக்கிறது” என்றார். எண்ணிலாப் படிகள் பிரமிப்பைத் தந்தன. எனவே, படகில் இருந்தபடியே அந்தக் கோயிலைப் பார்த்து விட்டுத் திரும்பினோம்.

‘வாட் அருண்’ என்றால் சூரியனுக்குக் கோயில், ‘காலை நேரச் சூரியன்’ என்று கூறினார் படகுக்காரர்.

“காலை நேரச் சூரியனா? எனக்கு ரொம்பப் பிடித்த சூரியனாச்சே!” என்று மகிழ்ந்து போனேன்.

அயோத்தியில் ராமர் இல்லாதது போல் இங்கே சூரியன் கோயிலில் சூரியன் இல்லை. இங்கேயும் புத்தர்தான்! 'மிதக்கும் கடைத்தெரு'வில் ஒன்றிரண்டு கடைகளே மிதந்து கொண்டிருந்தன. மற்றக் கடைகள் எல்லாம் கரை ஓரங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. சின்னச் சின்னப் பொருட்களானாலும் கொள்ளை விலை. நம் ஊர் நரிக்குறவர்கள் விற்கும் பாசிமணி மாலைகள் இங்கே அமெரிக்க டாலர்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றன.

வடக்கே ‘சாங்மாய்’ மலைச்சரிவுகளில் வாழும் ஆதிவாசிகளைப் பார்க்க முடியாத டூரிஸ்ட்களுக்காக இங்கே கரையோரங்களில் அழகழகான ஆதிவாசிப் பெண்களைக் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அசல் ஆதிவாசிகளா, அல்லது அவர்களைப் போல் ‘மேக்அப்’ செய்து கொண்டவர்களா தெரியவில்லை. டூரிஸ்டுகள் அந்தப் பெண்களின் தோள் மீது கைபோட்டு நின்று படம் எடுத்துக் கொள்கிறார்கள். போட்டோகிராபர் ஸ்மைல் ப்ளிஸ் சொல்லத் தேவையில்லை. எப்போதும் சிரித்த முகம்!

நான் அங்கே இருந்தபோது தாய்லாந்து மன்னர் பூமிபால் அவர்களுக்கு அறுபத்தைந்தாவது பிறந்தநாள் விழா கொண்டாடிக் கொண்டிருந்தனர். புத்தகக் கடை ஒன்றில் எங்களுக்கு சாக்லெட் கொடுத்து, “இன்று ராஜா பிறந்த நாள்” என்று கூறியபோது, நாங்கள் அந்தக்கடைக்காரர், ராஜா இருவரையும் வாழ்த்தினோம்.

பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த தாய்லாந்தில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இப்போதுதான் நிலைமை சற்றே மாறி வருகிறதாம். ‘ஒரு நாட்டின், வளர்ச்சியை அந்த நாட்டின் பங்கு மார்க்கெட் எதிரொலிக்கும்’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால், அரசியல் நிலைமை சீரடைந்து வரும் தாய்லாந்தில் இப்போது பங்குமார்க்கெட் துருப்பிடித்துக் கிடக்கிறதென்றும் அடுத்த ஆண்டு சீர்பட்டு விடும் என்றும் சொல்கிறார்கள்.

ரோஸ் கார்டன் என்பது பாங்காக்கிலிருந்து 32 கிலோ மீட்டர் தூரத்தில் அறுபது ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு தோட்டம். இங்கு தாய்க்கிளிகளுடன் அசல் கிளிகளும் கொஞ்சிக் குலவுகின்றன. தாய்லாந்து கலாசாரத்தின் ஒரு ‘மினி’ தோற்றத்தையே இங்கு ‘கல்ச்சுரல் ஷோ'வில் பல்வேறு காட்சிகளைத் தத்ரூபமாய்ச் செய்து காட்டுகிறார்கள். வெளிநாட்டுக்காரர்கள் ஆவலோடு அங்கே நாள்தோறும் தேர்த் திருவிழா போல் வந்து கூடுகிறார்கள். கோழிச்சண்டை, கத்திச் சண்டை, குத்துச்சண்டை, யானைகளின் சாகசங்கள், தாய் நடனம், கிராமியப் பாடல், வீர விளையாட்டு என்று ஏகப்பட்ட அய்ட்டங்களைப் பரபரவென்று இரண்டே மணி அவகாசத்தில் நடத்தி முடிக்கிறார்கள்.

நிகழ்ச்சியின் க்ளைமாக்ஸ் ‘தாய்’ நாட்டுத் திருமணச் சடங்குதான்! தத்ரூபமாய் ஒரு கல்யாணத்தையே மேளதாளத்துடன் நடத்தி விடுகிறார்கள். திருமணத்தின்போது ஏழு ஸ்வரங்களுக்கும் தனித்தனியே ஏழுவாத்தியங்கள் வைத்து அவற்றை ஸப்த கன்னியர்கள் வாசிப்பது கண்ணுக்கும் காதுக்கும் இனிமைதரும் நிகழ்ச்சி!

முதலில் சீர்வரிசைகள் வருகின்றன. அப்புறம் புரோகிதர்கள் வருகிறார்கள். மணமக்களை மேடையில் உட்கார வைத்து மணமகள் தலையில் கொத்தாக நூல் செண்டு ஒன்றைச் சுற்றி நூலிழை அறுபடாமல் அப்படியே மணமகன் தலையில் சேர்த்துக் கட்டி விடுகிறார்கள். நம் நாட்டில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது போல அங்கே தலையில் நூலைக் கட்டுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்!

இங்கே நம்மூரில் கணவனுக்குக் கோபம் வந்தால், ‘உன்னை என் தலையில் கட்டி விட்டார்களே’ என்று அலுத்துக் கொள்வது உண்டல்லவா! அங்கே நிஜமாகவே தலையில் கட்டி விடுகிறார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்லாந்து/2&oldid=1058403" இலிருந்து மீள்விக்கப்பட்டது