உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்/21

விக்கிமூலம் இலிருந்து

21

வாழ்க்கை அதிவேகமாகக் கழிந்து சென்றது. பற்பல சம்பவங்கள் நிறைந்து துரிதமாக, நாட்கள் போவதே தெரியாமல், காலம் கழிந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய செய்தியைக் கொண்டு வந்தது. ஆனால் தாய் அவற்றைக் கேட்டுத் திடுக்கிடவில்லை. அவளுக்கு அவை பழகிப்போய்விட்டன. அவளது வீட்டுக்கு மேலும் மேலும் இனந்தெரியாத புதிய நபர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மாலை நேரங்களில் வந்து அந்திரேயோடு ஆர்வமும் அடக்கமும் நிறைந்த குரல்களில் பேசிக்கொள்வார்கள். பிறகு தங்கள் கோட்டுக் காலர்களைத் தூக்கிவிட்டுக்கொண்டும், தொப்பிகளைக் கண் வரையிலும் இழுத்து மூடிக்கொண்டும் இருளோடு இருளாய் அரவமேயில்லாது அதி ஜாக்கிரதையோடு மறைந்து போய்விடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய மனத்திலும் உள்ளடங்கித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஆர்வத்தை அவளால் உணர முடிந்தது. அவர்கள் அனைவருக்குமே ஆடிப்பாடிச் சிரித்து மகிழ வேண்டும் என்ற ஆசையிருப்பதுபோலத் தெரிந்தது; எனினும் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமே இல்லை. அவர்கள் எப்போதும் எங்கேனும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கடுமையாகவும், ஏளன சுபாவம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் வாலிபத்தின் வலிவும், மினுமினுப்பும் உற்சாகமும் நிறைந்து காணப்பட்டார்கள், சிலர் மிகவும் அமைதியாக, சிந்தனை வயப்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவருமே ஒரேவிதமான லட்சிய நம்பிக்கையோடு ஒத்து நிற்பதாகத் தாய்க்குத் தோன்றியது. எனினும் அவர்கள் அனைவரும் தனித்தனியே தமக்கென ஒரு உருவும் குணமும் கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்கள் அனைவரது முகங்களும் அவளுக்கு ஒன்று போலவே தோன்றின; எம்மாஸை நோக்கிச் செல்லும் கிறிஸ்து நாதரின் அருள் நாட்டத்தைப் போல், அன்பும் அழுத்தமும் பிரதிபலிக்கும். ஆழமும் தெளிவும் கருமையும் கொண்ட கண்களோடு அமைதியும் தீர்மான புத்தியும் நிறைந்து விளங்கும் மெலிந்த முகத்தைப் போல் ஒரே முகம்போல் தோன்றியது அவளுக்கு.

அவர்களின் தொகையை எண்ணிக் கணக்கிட்டாள் தாய். அவர்கள் அனைவரையும் பாவெலைச் சுற்றி நிற்க வைத்து அவர்களுக்கு மத்தியில் பாவெலை நிறுத்தி வைத்தால், பாவெல் எதிரிகளின் கண்ணில் படாமல் எப்படி அந்த வியூகத்துக்குள்ளேயே மறைந்து நிற்பான் என்பதை அவள் கற்பனாரூபமாகவே சிந்தித்துப் பார்த்துக்கொண்டாள். ஒரு நாள் குறுகுறுப்பும் சுருண்ட கேசமும் நிறைந்த ஒரு யுவதி நகரிலிருந்து வந்தாள். அவள் அந்திரேய்க்கு ஒரு பொட்டலம் கொண்டு வந்திருந்தாள். திரும்பிச் செல்லும்போது அவள் தாயை நோக்கித் திரும்பி, உவகை நிறைந்த தன் கண்களில் ஒளிபாய்ந்து பளிச்சிட்டு மின்ன, வாய் திறந்து சொன்னாள்;

“தோழரே, போய்வருகிறேன்!”

‘சென்று வருக” என்ற சிரிப்புக்கு ஆளாகாமல் பதிலளித்தாள் தாய்.

அந்தப் பெண் வெளியே சென்ற பிறகு, தாய் ஜன்னல் அருகே சென்று நின்றாள்; வசந்த கால மலர்போல பதுமையும், வண்ணாத்திப் பூச்சிப்யைப்போல மென்மையும் பெற்று, சிறு கால்களால் குறுகுறுவென்று தெரு வழியே நடந்து செல்லும் அந்தத் தோழியைப் பார்த்தாள். பார்த்தவாறே தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

“தோழி!” என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் தாய். ‘அடி’ என் செல்லப் பெண்ணே! உன் வாழ்க்கை முழுதும் உன்னோடு துணைநின்று உதவ, கடவுள் உனக்கு ஒரு நல்ல உண்மையான தோழனையும் அருள் செய்யட்டும்!”

நகரிலிருந்து வரும் அத்தனை பேரும் ஏதோ பிள்ளைக்குணம் படைத்த பேதைகளைப் போலத் தோன்றியது அவளுக்கு அதைக் கண்டு மிகுந்த பெரியதனத்தோடு அவள் தன்னுள் சிரித்துக்கொள்வாள். என்றாலும், அவர்கள் கொண்டுள்ள கொள்கை வைராக்கியம் அவளை ஆனந்த வியப்பில் ஆழ்த்தும்; உள்ளத்தைத் தொடும். அந்த வைராக்கியத்தின் ஆழ்ந்த தன்மையும் அவளுக்கு வரவரப் புரியத் தொடங்கியது. நீதியின் வெற்றியைப் பற்றி அவர்கள் காணும் லட்சியக் கனவுகள் அவளது உள்ளத்தைத் தொட்டுத் தடவிச் சுகம் கொடுத்தன. அந்தக் கனவு மொழிகளை அவள் கேட்கும்போது காரண காரியம் புரியாத ஏதோ ஒரு சோக உணர்ச்சிக்கு அவள் ஆளாகிப் பெருமூச்செறிந்து கொள்வாள். முக்கியமாக, அவர்களது சர்வ சாதாரணமான எளிமையும் தங்களது சொந்த நலன்களில் அவர்கள் காட்டும் அழகான அசட்டை மனப்பான்மையும் அவளை மிகவும் கவர்ந்துவிட்டன.

வாழ்க்கையைப் பற்றி அவர்கள் சொல்லியவற்றை பெரும்பாலும் ஏற்கெனவே அவள் உணர்ந்துகொண்டிருந்தாள். அவர்கள் தாம் மனித குலத்தின் துயரங்களுக்குரிய உண்மையான பிறப்பிடத்தை, மூலாதாரத்தைக் கண்டுபிடித்தவர்கள் என அவள் உணர்ந்தாள், எனவே அவர்களது சிந்தனைகளையும் அதன் முடிவுகளையும் அவளும் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப் பழகினாள். என்றாலும், அவளது இதயத்தின் அதல பாதான ஆழத்திலே அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட முடியும் என்பதையோ, தங்களது லட்சியத்துக்காகச் சகல தொழிலாளி மக்களையும் ஒன்று திரட்டி ஒரே சக்தியாகப் பலப்படுத்தி விடுவார்கள் என்பதையோ அவள் நம்பத் துணியவில்லை. இன்றோ ஒவ்வொருவனும் அவனவன் வயிற்றை நிரப்பவே வழி பார்க்கிறான்; அந்தப் பிரச்சினையை நாளை வரை ஒத்தி வைப்பதற்குக்கூட எவனும் விரும்பவில்லை மூமூஇதுதான் அவளுக்குத் தெரியும். தொலைவும் துயரமும் நிறைந்த இந்தப் பாதையில் அதிகம்பேர் துணிந்து செல்ல ஒப்பமாட்டார்கள். இறுதியாக எய்தப்போகும் அனைத்து மக்களின் சகோதரத்துவ சாம்ராஜ்யம் எல்லோருடைய கண்களுக்கும் தெரிந்துவிடப் போவதில்லை. எனவேதான் அந்த நல்ல மனிதர்கள் எல்லோரும் அவளுக்குக் குழந்தைகளைப் போலத் தோன்றினார்கள். அவர்களது முகத்தில் மீசைதாடிகள் வளர்ந்திருந்த போதிலும், சோர்வினால் களைத்து வாடிய முகபாவம் தெரிந்தாலும் அவளைப் பொறுத்தவரை, அவர்கள் சின்னஞ் சிறார்கள்தாம்.

“அட, என் அருமைக் குஞ்சுகளே!” என்று தலையை அசைத்துக் கொண்டு தனக்குத்தானே நினைத்துக்கொண்டாள் அவள்.

இப்போது அவர்கள் அனைவரும் அருமையான, நேர்மையான, தெளிவாற்றல் கொண்ட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் நன்மை செய்வதைப் பற்றிப் பேசினார்கள், தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முயற்சியிலும் தங்களைப் பற்றிய கவலையின்றியும் அவர்கள் முன்னேறினார்கள். இம்மாதிரியான வாழ்க்கையை, அதனது ஆபத்தான சூழ்நிலையைக்கூடப் பொருட்படுத்தாது எப்படி ஒருவர் ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பதையும் அவள் உணர்ந்துகொண்டாள். தன்னுடைய கடந்த காலத்தின் இருள்செறிந்த வாழ்க்கைப் பாதையை அவள் நினைத்து நினைத்துப் பார்த்து பெருமூச்செறிந்துகொண்டாள். அவளது இதயத்துக்குள்ளே, நான் இந்தப் புதிய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றவள் என்ற உணர்ச்சியும் சிறுகச் சிறுக வளர ஆரம்பித்தது. இதற்கு முன்பெல்லாம் தன்னை எவருமே விரும்பவில்லை எனக் கருதினாள் அவள். ஆனால், இப்போதோ எத்தனையோ பேருக்குத் தான் தேவைப்படுவதை அவள் கண்கூடாகப் பார்த்தாள். இந்தப் புதிய இன்பகரமான உணர்ச்சி அவளைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தது.

அவள் தொழிற்சாலைக்குள் துண்டுப் பிரசுரங்களை ஒழுங்காகக் கொண்டு சென்றுகொண்டிருந்தாள்; அப்படிச் செய்வது தன் கடமை என்று கருதினாள். வேவுகாரர்கள் அவளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போனார்கள்; எனவே அவள் மீது அவர்கள் அத்தனை சிரத்தை காட்டவில்லை. எத்தனையோ தடவைகளில் அவர்கள் அவளைச் சோதனை போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சோதனை போடும் நாளெல்ளாம் தொழிற்சாலைக்குள் அந்தப் பிரசுரங்கள் தலைகாட்டிப் பரவித் திரிந்த நாளுக்கு மறுநாளாகவே இருந்து வந்தது. அவளிடம் எந்தவிதமான பிரசுரங்களும் இல்லாத நாட்களில் அவள் வேண்டுமென்றே காவல்காரர்களைத் தன்மீது சந்தேகங் கொள்ளுமாறு தானே தூண்டிவிட்டுவிடுவாள். அவர்கள் அவளைப் பிடித்துச் சோதனை போடுவார்கள். அதுதான் சமயம் என்று அவள் அவர்களோடு வாதாடித் தன்னை அவர்கள் இழிவுபடுத்திவிட்டதாகப் பாவனை செய்துகொள்வாள். அவர்களை அவமானப்படுத்தி தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டு அகன்று செல்வாள் அவள். தன்னுடைய சாமர்த்தியத்தை எண்ணித் தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொள்வாள். இது அவளுக்கு ஒரு ஆனந்த மயமான விளையாட்டுப்போல இருந்தது.

நிகலாய் வெஸோவ்ஷிகோவை தொழிற்சாலையில் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. உத்திரக்கட்டைகள், விறகு, பலகைகள் முதலியனவற்றை ஏற்றுமதி செய்யும் ஒரு மர வியாபாரியிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். அநேகமாக ஒவ்வொரு நாளும் அவன் மரங்களைப் பாரமேற்றிக்கொண்டு செல்வதை தாய் பார்த்துத்தான் வந்தாள். முதலில் நாஞ்சான் பிறவிகளான ஒரு ஜோடிக் கறுத்த குதிரைகள் வரும். அந்தக் குதிரைகள் தமது பஞ்சடைந்து நொந்துபோன கண்களைத் திருகத் திருக விழித்துக்கொண்டு தலைகளை அசைத்து அசைத்து வரும். உழைப்பினால் ஓய்ந்துபோன அவற்றின் கால்கள் வெடவெடத்து நடுங்கும். குதிரைகளை அடுத்து, பச்சை மரக்கட்டைகளாவது, அறுத்தெடுத்த பலகைகளாவது ஒன்றோடொன்று மோதியவாறு தரையில் தேய்ந்தபடி வந்துகொண்டிருக்கும். அந்தப் பக்கத்தில் நிகலாய் வருவான். அவனது கைகள் குதிரைகளின் லகானை வெறுமனே பிடித்துக்கொண்டிருக்கும். நிகலாயின் கால்களில் கனத்த பூட்சுகள் இருக்கும், தொப்பி தலைக்குப் பின்னால் தள்ளிப் போயிருக்கும். மேலும் அவனது ஆடையணிகளும் கிழிந்து பழங்கந்தலாய்ப் போயிருக்கும். உடையெல்லாம் ஒரே புழுதிபடிந்து, தரைக்குள்ளிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணடைந்து அலங்கோலமாய்த் தோன்றும் தடித்த முண்டுக் கட்டையைப் போலத் தோன்றுவான் அவன். அவனும் அந்தக் குதிரைகளைப் போலவே தலையைத் தொங்கப்போட்டு அசைந்தாடிக் கொண்டு தரையையே பார்த்தவாறு செல்வான். அவனது குதிரைகள், கண்மூடித்தனமாக எதிரேவரும் ஆட்கள் மீதாவது வண்டிகள் மீதாவது சாடி விழுந்து தடுமாறும். அந்த ஜனங்கள் நிகலாயைப் பார்த்து உரத்துக் கூச்சலிடுவார்கள். மானாங்காணியான வசை மொழிகள் குழவிக் கூட்டத்தைப் போல அவனை மொய்த்துப் பிடுங்கும். அவன் அவற்றுக்கு எந்தப் பதிலும், சொல்வதில்லை. நிமிர்ந்தும் பார்ப்பதில்லை, வெறுமனே உரத்துக் கூச்சலிட்டுத் தன் குதிரைகளை முடுக்குவான்;

“போ, முன்னே !”

வெளிநாட்டிலிருந்து புதிதாக வந்த ஒரு பத்திரிகையையோ புத்தகத்தையோ வாசித்துக் காட்டுவதற்காக, அந்திரேய் சமயங்களில் எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து வருவதுண்டு. அந்தச் சமயங்களில் நிகலாயும் வருவான்; வந்து ஒரு மூலையிலே சென்று உட்காருவான். ஒரு மணியோ, இரண்டு மணியோ, அவன் அப்படியே வாய் பேசாது உட்கார்ந்து வாசிப்பதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பான், வாசித்து முடிந்தவுடன். அந்த இளைஞர்கள் காரசாரமான விவாதங்களில் இறங்குவார்கள். அவற்றில் நிகலாய் பங்கெடுத்துக் கொள்வதேயில்லை. எல்லோரும் சென்ற பிறகு அவன் மட்டும் பின்தங்கி அந்திரேயோடு தனிமையில் பேசுவான்.

‘யாரை அதிகமாகக் குறை கூறுவது?” என்று துயரத்துடன் கேட்பான்.

“குறை கூற வேண்டிய மனிதர்களில் முதன்மையானவன் யார் தெரியுமா?” ‘இது என்னுடையது’ என்று எவன் முதன் முதல் சொன்னானோ, அவன்தான். அந்தப் பயல் செத்துப்போய் எத்தனை ஆயிரம் வருஷங்களோ ஆகிவிட்டன. இனி அவன்மீது நாம் பாய்ந்து விழ முடியாது” என்று வேடிக்கையாகப் பதில் சொன்னான் ஹஹோல். எனினும் அவனது கண்களில் உற்சாகம் இல்லை. நிலைகொள்ளாமல் அவை தவித்தன.

“பணக்காரர்கள்? அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் கூட்டத்தார்? அவர்கள் மட்டும் ஒழுங்கானவர்களா?”

அந்திரேய் தன் தலை மயிரை விரல்களால் உலைத்துவிட்டு கொண்டிருந்தான். வாழ்க்கையைப் பற்றியும், மாந்தர்களைப் பற்றியும் விளக்கமான முறையில் விவரித்துச் சொல்வதற்குரிய எளிய வார்த்தைகளைப்பற்றி யோசித்தவாறே மீசை முனையை இழுத்து விட்டுக்கொண்டான். ஆனால் அவன் எதைச் சொன்னாலும் சகல மக்களையும் பொதுப்படையான முறையில் குறை கூறுவதுபோலத்தான் இருந்தது. அது நிகலாய்க்குத் திருப்தியளிக்கவில்லை. அவன் தனது தடித்த உதடுகளைக் கப்பென்று மூடியவாறே தலையை அசைப்பான். ‘அது அப்படியல்ல’ என்று ஏதாவது முணுமுணுப்பான். கடைசியாக அவன் திருப்தியடையாத கலங்கிய மனத்தோடு விடைபெற்றுக்கொண்டு செல்வான். 0

ஒருநாள் அவன் சொன்னான்;

“இல்லை. குற்றம் சாட்டப்படவேண்டிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள். நான் சொல்லுகிறேன். கேள், நாமோ வாழ்நாள் முழுவதும் தழை படர்ந்த வயல் வெளியை கருணையின்றி உழுது தன்ளுவது மாதிரி உழைத்து உழைத்துச் சாக வேண்டியிருக்கிறது!”

‘உன்னைப்பற்றி இஸாயும் இதைத்தான் ஒருநாள் சொன்னான்’ என்று சொன்னாள் தாய்.

“யார், இஸாயா?” என்று ஒரு கணம் கழித்துக் கேட்டான நிகலாய்.

“ஆமாம். அவன் ஒரு மோசமான பயல், அவன் எல்லோர் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறான். எல்லோரைப் பற்றியும் அநாசவசியமான கேள்விகளையெல்லாம் கேட்கிறான். அவன் நமது தெருவுக்குள்ளும் வந்து, ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறான்.”

“என்னது? ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறானா?” என்று திருப்பிக் கேட்டான் நிகலாய்.

ஆனால் அதற்குள் தாய் படுக்கச் சென்றுவிட்டாள், எனவே அவனது முகத்தை அவள் பார்க்கவில்லை. இருந்தாலும் ஹஹோல் பேசியதைப் பார்த்தால், தான் அந்த விஷயத்தை நிகலாயிடம் சொல்லியிருக்கக்கூடாது என்றுதான் அவளுக்குப்பட்டது.

ஹஹோல் அவசர அவசரமாகக் குறுக்கிட்டுச் சொன்னாள்: “அவனுக்குப் பொழுது போகாவிட்டால் இப்படி எட்டிப் பார்த்துவிட்டுத்தான் போகட்டுமே...”

“நிறுத்து” என்றான் நிகலாய்; “குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களில் அவனும் ஒருவன்!”

“அவனை எதற்காக குற்றம் கூறவேண்டும்? முட்டாளாக இருப்பதற்காகவா?’ என்று அவசரமாக் கேட்டான் அந்திரேய்.

நிகலாய் பதிலே பேசாமல் எழுந்து சென்றுவிட்டான். ஹஹோல் அறைக்குள்ளே மெதுவாகவும் சோர்வோடும் மேலும் கீழும் நடந்தான். அவனது ஒல்லியான கால்கள் சரசரத்து மெதுவாக நடந்தன. அவன் தனது பூட்சுகளைக் கழற்றிவிட்டு நடந்தான். நடப்பதால் சத்தம் உண்டாக்கி பெலகேயாவை எழுப்பிவிடக் கூடாது என்று கருதினான். ஆனால் அவளோ தூங்கவில்லை. நிகலாய் சென்ற பிறகு அவள் ஆத்திரத்தோடு பேசினாள்;”அவனைக் கண்டாலே எனக்குப் பயமாகத்தானிருக்கிறது’.

“ஹும்!” என்று முனகினான் ஹஹோல். “ஆமாம். அவன் எப்போதுமே வக்கிர புத்தி கொண்டவனாகவே இருக்கிறான். இனிமேல் அவனிடம் இஸாயைப்பற்றிப் பேச்செடுக்காதீர்கள். அம்மா. இஸாய் உண்மையில் ஒரு ஒற்றன்தான்.”

“அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்றாள் தாய்; “அவனது பந்துக்களில் ஒருவன் ஒரு போலீஸ்காரன்.’

‘இல்லை. நிகலாய் அவனை வெளுத்து வாங்கி விடுவான்’ என்று மேலும் தொடர்ந்து பேசினான் ஹஹோல்; “அதிகாரத்திலே இருக்கும் கனதனவான்கள் இந்தச் சாதாரண மக்களின் மனத்திலே வளர்ந்துவிட்டிருக்கிற உணர்ச்சிகளைப் பார்த்தீர்களா, அம்மா? நிகலாய் மாதிரி நபர்கள் நமக்கு இழைக்கப்பட்ட தீங்கை உணர்ந்தால், அதனால் தம்து பொறுமையையும் இழந்துவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அவ்வளவுதான். வானத்தில் இரத்த வெள்ளம் பரவும்; பூமி ஒரு சேர்ப்பு போல இதில் நுரை தள்ளும்!”

“பயங்கரமாயிருக்கிறது, அந்திரியூஷா!” என்று வியந்து போய்ச் சொன்னாள் தாய்.

“ஈக்களை விழுங்கினால் குமட்டத்தான் செய்யும்’ என்று ஒரு நிமிஷம் கழித்துச் சொன்னான் அந்திரேய். முதலாளியின் ஒவ்வொரு துளி இரத்தமும், மக்களின் கண்ணீர்ச் சமுத்திரத்தால் கழுவப்பட்டிருக்கிறது.”

திடீரென அவ்ன் சிரித்தான், பிறகு சொன்னான்:

“இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது!”

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/21&oldid=1293067" இலிருந்து மீள்விக்கப்பட்டது