உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்லாந்து/3

விக்கிமூலம் இலிருந்து

3

அந்தக் காலத்து ஆசைகள் எந்தக் காலத்திலாவது எப்போதாவது நிறைவேறும் போது நாம் அடையக் கூடிய மகிழ்ச்சிக்கும் பரவசத்துக்கும் இணை வேறெதுவும் இல்லை. அத்தகைய ஓர் அனுபவம் எனக்குத் தாய்லாந்து பயணத்தின்போது கிட்டியது.

உங்களில் எத்தனை பேர் அந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்களோ, தெரியாது... “த பிரிட்ஜ் ஓவர் த ரிவர்க்வாய்” என்றொரு மகத்தான ஆங்கிலப் படம் அந்தக் காலத்தில் சக்கைப்போடு போட்டது.

யுத்தக் கைதிகளைக் கொண்டு க்வாய் நதியின் மீது கட்டப்பட்ட ஒரு பாலத்தின் கதையைத்தான் ரயில் தொடர் போலவே நீளமாகப் பெயர் சூட்டிப் படமாகத் தயாரித்திருந்தார்கள். அந்த நீளமான பெயர் மீது எனக்கொரு காதலே பிறந்து என் மனதிலேயே நிலைத்து நின்று விட்டது.

‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது!’ என்றொரு தலைப்பை புஷ்பாதங்கதுரையிடம் சொல்லி அந்த தலைப்புக்குப் பொருத்தமா, தினமணி கதிரில் தொடர் கதை எழுதச் சொன்னேன். ‘The Bridge over the River Kwai’. என்ற அந்த நீண்ட பெயரின் பாதிப்புதான் இதற்குக் காரணம்.

இப்படி ஒரு பாலம் உண்மையிலேயே தாய்லாந்தில் இருக்கிறது என்றும், அங்குதான் அந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது என்றும் அறிந்தபோது அந்த இடத்தை ஒருமுறை போய்ப் பார்த்து விட வேண்டுமென நந்தன் சிதம்பர தரிசனத்துக்கு ஆசைப்பட்டதுபோல் பேராவல் கொண்டிருந்தேன். அந்த ஆசை அண்மையில்தான் நிறைவேறியது. அங்கே போய் விசாரித்த போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு அங்கே நடத்தப்பட

வில்லையென்றும் படப்பிடிப்புக் குழுவினர் அந்தப் பாலத்தைப் பல கோணங்களில் போட்டோ எடுத்துக் கொண்டு போய் அச்சாக அது போலவே இலங்கையில் ஒரு ‘செட்’ போட்டு முடித்து விட்டார்கள் என்றும் சொன்னார்கள்.

க்வாய் பாலம் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகவே இருந்தது. ஆயினும் அதன் சரித்திரப் பின்னணி மிகமிக பயங்கரமானது. காஞ்சனபுரிக்கு நாலு மைல் தூரத்தில் உள்ள க்வாய் பாலத்தைக் காண நாங்கள் ஒரு ‘ஜமா'வாகப் புறப்பட்டோம். பாங்காக்கிலிருந்து 129 கி.மீ. தூரம் பயணம் செய்து வடமேற்கு திசையில் உள்ள காஞ்சனபுரியை அடைந்தபோது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. எதிர்பார்த்த பிரமிப்போ வியப்போ இல்லை.

யூனிபார்ம் அணிந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் அதன் மீது ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் போல் எனக்கும் அதன் மீது நடக்க வேண்டும் போல் இருந்தது. நடந்தேன். அப்படி நடக்கும் போது இதன் பின்னணியான சரித்திர நிகழ்ச்சிகள், ரயில் ஓடும் போது மரங்களும் மலைகளும் வேகமாய் எதிர் நோக்கி ஓடுமே, அந்த மாதிரி என் கண் முன் ஓடின.  1941 ம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் தேதி அதிகாலை நான்கு மணி. தாய்லாந்து வழியாகப் புகுந்து பர்மாவைக் கைப்பற்ற வேண்டும் என்கிற ஒரு பெரிய திட்டத்துடன் ஜப்பானியப் படைகள் இந்த காஞ்சனபுரிப் பகுதியில் புகுந்து முகாமிட்டன.

தாய்லாந்து ராணுவம் ஜப்பானியரின் ஊடுருவலை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? ஜப்பானியரை எதிர்த்துப் பெரும் போர் நிகழ்த்தியது. காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து நடந்த இந்தப் போரில் நாற்பது ஜப்பான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் தாய் ராணுவத்திலும் பலர் உயிரிழந்தார்கள் என்றும் கய்டு சொன்னார்.

ஜப்பான் ராணுவத்தின் நோக்கம் பர்மாவைக் கைப்பற்றுவதுதானே தவிர தாய்லாந்தைப் பிடிப்பது அல்ல என்று உறுதியாகத் தெரிந்ததும், சரி, போய்க்கோ என்று ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு ஜப்பானியருக்கு வழிவிட்டது தாய்லாந்து.

சண்டை நடந்து கொண்டிருந்த போதே பர்மாவையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாதை ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது ஜப்பான். தினமும் மூவாயிரம் டன் தளவாடங்களை சப்ளை செய்யும் அளவுக்கு பாதுகாப்பான ஒரு பாதையை அமைக்க வேண்டும். இதுதான் ஜப்பானின் திட்டம். கடல் மார்க்கமாகப் போனால் நேச நாடுகளின் சப்மரின்கள் சும்மா விடாது என்பது ஜப்பானுக்குத் தெரிந்திருந்ததால் இந்த ரயில் பாதை திட்டத்தை மேற் கொண்டது அது.

எனவே, தாய்லாந்தில் தொடங்கி மலைக் காடுகள் வழியாக ரயில் பாதை ஒன்றை அமைத்து அந்த வழியாக பர்மாவை இணைத்துவிட வேண்டும் என்ற தங்கள் திட்டத்தை மின்னல் வேகத்தில் செயல்படுத்தத் தொடங்கியது.

பொறிஇயல் நிபுணர்கள் வந்து பார்த்து விட்டு, ‘இந்த ரயில் பாதையை முழுவதுமாக அமைத்து முடிக்கக் குறைந்த பட்சம் ஆறு வருடங்களாவது ஆகும்’ என்று சொல்லி விட்டார்கள்.

ஆனால் ஜப்பானிய ராணுவத்துக்கோ அதுவரை காத்திருக்கப் பொறுமையில்லை. ஆயிரக் கணக்கான போர்க் கைதிகள் தங்களிடம் அடிமைகளாக இருக்கும் போது இந்த வேலையை விரைவிலேயே முடித்து விடலாம் என்று அது கருதியது.

அவ்வளவுதான்; அங்கங்கே காவலில் வைக்கப்பட்டிருந்த போர்க் கைதிகளை ஆடுமாடுகள் போல் அவசரம் அவசரமாக இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள். ஆசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் போர்க் கைதிகளைக் கொண்டு வந்து ரயில் பாதைக்கு வேண்டிய கல்லையும், மண்ணையும், இரும்பையும் அவர்கள் தலையிலும் முதுகிலும் ஏற்றினார்கள். கல்லிலும் முள்ளிலும் கால்கடுக்க நடக்க வைத்தார்கள். போதிய உணவும் ஓய்வும் இல்லாத காரணத்தாலும், கடுமையான உழைப்பாலும் அந்த வீரர்களில் பலர் நாளொரு எலும்பும் பொழுதொரு தோலுமாக மாறிச் செத்து மடிந்தார்கள். சுகாதாரமற்ற சூழ்நிலை, அடி உதை, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கைதிகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை.

தாய்லாந்து பகுதியிலும் பர்மா பகுதியிலும் சேர்ந்து மொத்தம் நானூற்றுப் பதினைந்து கி.மீ. தூரம் நீண்டுள்ள இந்த ரயில் பாதையைப் பதினெட்டே மாதங்களில் போட்டு முடித்தனர்.

”உயிரிழந்த வீரர்கள் எத்தனை பேர் இருக்கும்?” என்று விசாரித்தேன்.

”இந்த ரயில்பாதைக்குப் போடப்பட்டுள்ள ஸ்லீப்பர் கட்டைகள் எத்தனையோ அத்தனை பேர்” என்று ஒரு கணக்குச் சொன்னார் கய்டு.

”மொத்தம் போடப்பட்டுள்ள ஸ்லீப்பர் கட்டைகள் எத்தனை?”

”எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்களோ, அத்தனை கட்டைகள்” என்றார் கய்டு!

ரயில் பாதை அமைக்கப்பட்ட போது க்வாய் நதி குறுக்கிட்டதால் அதன் மீது ஒரு பாலம் கட்ட வேண்டியதாயிற்று.

முதலில் தற்காலிகப் பாலமாகத்தான் அதைக் கட்டி முடித்தார்கள். அப்புறம் நிரந்தரமாகக் கட்டப்பட்ட பாலம்தான் இப்போது அந்த அப்பாவி ராணுவப் போர்க் கைதிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது.

ந்தப் பாலத்தைச் சுற்றிலும் ஏராளமான டுரிஸ்ட் பஸ்களும் ஓட்டல்களும் கடைகளும் சூழ்ந்து நிற்கின்றன. ஐம்பது வருடங்களுக்கு முன் அந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகிறது.

ஒரு மரத்தடி நிழலில் உட்கார்ந்து அந்தப் பாலத்தை ‘ஸ்கெச்’ செய்து கொண்டிருந்தார் வெளிநாட்டு ஆர்ட்டிஸ்ட் ஒருவர். அதைச் சிறிது நேரம் வேடிக்கை பார்த்து முடிந்ததும், “சரி, எல்லாம் பார்த்தாச்சு; போக வேண்டியதுதானே?” என்று கேட்டேன் ஸ்ரீ வேணுகோபாலனிடம். அவர் தயங்கினார்.

பாலத்துக்குச் சற்று தூரத்தில் சாதுவாக ஒரு ரயில் என்ஜின் நின்று கொண்டிருந்தது.

காமிராவும் கையுமாக அலைந்து தம்முடைய சரித்திரக் கதைக்கு வேண்டிய ஆதாரங்களைப் புகைப்படமாக எடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீவே “ஒரு நிமிடம், இதோ போய் அந்த என்ஜினை எடுத்து வந்துவிடுகிறேன்” என்றார். போனவர் ரொம்ப நேரமாகியும் திரும்பவில்லை. ”என்ஜினைப் படம் எடுத்து வருகிறேன் என்று போனவர் என்ன ஆனார்?” என்று கவலைப்பட்டேன் நான்.

“ஒருவேளை என்ஜினையே தூக்கி எடுத்துக் கொண்டுவரப் போகிறாரோ என்னவோ!” என்றார் ராணிமைந்தன்.

தினமும் மாலை நான்கு மணிக்கு அந்த என்ஜின் இந்தப் பாலத்தின் மீது ஒருமுறை போய்த் திரும்புவது வழக்கம் என்றும், சரித்திரத்தை சற்றே ஞாபகப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தச் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு தகவலைச் சொன்னார் கய்டு.

ந்த ரயில் பாதையை ‘டெத் ரெயில்வே’ என்று அழைக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களைக் கபளீகரம் செய்த அந்தப் பாலத்துக்கு இதைவிடப் பொருத்தமான பெயர் வேறு என்ன இருக்க முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்லாந்து/3&oldid=1058404" இலிருந்து மீள்விக்கப்பட்டது