தாய்/30

விக்கிமூலம் இலிருந்து






இரண்டாம் பாகம்
1


அந்த நாளின் குறைப் பொழுதும் மங்கிய நினைவுகளாலும், தனது உடலையும் உள்ளத்தையும் பற்றியிருந்த களைப்பு மிகுதியாலுமே தாய்க்குக் கழிந்தது. அவள் முன்னால், அந்தக் குட்டி அதிகாரியின் உருவம், பாவெலின் தாமிர நிறமுகம், புன்னகை பூக்கும் அந்திரேயின் கண்கள்–எல்லாம் நிழலாடின.

அவள் அறைக்குள்ளே அலைந்தாள்; ஜன்னலருகே உட்கார்ந்தாள்; தெருவை எட்டிப் பார்த்தாள், மீண்டும் எழுந்தாள் புருவத்தை மேலேற்றி வியந்தவாறு. சிறு சப்தம் கேட்டாலும் விழிப்புற்று, எங்கும் பார்த்தவாறு நடந்தாள்; அல்லது எதையோ அர்த்தமற்றுத் தேடுவது போல் பார்த்தாள். அவள் தண்ணீர் குடித்தாள். தண்ணீர் அவளது தாகத்தையும் தணிக்கவில்லை. அவளது நெஞ்சுக்குள் தவிக்கும் ஏக்கத்தையும் தணிக்கவில்லை; குமைந்து நின்ற துயரத்தையும் அணைக்கவில்லை. அன்றையப் பொழுதே அவளுக்கு இரு கூறாகத் தோன்றியது. அதன் முதற் பகுதிக்கு அர்த்தம் இருந்தது: இரண்டாம் பகுதியிலே அந்த அர்த்தமெல்லாம் வெற்றிச் சுவறி வறண்டு போய்விட்டது. வேதனை தரும் சூன்ய உணர்ச்சி அவள் மனத்தில் மேலோங்கியது. அவள் தனக்குத்தானே ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டாள்:

“இப்போது என்ன?”

மரியா கோர்சுனவா அவளைப் பார்க்க வந்தாள். அவள் தன் கரங்களை ஆட்டிக்கொண்டு சத்தமிட்டாள்; அழுதாள், உணர்ச்சிப் பரவசமானாள்; காலைத் தரையில் உதைத்தாள்; ஏதேதோ வாய்க்கு வந்தபடி திட்டினாள்; சபதம் கூறினாள்; யோசனை சொன்னாள். எதுவுமே தாயை அசைக்கவில்லை,

ஆஹா! ஜனங்கள் எல்லோரும் போராடக் கிளம்பிவிட்டார்கள்! தொழிற்சாலை முழுவதுமே எழுச்சி பெற்றுவிட்டது. ஆமாம், தொழிற்சாலை முழுவதும்தான்!” என்று மரியாவின் கீச்சுக்குரல் கேட்டது.

“ஆமாம்” என்ற அமைதியோடு தலையை ஆட்டிக்கொண்டு சொன்னாள் தாய், ஆனால் அவளது கண்கள் கடந்த காலத்தை, பாவெலோடும் அந்திரேயோடும் மறைந்துபோன சகலவற்றையும் நினைத்து நிலைகுத்தி நின்றன. அவளால் அழ முடியவில்லை: அவளது இதயம் வற்றி மெலிந்து வறண்டு போயிற்று. அவளது உதடுகளும் வறண்டு போயின, அவளது வாயில் ஈரப்பசையே இல்லை. அவளது கரங்கள் நடுங்கின, முதுகெலும்புக் குருத்துக்கள் குளிர் உணர்ச்சி குளிர்ந்து பரவியது.

அன்று மாலை போலீஸ்காரர்கள் வந்தார்கள். அவள் அவர்களை வியப்பின்றிப் பயமின்றிச் சந்தித்தாள். அவர்கள் ஆரவாரமாக உள்ளே நுழைந்தார்கள்; ஆத்ம திருப்தியும் ஆனந்தமும் கொண்டவர்களாக அவர்கள் தோன்றினார்கள். அந்த மஞ்சள் முக அதிகாரி தனது பல்லை இளித்துச் சிரித்துக்கொண்டே பேசினான்;

“சௌக்கியமா? நான் இப்போது சந்திப்பது மூன்றாவது முறை இல்லையா?”

அவள் பேசவில்லை. வெறுமனே தனது வறண்ட நாக்கை உதடுகளின் மீது ஒட்டினாள். அந்த அதிகாரி அவளுக்கு ஏதேதோ உபதேச வார்த்தைகளைச் சொன்னான். பேசுவதில் அவன் ஆனந்தம் காண்பதாக அவள் உணர்ந்தாள். ஆனால் அவனது பேச்சு அவளைப் பீதியுறச் செய்யவில்லை. அந்த வார்த்தைகள் அவளைப் பாதிக்கவே இல்லை. ஆனால் அவன், “கடவுளுக்கும் ஜாருக்கும் உன் மகன் சரியான மரியாதை காட்டாது போனதற்கு, அதை நீ அவனுக்குக் கற்றுக் கொடுக்காமல் போனதற்கு. உன்னைத்தான் குற்றம் சொல்ல வேண்டும், அம்மா” என்று சொன்ன பிறகு மட்டும் அவள் கதவருகே தான் இருந்த இடத்தில் நின்றவாறே கம்மிய குரலில் பதில் சொன்னாள்.

“எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள். அவர்கள் அந்தக் கரடுமுரடான மார்க்கத்தில் செல்லும்போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி, அவர்கள் தண்டிப்பார்கள்.”

“என்ன?” என்று கத்தினான் அதிகாரி” “உரக்கப் பேசு.”

“நான் எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள் என்று சொன்னேன்” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய்.

அவன் ஏதேதோ கோபத்தோடும் விறுவிறுப்போடும் முணுமுணுத்துக்கொண்டான்; ஆனால் அவனது வார்த்தைகள் அவளுக்குக் கேட்கவில்லை. மரியர் கோர்சுனவா அன்று நடந்த சோதனைக்கு ஒரு சாட்சியாக அழைத்து வரப்பட்டாள். அவள் தாய்க்கு அடுத்தாற்போல் நின்றாள், எனினும் அவள் தாயைப் பார்க்கவில்லை. எப்போதாவது அந்த அதிகாரி அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். உடனே அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டு அந்த ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னாள்:

“எனக்குத் தெரியாது. எசமான்! நான் ஒன்றுமே தெரியாதவள். ஏதோ வியாபாரம் செய்து பிழைக்கிறேன். எதைப்பற்றியும் தெரியாத முட்டாள் ஜென்மம் நான்?”

“நாவை அடக்கு!” என்று மீசையைத் திருகிக்கொண்டே உத்தரவிட்டான் அந்த அதிகாரி. மீண்டும் அவள் தலை வணங்கினாள். ஆனால் குனிந்து வணங்கும்போது அவள் தன் மூக்கை மட்டும் அவனுக்கு நேராக நிமிர்த்திக் காட்டி, “இவனுக்கு வேணும்!” என்று அவள் தாயிடம் மெதுவாகச் சொன்னாள்.

பிறகு பெலகேயாவைச் சோதனை போடும்படி அவன் அவளுக்கு உத்தரவிட்டான். அந்த உத்தரவைக் கேட்டு அவள் விழித்தாள்; அதிகாரியை வெறித்துப் பார்த்தாள். பிறகு பயந்து போன குரலில் சொன்னாள்;

“ஐயோ! எனக்கு இந்த விவகாரமெல்லாம் எப்படியென்று தெரியாதே, எசமான்!”

அவன் தரையை ஓங்கி மிதித்துக் கொண்டு அவளை நோக்கிச் சத்தமிட்டான். மரியா, தன் கண்களைத் தாழ்த்தினான்: தாயிடம் மெதுவாகக் கூறினாள்;

“சரி அம்மா. நீ உன் பொத்தான்களைக் கழற்று. பெலகேயா நீலவ்னா”

தாயின் ஆடையணிகளைத் தடவிச் சோதனை போட்ட போது, குருதியேறிச் சிவந்த அவளது முகத்தில் அவமான உணர்ச்சி பிரதிபலித்தது.

“பூநாய்ப்பிறவிகள்” என்று அவள் முணுமுணுத்துக் கொண்டான்.

“நீ என்ன சொல்லுகிறாய்?” என்று அந்த அதிகாரி சோதனை நடந்த இடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டாள்.

“இந்தப் பெண் பிள்ளைகள் விஷயம், எசமான்!” என்று யந்த குரலில் முனகினாள் மரியா.

கடைசியாக அந்த அதிகாரி தான் காட்டிய தஸ்தாவேஜூகளில் தாயைக் கையெழுத்திடச் சொன்னான். அவளது அனுபவமற்ற கை பெரிய பெரிய மொத்தை எழுத்துக்களில் கையெழுத்திட்டது.

“பெலகேயா விலாசவா. ஒரு தொழிலாளியின் விதவை மனைவி.”

“நீ என்ன எழுதித் தொலைத்திருக்கிறாய்? இதை ஏன் எழுதினாய்?” என்று அந்த அதிகாரி பல்லை இளித்துக் கொண்டு கத்தினான். பிறகு சிறு சிரிப்புடன் சொன்னான்:

“காட்டுமிராண்டி ஜனங்கள்.”

அவர்கள் போய்விட்டார்கள்.. தாய் ஜன்னலருகேயே நின்றாள்; அவளது கைகள் மார்பின் மீது குறுக்காகப் படிந்து பற்றியிருந்தன. அவள் தன் கண்களை இமை தட்டாமல், எதையுமே காணாமல், வெறுமனே விழித்துக்கொண்டு நின்றாள். அவளது புருவங்கள் உயர்ந்திருந்தன. உதடுகள் இறுகியிருந்தன. கடைவாய்த் தாடைகள் இறுகி ஒன்றோடொன்று அழுத்திக் கடித்துக்கொண்டிருந்தன. அந்தக் கடியின் வேதனையையும் அவள் உணர்ந்தாள். மண்ணெண்ணெய் விளக்கில் எண்ணெய் வற்றி வறண்டது; திரி படபடத்துப் பொரிந்தது: சுடர் துடி துடித்தது. அவள் அதை ஊதியணைத்துவிட்டு, இருளிலேயே இருந்தாள், அவளது இதயத்தில் நிரம்பியிருந்த சூன்ய மயமான ஏக்க உணர்ச்சியால், அவளது இருதயத் துடிப்புக்கூடத் தடைப்பட்டது. அப்படியே அவள் வெகுநேரம் நின்றுகொண்டிருந்தாள். கண்களும் கால்களும் வலியெடுக்கும் வரை நின்றாள். மரியா ஜன்னலருகே வந்து போதை மிகுந்த குரலில் கூப்பிடுவதை அவள் கேட்டாள்;

“பெலகேயா, தூங்கிவிட்டாயா? பாவம், உனக்கு இப்படித் துன்பம் வரக்கூடாது. சரி, தூங்கு !”

தாய் தன் உடைகளை மாற்றாமலேயே போய்ப் படுத்துக்கொண்டாள், படுத்த மாத்திரத்திலேயே ஆழமான குளத்துக்குள் அமிழ்ந்து போவது போன்ற ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆளானாள், அவள் கனவு கண்டாள்; நகருக்குச் செல்லும் ரஸ்தாக்கரையில், சேற்றுப் பிரதேசத்துக்கு அப்பால் தெரியும் ஒரு மஞ்சள் நிறமான மணற் குன்றிற்கருகே அவள் நடந்து சென்று கொண்டிருந்தாள். தொழிலாளர்கள் மண்வெட்டி எடுக்கும் ஒரு செங்குத்தான குன்றின் ஓரத்தில் பாவெல் நின்றுகொண்டிருந்தான், அவன் அந்திரேயின் அமைதியும் இனிமையும் நிறைந்த குரலில், பாடிக்கொண்டிருந்தான்:

துயில்.
கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும்தோழர்காள்!

அவள் தன் நெற்றியை அழுத்திப் பிடித்தவாறு, தன் மகனைப் பார்த்துக்கொண்டே அந்தக் குன்றைக் கடந்து சென்றாள். நீலவானின் பகைப்புலத்தில் அவனது உருவம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் தோன்றியது. அவள் அவனருகே செல்ல நாணிக் கூசினாள். ஏனெனில் அவள் கர்ப்பமுற்றிருந்தாள்; அவளது கைகளில் இன்னொரு குழந்தை இருந்தது. அவள் மேலும் நடந்தாள்; நடந்து கொண்டே வந்து, கடைசியில் குழந்தைகள் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்துக்கு வந்து சேர்ந்தாள். அங்கு எத்தனையோ குழந்தைகள் இருந்தார்கள், அவர்கள் வைத்து விளையாடிய பந்து சிவப்பு நிறமாயிருந்தது. அவளது கையிலிருந்த சிசு அவள் கையை விட்டுத் தாவிக் குதித்து அந்தப் பந்தைப் பிடிக்க எண்ணியது. அழத் தொடங்கியது. அவள் அதற்குப் பால் கொடுத்தாள். திரும்பிப் பார்த்தாள்; இப்போதோ அந்தக் குன்றின் மீது துப்பாக்கிச் சனியன்களை அவளது மார்புக்கு நேராக நீட்டியவாறு சிப்பாய்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவள் உடனே விடுவிடென்று அந்த மைதானத்தின் மத்தியிலிருந்த தேவாலயத்துக்கு ஒடி வந்தாள், அந்தத் தேவாலயம் வெண்மை நிறமாகவும், மேகங்களால் செய்யப்பட்டதுபோல் அளவிறந்த உயரத்துக்கு மேல் நிமிர்ந்து நிற்பதாகவும் இருந்தது. அங்கு யாரையோ சவ அடக்கம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தச் சவப் பெட்டி நீளமாகவும் கறுப்பாகவும் இறுக மூடியதாகவும் இருந்தது. மதகுருவும், பாதிரியாரும் வெள்ளைநிற அங்கிகளைத் தரித்தவாறு அங்குமிங்கும் உலவினார்கள். பாடினார்கள்:

உயிர்த்தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார்!
உயிரிழந்த கிறிஸ்து நாதர்....

பாதிரியார் பரிமள களபங்களைத் தூவியபோது, அவளைப் பார்த்துத் தலை வணங்கிப் புன்னகை செய்தார். அவரது தலைமயிர் செக்கச் சிவந்து பிரகாசித்தது அவரது உற்சாகக்களை பொருந்திய முகம் சமோய்லவின் முகம் போலிருந்தது. அந்தத் தேவாலயத்தின் கோபுரக் கலசங்களிலிருந்து சூரிய கிர்ணங்கள் விழுந்தன; அந்தக் கிரணங்கள் வெள்ளை வெளேரெனளக் கீழ்நோக்கி கம்பளம் போல விழுந்தன.

தேவாலயத்தின் இருபுறத்துப் பீடங்களிலிருந்தும் பையன்கள் டாடிக் கொண்டிருந்தார்கள்,

உயிர்த்தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார்!
உயிரிழந்த கிறிஸ்து நாதர்....

தேவாலயத்தின் மத்தியில் வந்து சட்டென்று நின்றவாறு அந்த மதகுரு திடீரெனக் கத்தினார்.

“அவர்களைக் கைது செய்!” மதகுருவின் வெள்ளை நிற அங்கிகள் மறைந்துவிட்டன; அவரது மேலுதட்டில் வெள்ளி நிற மீசை தோன்றியது, எல்லோரும் ஓடத் தொடங்கினார்கள்; பாதிரியாரும் கூட பரிமளப்பொடியை ஒரு மூலையிலே எறிந்துவிட்டு, தன் தலையை ஹஹோல் பற்றிப் பிடித்துக் கொள்வது மாதிரி தமது தலையைப் பிடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தார். ஓடிச் செல்லும் ஜனங்களின் காலடியில் தன் கையிலிருந்த குழந்தையை நழுவ விட்டுவிட்டாள் தாய். அவர்களோ அதை மிதித்து நசுக்காது விலகி விலகி ஓடினார்கள். அந்தக் குழந்தையின் திகம்பரக் கோலத்தையே பயபீதி நிறைந்த கண்களோடு அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு ழுழங்காலிட்டு, அவர்களை தோக்கிக் கத்தினாள்.

“குழந்தையை உதறிச் செல்லாதீர்கள்! இவனையும் உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்!”

உயிர்த்தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார்!
உயிரிழந்த கிறிஸ்து நாதர்....

என்று சிரித்துக் கொண்டும், கைகளைப் பின்புறமாகக் கோத்தவாறும் பாடத் தொடங்கினான் ஹோல்.

அவள் குனிந்து குழந்தையை எடுத்தாள். மரக்கட்டைகளைப் பாரம் ஏற்றிய ஒரு வண்டியில் அந்தக் குழந்தையை வைத்தாள். அந்த வண்டிக்கு அருகே சிரித்துக்கொண்டே மெதுவாக நடந்து வந்தான் நிகலாய்.

“அப்படியானால் அவர்கள் எனக்குக் கொஞ்சம் கடினமான வேலையைத்தான் கொடுத்துவிட்டார்கள்” என்றான் அவன்.

தெருக்கள் எல்லாம் அசுத்தமாயிருந்தன. வீட்டு ஜன்னல்களிலிருந்து ஜனங்கள் எட்டிப்பார்த்தார்கள்; கூச்சலிட்டார்கள்; கீட்டியடித்தார்கள், கைகளை வீசினார்கள். வானம் நிர்மலமாயிருந்தது: சூரியன் பிரகாசமாகக் காய்ந்தது: எங்குமே நிழலைக் காணோம்.

“பாடுங்கள், அம்மா, என் அருமை அம்மா!” என்று கத்தினான் ஹஹோல்: “அதுதான் வாழ்க்கை !”

அவன் முதலில் தானே பாடத் தொடங்கினான். அவனது குரல் பிற சப்தங்களையெல்லாம் விழுங்கி விம்மி ஒலித்தது. தாய் அவனைத் தொடர்ந்து சென்றாள். திடீரென அவள் தடுமாறினாள்; கால் தவறி ஆழங்காணாத பாதாளக் குழிக்குள் விழுந்தாள்; அந்தப் பிலத்தின் சூன்யத்தில் - பயங்கரக் குரல்கள் கூச்சலிட்டு அவளை வரவேற்றன....

மேலெல்லாம் நடுங்கிக் குளிர அவள் திடுக்கிட்டு எழுந்தாள். அவளது இதயத்தை ஒரு கனமான முரட்டுக் கை அழுத்திப் பிடித்து, கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கி முறுக்கிப் பிழிவதில் ஆனந்தம் காண்பதுபோல் தோன்றியது. ஆலைச்சங்கு இடைவிடாது அலறி முனகி, தொழிலாளர்களை அறைகூவி அழைத்துக்கொண்டிருந்தது. அது இரண்டாவது சங்கு என்பதை அவன் உணர்ந்து கொண்டாள். அந்த அறை முழுவதிலும் புத்தகங்கள் இறைந்து கிடந்தன; எல்லாம் நிலை குலைந்து தலைகீழாய்க் கிடந்தன, தரையில் சேறுபடிந்த பூட்ஸ் கால்களின் தடங்கள் காணப்பட்டன.

அவள் எழுந்தாள்: முகங்கை கழுவவோ, பிரார்த்தனையில் ஈடுபடவோ எண்ணாமல், அங்குள்ள பொருள்களை எடுத்து அடுக்கி, அறையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள். சமையலறையில் கிடந்த கம்பின்மீது—கொடியின் சிறு பகுதி இன்னும் ஒட்டிக்கிடந்த அந்தக் கம்பின் மீது—அவள் பார்வை விழுந்தது. அவள் அதைக் குனிந்து எடுத்து, அடுப்பில் வைக்கப் போனாள். ஆனால் திடீரென வேறொரு எண்ணம் தோன்றவும் அவள் பெருமூச்சு விட்டவாறே அதில் தொங்கிய கொடித் துணியை அகற்றி. அதை ஒழுங்காக மடித்து, தனது பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் அந்தக் கம்பை முழங்காலில் கொடுத்து முறித்து அடுப்புக்குள் எறிந்தாள். பிறகு ஜன்னல்களையும் தரையையும் தண்ணீர் விட்டுக் கழுவினாள். தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்துவிட்டு உடை உடுத்திக்கொண்டாள். பின்னர் அவள் சமையலறையில் இருந்த ஜன்னல் அருகே அமர்ந்தாள் அவள் மனத்தில் அதே கேள்வி மீண்டும் எழுந்தது.

“இனி என்ன?”

தான் தனது காலைப் பிரார்த்தனையைச் சொல்லவில்லை என்பது ஞாபகம் வந்தவுடன் அவள் அங்கிருந்து எழுந்து விக்ரகங்களை நோக்கி வந்தாள், அவற்றின் முன்னே சில கணங்கள் நின்றாள்; பிறகு மீண்டும் உட்கார்ந்தாள். அவள் இதயம் ஒரே சூன்ய வெளியாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்றைய தினத்தில், தெருக்களிலே உற்சாக வெறியோடு கத்திச் சென்ற ஜனங்கள், இன்று தங்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே அடைந்து முடங்கிக்கிடந்து, இயற்கைக்கு மீறிய சம்பவங்களைப்பற்றி அமைதியாகச் சிந்தித்துக்கொண்டிருப்பதைப்போல, அதிசய மோனம் நிலலிக்கொண்டிருந்தது.

திடீரென அவள் தனது இளமைக் காலத்தில் கண்ட ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தாள்; சவுசாய்லவ் குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணையில் பழம் பூங்காவனம்; பூங்காவனத்தில் ஒரு பெரிய தடாகம். தடாகம் முழுவதிலும் நீரல்லிப்பூக்கள் நிறைந்து பூத்திருந்தன. இலையுதிர் காலத்தின் மப்பும் மந்தாரமுமான ஒரு நாளன்று. அவள் அந்தக் தடாகக்கரை வழியாக நடந்து சென்றாள். செல்லும்போது அந்தத் தடாகத்தின் மத்தியில் ஒரு படகு நிற்பதைக் கண்டாள். குளம் கருநீலமாக இருண்டு நிச்சலனமாக இருந்தது. அந்தப்படகு அந்தக் கரிய நீர்த்தடத்தின் மீது, பழுப்பிலைகளின் கூட்ட அலங்காரத்தோடு ஒட்டிக்கிடப்பதாகத் தோன்றியது. காய்ந்து கருகிப்போன அந்த இலைகளுக்கு மத்தியில், அசைவற்ற மோன நீர்த்தடாகத்தில், தன்னந்தனியாக, துடுப்புக்களோ மனிதத்துணையோ இன்றி ஸ்தம்பித்துக் கிடந்த அந்தப் படகிலிருந்து ஏதோ ஒரு இனந்தெரியாத துக்கத்தின் சோகம் தோன்றுவதாக அவளுக்குத் தெரிந்தது. வெகு நேரம் வரையிலும் அவள் கரையருகிலேயே நின்றாள்; யார் அந்தப் படகை தடாகத்தின் மத்தியில் தள்ளிவிட்டார்கள். எதற்காகத் தள்ளிவிட்டார்கள் என்பதை எண்ணி எண்ணி அதிசயித்தாள். அன்று மாலையில் அவள் ஒரு விஷயம் கேள்விப்பட்டாள். அந்தப் பண்ணை நிலத்தில் வேலை பார்த்து வந்த ஒருவனின் மனைவி, குடுகுடுவென்று நடையும், சிக்குப் பிடித்த சிகையும் கொண்ட ஒரு சிறு பெண். அந்தக் குளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள்.

தாய் தன் கரத்தால் நெற்றியை வழித்துவிட்டுக் கொண்டாள். அவளது மனத்தில் அன்றைய தினத்துக்கு முந்தின நாளன்று நடந்த சம்பவங்களின் நினைவுகளிடையே எண்ணற்ற சிந்தனைகள். நடுநடுங்கி மிதந்து சென்றன. வெகு நேரம் வரையிலும் அவள் அந்தச் சிந்தனைகளால் திக்பிரமையுற்று அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் குளிர்ந்து போய்விட்ட தேநீர்க் கோப்பையின் மீது நிலைகுத்திப் பதிந்து நின்றன. அதே சமயத்தில் தனது கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கக்கூடிய யாராவது ஒரு படாடோபமற்ற புத்திபடைத்த மனிதனைக் காண வேண்டும்; கண்டு கேட்க வேண்டும் என்ற ஆவல் பெருகிக்கொண்டிருந்தது.

அவளது ஏக்கம் நிறைந்த ஆவலுக்குப் பதிலளிப்பது போல், நிகலாய் இவானவிச் மத்தியானத்துக்கு மேல் வந்து சேர்ந்தான். என்றாலும் அவனைக் கண்டதும் அவளுக்குத் திடீரென ஒரு திகிலுணர்ச்சி ஏற்பட்டது. எனவே அவன் செலுத்திய வணக்கத்துக்குக் கூடப் பதில் கூறாமல், அமைதியாகச் சொன்னாள்;

“நீங்கள் ஏன் வந்துவிட்டீர்கள்! இப்படிச் செய்வது ஒரு பெரிய முட்டாள்தனம். நீங்கள் இங்கிருப்பதைக் கண்டால் அவர்கள் உங்களையும் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்!”

அவன் அவளது கையைப் பற்றி இறுக அழுத்தினான், தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு, அவள் பக்கமாக நெருங்கிக் குனிந்து விறுவிறுவெனப் பேசினான். “பாவெல், அந்திரேய், நான் - எங்கள் மூவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம். அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டால், மறுநாளே நான் உங்களை இங்கிருந்து நகருக்குக் கொண்டு போய்விடுவது என்பது எங்கள் ஏற்பாடு” என்றான். அவனது குரல் பெருந்தன்மை நிறைந்ததாகவும், அவளது நலத்தில் அக்கறை கொண்டதாகவும் இருந்தது. “சரி இங்கு ஏதாவது சோதனை நடந்ததா?”

“ஆமாம்., அவர்கள் எல்லாவற்றையும் வெட்கமோ மனச்சாட்சியோ இன்றி உலைத்துக் கலைத்து எறிந்துவிட்டுப் போனார்கள்” என்றாள் அவள்.

“அவர்கள் எதற்காக வெட்கப்படவேண்டும்?’ என்று தன் தோளைக் குலுக்கிக்கொண்டு கேட்டாள் நிகலாய். பிறகு அவள் ஏன் நகருக்கு வீடு மாற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னான்.

அவனது நட்பும் பரிவும் கலந்த நயவுரையை அவள் காது கொடுத்துக் கேட்டாள்; லேசாகப் புன்னகை புரிந்துகொண்டான். அவன் கூறும் காரணங்களை அவள் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவள் மனத்தில் எழும்பிய அன்பு கனிந்த நம்பிக்கையைக் கண்டு அவளே வியந்துகொண்டாள்.


“பாஷாவின் விருப்பம் அதுவானால், உங்களை நான் ஏதும் சிரமத்துக்கு ஆளாக்காது இருந்தால்...”என்றாள் அவள்.

“அதைப்பற்றி கவலையே வேண்டாம்” என்று குறுக்கிட்டான் அவன். “நான் தன்னந் தனியாகத்தான் வாழ்கிறேன். எப்போதாவது என் சகோதரி மட்டும் என்னைப் பார்க்க வருவாள்.”

“நான் சும்மா வந்து இருந்துகொண்டு உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது” என்றாள் அவள்.

“விருப்பம் இருந்தால், அங்கு வேலை தேடிக்கொள்ளலாம்” என்றான் நிகலாய்.

வேலை என்ற எண்ணம், தனது மகனும் அந்திரேயும் பிற தோழர்களும் செய்யும் வேலையோடு எப்படியோ பிணைப்புற்றிருப்பதாக அவள் உணர்ந்தாள். அவள் நிகலாய்க்குப் பக்கமாக நெருங்கிச்சென்று அவன் கண்களை உனடுருவிப் பார்த்தாள்.

“உண்மையாகவா? உங்களால் தேடித்தர முடியுமா?” என்று. கேட்டாள்.


“என் வீட்டில் அதிகமான வேலை ஒன்றும் இருக்காது, நான் தான் பிரம்மச்சாரி! ஆயிற்றே.....”

‘நான் அதைப்பற்றி நினைக்கவில்லை–வீட்டு வேலையைப் பற்றியல்ல!” என்று மெதுவாகச் சொன்னாள் அவள்.

அவள் பெருமூச்செறிந்தாள்; தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளாமல் போனதால் மனம் நொந்தாள், அவனோ அவளருகே குனிந்து பார்த்தவாறு புன்னகை புரிந்தான். சிந்தனை வயப்பட்டவனாகப் பேசினான்:

“நீங்கள் மட்டும் பாவெலைப் பார்ப்பதற்கு அனுமதி பெற்று அவனைச் சந்தித்து தமக்காக ஒரு பத்திரிகை வெளியிடவேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொண்ட அந்த விவசாயிகளின் முகவரிகளை அவனிடமிருந்து எப்படியாவது தெரிந்துகொண்டு வரமுடிந்தால்......”

“எனக்கே அவர்களைத் தெரியும்” என்று உவகையோடு கூறினாள் அவள். ‘நான் அவர்களைக் கண்டுபிடித்து, நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ, அத்தனையும் செய்கிறேன். நான்தான் அவர்களுக்குச் சட்ட விரோதமான புத்தகங்களைக் கொடுத்து உதவுகிறேன் என்று எவரும் என்னைச் சந்தேகப்படமாட்டார்கள். கடவுள் கிருபையால் நான் தொழிற்சாலைக்குள்ளே கூடப் பிரசுரங்களைக் கொண்டு போகவில்லையா?”

தன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.

“இந்த வேலைக்கு என்னை ஏற்பாடு செய்யுங்கள். உங்களை மிகவும் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் பிரதேசத்திலுள்ள சகல ரோட்டு பாதைகளிலும் நான் செல்லுவேன். கோடையிலும் குளிர் காலத்திலும்- நான் சாகிற வரையில்-ஒரு காமயாத்திரிகளைப் போலச் சுற்றித் திரிகிறேன். எனக்கு இது ஒரு மோசமான வேலையென்று நினைக்கிறீர்களா?”

வீடு வாசலற்ற ஒரு தேசாந்திரியாக வீடுவீடாய், கிராமத்துக் குடிசை வாயில்களில் சென்று கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிப் பிச்சையெடுக்கின்ற ஒரு யாத்திரைவாசியாகத் தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்ததால் ஏற்பட்ட சோக உணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.

நிகலாய் அவளது கரத்தை லேசாகப் பற்றிப்பிடித்து, தனது கதகதப்பான கையால் அதைத் தட்டிக்கொடுத்தான், பிறகு அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான்;

“சரி, அதைப்பற்றி நாம் பின்னர் பேசிக்கொள்ளலாம்.

“நம்முடைய குழந்தைகள், நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து. சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிது கூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது, நான், ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?”

நிகலாயின் முகம் வெளுத்தது,

“இந்த மாதிரி வார்த்தைகளை நான் இதற்கு முன்பு கேட்டதேயில்லை” என்று அவளது முகத்தையே பரிவு கலந்த பார்வையோடு நோக்கியவாறே அமைதியாகச் சொன்னான் அவன்.

“நான் வேறு என்னத்தைச் சொல்ல?” என்று தன் தலையைச் சோகத்தோடு அசைத்துக்கொண்டும், கைகளை வெறுமனே ஆட்டிக் கொண்டும் கேட்டாள் அவள். “என் நெஞ்சுக்குள்ளே துடிதுடிக்கும் இந்தத் தாயின் இதயத் துடிப்பை எடுத்துக் கூறுவதற்கு மட்டும் எனக்கு வார்த்தைகள் இருந்தால்...”

அவள் எழுந்தாள். உத்வேகம் நிறைந்த எத்தனையோ சொற்கள் அவளது தலைக்குள்ளே பின்னி முடைந்து குறுகுறுப்பதால் அவளது இதயத்தில் ஏற்பட்ட பெரும் பலத்தினால் அவள் எழுந்து நின்றாள்.

“அந்த வார்த்தைகளைக் கேட்டு ஒவ்வொருவரும் அழுவார்கள். கடை கெட்டவர்கள்கூட வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்!”

நிகலாவும் எழுந்தான்: மீண்டும் ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்தான்.

“சரி, அப்படியென்றால் இதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். நகருக்கு - என் இடத்துக்கு வருகிறீர்கள். இல்லையா?

அவள் தலையசைத்தாள்.

“சரி, எப்போ ? கூடிய சீக்கிரத்தில், சரிதானே” என்று பரிவோடு கூறினான் அவன்; “நீங்கள் வருகிற வரையில் எனக்குக் கவலைதான்.”

அவள் அவனை வியப்புடன் பார்த்தாள். அவள் அவனுக்கு என்ன வேண்டும்? அவள் முன் தலை குனிந்தவாறு குழப்பமான புன்னகை செய்தவாறு, கரிய கோட்டணிந்து, சமீப நோக்குடன் கூனி நின்று கொண்டிருந்தான் அவன். அவனது தோற்றம் அவனது இயற்கைக்கு முரண்பட்டுத் தோன்றியது.

“உங்களிடம் ஏதாவது பணம் காசு இருக்கிறதா?” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான் அவன்.

“இல்லை.”

உடனே அவன் தன் பைக்குள் கையைவிட்டு, தன் மணிப்பர்சை எடுத்து, அதைத் திறந்து பணத்தை எடுத்து நீட்டினான்.

“இதோ, இதைத் தயைசெய்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான்.

தாய்க்குத் தன்னையறியாமலேயே இளஞ்சிரிப்பு வந்தது. அவள் தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள்;

“உங்களிடம் எல்லாமே புதுமாதிரியாகத்தான் தோன்றுகிறது. பணம் கூட உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. சிலர் அந்தப் பணத்துக்காகத் தங்கள் ஆத்மாக்களையே விற்றுவிடுகிறார்கள், ஆனால் உங்களுக்கோ அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை, மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே நீங்கள் பணத்தை வைத்திருக்க ஒப்புவது போலத் தோன்றுகிறது.”

நிகலாய் மெதுவாகச் சிரித்தான்.

“பணமா, அது ஒரு நச்சுப்பிடித்த பொருள். வாங்குவதானாலும் சரி, கொடுப்பதானாலும் சரி, மனத்துக்கே பிடிப்பதில்லை: அவன் அவள் கையைப் பற்றி அதை லேசாகப் பிசைந்தான், பிறகு மீண்டும் சொன்னான்:

“சீக்கிரம் கிளம்பிவிடுங்கள்!”

பிறகு அவன் வழக்கம் போலவே அமைதியாகச் சென்றான். அவன் செல்வதை அவள் வாசல்வரை சென்று பார்த்தாள். அப்போது தனக்குள் நினைத்துக் கொண்டாள்:

“எவ்வளவு அன்பான மனம்! ஆனால் அவன் எனக்காகப் பரிதாபப்படவே இல்லை.”

இந்த எண்ணம் அவளுக்குப் பிடிக்கவில்லையா, அல்லது அதிசயத்தைத் தந்ததா என்பதை அவளால் உணரக்கூட முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/30&oldid=1293136" இலிருந்து மீள்விக்கப்பட்டது