தாய்/25
வாசல் புறத்தில் யாரோ திடீரென வருவது கேட்டது. அவர்கள் இருவரும் திடுக்கிட்டு எழுந்து ஒருவரையொருவர் திருகத் திருகப் பார்த்துக்கொண்டனர்.
கதவை மெதுவாகத் திறந்துகொண்டு உள்ளே வந்தான் ரீபின்.
“வந்துவிட்டேன்!” என்று புன்னகையோடு தலைநிமிர்ந்து சொன்னான் ரீபின்; “அங்கும் இங்கும் எங்கும் போனான் தாமஸ்; ஆடியோடித் திரும்பி வந்தான் தாமஸ்!”[1]
அவன் ஒரு கம்பளிக் கோட்டு போட்டிருந்தான். அதன் மீது தார் எண்ணெய் படிந்திருந்தது. காலிலே ஒரு ஜோடி கட்டைப் பாதரட்சைகள்; தலையிலே ஒரு கம்பளித் தொப்பி, அவனது இடைவாரிலே இரண்டு கையுறைகள் தொங்கிக்கொண்டிருந்தன.
“உடல்நலம் எப்படி? பாவெல், உன்னை விடுதலை பண்ணிவிட்டார்களா? ரொம்ப நல்லது. என்ன பெலகேயா நீலவ்னா செளக்கியமாயிருக்கிறாயா?” அவன் தன் வெள்ளைப் பல்லெல்லாம் தெரிய இளித்துச் சிரித்தான். அவனது குரல் முன்னைவிடக் கனிந்திருந்தது. அவனது முகத்தில் அளவுக்கு மீறி தாடி வளர்ந்து மண்டியிருந்தது,
அவனைப் பார்த்ததில் தாய்க்குச் சந்தோஷம். அவனது கருத்துப்போன அகன்ற கையைப் பற்றிப் பிடிப்பதற்காக அவள் அவன் அருகே சென்றாள்.
“அம்மாடி!” என்று ஆழ்ந்த பெருமூச்சுவிட்டாள் அவள், அப்படிப் பெருமூச்சு விடும்போது, தார் எண்ணெயின் காரநெடி அவளது சுவாசத்தில் நிரம்பிக் கமறியது. “உன்னைப் பார்த்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ரியுமா?”
பாவெல் புன்னகை புரிந்தான். ரீபினைக் கூர்ந்து பார்த்தான்.
“நல்ல முஜீக்”
பிறகு ரீபின் தன் மேலாடையைக் களைய முனைந்தான்.
“ஆமாம் நான் பழையபடியும் முஜீக் ஆகிறேன். நீங்களெல்லாம் கனவான்களாகிக் கொண்டிருக்கிறீர்கள். நான் மட்டும் எதிர்மாறான திசையில் போய்க்கெண்டிருக்கிறேன்!”
அவன் தன் பல நிறச் சட்டையை ஒழுங்குபடுத்தியவாறு அறைக்குள் நடந்தான்; சுற்றுமுற்றும் பார்த்தான்.
“புத்தகங்களைத் தவிர. இங்கு புதிதாக ஒன்றையும் காணோம். சரி, எனக்கு நீ எல்லா விவரத்தையும் சொல்லு.”
அவன் தன் கால்களை அகட்டிப் போட்டவாறு உட்கார்ந்து முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொண்டு, தனது கரிய கண்களால் பாவெலையே பார்த்தவாறு அவன் சொல்லப்போகும் பதிலை எதிர்நோக்கிப் புன்னகை செய்தபடி இருந்தான்.
“எல்லாம் நன்றாய்த் தானிருக்கிறது” என்றான் பாவெல்.
“உழுகிறோம், விதைக்கிறோம், கதிர்கண்டு களிக்கிறோம்: வட்டிக்கிறோம் பீரை, தூங்கிக் கழிக்கிறோம் நாளை — அப்படியா?” என்று கூறிச் சிரித்தான் ரீபின்.
“சரி. நீங்கள் எப்படிக் காலத்தைப் போக்குகிறீர்கள், மிகயீல் இவானவிச்?” என்று அவனுக்கு எதிராக உட்கார்ந்தான் பாவெல்.
“நான் ஒழுங்காகத்தான் காலம் தள்ளுகிறேன். எகில்தேயவோ என்னும் ஊரில் வசிக்கிறேன். அந்த ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? நல்ல ஊர்; சின்னப் பட்டணம். வருஷத்திலே இரண்டு சந்தை கூடும், சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கிறார்கள். எல்லோரும் மோசமான ஜனங்கள், அவர்களுக்குச் சொந்தத்தில் நிலம் கிடையாது. எல்லாம் குத்தகை நிலம்தான். செழிப்பானதல்ல: அட்டை போன்ற ஒரு பண்ணைக்காரனிடம் நானும் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன், பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல அவர்கள் அங்கு ஏராளம். நிலக்கரியை எரித்து தார் எண்ணெய் வடிக்கிறோம். இங்கே சம்பாதித்ததில் அங்கே கால்வாசிதான் சம்பாத்தியம். வேலையோ இரண்டு மடங்கு கஷ்டம்! ஹூம்! எங்களை உறிஞ்சித் தீர்க்கிறாளே நிலச்சுவான்தார் —அவனிடம் நாங்கள் ஏழுபேர் வேலை பார்க்கிறோம். அவர்கள் எல்லாரும் நல்லவர்கள். இளவட்டங்கள். என்னைத் தவிர மற்றவரெல்லாம் உள்ளூர் ஆட்கள். எல்லோருக்கும் எழுதப்படிக்கத் தெரியும். அவர்களில் ஒருவன் பெயர் எபீம். அவன் கொஞ்சம் தலைக்கனம் பிடித்த பயல், அவனோடு மாரடிப்பது எப்படி என்பது பெரிய பிரச்சினை!”
“உங்கள் வேலையெல்லாம் எப்படி? அவர்களோடு நமது கொள்கையை நீங்கள் விவாதிப்பதுண்டா?” என்று ஆர்வத்தோடு கேட்டான் பாவெல்.
“நான் ஒன்றும் பேசாமல் சும்மா இருக்கவில்லை. ஆமாம். நீயும் தெரிந்துகொள். நீ கொடுத்த பிரசுரங்கள்— முப்பத்திநாலா? அத்தனையும் என் வசம் இருக்கின்றன. ஆனால், நான் பிரச்சாரம் செய்வதெல்லாம் பைபிளைத்தான். பைபிளிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பெரிய புத்தகம்; மேலும் அரசாங்கச் சார்புள்ள புத்தகம். பாதிரி சைனாடின் அங்கீகாரம் பெற்ற புத்தகம். அதில் யாரும் லகுவில் நம்பிக்கை கொண்டுவிடுவார்கள்.”
அவன் சிரித்துக்கொண்டே பாவெலை நோக்கிக் கண்ணைச் சிமிட்டினான்.
“ஆனால். அதுமட்டும் போதாது. நான் உன்னிடம் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு போகத்தான் வந்தேன். என்னோடு எபீமும் வந்திருக்கிறான். அவர்கள் எங்களை ஒரு வண்டி தார் எண்ணெயைக் கொண்டுபோகச் சொன்னார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உன் வீட்டுக்குப் பக்கமாக வந்தோம்; வந்து சேர்ந்தோம், சரி., எபீம் வருவதற்குள் நீ எனக்குப் புத்தகங்களை எடுத்துக் கொடு. அவனுக்கு இந்த விஷயமெல்லாம் ரொம்பத் தெரியக்கூடாது.”
தாய் ரீபினையே பார்த்தாள், அவனது ஆடையணிகளின் மாறுதல்களைத் தவிர வேறு ஏதோ முறையிலும்கூட அவன் மாறிப்போயிருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. அவனது பாவனைகூட முன்னை மாதிரி அழுத்தமுடையதாக இல்லை. கண்களில் ஏதோ கள்ளத்தனம் நடமாடியது, முன்னைப்போல் அவை விரிந்து நோக்கவில்லை.
“அம்மா, போய் அந்தப் புத்தகங்களை வாங்கி வருகிறீர்களா? அங்குள்ளவர்களுக்கு எந்தப் புத்தகங்கள் என்பது தெரியும். நாட்டுப்புறத்துக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்கள் என்று மட்டும் சொன்னால் போதும்” என்று சொன்னான் பாவெல்.
“அதற்கென்ன? தேநீர் கொதித்து முடிந்தவுடன் உடனே போகிறேன்” என்றாள் தாய்.
“என்ன பெலகேயா நீலவ்னா,. இந்த விவகாரத்தில் நீயும் கலந்துவிட்டாயா?” என்று கேட்டுச் சிரித்தான் ரீபின்; “ஹும். அங்குள்ள ஜனங்களில் எத்தனையோ பேருக்குப் புத்தகங்கள் தேவை. படிக்க வேண்டும் என்ற ஆர்வம். உள்ளூரில் ஓர் உபாத்தியாயர் இருக்கிறார். இது அவருடைய வேலை. ரொம்ப நல்லவர். அவரும் தேவாலய குருக்கள் வழியில் வந்தவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் ஓர் உபாத்தியாயினியும் இருக்கிறாள். ஆனால் அவர்கள் தடைசெய்யப்பட்ட புத்தகங்களைத் தொடுவதில்லை. வேலை போய்விடும் என்ற பயம். ஆனால், எனக்கு அந்தத் தடை பண்ணப்பட்ட புத்தகங்கள்தான் தேவை. கொஞ்சம் காரசாரமான புத்தகங்கள்தான் நல்லது. நான் அவற்றைப் பையப்பைய அவர்கள் மத்தியில் பரப்பிடுவேன். போலீஸ்காரரோ, தேவாலயக் குருக்களோ அந்தப் புத்தகங்களைக் காண நேர்ந்தால், என்னைக் குற்றம் கூறுவார்களா? அந்த உபாத்தியாயர்கள் பாடுதான் ஆபத்து. அதற்குள் நான் சமயம் பார்த்து ஒதுங்கியிருந்துவிடுவேன்.”
அவன் தனது புத்திசாலித்தனத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்,
“கரடிபோலப் பாவனை, குள்ள நரியைப்போல வாழ்க்கை ” என்று நினைத்தாள் தாய்.
“இந்த மாதிரிச் சட்ட விரோதமான புத்தகங்களைப் பரப்பியதாக உபாத்தியாயர்கள் மீது சந்தேகப்பட்டால், அவர்களைச் சிறையில் போடுவார்கள் என்று எண்ணுகிறீர்களா?” என்று கேட்டான் பாவெல்.
“நிச்சயமாய்ப் போடத்தான் போடுவார்கள் அதனால் என்ன?” என்றான் ரீபின்.
“ஆனால் குற்றவாளி நீங்கள்தான்; அவர்களல்ல. நீங்கள்தான் சிறைக்குப் போகவேண்டும்.”
“நீ ஒரு எமகாதகப் பேர்வழி!” என்று முழங்காலில் தட்டிக்கொடுத்துக்கொண்டு சிரித்துச் சொன்னான் ரீபின்; “என்னை யார் சந்தேகப்படுவது? முஜீக்குகள் இந்த மாதிரி விவகாரங்களில் ஈடுபட மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். புத்தகங்கள் என்பது படித்த சீமான்களின் விவகாரம், அவர்கள்தான் அதற்குப் பதில் அளிக்க வேண்டும்.”
ரீபின் சொல்வதை பாவெல் புரிந்துகொள்ளவில்லை என உணர்ந்தாள் தாய். பாவெல் தனது கண்களைச் சுருக்கி விழிப்பதை அவள் கண்டாள். அவன் கோபமுற்றிருப்பதை உணர்ந்தாள்.
“மிகயீல் இவானவிச் இந்த வேலையைத் தானே செய்துவிட்டு, பிறர்மீது பழியைப் போடப் பார்க்கிறாரோ.....” என்று மெதுவாகவும், எச்சரிக்கையாகவும் சொன்னாள் தாய்.
“அதுதான் சங்கதி!” என்று தன் தாடியைத் தட்டிவிட்டுக்கொண்டு கூறினான் ரீபின். “தற்காலிகமாக!”
“அம்மா!” என்று வறண்ட குரலில் சொன்னான் பாவெல்; “நம்மில் யாராவது ஒருவன்—அந்திரேய் என்றுதான் வைத்துக் கொள்ளேன் — ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டு எனக்குப் பின்னால் வந்து ஒளிந்து கொண்டான் என்று வைத்துக்கொள், அப்புறம் அவனுக்குப் பதில் என்னைச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்துப் பார், உனக்கு என்ன உணர்ச்சியம்மா உண்டாகும்?”
தாய் திடுக்கிட்டு, ஒன்றும் புரியாதவளாய் மகனைப் பார்த்தாள்.
“தோழனுக்குத் தோழன் இப்படித் துரோகம் செய்ய முடியுமா? சே! அது என்ன வேலை?” என்று தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள் அவள்.
“ஆஹா! பாவெல், உன்னை இப்போது தான் தெரிந்து கொண்டேன்” என்று இழுத்தான் ரீபின். பிறகு அவன் தாயின் பக்கம் திரும்பி, கேலியாகக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு : “இது ஒரு நாசூக்கான விவகாரம்தான், அம்மா” என்றான். மீண்டும் அவன் பாவெலை நோக்கித் திரும்பி, உபதேசம் பண்ணுகிற தோரணையில், பேச ஆரம்பித்தான்; “தம்பி! உன் எண்ணங்கள் எல்லாம் இன்னும் பிஞ்சாய்த்தானிருக்கின்றன, பழுக்கவில்லை. சட்டவிரோதமான காரியம் என்று வரும்போது, கெளரவத்தையோ, நாணயத்தையோ பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நீயே யோசித்துப்பார், முதன் முதல் அவர்கள் சிறையில் தள்ளப்போவது எவன் கையில் புத்தகம் இருந்ததோ அவனைத்தான்: உபாத்தியாயர்களை அல்ல. இது முதலாவது, இரண்டாவது, உபாத்தியாயர்கள் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள் என்றே வைத்துக்கொள். அந்தப் புத்தகங்களிலும் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் உள்ள உண்மைகள் இருக்கத்தான் செய்யும், வார்த்தைகள்தான் வித்தியாசமாயிருக்கும். விஷயம் ஒன்றுதான். வேண்டுமானால், நீ தரும் புத்தகங்களில் இருப்பதைவிட, அதில் உண்மை கொஞ்சம் குறைவாக இருக்கலாம். சுருங்கச் சொன்னால், நான் எந்தக் கொள்கைக்காக வாழ்கிறேனோ அதே கொள்கைக்காகத்தான் அவர்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் சுற்றி வளைத்துத் திரிகிறார்கள். நான் நேர் பாதையில், விரைந்து முன்னேறிப் போகிறேன். அவ்வளவுதான். முதலாளிகளின் கண்ணோட்டத்தின்படி பார்த்தால், எங்கள் இருவரையுமே தண்டிக்க வேண்டியதுதான். சரிதானே? இது இரண்டாவது. மூன்றாவதாக ஒரு விஷயம் இருக்கிறது. அவர்களுக்கும் எனக்கும் தொடர்பே கிடையாது. நடந்து செல்லும் தரைப்படை குதிரைப்படையாட்களோடு சிநேகம் கொள்ள முடியாது. முஜீக்காயிருந்தால் நான் அந்த மாதிரி நடந்துகொள்ளமாட்டேன். ஆனால் அந்த உபாத்தியாயரோ ஒரு பாதிரியாரின் பிள்ளை, உபாத்தியாயினியோ. ஒரு பண்ணையாரின் மகள், அவர்கள் இருவரும் ஜனங்களை. ஏன் தூண்டிவிடப் போகிறார்கள்? என்னைப் போன்ற ஒரு முஜீக்குக்கு அந்தக் கனவான்களின் மனதில் இருப்பது எட்டாது. எனக்கு நான் செய்கின்ற காரியம் நன்றாய்த் தெரியும். அவர்கள் — அந்தப் படித்த சீமான்கள் — எதை நோக்கிச் செல்கிறார்கள் என்பது எனக்குக் கொஞ்சம் கூடத் தெரியாத, புரியாத விஷயம். ஆயிரம் வருஷ காலமாக அந்தக் கனவான்கள் தங்கள் இடத்தில் சுகமாக வாழ்ந்துகொண்டு, முஜீக்குகளின் முதுகுத்தோலை உரித்தெடுக்கிறார்கள், இப்போது மட்டும் அவர்கள் திடுதிப்பென்று முஜீக்குகளின் கண்களை மறைத்திருக்கும் திரைகளைத் தங்கள் கைகளாலேயே விலக்கிவிடுவார்களா? எனக்கு அந்த மாதிரியான கட்டுக் கதைகளில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்று சொல்வது அபாரமான கற்பனை. ஆமாம்! சீமான்களுக்கும் எனக்கும் வெகு தூரம், நீ குளிர்காலத்தில் வயல் வெளி வழியாகக் குறுக்கே நடந்து செல்கிறாய் என்று வைத்துக்கொள். ரோட்டுக்கரைக்கு வந்தவுடன் உனக்கு எதிராக ஏதோ ஒன்று தெரிகிறது என்றும் நினைத்துப் பார். அதென்ன அது? ஒரு நரி, அல்லது ஓநாய். இல்லாவிட்டால் ஒரு நாயாக இருக்கும். என்னவென்று தெரியவில்லை.”
தாய் தன் மகனைப் பார்த்தாள். அவன் மகிழ்ச்சியற்றுக் காணப்பட்டான்.
ரீபினின் கண்களில் ஒரு கரிய ஒளி பிரசாசித்தது. அவன் ஆத்ம திருப்தியோடு பர்வெலையே பார்த்துக்கொண்டும் தாடியைத் தடவிக்கொடுத்துக்கொண்டும் இருந்தான்.
“நல்லொழுக்கத்தைப் பற்றி நினைப்பதற்கு இது காலமில்லை” என்று தொடங்கினான் ரீபின்: “வாழ்க்கையோ ஒரே சிரம் மயமாயிருக்கிறது. நாய்கள் ஒன்று கூடினால் ஆட்டுமந்தையாகிவிடாது. ஒவ்வொரு நாயும் அதனதன் இஷ்டப்படி குலைத்துத்தள்ளும்.
“சாதாரண மக்களின் நலத்துக்காக, படித்த சீமான்களில் பலபேர் மரணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்று தனக்குத் தெரிந்தவர்கள் முகங்களையெல்லாம் மனக் கண் முன் கண்டவாறே பேசினாள் தாய்; “அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையுமே சிறையில் கழித்துவிடுகிறார்களே...”
“அவர்களெல்லாம் ஒரு தனி ரகம்’ என்றான் ரீபின்.. “முஜீக் பணக்காரனாகி, படித்த கனவான்களோடு சரிசமானம் பெறுகிறான். படித்த கனவான்கள் ஏழைகளாகி, முஜீக்குகளின் நிலைக்குத் தாழ்ந்துவிடுகிறார்கள். பணமில்லாவிட்டால் மனம் சுத்தமாயிருக்கும். பாவெல், நீ எனக்குச் சொன்ன விஷயம் ஞாபகம் இருக்கிறதா? ஒரு மனிதன் எப்படி வாழ்கிறானோ, அப்படியேதான் சிந்திக்கிறான் என்று சொன்னாயே, அதுதான் சங்கதி! தொழிலாளி ‘இல்லை’ என்று ஒரு விஷயத்தைச் சொன்னால், முதலாளி அதே விஷயத்தை ‘இருக்கிறது’ என்பான். தொழிலாளி ‘ஆம்’ என்று சொன்னால் முதலாளி தன் குணத்துக்கேற்ப ‘இல்லை’ என்று கத்துவான், இதே முரண்பாடுதான் முஜீக்குகளுக்கும் படித்த சீமான்களுக்கும் இடையில் நிலவுகிறது. முஜீக் ஒருவன் வயிறு நிறையச் சாப்பிடுவதைப் பார்த்தால் உடனே பண்ணைபாருக்கு வயிற்றைக் கலக்கிவிடும். ஒவ்வொரு வர்க்கத்திலும் சில நாய்ப்பிறவிகள் இருக்கத்தான் இருப்பார்கள். நான் ஒன்றும் எல்லா மூஜிக்குகளுக்காகவும் பரிந்து பேசவில்லை....”
அவன் தனது பலம் பொருந்திய கரிய முகத்தைத் தொங்கவிட்டவாறே எழுந்து நின்றான். பற்களைப் பட்டென்று கடித்த மாதிரி, அவனது தாடி நடுங்கி அசைந்தது. எழுந்து நின்றுகொண்டு அவன் மெதுவான தொனியில் மேலும் பேசினான்:
“ஐந்து வருஷ காலமாக நான் ஒவ்வொரு தொழிற்சாலையாய் இடம் மாறித் திரிந்தேன். கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன். புரிகிறதா? என்னால் வாழ முடியவே இல்லை.. நீ இங்கே வாழ்கிறாய், அங்கு நடக்கின்ற அநியாயங்கள் எல்லாம் உனக்குத் தெரியாது. அங்கே பசிக் கொடுமை மக்ளை நிழல்போலத் தொடர்ந்து வாட்டுகிறது. தின்பதற்கு ஒரு ரொட்டி, சீனி எதுவுமே — கிடைப்பதில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை, பசிப்பேய் அவர்களது இதயங்களையே தின்று விழுங்குகிறது; முகங்களைக் கோரமாக்குகிறது, அந்த ஜனங்கள் வாழவில்லை; எட்டாத தேவைகளில் அழுகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் அவர்களைச் சுற்றியுள்ள அதிகாரிகளோ, அவர்கள் கையில் ஒரு சிறு ரொட்டித் துண்டுகூடச் சிக்கிவிடாதபடி, கழுகுகளைப்போலக் கண்காணித்து வருகிறார்கள்! அப்படியே தப்பித்தவறி ஒரு முஜீக்கின் கையில் கொஞ்சம் உணவு கிட்டிவிட்டால், உடனே அதனைத் தட்டிப் பறிப்பதோடு. அவனது கன்னத்திலும் அறைகிறார்கள்.....”
ரீபின் மேசை மீது கையைத் தாங்கியவாறு திரும்பி பாவெலை நோக்கித் தலையைச் சாய்த்தான்:
“அந்தக் கொடிய வாழ்க்கையைக் கண்டு என் வயிறுகூட உள்ளடங்கிப் போயிற்று. அந்த வாழ்க்கையை என்னால் தாங்க முடியாது என்று நினைத்தேன். அப்புறம் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்: ‘இல்லை, நீ அப்படிச் செய்யக்கூடாது. மனதைத் தளரவிடக்கூடாது. இந்த வாழ்விலிருந்து நீ பிரிந்து செல்லக்கூடாது. உன்னால் அவர்களுக்கு உணவு அளிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நீ அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்! அதனாலேயே அங்கு தங்கினேன். மக்களுக்காகவும், மக்களின் மீதும் எனக்கு ஏற்பட்டுள்ள பகைமை, வெறுப்பு எல்லாம் என் இதயத்துக்குள்ளே பொருமிப் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வெறுப்புணர்ச்சி இன்னும் என் மனதை ஏன் இதயத்தைக் கத்தி போல் குத்திக்கொண்டிருக்கிறது!”
மெதுவாக அவன் பாவெலின் அருகே சென்று அவனது. தோள்மீது கையைப்போட்டான். அவனது நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. கைகள் நடுங்கியது.
“பாவெல். எனக்கு உன் உதவி தேவை. நீ எனக்குப் புத்தகங்கள் கொடும் ஒரு முறை படித்தாலும், இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்து, சிந்தித்துச் சிந்தித்து வெறிகொள்ளச் செய்யும் புத்தகங்களாகக் கொடு. அவர்களது மூளையிலே ஒரு முள்ளம் பன்றியைக் குடியேற்ற வேண்டும். தனது முட்களைச் சிலிர்த்துக்கொண்டு நிற்கும் முள்ளம் பன்றி! அப்போதுதான் அவர்கள் விழிப்படைவார்கள், உங்களுக்காக எழுதுகின்ற நகரவாசிகளிடம் கிராமாந்திர ஜனங்களுக்காகவும் ஏதேனும் புத்தகங்கள் எழுதச்சொல். அவர்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் ஒரே துடிப்பும் உணர்ச்சியும் உஷ்ணமும் பொருந்தியனவாக இருக்கட்டும். கொள்கைக்காகக் கொலை செய்யவும் தயாராகும் வெறியை அந்த நூல்கள் மக்களுக்கு உண்டாக்கட்டும்!”
அவன் தன் கையை உயர்த்தி, ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக நிறுத்தி, தெளிவோடு அழுத்தத்தோடு சொல்ல ஆரம்பித்தான்:
“மரணம்தான் மரணத்தை வெல்லும்! அதாவது மக்களை மறுவாழ்வு எடுக்கச் செய்வதற்காக, மக்கள் சாகத்தான் வேண்டும். பூமிப் பரப்பிலுள்ள லட்சோப லட்சமான மக்கள் புனர்ஜென்மம் எடுத்து, புதுவாழ்வு வாழ்வதற்காக, நம்மில் ஆயிரம் பேராவது சாகத் தயாராயிருப்போம்! அதுதான் சங்கதி! மக்களின் புனர்ஜென்மத்துக்காக, விழிப்புப் பெற்ற மக்கள் குலத்தின் எழுச்சிக்காகச் சாவது மிகவும் சுலபம்!”
தாய் தேநீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்; ரீபினை ஏறிட்டுப் பார்த்தாள். அவனது பேச்சின் கனமும் வேகமும் அவளை அழுத்தி நசுக்கிக்கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனைப் பார்த்தவுடன் தனது கணவனை ஞாபகமூட்டும் ஏதோ ஓர் அம்சத்தை அவனிடம் காண்பது போலிருந்தது. அவளது கணவனும் இப்படித்தான். தன் பற்களைத் திறந்து காட்டிக் கொண்டிருப்பான், தனது சட்டைக் கைகளைச் சுருட்டி விடும்போது, இந்த மாதிரித்தான் கையை வீசிக்கொள்வான். அவனிடமும் இதே மாதிரிதான் பொறுமையற்ற கொடூரம் காணப்பட்டது. அது ஒரு ஊமைக் கொடூரம். ஆனால் இதுவோ ஊமையல்ல. இவனைக் கண்டு, அவளுக்குப் பயும் தோன்றவில்லை.
“நாம் இதைச் செய்யத்தான் வேண்டும்” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் பாவெல், “நீங்கள் எங்களுக்குச் சகல புள்ளி விவரங்களையும் கொடுங்கள். நாங்கள் உங்களுக்காக ஒரு பத்திரிகையை நடத்துவோம்.”
தாய்க்குத் தன் மகனைப் பார்த்ததும் உள்ளூர மகிழ்ச்சி பொங்கிச் சிரிப்புப் பிறந்தது. அவள் எதுவுமே பேசாமல் உடை உடுத்திக் கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பிப் போனாள்.
“நல்லது! நாங்கள் உனக்குச் சகல விவரங்களும் அனுப்புகிறோம். வாண்டுப் பிள்ளைகளுக்குக் கூடப் புரியும்படியாக, அவ்வளவு எளிமையான நடையில் நீங்கள் புத்தகங்களை எழுதி வெளியிடுங்கள்” என்றான் ரீபின்.
சமையலறையின் கதவு திறந்தது. யாரோ உள்ளே வந்தார்கள்.
சமையலறைப் பக்கம் கண்ணைத் திருப்பிய ரீபின்: “இவன்தான் எபீம்! இங்கே வா எபீம்! இவன்தான் எபீம்! இதுதான், பாவெல்! இவனைப்பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான் ரீபின்.
பாவெலுக்கு முன்னால் உயரமாகவும் பரந்த முகமும் அழகிய கேசமும் உடையவளாயிருந்த எபீம் நின்றான். சின்னஞ்சிறு கம்பளிக்கோட்டு அணிந்திருந்தான். ஒரு கையில் தன் தொப்பியைப் பிடித்தவாறு. அவன் தன் கண்களைத் தாழ்த்திச் சுருக்கிப் பாவெலைப் பார்த்தான். அவனைப் பார்த்தால் அவன் மிகவும் பலம் பொருந்தியவனாயிருக்கவேண்டும் எனத் தோன்றியது.
“உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று கரகரத்த குரலில் கூறினான் அவன். பாவெலோடு அவன் கை குலுக்கிய பிறகு, இரு கைகளாலும் சிலிர்த்து நிற்கும் தன் தலை மயிரைக் கோதி விட்டுக்கொண்டான். பிறகு அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்குள்ள புத்தகங்கள் கண்ணில் பட்டதும், அவன் அவற்றை நோக்கி மெதுவாய்ச் செல்ல ஆரம்பித்தான்.
“அவற்றைப் பார்த்துவிட்டான்!” என்று பாவெலை நோக்கிக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே சொன்னான் ரீபின். எபீம் திரும்பி ரீபினைப் பார்த்தான், பிறகு புத்தகங்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.
“படிப்பதற்கு எவ்வளவு விஷயம் இருக்கிறது” என்று வியந்து கூறினான் அவன். “ஆனால் உங்களுக்குப் படிப்பதற்கு நேரமே கிடையாது. நீங்கள் மட்டும் கிராமத்தில் வாழ்ந்தால் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும்......”
“ஆமாம். நிறைய நேரம். குறைய ஆசை! இல்லையா?” என்றான் பாவெல்.
“ஏன்?அங்குப் படிக்க வேண்டுமென்ற ஆசை அதிகம்தான்” என்று தன் மோவாயைத் தடவி விட்டவாறு சொன்னான் அந்தப் பையன். “அங்குள்ள மனிதர்களும் தங்கள் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘புவிஇயல்’ இதென்ன புத்தகம்?”
பாவெல் விளக்கினான்.
“எங்களுக்கு இது தேவையில்லை” என்று கூறிக்கொண்டே அந்தப் பையன் அந்தப் புத்தகத்தை மீண்டும் அலமாரியிலேயே வைத்துவிட்டான்.
“பூமி எங்கிருந்து வந்தது என்பதைப்பற்றி முஜீக்குக்குக் கவலை கிடையாது” என்று உரத்த பெருமூச்சுடன். பேசத் தொடங்கினான் ரீபின், “அது கைக்குக் கை எப்படி மாறுகிறது என்பதும், மக்களிடமிருந்து பண்ணையார் எப்படி. அதைத் தட்டிப் பறிக்கிறார் என்பதைப்பற்றியும் தான் அவனுக்குக் கவலை. பூமி சுற்றிக் கொண்டிருந்தாலும், சுற்றாமல் அப்படியே நின்றாலும் அவனைப் பொருத்தவரையில் ஒன்றுதான். அந்தப் பூமி அவன் காலடியிலேயே கிடந்தாலும் சரி, அல்லது ஆகாசத்தோடு போய் ஒட்டிக்கொண்டாலும் சரி. அவனுக்கு அது நன்றாகச் சாப்பாடு மட்டும் போட்டால் போதும்!”
“அடிமை வாழ்வின் சரித்திரம்” என்ற ஒரு புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து வாசித்தான் எபீம். “இதென்ன, நம்மைப்பற்றிய புத்தகமா?”
“இந்தப் புத்தகத்தில் நமது ருஷ்ய அடிமை வாழ்வைப் பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே பாவெல் அவனிடம் வேறொரு புத்தகத்தை எடுத்து நீட்டினான், எபீம் அந்தப் புத்தகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். பிறகு அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்:
“இதெல்லாம் பழைய காலத்து விவகாரம்,”
“சரி, உங்களுக்குச் சொந்தமாக நிலம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டான் பாவெல்.
“இருக்கிறது. எனக்கும் என் சகோதரர் இருவருக்கும் சுமார் பத்தரை ஏக்கர் நிலம் இருக்கிறது. எல்லாம் ஒரே மணல் வெளி. பாத்திரம் விளக்க உதவுமே ஒழிய, பயிர் செய்ய உதவாத மண்”
ஒரு கணம் கழித்து மீண்டும் அவன் பேசத் தொடங்கினான்:
“நான் நிலத்தை விட்டுவிட்டேன். அதை வைத்துக் கொண்டு என்ன பிரயோஜனம்? சும்மா நம்மை வேலையில்லாமல் கட்டித்தான் போடும்; உணவு தராது. நாலு வருஷ காலமாய். நான் பண்ணைக் கூலியாளாகத்தான் வேலை பார்த்து வருகிறேன். மழைக்காலத்துக்குப் பிறகு நான் ராணுவ சேவைக்கும் செல்ல வேண்டும். ‘பட்டாளத்துக்குப் போகாதே. இப்போதெல்லாம் சிப்பாய்களைக் கொண்டு ஜனங்களை அடிக்கச் சொல்லுகிறார்களாம்’ என்று மாமா மிகயீல் சொன்னார். ஆனால் நான் போய்ச்சேரத்தான் எண்ணியிருக்கிறேன். ஸ்திபான் ராசின், புகச்சோவ் முதலியவர்கள் காலத்திலும் கூட, பட்டாளத்துக்காரர்கள் ஜனங்களை அடித்து நொறுக்கத்தான் செய்தார்கள். இதுக்கொரு முடிவு கட்ட வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவன் பாவெலைக் கூர்ந்து பார்த்தவாறே கேட்டான்.
“ஆமாம். காலம் மாறத் தொடங்கிவிட்டது!” என்று இளம் புன்னகையுடன் சொன்னான் பாலெல். “ஆனால் காலத்தைப் பரிபூரணமாக மாற்றுவது மிகவும் கடினமான காரியம். நான் சிப்பாய்களிடம் என்ன சொல்லவேண்டும், எப்படிச் சொல்லவேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.”
“நாங்கள் அதைக் கற்றுக் கொள்வோம்” என்றான் எபீம்.
“ஆனால், ராணுவ அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்துவிட்டார்களோ, அப்புறம் உங்களைச் சுட்டுக் கொன்று விடுவார்கள்” என்று எபீமைக் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே சொன்னான் பாவெல்.
“ஆமாம், அவர்களிடம் இரக்கச் சித்தத்தை எதிர்பார்க்கமுடியாது” என்று அந்தப் பையன் அமைதியுடன் ஆமோதித்துக்கொண்டே மீண்டும் புத்தகங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.
“தேநீர் அருந்து, எபீம்” என்றான் ரீபின். “நாம் சீக்கிரம் புறப்படவேண்டும்.”
“அதற்கென்ன? போவோம். அது சரி, புரட்சி என்பது என்ன? பெருங்கலகமா?” என்றான் எபீம்.
அதற்குள் அந்திரேய் அங்கு வந்து சேர்ந்தான். குளித்துவிட்டு வந்ததால் அவனது உடம்பெல்லாம் சிவந்துபோய் ஆவியெழும்பிக் கொண்டிருந்தது. முகத்தில் சோர்ந்த பாவம் காணப்பட்டது. அவன் ஒன்றுமே பேசாமல் எபீமோடு கைகுலுக்கிவிட்டு ரீபினுக்கு அடுத்தாற்போல் உட்கார்ந்தான், ரீபினைப் பார்த்ததும் லேசாகச் சிரித்துக்கொண்டான்.
“நீ ஏன் உற்சாகமே அற்றுப் போயிருக்கிறாய்?” என்று அவனது முழங்காலில் தட்டிக்கொண்டே கேட்டான் ரீபின்.
“ஒன்றுமில்லையே!” என்றான் ஹஹோல்.
“அவனும் ஒரு தொழிலாளிதானா?” என்று அந்திரேயைப் பார்த்துக் கேட்டான் பீம்.
‘ஆமாம். எதற்காகக் கேட்கிறாய்?’ என்றான் அந்திரேய்.
“இல்லை. அவன் இதற்கு முன் எந்த ஆலைத் தொழிலாளியையும் பார்த்ததே இல்லை. அவனுக்கு அவர்களைப் பற்றி ஒரு தனி அபிப்பிராயம்” என்றான் ரீபின்.
‘எப்படிப்பட்ட அபிப்பிராயம்?” என்றான் பாவெல்.
“உங்கள் எலும்புகள் கூர்மையானவை. ஆனால் விவசாயியின் எலும்புகள் மொட்டையானவை” என்று. அந்திரேயைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னான் பீம்.
“முஜீக் தன் கால்களை நிலத்தில் நன்றாகப் பதிய ஊன்றி நிற்கிறான்—நிலம் அவனுக்குச் சொந்தமில்லாவிட்டாலும், நிலத்தில் நிற்கும் உணர்ச்சி மட்டும் அவனை விட்டு நீங்குவதில்லை, அவன் பூமியைத் தொட்டு உணர்கிறான். ஆனால் ஆலைத் தொழிலாளியோ, அப்படியல்ல. அவன் ஒரு சுதந்திரமான பறவை. நிலம், வீடு என்று எந்தப் பற்றுதலும் அவனுக்கு கிடையாது. இன்றைக்கு இங்கே, நாளைக்கு எங்கேயோ? ஒரு பெண்ணின் ஆசைகூட, அவனை ஒரே இடத்தில் இருத்தி வைத்துவிட முடியாது. அவனுக்கும் அவளுக்கும் ஏதாவது ஒரு சின்னத் தகராறு வந்தாலும்போதும் உடனே அவளை விட்டு விலகி, வேறொரு இடத்தைத் தேடிப் புறப்பட்டுப் போய்விடுவான். ஆனால் முஜீக் அப்படியல்ல. இடத்திலிருந்து நகராமல் தன்னைச் சுற்றி மேன்மைப்படுத்திக்கொள்ள திரும்புவான். சரி, இதோ உன் அம்மா வந்துவிட்டாள்!” என்று பேசி முடித்தான் ரீபின்.
“சரி, எனக்கு ஒரு புத்தகம் இரவல் கொடுப்பீர்களா?” என்று பாவெலிடம் நெருங்கி வந்து கேட்டான் எபீம்.
“தாராளமாய்” என்றான் பாவெல்.
அந்தப் பையனின் கண்கள் பிரகாசம் அடைந்தன. “நான் திருப்பித் தந்துவிடுவேன்” என்று அவன் அவசர அவசரமாக பாவெலுக்கு உறுதிகூற முனைந்தான். “எங்களூர்காரர்கள் இந்தப் பிரதேசத்துக்குத் தார் எண்ணெய் ஏற்றிக் கொண்டு அடிக்கடி வருவார்கள். அவர்கள் மூலம் கொடுத்தனுப்புகிறேன்.”
“சரி. போக நேரமாச்சு” என்று தனது கோட்டையும் பெல்டையும் எடுத்து மாட்டிக்கொண்டு கூறினான் ரீபின்.
“இதோ, படிக்கப் போகிறேன்” என்று ஒரு புத்தகத்தைச் சுட்டிக் காட்டியவாறு புன்னகையோடு கூறினான் எபீம்.
அவர்கள் சென்றவுடன் பாவெல் உணர்ச்சிவயப்பட்டவனாக அந்திரேயின் பக்கம் திரும்பினான்.
“இவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டான்.
“ஹும்” என்று முனகினான் ஹஹோல். “இரண்டு புயல் மேகங்கள் மாதிரிதான்!”
“மிகயீல் இருக்கிறானே. அவனைப் பார்த்தால் தொழிற்சாலையிலேயே வேலை பார்த்தவன் மாதிரி தோன்றவில்லை- அசல் முஜீக் ரொம்பப் பயங்கரமான ஆசாமி” என்றாள் தாய்.
“நீ இங்கே இல்லாமல் போனது ரொம்ப மோசம்” என்று அந்திரேயை நோக்கி, பாவெல் சொன்னான், அந்திரேய் மேஜைக்கு எதிராக அமர்ந்து, தன் எதிரே இருந்த தேநீர்க் கோப்பையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பாவெல் மேலும் பேசினான். “நீ அடிக்கடி மனித இதயத்தைப் பற்றிப் பேசுகிறாயே. அவன் இதயத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீ கொஞ்சமாவது பார்த்திருக்க வேண்டும். ரீபின் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் படபடவென்று பொரிந்து தள்ளி, என்னைத் திணற அடித்துவிட்டான். அவனுக்குப் பதில் சொல்லக்கூட எனக்கு வாயெழவில்லை. அவன் இந்த மனித ராசியை எவ்வளவு கேவலமாக மதிக்கிறான்? மனித குலத்திடமே அவனுக்கு நம்பிக்கை இல்லை. அம்மா சொன்னது ரொம்ப சரி. ஏதோ ஒரு பயங்கரமான சக்திதான் அவனுள் குடிகொண்டிருக்கிறது!”
“நானும் அதைக் கவனித்தேன்’ என்று உணர்ச்சியற்றுக் கூறினான் ஹஹோல். “ஆட்சியாளர்கள் மக்களின் மனத்தில் விஷத்தை ஏற்றிவிட்டார்கள். மக்கள் மட்டும் ஒன்று திரண்டு கிளர்ந்தெழுந்தால். எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு வெறும் நிலம்தான் வேண்டும்; அந்த நிலத்தை வெறுமனே போட்டிருக்கவும் அவர்கள் செய்வார்கள். எல்லாவற்றையும் கிழித்தெறிந்துவிடுவார்கள்.”
அவன் மெதுவாகவே பேசினான்; அவன் மனதில் வேறு ஏதோ ஒரு சிந்தனை ஊடாடிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தாய் வந்து அவனது தோளைத் தட்டிக்கொடுத்தாள்.
“தைரியமாயிரு, அந்திரியூஷா’ என்றாள் தாய்.
‘கொஞ்சம் பொறு, அம்மா’ என்று மிகுந்த பரிவோடு கூறினாள் அவன். திடீரென்று அவன் உத்வேக உணர்ச்சியோடு மேஜை மீது ஓங்கிக் குத்திக்கொண்டே பேசினான்: “அது. உண்மைதான் பாவெல்! முஜீக் மட்டும் விழித்தெழுந்தால் அவனது நிலத்தைத் தரிசாகவே போட்டுவிடுவான். கொள்ளை நோய்க்குப் பிறகு மிஞ்சும் சாம்பலைப்போல, சகலவற்றையும் சுட்டெரித்துச் சாம்பலாக்கி, தான்பட்ட சிரமத்தின் வடுக்களையெல்லாம் தூர்த்துத் துடைத்துவிடுவான்!”
“அதன் பின் அவன் நம் வழிக்கு வந்து சேருவான்’ என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.
“ஆனால் அந்த மாதிரி நடக்காதபடி பார்த்துக்கொள்வதுதான் நமது வேலை. அவனைச் சரியான பாதையில் செலுத்துவதற்கு அவனை இழுத்துப்பிடிப்பது நமது வேலை. மற்றவர்களை விட, நாம்தான் அவனுக்கு மிகவும் நெருங்கியவர்கள். அவன் நம்மை நம்புவான், பின்பற்றுவான்.”
“ரீபின் கிராமத்துக்கென்று ஒரு பத்திரிகை வெளியிடும்படி சொன்னான்’ என்றான் பாவெல்.
“செய்ய வேண்டியதுதான்”
“அவனோடு நான் விவாதியாமல் போனது பெருந்தவறு’ என்று லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான். பாவெல்.
“பரவாயில்லை, இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது” என்று அமைதியாகக் கூறிக்கொண்டே, தன் தலைமயிரைக் கோதிக் கொடுத்தான் ஹஹோல். “நீ உன் வாத்தியத்தையே வாசித்துக் கொண்டிரு. பூமியில் அறைந்தாற்போல் அசைவற்று நிற்பவர்களைத் தவிர, மற்றவர்கள் உன் பாட்டுக்குத் தக்கபடி ஆட்டம் ஆடுவார்கள். நமக்குக் கீழே பூமி இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை என்று ரீபின் சொன்னதில் தவறில்லை. மேலும், நாம் பூமியில் காலூன்றி வெறுமனே நிற்கக்கூடாது. பூமியையே, அசைக்க வேண்டும். நாம் அசைக்கிற அசைப்பில், அதனோடு ஒட்டிக்கிடந்து ஊழலுகின்ற மக்களை உலுக்கி, பிடி தவறச் செய்யவேண்டும். அப்படிச் சொய்தால்தான் அவர்கள் அந்தப் பிடிப்பிலிருந்து விடுதலைப் பெறுவார்கள்...”
“உனக்கு எல்லாமே எளிதாக இருக்கிறது அந்திரியூஷா!” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் தாய்.
“ஆமாம். வாழ்க்கையைப் போல்!” என்றான் ஹஹோல்.
சில நிமிஷம் கழித்து அவன் பேசினான்.
“சரி. நான் வயல் வெளியில் கொஞ்சம் உலாவி வரப்போகிறேன்”
“குளித்த பிறகா? காற்று வேறு அடிக்கிறது. சளிப்பிடிக்கும்” என்று எச்சரித்தாள் தாய்.”
“கொஞ்சம் காற்றாடி வந்தால்தான் தேவலை” என்றான் அவன்.
“சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள், கொஞ்சம் பாடேன்!” என்றான் பாவெல்.
“வேண்டாம். நான் போகிறேன்.”
அவன் தனது உடைகளை மாட்டிக்கொண்டு ஒன்றுமே பேசாமல் வெளிக் கிளம்பினான்.
“அவன் மனம் என்னவோ சங்கடப்படுகிறது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.
“அந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து நீ அவன்மீது அதிகமான அன்போடு நடந்துகொள்கிறாய். அதைப்பற்றி எனக்கு மிகுந்த சந்தோஷம்” என்றான் பாவெல்.
“நானா? எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை. என்னவோ அவனை எனக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று. எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.”
“உனக்கு மிகவும் அன்பான மனம், அம்மா” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.
“நான் மட்டும் உனக்கு -உன் தோழர்கள் அனைவருக்கும்-உதவ முடிந்தால், கொஞ்சமேனும் உதவி செய்ய முடிந்தால்?எப்படி உதவுவது என்பது மட்டும் தெரிந்தால்?”
“கவலைப்படாதே. அம்மா நீ தெரிந்துகொள்வாய்.”
“எனக்கு அது மட்டும் தெரிந்துவிட்டால் அப்புறம் கவலையே இராது” என்று சிறு சிரிப்புடன் கூறினாள் தாய்.
“சரி, அம்மா, இந்தப் பேச்சைவிட்டு விடுவோம். ஆனால் ஒன்று மட்டும் ஞாபத்தில் வைத்துக்கொள். உனக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவன்.”
அவள் பேசாது சமையலறைக்குள் சென்றாள். தன் கண்களில் பொங்கும் கண்ணீரை அவன் பார்த்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பு அவளுக்கு.
அன்று இரவு ஹஹோல் வெகுநேரம் கழித்துத்தான் வீடு திரும்பினான். வந்தவுடனேயே அவன் படுக்கச் சென்றுவிட்டான்.
“நான் இன்றைக்குப் பத்து மைலாவது நடந்திருப்பேன்’.
“அதனால் பலன் இருந்ததா?” என்று கேட்டான் பாவெல்.
“தொந்தரவு பண்ணாதே, எனக்குத் தூக்கம் வருகிறது.”
அவன் அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை.
சிறிது நேரம் கழித்து, நிகலாய் வெஸோவ்ஷிகோவ் உள்ளே வந்தான். அவனது ஆடைகள் கிழிந்து கந்தல் கந்தலாயிருந்தன. ஒரே அழுக்கு மயமாகவும் அதிருப்தி நிறைந்தவனாகவும் அவன் வந்து சேர்ந்தான்.
“இஸாயை யார் கொன்றார்கள் என்று கேள்விப்பட்டாயா?” என்று பாவெலிடம் கேட்டுக்கொண்டே அவன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தான்.
“இல்லை’ என்று சுருக்கமாக விடையளித்தான் பாவெல்.
“எவனோ ஒருவன் வேண்டா வெறுப்பாக இந்தக் காரியத்தில் முந்திவிட்டான். நானே அந்தப் பயலைத் தீர்த்துக் கட்டவேண்டும் என்று இருந்தேன். நான் தான் அதைச் செய்திருக்க வேண்டும். அதற்கு நான்தான் தகுந்த ஆசாமி.”
“அந்தப் பேச்சை விடு, நிகலாய்” என்று நட்புரிமை தொனிக்கும் குரலில் சொன்னான் பாவெல்.
‘நான் நினைத்தேன்’ என்று அன்போடு பேச ஆரம்பித்தாள் தாய். ‘உனக்கு மிகவும் மிருதுவான மனம் இருக்கிறது. நீ ஏன் இப்படி விலங்கு மாதிரி கர்ஜிக்கிறாய்?”
அந்தச் சமயத்தில் நிகலாயைப் பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது அம்மைத் தழும்பு விழுந்த முகம் கூடக் கவர்ச்சிகரமாகத் தோன்றியது.
‘இந்த மாதிரிக் காரியங்களுக்குத் தவிர, வேறு எதற்கும் நான் லாயக்கில்லை’ என்று தன் தோளைச் சிலுப்பிக்கொண்டே சொன்னான் நிகலாய், ‘நானும் நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். இந்த உலகில் என் இடம் எது என்று. ஆனால் எனக்கு ஒரு இடமும் இல்லை. ஜனங்களோடு பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படிப் பேசுவது என்பது எனக்குத் தெரியாது. எல்லாம் எனக்குப் புரிகிறது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எல்லாம் பார்த்து. அனுதாபம் கொள்கிறேன். என்றாலும் அதை வாய்விட்டுச் சொல்லத் தெரியவில்லை. நான் ஒரு ஊமைப்பிறவி.’
அவன் டாவெலிடம் திரும்பினான்; உடனே தன் கண்களைத் தாழ்த்தி, மேஜையையே துளைத்துவிடுவது போல் வெறித்துப் பார்த்தான். பிறகு அவனது இயற்கையான குரலுக்கு மாறான மதலைக் குரலில் பேசத் தொடங்கினான்.
“தம்பி, எனக்கு ஏதாவது பெரிய வேலையாகக் கொடு. இந்த மாதிரி, எந்தவிதக் குறிக்கோளுமற்று என்னால் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் அனைவரும் உங்கள் வேலைகளிலேயே மூழ்கியிருக்கிறீர்கள். உங்களது இயக்கம் எப்படி வளர்ந்து மலர்கிறது என்பதை நான் பார்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நான் மட்டும் ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கிறேன். வெறுமனே மரங்களைச் சுமந்து திரிவதோடு முடிந்து விடுகிறது என் பிழைப்பு. இந்தப் பிழைப்பு ஒருவனுக்கு வாழ்வளித்துவிடாது எனக்கு வேறு ஏதாவது கடினமான பெரிதான வேலை கொடு.’
பாவெல் அவனது கையை எட்டிப் பிடித்து அவனைத் தன்னருகே இழுத்தான்.
“சரி. தருகிறேன்.’
இடையிலிருந்த மறைவுக்கு அப்பாலிருந்து ஹஹோலின் குரல் கேட்டது.
‘நான் உனக்கு அச்சுக் கோக்கிற வேலை சொல்லித் தருகிறேன். நிகலாய், உனக்கு அது பிடிக்குமா?”
நிகலாய் ஹஹோலிடம் பேசினான்;
“நீ மட்டும் எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டால்-உனக்கு நான் என் கத்தியைப் பரிசளித்து விடுகிறேன்” என்றான் அவன்.
“உன் கத்தியைக் கொண்டு - உடைப்பிலே போடு’ என்று கடகடவென்று சிரித்தவாறே கத்தினான் ஹஹோல்.
“இல்லை. அது ஒரு நல்ல கத்தி” என்றான் நிகலாய்.
பாவெலும் சிரிக்க ஆரம்பித்தான்,
“நீங்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கவா செய்கிறீர்கள்” அறையின் மத்தியில் நின்றவாறே கேட்டான் நிகலாய்.
“ஆமாம் அப்பா, ஆமாம்!” என்று படுக்கையை விட்டுத் துள்ளியெழுந்தவாறே சொன்னான் ஹஹோல். “சரி வா. வயல் வெளிப் பக்கம் உலாவிவிட்டு வரலாம். நிலா அருமையாகக் காய்கிறது. வருகிறாயா?”.
“சரி” என்றான் பாவெல்.
“நானும் வருகிறேன்’ என்றான் நிகலாய். “ஹஹோல், உன் சிரிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது.”
“நீ பரிசு கொடுப்பதாகச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது” என்றான் ஹஹோல் சிரித்துக்கொண்டே.
அவன் சமையலறைக்குள் சென்று உடை உடுத்திக்கொண்டான்.
மேலே ஏதாவது போர்வையைப் போட்டுக்கொள்” என்று அவசர அவசரமாகச் சொன்னாள் தாய்.
அவர்கள் மூவரும் வெளியே சென்ற பிறகு அவள் ஜன்னலருகே சென்று அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு சுவரிலிருந்த விக்ரகத்தை நோக்கி, வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்;
“கருணையுள்ள கடவுளே! அவர்களுக்கு நல்லது செய். அவர்களைக் காப்பாற்று....”
குறிப்பு
[தொகு]- ↑ இது ஒரு பாட்டு மாதிரியான பழமொழி: ‘போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு’ என்ற நம் நாட்டு வழக்கை ஒத்திருப்பது.–மொ—ர்.