தாய்லாந்து/6
“தமிழ் நாட்டுக்கு வருகிறவர்கள் ஊட்டி பார்க்காமல் போனால் எப்படியோ, அப்படித்தான் தாய்லாந்துக்குப் போகிறவர்கள் ‘சாங்மாய்’ பார்க்காமல் திரும்புவதும்” என்றார் நண்பர் ஹுமாயூன்.
“ சங்மாய்க்கு எப்படிப் போவது?” என்று கேட்டேன்.
“ பஸ் ரொம்ப வசதியாக இருக்குமே!” என்றார்.
“ பஸ்ஸிலா?”
“ஆமாம்; இங்கே டூரிஸ்ட் பஸ்களில் நீங்கள் பயணம் செய்து பார்த்ததில்லையா? ஒரு முறை போய்ப் பாருங்கள்” என்று சொல்லி, நாங்கள் போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
அது ஒரு ஏர்கண்டிஷன் லிமோஸின் பஸ் என்று சொல்லி அதை அவமானப்படுத்தக் கூடாது. தரையில் பறக்கும் குட்டி விமானம் என்று சொல்ல வேண்டும். விமானப் பணிப்பெண் போலவே சீருடை அணிந்த பணிப் பெண் ஒருத்தி அந்த பஸ்ஸுக்குள் பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு இருக்கையும் சரியாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தாள். ஏ.ஸி.யின் இதத்தை அளவு பார்த்தாள்.
பஸ் கிளம்பியதும் வாசனை வெந்நீரில் ஊறிய துல்லிய மானதும்பைப் பூ போன்ற துணிச் சுருள் ஒன்றை தட்டில் ஏந்தி வந்து பயணிகளுக்குக் கொடுத்தாள். அதை சுடச் சுட முகத்தில் வைத்துத் துடைத்த போது இதமாக இருந்தது.
கைப்பிடியிலுள்ள பட்டனை அழுத்தினால் தலைப்பக்கம் தரையை நோக்கி முக்கால் பாகம் தாழ்ந்து கிட்டத்தட்ட படுக்கை போலாகி விடுகிறது.பணிப்பெண் அட்டைப் பெட்டியில் கொடுத்த ஸ்வீட், ஆப்பிள் பழம், லேசாக வறுக்கப்பட்ட கோழி இறைச்சித்துண்டு!
பணிப் பெண்ணை அழைத்து, “ஸாரி... நான் வெஜிடேரியன்” என்றேன்.
அவள் கொஞ்சம் கூடப் பதட்டப்படாமல், “ அப்படியா! நோப்ராப்ளம்! இதோ இப்போதே உங்கள் உணவைச் சைவமாக மாற்றி விடுகிறேன்” என்றவள் அந்த இறைச்சித் துண்டைத் தனியாக எடுத்துக் கொண்டு “நெள இட் இஸ் வெஜிடேரியன்” என்றாள்.
பஸ்ஸின் தாலாட்டிலும் போர்வையின் அரவணைப்பிலும் சுகமான தூக்கம் கண்ணைச் சுழற்றியது. விடியும் போதுதான் தூக்கம் கலைந்தது. கீழ் வானம் செவ்வரிகள் தீட்டியிருந்தன.
மீண்டும் வாசனை டவல் கூடவே சுடச்சுட காப்பி!
கிட்டத்தட்ட எழுநூற்றைம்பது கிலோ மீட்டர் தூரம் பயணித்த அலுப்பே தெரியவில்லை. சங்மாயில் இறங்கியதும் எங்கள் பெயர்கள் எழுதப்பட்ட அட்டையைக் கையில் எத்திக் கொண்டு நின்றிருத்தாள் இன்னொரு தாய்லாந்து அழகி. எங்களை வரவேற்று ஒரு காரில் அழைத்துச் சென்றாள்.
“இப்போது நாம் பாரடைஸ் கஸ்ட் ஹவுஸ் போகிறோம். அங்கேதான் குளியல், காலை உணவு எல்லாம். அப்புறம் முக்கிய இடங்களைப் பார்க்கப் போகிறோம்” என்று அவள் அறிவித்துக் கொண்டிருந்தபோதே கஸ்ட்ஹவுஸ் தெருங்கிவிட்டது.
மெதுவாக என்று தாய்லாந்தில் எந்தக் காரியமும் நடப்பதில்லை. எல்லாமே வேகம்தான்.
காரைவிட்டு இறங்கி கஸ்ட் ஹவுஸ் ரிஸப்ஷன் ஹாலுக்குள் போவதற்குள் அந்தப் பெண்மணி எங்கள் அறையின் சாவியைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் ரெடியாகிக் கீழே வந்தபோது வெள்ளைக்காரர் போல ஒருவர் எங்களை நோக்கி வந்து கை குலுக்கினார்.
“நான் சொம்பட். உங்கள் கய்டு. போவோமா” என்றார்.
இப்போது அவரே டிரைவர்.
காரில் போகும்போது நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி: “உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்”
“மேங்கோல் சொம்பட். சிலர் சுருக்கமாக ‘ஸாம்’ என்றும் அழைப்பார்கள்.”
“ தமிழில் சம்பத் என்பது போல ஒலிக்கிறது அல்லவா!” என்றார் ஸ்ரீவே. எங்கேயாவது இதுபோன்ற சொற்களைக் கேட்டால் உடனே ஆராய்ச்சியில் இறங்கி விடுவார் அவர்.
“என்ன சொல்கிறார் உங்கள் நண்பர்?” என்று ஸ்ரீவேணு கோபாலனைச் சுட்டிக் காட்டிக் கேட்டார் கய்டு.
“எங்கள் ஊரில் சம்பத் என்று பெயர் உண்டு. உங்கள் பெயரும் கிட்டத்தட்ட அது மாதிரி ஒலிக்கிறது. சம்பத் என்றால் தமிழில் ‘செல்வம்’ என்று பொருள்” என்று சொன்னேன்.
அவர் முகம் பிரகாசமாயிற்று!
“உங்களுக்குத் தெரியுமா?” எங்கள் தாய்லாந்து மொழியிலும் சம்பட் என்றால் கிட்டத்தட்ட அதே அர்த்தம்தான்” என்றார் அவர். எங்கள் முகம் பிரகாசமாயிற்று!
தாய்லாந்து மொழியில் நிறையத் தமிழ்ச் சொற்கள் கலந்து கிடப்பதை எங்கள் பயணத்தின் போது தெரிந்து கொண்டோம்.
சொம்பட் பூனாவில் சில ஆண்டுகள் படித்தாராம். பிறகு பெங்களூரில் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் சொன்னார்.
சங்மாய் என்ற பெயரைச்சரியாகச் சொல்வதானால் ‘சியாங் மய்’ என்றுதான் உச்சரிக்க வேண்டுமாம். தாய்லாந்தின் வடக்குப்பகுதியில் உள்ள மிக முக்கியமான நகரம். ‘வடக்கின் ரோஜா’ என்று அதை வர்ணிக்கிறார்கள். அங்கு வாழும் பெண்களின் மேனியும் அப்படித்தான் இருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி உயரம். சில்லென்ற குளிர் நம்மைக் கவ்விப் பிடிக்கிறது. பல்வேறு பட்சிகளின் இனிய இங்கிலீஷ் ‘நோட்'டுகள்.
இயற்கையோடு ஹாயாக உறவாடி அதன் அழகை ரசிக்கிறோம். தூய்மையை சுவாசிக்கிறோம்.
தாய்லாந்து ஸில்க், நுணுக்கமான வேலைப்பாடுகள் மிக்க வெள்ளிச் சாமான்கள், அழகு விசிறிகள், வண்ணக் குடைகள் எல்லாமே உலகப் பிரசித்தம்.
குடைகளின் கம்பிக் கூரையில் துணிகளைப் பதித்து அவற்றின் மீது தூரிகையால் வெவ்வேறு டிசைன்களில் பூக்கள் வரையும் பெண்களின் கைவிரல் வேகத்தை நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
ஓரிடத்தில் காரை நிறுத்தினார்கள். “தாய்லாந்து ஸில்க்குக்கு உலகமெங்கும் ஏக டிமாண்ட். பட்டு தயாரிக்கும் தொழிலில் இங்கே பல குடும்பங்கள் ஈடுபட்டிருக்கின்றன. அவற்றில் மிகத் தொன்மையான குடும்பம் வசிக்கும் ஒரு வீட்டின் வாயிலில்தான் இப்போது நின்று கொண்டிருக்கிறோம். உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு வாசலிலேயே நின்று விட்டார் சொம்பட்.
பட்டுப் பூச்சிகளைக் கொதி வெந்நீரில் போடுவதில் தொடங்கி, பட்டுத்துணியில் டிசைன் போடுவது வரை அவ்வளவையும் அந்த வீட்டுக்குள் ஒரு கண்காட்சி போலப் பார்க்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி அல்ல இது. ஒரு குடும்பத்தின் தினசரி நடவடிக்கையையே இப்படி கண்காட்சியாக்கி இருக்கிறார்கள்.
முகத்தில் சுருக்கம் நிறைந்த பாட்டியிலிருந்து பழம் போல் அழகு மேனியுடன் காணப்பட்ட கொள்ளுப்பேத்திவரை ஆளுக்கொரு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரோடும் பேசுவதில்லை. இம்மாதிரி குடும்பங்கள் சங்மாய் முழுதும் மண்டிக் கிடக்கின்றன. ஸில்க்கில் மலர்கள், பர்ஸ், போட்டோஃப்ரேம், பூக்கூடை காலணி, கைப்பை, என்று என்னென்னவோ கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் வீடுகள்.
இவர்கள் உழைக்கும் அளவுக்குப் பணம் சம்பாதிக்க முடிவதில்லையாம். எனவே இங்குள்ள விவசாயிகள், நெசவுத் தொழில் செய்யும் குடும்பங்களுக்குக் கடன் சுமை அதிகமாகி தங்கள் வீட்டு இளம் பெண்களை பாங்காக் போன்ற பெரிய நகரங்களுக்கு அனுப்பிவிடுகிறார்களாம். அப்படிப் போகும் இந்தப் பெண்கள் சில காலம் பாங்காக்கில் தங்கிப் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து கடனை அடைக்கிறார்களாம்.
“அங்கே அவர்களுக்கு என்ன வேலை?” என்று சொம்பட்டிடம் கேட்டேன்.
“உலகின் மிகப் பழமையான தொழில்தான்” என்று கண் சிமிட்டிய சொம்பட் கொஞ்சம்கூடக் கூச்சமின்றி அது என்ன தொழில் என்பது பற்றி யதார்த்தமாகச் சொன்னார்.
அதை ஜீரணித்துக் கொண்டு அடுத்த கேள்வி கேட்க எனக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன.
“இவர்கள் இப்படிச் சீரழிந்து போவது வீட்டுக்குத் தெரியுமா?”
“தெரியுமாவது? பெற்றோர்கள்தானே வழியனுப்பி வைக்கிறார்கள்! தாய்லாந்தில் செக்ஸ் என்பது ஒரு பாவத் தொழில் அல்ல” என்றார் சொம்பட்.