தாய்/23

விக்கிமூலம் இலிருந்து

23

வசந்தம் வந்தது: பனிப்பாறைகள் உருகி வழிந்தோட ஆரம்பித்தன; மீண்டும் சேறும் புழுதியும் நிறைந்த தரை மட்டும் மிஞ்சியது. நாளுக்குநாள் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது; அந்தக் குடியிருப்பு முழுவதுமே கழுவப் பெறாமல், கந்தல் கந்தலாகிப்போன துணிகளால் போர்த்தப்பட்டிருப்பதுபோலத் தோன்றியது. பகல் நேரங்களில் கூரைச் சரிவுகளிலிருந்து தண்ணீர் சொட்டும்; பாசி படிந்து அழுக்கேறிப்போன சுவர்களில் வேர்வை பூத்து வடிவதைப்போல், நீர் ஆவியாக மாறிப்பரவும். இரவு நேரங்களில் துளித்துளிப் பனித்துண்டுகள் வெள்ளை வெளேரென்று மின்னிக்கொண்டிருக்கும். சூரியனை அடிக்கடி பார்க்க முடிந்தது. வழக்கம்போல் சாக்கடைச் சிற்றோடைகள் குட்டைகளைநோக்கி முணுமுணுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தன.

மே தினக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி விட்டன.

அந்தப் புதிய தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் குடியிருப்பிலும் தொழிற்சாலையிலும் சிதறிப் பரவின. அந்தப் பிரச்சாரத்தால் பாதிக்கப்படாமலிருந்த இளைஞர்கள் கூட, அந்தப் பிரசுரங்களைப் படித்துவிட்டுத் தமக்குள் பேசிக்கொண்டார்கள்:

“ஆமாம். நாமும் ஏதாவது செய்யத்தான் வேண்டும்”

நாள் நெருங்கிவிட்டது!” என்று வறட்டுப் புன்னகையோடு சொன்னான் வெஸோவ்ஷிகோவ்; “நாம் ஒருவருக்கொருவர் கண்ணாமூச்சி விளையாடியது போதுமப்பா, போதும்.”

பியோதர் மாசின் ஒரே உத்வேக சித்தனாயிருந்தான். மிகவும் மெலிந்துபோயிருந்த அவனது நடுக்கம் நிறைந்த அசைவுகளும் பேச்சுக்களும் கூண்டிலே அடைபட்டுள்ள வானம்பாடியை நினைவூட்டின. மௌனமே உருவான யாகவ் சோமவும் அவனோடு எப்போதும் சுற்றித் திரிந்தான்; அவனிடம் காணும் அழுத்தம் வயதுக்கு மீறியதாய்த் தோன்றியது. சிறை வாசத்தால் தலைமயிரில் பழுப்புக்கண்ட சமோய்லவ், வலீலி கூஸெவ், புகின், திராகுனவ் முதலியவர்களும் வேறு சிலரும் ஆயுதம் தாங்கிய ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தினார்கள், ஆனால் பாவெல், ஹஹோல், சோமவ் முதலியவர்கள் அந்த யோசனையை நிராகரித்தார்கள்.

களைத்துச் சோர்ந்து விதிர் விதிர்த்துக்கொண்டிருந்த இகோர் வேடிக்கைப் பேச்சை ஆரம்பித்துவிட்டான்.

“தோழர்களே! இன்று அமுலிலிருக்கும் சமுதாய அமைப்பை மாற்றியமைப்பது ஒரு மகத்தான சாதனைதான். ஆனால், அந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு அறிகுறியாக. நான் ஒரு ஜோடி புது பூட்சுகள் வாங்கப்போகிறேன்” என்று நனைந்து கிழிந்து பழசாய்ப் போன தனது செருப்புக்களைக் காட்டிக்கொண்டே பேசினான் அவன். “என்னுடைய ரப்பர் செருப்புகளும் செப்பனிட்டுச் சீர்படுத்த முடியாத அளவுக்குப் பிய்ந்துபோய்விட்டன. எனவே தினம் தினம் என் கால்கள் ஈரமாவதுதான் மிச்சமாயிருக்கிறது. பழைய சமுதாய அமைப்பைப் பகிரங்கமாக எதிர்த்துப் போராடுகிறவரையிலும் நான் சாகமாட்டேன். நான் செத்து மண்ணோடு மண்ணாகப் போக விரும்பவில்லை. எனவே நாம் ஆயுதம் தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற தோழர் சமோய்லவின் ஆலோசனையை நான் நிராகரிக்கிறேன். அதற்குப் பதிலாக, நான் ஒரு திருத்தப் பிரேரேபணை கொண்டு வருகிறேன். முதன் முதலில் நான் என் கால்களில் ஒரு ஜோடி புது பூட்சுகளை ஆயுதம் போலத் தரித்துக்கொள்கிறேன். நாமெல்லோரும் கண்மூடித்தனமாகப் போராட முனைவதைவிட, இப்படிப்பட்ட நடவடிக்கை அதாவது நான் பூட்ஸ் தரித்துக்கொள்ளும் நடவடிக்கை —சோஷலிசத்தின் வெற்றியைத் துரிதப்படுத்தும் என்பது எனது அசைக்க முடியாத. தீர்மானமான நம்பிக்கை!”

இந்த மாதிரியான வேடிக்கைப் பேச்சோடு பேச்சாய், அன்னிய நாடுகளில், மக்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையைச் சுலபமாக்கிக்கொள்ளப் போராடுகிறார்கள் என்பதையும் அவன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான். அவனது பேச்சு தாய்க்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் மனத்தில் ஏதோ ஒரு அதிசயப் பற்றுதல் உண்டாயிற்று. பொறாமையும் குரோதமும் வஞ்சகமும் கொடுமையும் நிறைந்து, தொந்திதள்ளிப்போன சிவந்த மூஞ்சிக்காரர்கள்தாம் மக்களைக் கொடுமைப்படுத்தி, அவர்களை ஏமாற்றிப் பிழைத்து வரும் பரம வைரிகள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆட்சியாளரின் கொடுமையால் நசுக்கப்பட்டுக்கிடக்கும் மக்களை அவர்கள் மன்னனுக்கு எதிராகத் தூண்டிவிடுவார்கள். மக்கள் மன்னனை எதிர்த்துப் போராடிக் கவிழ்த்தவுடனே இந்தக் குள்ள மனிதர்கள் மக்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றி அதிகாரத்தைத் தாங்களே கைப்பற்றிக்கொள்வார்கள். மக்களை விரட்டியடிப்பார்கள்; மக்கள் எதிர்த்துப் போராட முனைந்தால் அவர்களை ஆயிரம் ஆயிரமாகக் கொன்று குவிப்பார்கள்.

ஒருநாள் தாய் தனது தைரியத்தையெல்லாம் சேகரித்துக்கொண்டு. இகோரின் பேச்சுக்களால் தன் மனத்தில் தோன்றியுள்ள கற்பனைச் சித்திரத்தை அவனிடம் விளக்கிக்கூற முனைந்தாள்.

“நான் சொல்வது சரிதானே, இகோர்?” என்று அசட்டுச் சிரிப்போடு கேட்டாள் அவள்.

அவன் கடகடவென்று சிரிக்கத் தொடங்கினான்; சிரிக்கும்போது அவனது கண்மணிகள் உருண்டு புரண்டன மூச்சு வாங்கும்போது அவன் நெஞ்சைத் தடவிக் கொடுத்துக்கொண்டான். "அப்படித்தான் அம்மா, அப்படித்தான்! சரித்திரத்தின் உயிர் நாடியையே நீங்கள் தொட்டுவிட்டீர்கள். நீங்கள் சொன்ன சித்திரம் இருக்கிறதே, அதில் கொஞ்சம் ஒட்டு வெட்டு வேலை செய்து மிகைப்படுத்தி அலங்காரம் பண்ணிவிட்டீர்கள் என்றாலும் நீங்கள் சொன்னவற்றிலெல்லாம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தொந்தி விழுந்த குள்ள மனிதர்கள் இருக்கிறார்களே, இவர்கள்தான் மகா பாதகர்கள். மக்களை உறிஞ்சி உறிஞ்சி உயிர் வாழும் விஷப் பாம்புகள். பிரெஞ்சுக்காரர்கள் இவர்களை பூர்ஷ்வா என்று சொல்வது ரொம்ப சரி; ரொம்பப் பொருத்தம். பூர்ஷ்வா என்றால்— ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்துச் சுரண்டி அவர்களது இரத்தத்தையே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்.”

“நீங்கள் பணக்காரர்களைத்தானே சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் தாய்.

“அவர்களையேதான். அதுதான் அவர்களது துரதிருஷ்டம்! ஒரு - சின்னஞ்சிறு, குழந்தையின். உணவில் தாமிரத்தைக் கொஞ்சங்கொஞ்சமாகச் சேர்த்து ஊட்டிவந்தால், அந்தத் தாமிரம் அந்தப் பிள்ளையின் எலும்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. அந்தப் பிள்ளை குள்ளப் பிறவியாகவே போய்விடுகிறது. ஆனால், ஒருவனை தங்கம் என்று விஷத்தை ஊட்டி வளர்த்தாலோ? அப்போது அவன் இதயமே குன்றிக் குறுகி உணர்ச்சியற்றுச் செத்துப் போய்விடும்; பிள்ளைகள் ஐந்து காசுக்கு வாங்கி விளையாடுகிறார்களே ரப்பர் பந்து, அந்த மாதிரிப் போய்விடும்!”

ஒரு நாள் இகோரைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பாவெல் சொன்னான்:

“அந்திரேய்! உண்மை என்ன தெரியுமா? எந்த மனிதன் சிரித்துச் சிரித்து விளையாட்டாய்ப் பேசுகிறானோ அவனது இதயத்தில்தான் வேதனை இருந்துகொண்டே இருக்கிறது. இதுதான் வழக்கம்.”

ஹஹோல் பதில் சொல்வதற்கு ஒரு கணம் தயங்கினான்; கண்களைச் சுருக்கி விழித்தான்.

“நீ சொல்கிறபடி பார்த்தால், ருஷ்ய தேசம் முழுவதுமே சிரித்துச் சிரித்து வயிறு வெடித்துச் சாகத்தான் வேண்டும்!”

நதாஷா வந்து சேர்ந்தாள். அவளும் சிறையிலிருந்துதான் வந்தான். ஆனால் வேறு ஒருநகரிலுள்ள சிறையில் இருந்தாள். சிறை வாசம் அவளை எந்த விதத்திலும் மாற்றிவிட்டதாகத் தெரியவில்லை. அவளது முன்னிலையில் ஹஹோல் வழக்கத்துக்கு மீறிய உற்சாகத்துடன் நடந்துகொள்வதாகத் தாய்க்குத் தோன்றியது. அவன் ஒவ்வொருவரையும் கேலியும் கிண்டலுமாக பேசினான்; அவளை வாய்விட்டுக் கலகலவென்று சிரிக்க வைத்தான். ஆனால் அவள் சென்ற பிறகு, அவன் தனது வழக்கமான சோக கீதத்தைச் சீட்டியடித்துக்கொண்டு, கால்களை இழுத்து இழுத்துப்போட்டு அறைக்குள் குறுக்கும் மறுக்கும் நடக்கத் தொடங்கினான்.

காஷாவும் அடிக்கடி வந்துகொண்டிருந்தாள். அவள் வரும்போதெல்லாம் புருவங்களைக் கழித்தபடி ஒரே பரபரப்போடுதான் வருவான். என்ன காரணத்தாலோ அவனது முகபாலம் எப்போது பார்த்தாலும் ஒரே வக்கிரமும் முறைப்பும் கொண்டதாகவே இருந்தது.

ஒரு முறை அவளை வழியனுப்பிவிட்டு வருவதற்காக பாவெல் வாசல் தடைவரைக்கும் போனான். போகும்போது அவன் கதவைச் சாத்தாமல் விட்டுவிட்டுப் போனதால் அவர்கள் வெளியே பேசிக்கொண்ட பேச்சு தாயின் காதிலும் விழுந்தது.

“நீங்கள்தான் கொடியைச் சுமந்து கொண்டு போகப் போகிறீர்களா?” என்று கேட்டான் சாஷா.

“ஆமாம்,”

“முடிவாகிவிட்டதா?”

“ஆம், அது என் உரிமை.”

“மீண்டும் சிறைக்குப் போகவா?”

பாவெல் பதில் பேசவில்லை

“நீங்கள் போகாமலிருக்க முடியாதா...” என்று ஆரம்பித்தாள் அவள், ஆனால் வார்த்தை தடைப்பட்டது.

“என்னது?”

“இல்லை. அந்தப் பொறுப்பை வேறு யாருக்காவது விட்டு விடுங்களேன்.”

“இல்லை” என்று உறுதியாகச் சொன்னான் அவன்

“நன்றாக யோசியுங்கள். உங்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. எல்லோரும் உங்களை விரும்புகிறார்கள். நஹோத்கா நீங்களும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். நீங்கள் வெளியில் இருந்தால், எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆனால், கொடியைத் தாங்கி நீங்களே சென்றால், அவர்கள் நிச்சயம் உங்களைக் கைது செய்வார்கள். வெகு தூரத்துக்கு, வெகு காலத்துக்கு நாடு கடத்திவிடுவார்களே!”

அந்தப் பெண்ணின் குரலிலிருந்த பயபீதியையும் தாபத்தையும் தாயால் உணர முடிந்தது. சாஷாவின் வார்த்தைகள் அவனது இதயத்தில் பனித் துளிகளைப்போல் குளிர்ந்து விழுந்தன.

“இல்லை, நான் யோசித்தாகிவிட்டது. எதுவும் என் உறுதியை மாற்றிவிட முடியாது” என்றான் பாவெல்.

“நான் கெஞ்சிக் கேட்டால் கூடவா?”

பாவெலின் குரல் திடீரென்று உத்வேகமும் கரகரப்பும் பெற்றது.

“நீங்கள் இது மாதிரிப் பேசக்கூடாது. ஊஹும் இப்படிப் பேசக்கூடாது நீங்கள்?”

“நானும் மனிதப் பிறவிதானே!” என்று மெதுவாகக் கூறினாள் அவள்.

“ஆமாம். அதிசயமான மனிதப் பிறவி!” என்று அவளைப்போலவே மெதுவாய்ச் சொன்னான் அவன். எனினும் அவனுக்குத் தொண்டை அடைபடுவதுபோலிருந்தது. “நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர். அதனால்தான் - அதனால்தான் - இந்த மாதிரி நீங்கள் பேசக்கூடாது”

“சரி, வருகிறேன்” என்றாள் அவள்,

அவளது காலடியோசையின் போக்கிலிருந்து அவள் அவசர அவசரமாய் ஓடுகிறாள் என்பதைத் தாய் உணர்ந்துகொண்டாள் பாவெல் அவளைத் தொடர்ந்து வெளி முற்றத்துக்குச் சென்றான்.

தாயின் இதயம் பயத்தால் குன்றிக் குறுகி வேதனைப்பட்டது. அவர்கள் எதைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள் என்பது அவளுக்குப் புரியவில்லை; என்றாலும் தன்னைப் பொறுத்தவரையில் தனக்கு ஒரு பேராபத்து விளையப்போகிறது என்பதை மட்டும் அவள் மனதுக்குள் உணர்ந்தாள்.

“அவன் என்னதான் செய்ய விரும்புகிறான்?”

பாவெல் அந்திரேயோடு வந்து சேர்ந்தான்.

“ஐயோ, இஸாய், இஸாய்! அவனை என்னதான் செய்கிறது?” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல்.

“இந்த மாதிரிக் காரியத்தைக் கைவிட்டுவிட வேண்டும் என்று நாம் அவனை ஒருமுறை எச்சரிக்கத்தான் வேண்டும்” என்று முகத்தைச் சுழித்தவாறு சொன்னான் பாவெல்.

“பாவெல், நீ என்ன திட்டம் போடுகிறாய்?” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டு கேட்டாள் தாய்

“எப்போது? இப்போதா?”

“மே முதல்...... முதல் தேதிக்கு!”

“அதுவா?” என்று குரலைத் தாழ்த்திக்கொண்டு சொல்லத் தொடங்கினான் பாவெல். “நான் கொடியைத் தாங்கிக்கொண்டு,அணி வகுப்புக்குத் தலைமை தாங்கிச் செல்லப் போகிறேன். இந்தக் காரணத்துக்காக, அவர்கள் மீண்டும் என்னை ஒரு வேளை சிறையில் தள்ளுவார்கள்.”

தாயின் கண்களில் குத்தல் எடுத்தது வாய் உலர்ந்து வறண்டது. பாவெல் அவள் கரத்தைப் பிடித்தெடுத்துத் தடவிக் கொடுத்தான்.

“அம்மா! இதை நான் செய்யத்தான் வேண்டும். என்னை உனக்குப் புரியவில்லையா, அம்மா!”

“நான் எதுவுமே சொல்லவில்லை, அப்பா!” என்று தலையை லேசாக நிமிர்த்தியவாறு. சொன்னாள் அவள். ஆனால் அவனது கண்களிலுள்ள உறுதி நிறைந்த ஒளியை அவளது கண்கள் சந்தித்தன. அவள் மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள்.

அவன் பெருமூச்செறிந்தான், அவள் கரத்தை நழுவவிட்டான்.

“நீ இதைக்கண்டு வருத்தப்படக்கூடாது, அம்மா, சந்தோஷப்பட வேண்டும்” என்று அவன் கண்டிக்கும் பாவனையில் பேச ஆரம்பித்தான். “மரணத்தை நாடிச் செல்லும் தங்கள் மைந்தர்களை, புன்னகையோடு வழியனுப்பி வைக்கும் தாய்மார்கள் என்றைக்குத் தோன்றப் போகிறார்கள், அம்மா!”

“அடேடே! உபதேசிகர் வந்துவிட்டாரடா!....” என்று முனகினான் ஹஹோல்.

“நான்தான் எதுவுமே சொல்லவில்லையே...” என்று திரும்பச் சொன்னாள் தாய். “நான் உன் வழியில் குறுக்கே நிற்கவில்லை; ஆனால் எனக்குச் சங்கடமாயிருக்கும்போது,. நான் ஒரு தாய்போல நடந்துகொள்வதைத் தடுக்க முடியாது.....”

அவன் அவளை விட்டு விலகிச் சென்றான்; அவனது வார்த்தைகளின் குத்தலை உணர்ந்தாள் அவள்.

“ஒரு மனிதன் தன் இஷ்டப்படி வாழ்வதற்குக்கூட, குறுக்கே நிற்கிறது ஒருவகைப் பாசம்!”

“இல்லை. பாஷா. அப்படிச் சொல்லாதே” என்று அவன் நடுங்கிக்கொண்டு சொன்னாள். அவன் மேற்கொண்டும் ஏதாவது கூறி, தன் இதயத்தைப் புண்படுத்திவிடக் கூடும் என அவள் பயந்தாள்; "எனக்குப் புரிகிறது. நீ வேறு ஒன்றுமே செய்ய முடியாது. உன் தோழர்களுக்காக, நீ இப்படிச் செய்யத்தான் வேண்டும்......”

“இல்லை. எனக்காகவேதான்!” என்றான் அவன்.

அந்திரேய் வாசல்நடைக்கு வந்தான். வாசல் நடை அவன் உயரத்துக்குச் சிறிதாக இருந்ததால், அவன் தன் கால்களை ஓரளவுக்குச் சரித்து நின்றுகொண்டான். கதவு நிலையிலே தோளைக் சாய்த்து, மற்றொரு தோளையும் தலையையும் முன்புறமாக நீட்டிக்கொண்டு நின்றான்.

“மகாப்பிரபு! இந்த எண்ணத்தைக் கைவிடுவதால் ஒன்றும் குடிமுழுகப் போவதில்லை” என்று தனது அகன்ற கண்களைப் பாவெலின் மீது பதித்துப் பார்த்துக்கொண்டே சொன்னான் அவன். ஏதோ ஒரு கல்லிடுக்கிலிருந்து எட்டிப் பார்க்கும் பல்லியைப் போலிருந்தது அவன் நின்ற நிலை.

தாயோ அழுது கொட்டத் தயாராக நின்றாள்.

“அட கடவுளே, மறந்துவிட்டேனே” என்று சொல்லிக்கொண்டே அவள் வாசல் நடையைக் கடந்து வெளியே வந்தாள். தான் அழுவதைத் தன் மகன் பார்த்துவிடக் கூடாது என்றுதான் அவள் அப்படிச் செய்தாள், வெளியே வந்ததும் அவள் ஒரு மூலையில் தலையைச் சாய்த்துக்கொண்டு வெளிக்குத் தெரியாமல் பொருமிப் பொருமி அழுதாள். அவளது இதயத்தின் செங்குருதியே அவளது கண்ணீரோடு கலந்து கொட்டிப் பெருகுவதுபோல் அவள் உணர்ந்தாள்.

மூடியும் மூடாமலும் கிடந்த கதவின் வழியாக அவர்கள் இருவரும் தணிந்த குரலில் விவாதித்துக்கொண்டிருப்பது அவள் காதில் விழுந்தது.

“இது என்னப்பா வேலை? அவளைத் துன்புறுத்துவதில் உனக்கொரு ஆனந்தமா?” என்று கேட்டான் ஹஹோல்.

“இதுபோல் பேச உனக்கு உரிமை கிடையாது” என்று கத்தினான் பாவெல்.

“சரிதான். நீ உன்னை ஒரு முட்டாளாக்கிக் கொண்டிருப்பதை நான் மூச்சுக்காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தால், நான் அருமையான நண்பன்தானப்பா. நீ என் அப்படிச் சொன்னாய்? உனக்கு எதுவுமே புரியாதோ”.

அதெல்லாமில்லை, எதுவானாலும் சரி. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கறாராய்ச் சொல்லிவிட வேண்டும்; பயப்படக் கூடாது.”

“அவளுக்குக் கூடவா?”

"எல்லோருக்கும் தான்! பாசமாகட்டும். நேசமாகட்டும். அது என் காலைக்கட்டி என்னை முன்னேறவிடாமல் தடுக்குமானால், அவற்றை நான் விரும்பவே இல்லை......”

“அடாடா! வீராதி வீரன்! போய் மூக்கைத் துடைத்துக்கொள். இதையெல்லாம் சாஷாவிடம் போய்ச் சொல். அவள் தான்...”

“அவளிடம் ஏற்கெனவே சொல்லியாயிற்று”

“சொல்லிவிட்டாயா? பொய் சொல்கிறாய். நீ அவளிடம் மிருதுவாகப் பேசினாய். அன்போடு பேசினாய். நான் கேட்காவிட்டாலும் எனக்கு அது தெரியும். ஆனால் நீ உன் சூரத்தனத்தையெல்லாம் உன் தாயிடம் வந்து காட்டுகிறாய். ஆனால், உன் சண்டப்பிரசண்டமெல்லாம் சல்லிக் காசுக்குப் பிரயோஜனமில்லை.”

பெலகேயா தன் கன்னங்களில் வழிந்தோடிய கன்ணீரைத் துடைத்துக்கொண்டாள். ஹஹோல் ஏதாவது கடுமையாகப் பேசிவிடப் போகிறானோ என்ற பயத்தில் அவள் அவசர அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு சமையலறைக்குள் வந்தாள்.

“புர்..... ர்...... அப்பப்பா ! என்ன குளிர்?” என்று சத்தமாகச் சொன்னாள். எனினும் அவள் குரலில் பயமும் சோகமும் கலந்து நடுங்கிற்று. “இதை வசந்த காலம் என்றே சொல்ல முடியாது!”

அடுத்த அறையிலே கேட்டுக்கொண்டிருக்கும் பேச்சுக் குரலை மூழ்கடிப்பதற்காக அவள் சட்டியையும் பெட்டியையும் அப்படியும் இப்படியும் உருட்டி அரவம் உண்டாக்கிக்கொண்டிருந்தாள்.

“எல்லாமே மாறிப்போய்விட்டது” என்று அவள் மேலும் உரத்த குரலில் பேசத் தொடங்கினான். “மக்கள் புழுங்கித் தவிக்கிறார்கள்; சீதோஷ்ணம் என்னவோ குளிர்ந்து வெடவெடக்கிறது. இந்த மாதத்திலெல்லாம் சூரிய வெப்பம் உறைப்பதுதான் வழக்கம். நல்ல வெயிலும், நிர்மலமான வானமும்......”

பேச்சுக்குரல் நின்றுவிட்டது. எனவே தாய் சமையலறையின் மத்தியில் வந்து நின்றுகொண்டு என்ன நடக்கிறது. என்று காது கொடுத்துக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினாள்.

ஹஹோல் மீண்டும் மெதுவாகப் பேசினான்: “நீ அதைக் கேட்டாயா? இதற்குள்ளாகவே உன் புத்தியில் பட்டிருக்க வேண்டும். அதை விட்டுத்தள்ளு உன்னைவிட அவளுக்குப் புத்தி அதிகம். தெரிந்ததா?”

“கொஞ்சம் தேநீர் சாப்பிடுங்களேன்” என்று நடுநடுங்கும் குரலில் கேட்டாள் தாய். தன் குரலில் தோன்றிய நடுக்கத்தை உடனடியாய் மழுப்புவதற்காக: “அப்பப்பா! நான் ஒரேடியாய் விறைத்தே போனேன்!” என்று சொல்லிக்கொண்டாள்.

பாவெல் அவளிடம் மெதுவாகப் போய் சேர்ந்தான். அவனது தலை தொங்கிப்போயிருந்தது. குற்றமுள்ள குறுஞ்சிரிப்பு அவன் உதடுகளில் கோணி வதங்கியது.

“என்னை மன்னித்துவிடு. அம்மா. நான் இன்னும் சின்னப்பிள்ளை மூமூ முட்டாள்....”

“என்னைத் துன்புறுத்தாதே அப்பா” என்று அவளது தலையைத் தன் மார்போடு அணைத்தவாறு பரிதாபகரமாகக் கத்தினாள் அவள்:” ஒன்றுமே சொல்லாதே. நீ உன் இஷ்டப்படி வாழ்வதற்கு உரிமையுள்ளவன். கடவுள் உனக்கு அருள் செய்வார். அப்பா. ஆனால் என் இதயத்தைப் புண்படுத்தாதே. தாய் தன் பிள்ளைப் பாசத்தை விட்டுவிட முடியுமா? அவள் தன் பிள்ளையை நேசிக்கத்தான் செய்வாள். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நீங்கள் எல்லோருமே எனக்குப் பிரியமானவர்கள்; நீங்கள் அனைவரும் நேசிக்கத் தகுதியுள்ளவர்கள். உங்களுக்காக நான் அனுதாபப்படாவிட்டால், வேறு யாரப்பா அனுதாபம் கொள்வர்கள்? நீங்கள் அனைவரும் தலைமை தாங்கிச் செல்ல, உனக்குப் பின்னால் மற்றவர்கள் அனைவரும் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுச் செல்வீர்கள்....... பாஷா?”

அவனது நெஞ்சுக்குள் கனன்றெரிந்து கனலெழுப்பும் மகத்தான சிந்தனைகள் துடித்துக்கொண்டிருந்தன. சோகங்கலந்த இன்டாம் அவளது இதயத்தில் ஊடாடியது. எனினும் அதை வெளியிட்டுக் கூற அவளுக்கு வார்த்தை கிடைக்கவில்லை. வாய் பேச முடியாத ஊமை நிலையின் சித்திர வேதனையோடு, அவள் தன் மகனை ஆழமும் கூர்மையும் பெற்ற வேதனை நிறைந்த கண்களோடு வெறித்துப் பார்த்தாள்.

“ரொம்ப சரி, அம்மா. என்னை மன்னித்துவிடு. எனக்கு இப்போதுதான் எல்லாம் தெரிகிறது. இனி நான். இதை மறக்கவேமாட்டேன். சத்தியமாய்ச் சொல்லுகிறேன் மறக்கவேமாட்டேன்” அவன் புன்னகை அரும்பும் தன் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டான். அவனது முகத்தில் குதரகலம் தொனித்தது: அவமானத்தால் குன்றியும் போயிருந்தது.

அவள் அவனை விட்டுப்பிரிந்து அடுத்த அறைக்குள் சென்றாள்.

“அந்திரியுஷா!” என்று பரிவு கலந்த தொனியில் கூப்பிட்டாள் அவள், “அவனை அதட்டாதே. நீ பெரியவன்.......”

“பூ! அவளை நான் அதட்டுகிறதாவது? அவன் என்னிடம் உதைபட வேண்டியது ஒன்று தான் பாக்கி!” என்று திரும்பிப் பார்க்காமலேயே கத்தினான் ஹஹோல்.

அவள் அவனிடம் நேராகச் சென்று, தன் கரத்தை நீட்டினாள்.

“நீ எவ்வளவு நல்லவன்....”

ஹஹோல் திரும்பினான்; உடனே தன் தலையை ஒரு மாட்டைப் போல கவிழ்ந்து வைத்துக்கொண்டும், கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டும் சமையலறையை நோக்கி நடந்தான். எகத்தாளமாக அவன் குத்திப் பேசுவது தாயின் காதில் ஒலித்தது.

“பாவெல். ஓடிப்போய்விடு, உன் தலையை நான் கிள்ளித் தூர எறிவதற்குள் போய்விடு! அம்மா, நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் பயந்துபோய்விடாதீர்கள். நான் இங்கே தேநீருக்குத் தண்ணீர் போடுகிறேன், வேறொன்றுமில்லை. அடடே அருமையான அடுப்புக் கரி இருக்கிறதே-ஊறப்போட்ட கரியா?”

அவன் மெளனமாளான், தாய் சமையலறைக்குள் நுழைந்தபோது, அவன் அடுப்புக்கு எதிராக இருந்து உலையை ஊதிக்கொண்டிருந்தான்.

“பயப்படாதீர்கள். அம்மா, அவனை நான் தொடவேமாட்டேன்” என்று தலையை திருப்பாமலே சொன்னான் ஹஹோல்: “நான் ரொம்ப சாது, வெந்துபோன கிழங்கு மாதிரி. அப்புறம் ஏ, வீரசூரா, நீ இதை ஒன்றும் கேட்க வேண்டாம். தெரிந்ததா? உண்மையிலேயே. எனக்கு அவன்மீது ரொம்பப் பிரியம். ஆனால் அவன் போட்டிருக்கிறானே, ஒரு கையில்லாச் சட்டை, அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை, அவனுக்கு அந்தப் புதுச் சட்டைமேலே ஒரே மோகம், அதைப் போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறதாம். எப்போது பார்த்தாலும் அதையே போட்டுக்கொண்டு தொப்பையைத் தள்ளிக்கொண்டு போகிறதும் வருகிறதும். ஒவ்வொருவனையும் வழிமறித்து, ‘பார்த்தாயா? எவ்வளவு அருமையான சட்டை’ என்று பெருமை பீற்றிக்கொள்கிறதும்தான் அவனுக்கு வேலையாய்ப் போயிற்று. நன்றாய்த் தானிருக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருத்தனையும் இடித்துக்கொண்டு செல்லாவிட்டால் என்ன? ஏற்கெனவே இங்கு நெரிசல்.”

“ஏய்! எவ்வளவு நேரம்தான் நீ இப்படிக் கதை அளக்கப் போகிறாய்?” என்று சின்னச் சிரிப்போடு கேட்டான் பாவெல், “நீதான் எனக்கு ஒரு தடவை புத்தி சொல்லியாயிற்றே. இன்னும் என்ன?”

ஹஹோல் தரையிலே உட்கார்ந்து தன்னிரு கால்களையும் அடுப்புக்கு இருபுறமும் நீட்டிப் போட்டுக் கொண்டு அவனைப் பார்த்தான். தாய் வாசல் நிலையருகில் நின்று அந்திரேயின் பின் தலையை அன்பு ததும்பக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவன் தன்னிரு கைகளையும் பின்னால் ஊன்றியவாறு உடலைத் திருப்பி, பாவெலையும் தாயையும் பார்த்தான்.

“நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப நன்றாயிருக்கிறீர்கள்” என்று சொல்லிக்கொண்டே ஓரளவு சிவந்து கன்றிப்போயிருந்த தன் கண்களை இமை தட்டிக்கொண்டான்.

பாவெல் குனிந்து அவன் கையைப் பிடித்தான்.

“அடடே. இழுக்காதே. என்னைக் கீழே தள்ளிவிடுவாய்” என்றான் ஹஹோல்.

“எதற்காக வெட்கப்படுகிறீர்கள்?” என்று கேட்டாள் தாய்; “நீங்கள் இரண்டுபேரும் கட்டித் தழுவி முத்தமிடுங்கள்.”

“என்ன, இந்த யோசனை எப்படி?” என்று கேட்டான் பாவெல்.

“பேஷாய் வா இப்படி” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான் ஹஹோல்.

அவர்கள் இருவரும் கட்டித் தழுவினார்கள். ஈருடலும் ஓருயிருமாக அங்கு நட்பு பிரகாசித்தது. தாயின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இது அழுகைக் கண்ணீர் அல்ல, ஆனந்தக் கண்ணீர்!

“பெண்களுக்கு அழுவதில் பிரியம்” என்று வழிந்த கண்ணீரை வெட்க உணர்ச்சியோடு துடைத்துக்கொண்டே பேசத் தொடங்கினாள் தாய், “அவர்கள் ஆனந்தம் வந்தாலும் அழுவார்கள், துக்கம் பொங்கினாலும் அழுவார்கள்,...”

ஹஹோல் பாவெலை மெதுவாக விலக்கிவிட்டான்.

“போதும்” என்று கூறிக்கொண்டே, தனது கண்களையும் துடைத்துவிட்டுக்கொண்டான் அவன். “ஆடி முடிந்துவிட்டது கன்றுக்குட்டி, இனி வெட்டிப் போடுவோம் வேகவைக்க. உன் அடுப்புக் கரியை உடைப்பிலேதான் கொண்டு போடவேண்டும். ஊதி ஊதி என் கண்களில்தான் கரி விழுந்து போயிற்று!”

“இந்த மாதிரிக் கண்ணீருக்கு வெட்கப்படவே தேவையில்லை!” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு ஜன்னலருகே சென்று உட்கார்ந்தான் பாவெல்.

அவனது தாய் அவனருகே சென்று உட்கார்ந்தாள். அவளது இதயத்தில் புதிய தைரியம் நிறைந்திருந்தது. அந்தத் துணிச்சலினால், அவளது துக்கம் ஒருபுறமிருக்க, அவளது மனம் நிறைவும் நிம்மதியும் பெற்று விளங்கியது.

“அம்மா, நீங்கள் ஒன்றும் எழுந்திருக்க வேண்டாம். நானே எல்லாவற்றையும் கொண்டு வந்துவிடுகிறேன்” என்று கூறிக்கொண்டே அந்த அறையை விட்டு அடுத்த அறைக்கு வந்தான் ஹஹோல். “கொஞ்ச நேரம் சும்மா இருங்கள். உங்கள் இதயத்தை இந்த மாதிரிப் பிழிந்தெடுத்த பிறகு கொஞ்சம் ஓய்வு தேவைதான்...”

அவனது செழுமை நிறைந்த குரல் மீண்டும் அவர்களிடையே ஒலிக்க ஆரம்பித்தது.

“இப்போது நாம் வாழ்க்கையிலேயே ஒரு புதிய ருசியைக் கண்டோம். மனித வாழ்க்கையிலேயே ஒரு புதிய சுகத்தை அனுபவித்தோம்!”

“ஆமாம்”, என்று தன் தாயைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னான் பாவெல்.

“இந்த அனுபவம் எல்லாவற்றையுமே மாற்றிவிட்டது” என்றாள் அவள்; “நம்முடைய துன்பமும் வேறு, இன்பமும் வேறு....”

“அப்படித்தானம்மா இருக்க வேண்டும்” என்றான் ஹஹோல் “என் அருமை அம்மா! இன்று ஒரு புதிய இதயம் பிறந்தது. புதிய இதயம் வாழ்வு கண்டது. மனிதன் முன்னேறிச் செல்கிறான்; பகுத்தறிவினால் அனைத்தையும் ஒளிரச் செய்தவாறே முன்னேறுகிறான். போகும்போதே “சர்வதேசத்தின் மக்கள் கூட்டமே! ஒரே குடும்பமாக ஒரே இனமாக ஒன்று சேருங்கள்!” என்று அறைகூவி அழைக்கிறான். அவனது அறைகூவலுக்கு எதிரொலியாக, உறுதிவாய்ந்த சகல இதயங்களும் ஒன்றுகூடிக் கலந்து மாபெரும் பேரிதயமாகி மகத்தான பலம் பெற்று மணிநாதமாக ஒலிக்கின்றன....”

நடுங்கித் துடிதுடிக்க முயலும் தன் உதடுகளை இறுகக் கடித்துக்கொண்டாள் தாய். அழுகை முட்டிக்கொண்டு வரும் தன் கண்களையும் அவள் இறுக மூடிக் கண்ணீரை உள்ளடக்கிக்கொண்டாள்.

பாவெல் ஏதோ பேசப் போவதைப்போல் கையை உயர்த்தினான். ஆனால் தாய் அவனைத் தன்பக்கம் இழுத்து மெதுவாக இரகசியமாகச் சொன்னாள்:

“அவன் பேசட்டும். நீ குறுக்கிடாதே” என்று குசுகுசுத்தாள்.

ஹஹோல் எழுந்து வந்து கதவருகே நின்றுகொண்டான்.

“மக்கள் இன்னும் எத்தனையெத்தனை துன்பங்களையோ பார்க்கப் போகிறார்கள். எவ்வளவோ இரத்தத்தை இன்னும் சிந்திப் பெருக்கப் போகிறார்கள். என்னுடைய இதயத்திலும் என்னுடைய அறிவிலும் நான் கொண்டிருக்கும் வேட்கைக்கு என்னுடைய துயரங்கள் எம்மாத்திரம்? என் உடம்பில் உள்ள இரத்தம்தான் எம்மாத்திரம்? இவை போதாது. நான் ஒளிக்கிரணம் வீசும் தாரகையைப் போல் இருக்கிறேன். நான் எதையும் தாங்க முடியும்; எதையும் சகித்துக்கொள்ள முடியும். ஏனெனில், “என் இதயத்தினுள்ளே பெருகும் பேரானந்தத்தை எந்தச் சக்தியும், எவரும் அழித்துத் துடைத்துவிட முடியாது. அந்தப் பேரானந்தத்தில்தான் என்னுடைய முழுபலமும் அடங்கியிருக்கிறது!”

அவர்கள் நடுதிசிவரையில் உட்கார்ந்து தேநீர் பருகினார்கள். வாழ்க்கையைப் பற்றியும் மாந்தர்களைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசிக்கொண்டார்கள்.

எப்போதாவது ஒரு கருத்து தனக்குத் தெளிவாகிப் புரியும் சமயத்தில், தாய் தனது கடந்த காலத்தை எண்ணிப் பெருமூச்செறிந்து கொள்வாள். அந்தக் கருத்தை நன்கு உணர்ந்து கொள்வதற்காக, அதைத் தனது துன்பம் நிறைந்த இங்கிதமற்ற பழைய வாழ்க்கைச் சம்பவங்களோடு பொருத்திப் பார்த்துக்கொள்வாள்.

அவர்களது உரையாடலிருந்து உற்சாகத்தில் அவளது பயபீதிகளெல்லாம் மறைந்தோடிப் பறந்துவிட்டன. அன்று, அவளது தந்தை அவளைப் பார்த்துக் கடுமையாகக் கூறியபொழுது தோன்றிய அந்த உணர்ச்சி மீண்டும் அவளிடம் தோன்றியது.

“முகத்தைச் சுழிப்பதிலே எந்தப் பிரயோசனமும் இல்லை. எவனோ ஒருவன்; முட்டாள்தனமாக, உன்னைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்வதற்கு முன் வந்து விட்டானோ, உடனே அவனை ஏற்றுக்கொள்; சந்தர்ப்பத்தை நழுவவிடாதே. எல்லாப் பெண்களும் கல்யாணம் செய்துதான் தீர வேண்டும். கல்யாணம் பண்ணி, குழந்தைகளைப் பெற்றுப்போட வேண்டியதுதான் தலைவிதி, குழந்தைகளோ ஒரே தொல்லைபிடித்த பாரச் சுமைதான். எல்லோரையும் போன்ற மனிதப் பிறவிதானே நீயும்?” என்று கூறினார் அவளது தந்தை.

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது அவளது கண் முன்னால் ஏதோ ஒரு தப்பிக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரே ஒரு மார்க்கம்தான் தோன்றுவது போலவும், அந்தப் பாதையே அவள் முன்னால் இருண்டு வெறிச்சோடிக் கட்டாந்தரையாக நீண்டுகிடப்பது போலவும் தோன்றியதுண்டு. அந்தக் தவிர்க்க முடியாத நெடு வழியில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவளது இதயத்தில் ஒரு குருட்டு அமைதியை உண்டாக்கியது. இன்றும் அதுபோலவே இருந்தது அவளுக்குத் தனக்கு வரப்போகும் புதிய துயரத்தை அவள் உணர முனைந்தபோது, தனக்குத்தானே, யாரோ ஒரு இனந் தெரியாத நபருக்குச் சொல்வது போலப் பேசிக்கொண்டாள்:

“வருவதை ஏற்றுக்கொள்!”

இந்த எண்ணம் அவளது இதய வேதனையைச் சமாதானப்படுத்தியது; அவளது இதயத்துக்குள்ளே தந்தி நாதம்போல் ஒலி எழுப்பியது.

ஆனால் அவளது மனத்தின் அதல பாதாளத்திலே, மங்கிய, எனினும் இடை நீங்காத நம்பிக்கையொன்றை அவள் வளர்த்து வந்தாள். எந்தச் சக்தியும் தன்னிடமிருந்து சகலவற்றையும் பறித்துச் சென்றுவிட முடியாது; நிச்சயம் ஏதாவது மிஞ்சவே செய்யும்மூமூஎன்பதே அந்த நம்பிக்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/23&oldid=1293073" இலிருந்து மீள்விக்கப்பட்டது