தாய்லாந்து/7

விக்கிமூலம் இலிருந்து

7

 ”ளம் பெண்கள் பணம் சம்பாதிக்க பாங்காக் போவது வடக்கிலிருந்து மட்டும்தானா, இல்லை...” என்று இழுத்தேன்.

”இதில் வடக்கு, கிழக்கு, என்றெல்லாம் கிடையாது. வறுமை என்று வந்து விட்டால், அவர்கள் எந்தப் பகுதியிலிருந்தாலும் போக வேண்டியதுதானே! எனக்குத் தெரிந்த இரண்டு குடும்பங்கள் இப்போது இங்கே சங்மாயில் குடியேறியுள்ளனர். அவர்கள் பக்கத்து கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய பெண்கள் கூட பாங்காக் போயிருப்பவர்கள்தான். அந்தக் குடும்பத்தினரைப் பார்த்து விவரமாகப் பேசலாம். வருகிறீர்களா?” என்று கேட்டார் சொம்பட்.

”இப்போதே போகலாம்” என்று புறப்படத் தயாரானோம் நாங்கள்.

”மரச் சாமான்கள் நிறுவனம் ஒன்றைப் பார்க்க இப்போது நாம் போகப் போகிறோம். அதற்கு முன்பாக வழியில் இவர்களைப் பார்த்துவிட்டுப் போய்விடலாம்” என்றார் சொம்பட்.

”மரக்கடையில் நமக்கென்ன வேலை?” என்றேன்.

”அது சாதாரண மரக்கடை அல்ல. மிகப் பெரிது. மரத்தில் அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். கலை அழகு மிக்க சிற்ப வேலைப்பாடுகள்!” என்றார் சொம்பட்.

முதலில் உசன் டவுட்டா என்பவர் தங்கியிருந்த வீட்டுக்குப் போனோம். அங்கே உசன் டவுட்டாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சொம்பட்.

மெலிந்த தேகம். லேசாகச்சுருக்கங்கள் விழுந்துள்ள முகம். உசன் டவுட்டா சட்டென்று எங்களுடன் பேச உடன்பட

 வில்லை. கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தார். கல்லில் நார் உரிக்க வேண்டும் போலிருந்தது.

சொம்பட் அவரோடு சற்று நேரம் ஏதோ கிசுகிசுத்து விட்டு என்னிடம் வந்தார்.

“என்னவாம்?” என்றேன்.

“என் குடும்பத்தைப் பற்றி இவர்கள் எதற்காக விசாரிக்கிறார்கள் என்று சந்தேகமாய்க் கேட்கிறார்” என்றார் சொம்பட்.

“நீங்கள் அதற்கு என்ன பதில் சொன்னீர்கள்?”

“அவர்களெல்லாம் இந்தியாவிலிருந்து வந்துள்ள பத்திரிகைக்காரர்கள். இங்கே நமது வாழ்க்கை முறை, கலாசாரம் பற்றி யெல்லாம் எழுதப் போகிறார்கள். இவர்களிடம் சொல்வதில் தப்பில்லை என்று நான் தெளிவுபடுத்தி விட்டு வந்திருக்கிறேன். நீங்கள் போய்ப் பேச ஆரம்பித்தால் சரியாகி விடுவார்” என்றார்.

முகத்தில் சிரிப்பு காட்டாமல் சிறிது நேரம் இறுக்கமாகவே இருந்தார் டவுட்டா. (ரொம்பவும் பொருத்தமான பெயர்தான். எங்களைப் பற்றிக் கடைசி வரை ‘டவுட்டா’கவே இருந்தார்) முதலில் எங்கள் கேள்விகளுக்குத் தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தார். அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பேசத் தொடங்கினார்.  “நீங்கள் எதற்காக கிராமத்தை விட்டு சங்மாய்க்கு வந்திருக்கிறீர்கள்?” என்ற பேச்சைத் துவக்கினேன்.

“சும்மாத்தான் வந்திருக்கிறேன். இப்போது இங்கே குடைத் திருவிழா நடக்கிறது. அதையும் பார்த்தாற் போலிருக்கும் என வந்திருக்கிறேன்” என்றார்.

‘குடைத் திருவிழாவா அதென்ன?’ என்பது போல நாங்கள் வியக்க, “அதை நாமும் பார்க்கலாம். முதலில் இவரிடம் பேசி முடியுங்கள்” என்றார் சொம்பட்

உசன் டவுட்டாவின் குடும்பத்தில் எத்தனை பேர்? என்ன தொழில்? நெசவா? விவசாயமா? என்றெல்லாம் கேட்டபின் கடைசியாக “உங்கள் மகள் பாங்காக் போயிருக்கிறாளாமே...?” என்றேன்.

லேசாகத் தலையசைத்து விட்டுச் சற்று நேரம் மெளனம்.

“எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான். அங்கே ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கிறாள்” என்றார்.

“ஹோட்டலில் என்ன வேலை?”

“ஹோட்டல் என்றால் ‘எல்லாம்'தான்” என்றார். அந்த ‘எல்லாம்’ என்ற சொல்லில் எல்லாமே அடக்கம்!

“உங்கள் சம்மதத்துடன்தான் அவள் போனாளா?”

“எங்கள் கிராமப் பகுதியில் வறட்சி. நிலமெல்லாம் வெடித்த விட்டது. விளைச்சல் இல்லாத காரணத்தால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. அதிகாரிகள் மிரட்டலுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. பசி, பட்டினி என்று வாடினோம். நாங்கள் படும் துன்பங்களைப் பார்க்கச் சகிக்காமல்தான் என் மகள் ‘தெற்கே’ போய் சம்பாதிக்கப் போவதாய்ப் பிடிவாதம் பிடித்தாள்.”

“தனியாகவா?”

“இன்னும் சிலபெண்களும் போயிருக்கிறார்களே!”

“அவர்களுக்கு அங்கே யாரையாவது தெரியுமா?”

“தெரியாது. புரோக்கர் அழைத்துப் போயிருக்கிறார்.”

“புரோக்கரா? ஆணா, பெண்ணா?”

“பெண்தான்."
ஹுமாயூன்

“அவள் ஏதாவது பணம் கொடுத்தாளா?”

“பதினைந்தாயிரம் பாட் இங்கேயே கொடுத்து விட்டுப் போய்விட்டாள்.“

“அப்படியானால் நீங்கள் உங்கள் பெண்ணைக் காசுக்கு விற்றிருக்கிறீர்கள். அப்படித்தானே?”

உசனின் முகம் சிவந்து, கோபம் தெரிந்தது.

“இன்னொரு தரம் இதுபோல் சொல்லாதீர்கள். நான் என் பெண்ணை விலை பேசவில்லை. எங்கள் குடும்ப நிலை கண்டு மனம் பொறுக்காமல் அவளே எடுத்த முடிவு இது. நான் வேண்டாமென்று தடுத்திருந்தாலும் அவள் என் பேச்சைக் கேட்டிருக்க மாட்டாள். வீட்டை விட்டே ஓடியிருப்பாள். வேறு வழி இல்லாமல்தான் நானும் சம்மதித்தேன்." 

ஆக, கிளார்க் போல, டைப்பிஸ்ட் போல, நர்ஸ் வேலை பார்ப்பது போல தாய்லாந்தில் விபசாரமும் கிட்டத்தட்ட சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக கருதப்படுவது எனக்கு வியப்பாயிருந்தது.

டுத்தாற்போல் நாங்கள் சந்தித்து குவான் சுயாங்கான் குடும்பம். கிட்டத்தட்ட உசன் குடும்பத்துக் கதை போலவே தான்.

அவர்கள் கிராமத்திலிருந்து ‘பாங்காக்’ போன முதல் பெண் குவானின் மகள்தானாம்.

உசன் டவுட்டா மாதிரி இவர் தயக்கம் காட்டவில்லை. சற்று வேகமாகவே பேசினார். தீரமான குரல்.

“என்னால் வெளியே தலை காட்டவே முடியவில்லை. கண்டபடி என்னைத் தூற்றினார்கள். வெகு காலம் நான் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தேன். பின்னர் என் மகள் பாங்காக்கிலிருந்து பணம் அனுப்ப அனுப்ப, என்னைத் தூற்றியவர்களெல்லாம் இப்போது மனம் மாறி என்னோடு பழையபடி பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.

“உங்கள் மகள் பற்றி அவர்கள் இப்போது கமெண்ட் ஏதும் அடிப்பதில்லையா?”

“எப்படி அடிக்க முடியும்? அவர்கள் வீட்டுப் பெண்களும் தான் இப்போது பாங்காங் போய்விட்டார்களே!“சிரித்தார்.

“நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

“இப்போது எங்கள் கிராமத்தில் இளம் பெண்கள் யாருமே கிடையாது. எல்லோருமே பாங்காக் போய் விட்டார்கள். அது மட்டும் அல்ல. கிராமத்துக் கூரை வீடுகள் எல்லாம் இப்போது மாடி வீடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. எல்லாம் பாங்காக் பணம்“

தன் மகளைப் பற்றி இப்படி வெளிப்படையாகவே விமரிசிக்கும் பெற்றோர்களை நான் சங்மாய் நகரில் தான் பார்த்தேன்.

துதான் சியாங்மாய் சுதாலக் கம்பெனி. உள்ளே போய்ப் பாருங்கள் என்று எங்களை ஓரிடத்தில் இறக்கிவிட்டு ஒரு ‘தம்’ பற்ற வைத்துக் கொண்டார் சொம்பட்.  கலையழகு பொருந்திய மரச் சிற்பங்களைப் பெரும் அளவுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனம் சுதாலக் கம்பெனி.

முகம் பார்த்துத் தலைவாரிக் கொள்ளும் அளவுக்கு மரத்தில் அப்படி ஒரு பாலிஷ்!

கைவிரல்களின் மந்திர வித்தைகள்!

பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கோடீசுவரர்கள் இங்கே வந்து தங்கள் வீட்டுக்கு வேண்டிய மரச்சாமான்களை ஆர்டர் கொடுத்து விட்டுப் போகிறார்கள்.

சங்மாய்க்காரர்கள் மரச் சாமான்களில் மட்டும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டவில்லை. சங்மாய் முழுவதும் பரவியுள்ள தொழில் கூடங்கள் பலவற்றிலும் கலைவண்ணம் கொட்டிக் கிடக்கிறது.

என் மனமெல்லாம் சற்று நேரம் முன்பாக உசன் டவுட்டா குறிப்பிட்ட குடைத் திருவிழா பற்றியே இருந்தது.

“அடுத்து?...“ என்று நான் இழுத்தேன்.

“குடைத் திருவிழா!” என்று கய்டு கூறியதும் மகிழ்ச்சி தாங்கவில்லை.

திருவிழா என்றால் ஏதோ கோயில் சாமி - ஊர்வலம் என்றெல்லாம் எதிர் பார்க்காதீர்கள். குடைகளுக்குத் தரப்படும் மரியாதைக்கு அவற்றை உருவாக்கும் கை விரல்களின் கலைத் திறமைக்கு ஒரு விழாவாக இதைக் கொண்டாடுகிறார்கள். கண்ணில்படும் இடமெல்லாம் குடைகள்தான்! கடைகளில், பெட்ரோல் பங்குகளில், ஹோட்டல் வாசலில் இப்படி எங்கே பார்த்தாலும் குடைகள்தான்.

“இந்தக் குடைகள் மழை வெயிலுக்குப் பயன்படுமா?”

“சாதாரண குடைகளைப் போல இவற்றை மடக்கவோ, விரிக்கவோ முடியும். துணிக் குடைகள்தான். ஆனால், மழையிலும் வெயிலிலும் இவற்றைக் கொண்டு போய் - அதன் மேல் உள்ள வண்ணங்களையும் ஓவியங்களையும் - பாழாக்க யாருக்கும் மனம் வராது. பெரும்பாலும் வரவேற்பு அறைகளில் அலங்காரப் பொருளாகத்தான் இதை வைத்திருப்பார்கள்” என்றார் சொம்பட்.

“கவர்ச்சி எப்போதும் கவைக்கு உதவாது என்பார்கள். இந்தக் குடையும் அப்படித்தான்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்லாந்து/7&oldid=1058408" இலிருந்து மீள்விக்கப்பட்டது